12 வசீகரனை பற்றி...

12 வசீகரனை பற்றி...

ஏஆர்வி கம்பெனி, மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த புகைப்பட ஒளிப்பதிவு நாள் வந்தது. அது அவர்கள் கம்பெனியின் அடுத்த மிகப் பெரிய ப்ராஜெக்ட்டுக்கான புகைப்பட ஒளிப்பதிவு.

அந்த புகைப்பட பதிவை வெற்றிகரமாக முடிக்கும் பொறுப்பு, ஐஸ்வர்யாவிடம் விடப்பட்டிருந்தது. அந்த புகைப்பட பதிவிற்கு தேவையான அத்தனை உடைகளையும், ஐஸ்வர்யாவே வடிவமைத்திருந்தாள்.

காலை முதற்கொண்டே அவள் மிகவும் பதட்டமாக காணப்பட்டாள். அவள் முகத்திலும் அவள் நடவடிக்கையிலும் அது வெட்ட வெளிச்சமாக தெரிந்தது.

அவளுடைய நிலை வசீகரனுக்கு நன்றாகவே புரிந்திருந்தது. அவனைத் தவிர வேறு யாரால் அவளை வெகு அழகாக புரிந்து கொள்ள முடியும்? அவன் அவளை உற்சாகப்படுத்த எண்ணினான். அதை செய்வதற்காக அவனுடைய மேனேஜர் விஷாலை தொடர்பு கொண்டான்.

விஷால் ஐஸ்வர்யாவின் அறைக்கு சென்றான்.

"குட் மார்னிங், மேடம்" என்றான்.

அவள் சொன்ன "குட்மார்னிங்" காட்டிக்கொடுத்தது, அவள் எவ்வளவு நடுக்கமாக இருந்தாள் என்பதை.

"இது உங்களோட ஃபோட்டோ செஷன். நீங்க, இப்ப அங்க இருக்கணும். மாடல் சோனா எப்ப வேணாலும் இங்க வந்துடுவாங்க. அவங்க எல்லாத்துலயும் ரொம்ப பர்ட்டிக்குளரா இருப்பாங்க. நீங்க அதை கொஞ்சம் கவனிச்சுகங்க" என்றான்.

"சோனாவா? யாரது?" என்றாள்.

"அவங்க நம்பர் ஒன் மாடல் ஆஃப் இண்டியா. ரொம்ப சீக்கிரம் கோபம் வந்துரும். அவங்கள கொஞ்சம் பார்த்து ஹேண்டில் பண்ணுங்க" என்றான்.

ஐஸ்வர்யாவின் பதட்டம் மேலும் அதிகரித்தது. அங்கிருந்து நேரடியாக கிரீன் ரூமிற்கு சென்றவள், அவள் வடிவமைத்த உடைகளுக்கு பொருத்தமான மேட்சிங் ஃபேன்சி ஜுவல்லரி, மற்றும் ஒப்பனைகளை தேர்ந்தெடுத்த பின், நிம்மதி பெருமூச்சு விட்டு அமர்ந்தாள்.

சற்று நேரத்தில், தன் உதவியாளர்களுடன் புயலைப் போல் உள்ளே நுழைந்தாள் மாடல் சோனா. அவர்கள் தான், அவளுக்கு இட மற்றும் வல கரங்கள். அவளுக்கு அனைத்தையும் செய்து விடுவது அவர்களின் வேலை.

அங்கே அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த உடைகள் மற்றும் அதற்கு ஏற்ற அனைத்தையும் பார்வையிட்ட பொழுது மிகவும் கவரப்பட்டாள் சோனா. அந்தந்த உடைகளின் நிறத்திற்கு தக்கவாறு தேர்ந்தெடுத்து வைக்கப்பட்டிருந்த ஒப்பனை வகைகள் அவளுக்கு மிகவும் பிடித்து போனது.

"கிரேட்... யார் இதெல்லாம் செலக்ட் பண்ணது?" என்றாள்.

"நான் தான்" என்றாள் ஐஸ்வர்யா.

"நீயா? இதுக்கு முன்னாடி உன்னை இங்க நான் பார்த்ததே இல்லையே? புதுசா வேலைக்கு சேந்திருக்கியா? என்றாள்.

ஆமாம் என்று தலையசைத்தாள் ஐஸ்வர்யா.

"இந்த வசீகரனை சும்மா சொல்லக் கூடாது. மூலை முடுக்கில் இருக்கிற அத்தனை திறமைசாலிகளையும் தன்னோட கம்பெனிக்கு இழுத்து போடுறதுல அவன் ரொம்ப கெட்டிக்காரன்"

சற்றே நிறுத்தியவள்...

"ஆனா ஒன்னு, அவனுடைய கவனத்தை உன் பக்கம் இழுத்துடலாம்னு மட்டும் நினைக்காதே" என்றாள்.

அவள் சொன்னதின் அர்த்தம் முழுமையாக புரியாவிட்டாலும், பதிலேதும் சொல்லாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தாள் ஐஸ்வர்யா.

"அவன் ஒரு பாராங்கல். அவன் பக்கத்துல போன, நீ அடி தான் படுவ" என்றாள்.

"ஆனா, இதை நீங்க என்கிட்ட ஏன் சொல்றீங்க?" என்று கேட்டாள் ஐஸ்வர்யா, அவளுடைய பதிலை ஆவலாய் எதிர்பார்த்து.

"உன்னோட டிசைன்ஸ் எல்லாம் ரொம்ப அழகா இருக்கு. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. நீ இங்க இருக்கும் போது, என்னுடைய வேலை ரொம்ப சுலபமா இருக்கும். நான் நிம்மதியா வேலை செய்வேன்"

"அதனால?"

"அதனால அவன்கிட்ட இருந்து விலகியே நில்லு. நீ எவ்வளவு திறமைசாலியா வேணாலும் இருக்கலாம், அதெல்லாம் பெருசில்ல. ஆனா, தேவையில்லாம அவன்கிட்ட நெருங்கி போகணும்னு நினைச்ச, அவன் தூக்கி எறிய தயங்க மாட்டான். அந்த மாதிரி நிறைய பேரை வேலையை விட்டு தூக்கி இருக்கான். ஜாக்கிரதை." என்றாள்.

"ஆனா, இதெல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும்? நீங்க எப்பவாவது ஒரு தடவை தானே இங்க வந்துட்டு போறீங்க?" என்றாள் ஐஸ்வர்யா.

"அவனை பத்தி தெரிஞ்சுக்கணும்னா, இங்கேயே இருக்கணும்னு எந்த அவசியமும் இல்ல. ஃபேஷன் உலகத்தில் இருக்கும் அத்தனை மாடல்களுக்கும் தெரிஞ்ச விஷயம் தான் இது. எல்லாரும் முயற்சி பண்ணி பாத்தாங்க, ஆனா, அவன் யாருடைய வலைலயும் சிக்கவே இல்ல"

அப்பொழுது சோனாவின் கண்கள், ஐஸ்வர்யாவின் கழுத்தில் இருந்த தாலி சரடின் மீது விழுந்தது.

"நீ கல்யாணம் ஆனவளா?" என்றாள்.

"ஆமாம்" என்றாள் தனது கழுத்தை தொட்டபடி ஐஸ்வர்யா.

"பாக்குறதுக்கு ரொம்ப யங்கா இருக்க? என்னால புரிஞ்சுக்கவே முடியல, ஏன் தான் இந்த பொம்பளைங்க அவசர அவசரமா கல்யாணத்த பண்ணிகிட்டு கஷ்டப்படுறாங்களோ"

அவளுடைய முகம் சட்டென்று மாறி போனது எதையோ யோசித்த போது.

"வசீகரனுக்கு கூட கல்யாணம் ஆயிடுச்சில்ல? என்னால நம்பவே முடியல. நான், அவன் தலையை மொட்டை அடிச்சிக்கிட்டு சன்னியாசியா போயிடுவான்னு நினைச்சேன். யார் அந்த அதிர்ஷ்டம் கெட்ட பொண்ணோ தெரியல. அந்த பொண்ணு மனசுல எத்தனை கற்பனைகளை சுமந்துகிட்டு இருந்தாளோ. அவன் கல்யாணத்தப்ப நான் ஃபிரான்ஸில் இருந்தேன். இல்லனா, நிச்சயமா, அவன் எப்படிப்பட்ட சிடுமூஞ்சின்னு, அந்த பொண்ணுகிட்ட சொல்லி, ஓடிப் போக சொல்லியிருப்பேன்."

திருமதி வசீகரனை நினைத்து மிகவும் கவலைப்பட்ட பிறகு, தன் கைத்தடிகளுடன் போட்டோ செஷன் ரூமிற்கு சென்றாள் சோனா.

ஆனால் ஐஸ்வர்யா, அவளை பின் தொடராமல் அங்கேயே நின்றாள். இன்று அவளுக்கு ஏனோ சிரிக்க வேண்டுமென்று தோன்றவில்லை. அவள் லேசாக புன்னகை புரிந்தாள். ஒருவேளை, அவளுக்கு புரிந்திருக்கலாம், இது சிரிக்க வேண்டிய விஷயம் அல்ல, அதைவிட அப்பாற்பட்டது என்று.

சோனாவுடனான தனது முதல் போட்டோ ஷூட்டில் மும்மரமாக ஈடுபட்டிருந்தாள் ஐஸ்வர்யா. இப்பொழுது, அவளுக்கு எந்தவித பதட்டமும் இருக்கவில்லை. அவள் மிகவும் சகஜமாக காணப்பட்டாள். அவளை அப்படி நிதானமாக பார்த்த வசீகரன் குழம்பி போனான். அவன் அவளை சோனாவிடம் அனுப்பி வைத்ததற்கு காரணமே, சோனா அவனை பற்றி ஏதாவது சொல்லப் போக, முதல் நாளைப் போலவே, அவள் சிரித்து மகிழ்வாள் என்று எதிர்பார்த்து தான். ஆனால், அப்படி எதுவும் நடக்காமல் போகவே, அவனை பதட்டம் ஆட்கொண்டது. ஒருவேளை சோனா, அவள் தனது மனைவி என்று தெரிந்து கொண்டு, எதையாவது இல்லாததை சொல்லி வைத்து விட்டாளோ?

போட்டோ ஷூட் நடைபெற்றுக் கொண்டிருந்த பகுதியுடன் இணைக்கப்பட்டிருந்த, சிசிடிவி கேமராவில் அவன் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தான். ஐஸ்வர்யா அன்றை போல சிரித்துக் கொண்டிருக்கவும் இல்லை, அதே நேரத்தில், அவள் முகத்தில் எந்த ஒரு கவலையும் தென்படவில்லை. அந்த நாள் முழுதும் அவள் மிகவும் பிஸியாக இருந்தாள். ஒரு தடவை கூட அவளை பார்க்கும் சந்தர்ப்பம் வசீகரனுக்கு கிடைக்கவே இல்லை.

ஐஸ்வர்யா, மதிய உணவு கூட சாப்பிடாமல் வேலை செய்கிறாள் என்று தெரிந்த பின், அவனால் சும்மா இருக்க முடியவில்லை. அவன் போட்டோ ஷூட் நடக்கும் இடத்தின் உள்ளே நுழைந்த போது, அந்த இடம் சூடேறி போனது. அவனைப் பார்த்தவுடன், சோனா தனது முகத்தை சுளுக்கென்று வைத்துக் கொண்டாள்.

நேரடியாக ஐஸ்வர்யாவிடம் வந்தவன் "முடிஞ்சுதா?" என்றான்.

"முடிஞ்சிடுச்சி" என்றாள் ஐஸ்வர்யா.

"மதியானம் நீ ஏன் சாப்பிடல?" என்றான்.

"வேலை பிஸில மறந்துட்டேன்" என்றாள்.

"அப்படி ஒன்னும் நீ சாப்பிடாம வேலை செய்யணும்னு எந்த அவசியமும் இல்ல. புரிஞ்சுதா?" என்றான்.

அங்கு நடந்து கொண்டிருப்பது என்ன என்பது புரியாமல், அவர்களையே மலங்க மலங்க பார்த்துக் கொண்டிருந்தாள் சோனா. இவன் உண்மையிலேயே வசீகரன் தானா? அவள் நின்று கொண்டிருப்பது உண்மையிலேயே ஏஆர்வி கம்பெனி தானா? இல்லாவிட்டால், அவள் ஏலியன்கள் வாழும் வேறு கிரகத்தில் நின்று கொண்டிருக்கிறாளா?

இப்பொழுது, சோனாவின் அந்த முகபாவத்தை கண்டு ஐஸ்வர்யாவால் புன்னகைகாமல் இருக்க முடியவில்லை. அவள் முகம் அப்படி புன்னகையுடன் மாறிப் போனதை பார்த்த போது, வசீகரனுக்கு நிம்மதியாக இருந்தது. அவன் நினைத்தது போல் சோனா எதுவும் தன்னைப் பற்றி இல்லாதது எதையும் கூறி இருக்கவில்லை என்று நிம்மதி அடைந்தான்.

"சரி வா என்னோட" என்று கூறிவிட்டு, ஐஸ்வர்யாவின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தான் வசீகரன்.

தன் முன் நடந்த அந்த காட்சியை பார்த்து வாயடைத்துப் போய் நின்றிருந்தாள் சோனா. அருகில் இருந்த நாற்காலியில் தொப்பென்று அமர்ந்தாள். ஒருவேளை அவள் இதயம் ஒரு நிமிடம், துடிப்பதை நிறுத்த கூட செய்திருக்கலாம். அங்கு வந்த விஷாலை அழைத்தாள்.

"யார் அந்த பொண்ணு?" என்றாள்.

"வசீகரன் சார் அவங்ககிட்ட நடந்துக்கிறதை பார்க்கும் போதே தெரியலையா, அவங்க யாருன்னு? அவங்க தான் மிஸஸ் வசீகரன்" என்றான் புன்னகை புரிந்து.

சோனா, அவனை நம்ப முடியாத பார்வை பார்த்து தன்னைத் தானே கிள்ளி பார்த்து கொண்டாள். உண்மையிலேயே, தான் காண்பது கனவு இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள.

ஐஸ்வர்யாவை தனது அறைக்கு அழைத்துக் கொண்டு வந்து, அவளை அங்கிருந்த சோபாவில் அமர வைத்தான் வசிகரன். அவள் கையில் ஒரு பாக்கெட்டை கொடுத்தான்.

அது ஒரு சீஸ் சாண்ட்விச்.

"உன்னுடைய ஃபேவரைட்... சாப்பிடு" என்றான் வசீகரன்.

ஒரு நொடி, அவனை நம்ப முடியாத பார்வை பார்த்துவிட்டு, அமைதியாக சாப்பிட தொடங்கினாள்.

"உனக்கு இது ரொம்ப பிடிக்கும்னு, எனக்கு எப்படி தெரியும்னு, கேக்க மாட்டியா?" என்றான்.

"கேட்கணும்னு தான் நெனச்சேன். ஆனா, அதுக்கு அப்புறமா உங்க அலட்டலை யாரு பொறுத்துகிறது?" என்று வாழைப்பழத்தில் ஊசி இறக்குவது போல கூறினாள், முகத்தை சீரியஸாக வைத்துக் கொண்டு.

அதைக் கேட்டு களுக்கென்று சிரித்தான் வசீகரன்.

"பரவாயில்லையே, இப்பல்லாம் நான் என்ன செய்யப் போறேன்னு நீ ஈசியா புரிஞ்சிருக்கிற. குட் இம்ப்ரூவ்மென்ட்" என்று கூறிவிட்டு அவளின் கன்னத்தை தட்ட அவன் எத்தனித்த போது, ஐஸ்வர்யா தன் முகத்தை பின்னுக்கு இழுத்தாள்.

"பயப்படாத. நான் ஒன்னும் உன்னை சாப்பிட மாட்டேன்" என்றான்.

"தெரியும்... ஏன்னா, நீங்க வெஜிடேரியன்" என்றாள் கூலாக.

ஒரு கள்ள புன்னகையை உதிர்த்துவிட்டு,

"யார் சொன்னது? நான் பியூர் நான் வெஜிட்டேரியன் உன் விஷயத்துல" என்று கண்ணடித்தான்.

அதைக் கேட்டவளுக்கு புரையேறியது. அவளுக்கு தண்ணீரை குடிக்க கொடுத்து, அவள் முதுகை வருடி கொடுத்தான் வசீகரன். அவனை, நம்ப முடியாமல், அதிர்ச்சியுடன் பார்த்தாள் ஐஸ்வர்யா, அவன் கூறிய வார்த்தைகளை எண்ணி பார்த்து.

"தேங்க்யூ ஃபார் யுவர் சான்விச்" என்று அவள் எழுந்த போது, அவளை வழிமறித்தான் வசீகரன்.

"அவ்வளவு தானா?" என்று முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு அவன் கேட்க,

"நீங்க எனக்கு சான்விச் கொடுத்தது, என்கிட்ட இருந்து எதையாவது வாங்குறதுக்கு தானா? எனக்கு தெரியும், நீங்க என்ன கேக்க போறீங்கன்னு. இது ஆஃபீஸ்ங்குறத மறந்துடாதீங்க. முத்தம் கேக்குறதுக்கு இது இடமில்ல" என்றாள்.

கீழே குனிந்து ஒரு பாக்கெட்டை எடுத்தவன்.

"நான், இன்னொரு சாண்ட்விச்சை சாப்பிட வைக்க தான் உன்னை நிறுத்தினேன்" என்றான் பொங்கி வந்த புன்னகையை அடக்கிக்கொண்டு.

தனது முகத்தை வேறு பக்கமாக திருப்பிக் கொண்டு கண்களை இருக மூடிக்கொண்டாள் ஐஸ்வர்யா, வசீகரன் தன் வாயிலிருந்தே வார்த்தைகளை பிடுங்கியதை நினைத்துக் கொண்டு.

தனது முகத்தை அழகாக சாய்த்து, அசடு வழிந்த ஐஸ்வர்யாவின் முகத்தைப் பார்த்து கிண்டலாக சிரித்தான் வசீகரன்.

தனது காலை தரையில் உதைத்து விட்டு, தன் உதட்டை சுழித்தபடி, அங்கிருந்து ஓடிப்போனாள் ஐஸ்வர்யா, வசீகரனை சிரித்த முகத்துடன் விட்டு.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top