1 திருமணம்
1 திருமணம்
புது மணப்பெண்ணை போல ஒளிர்ந்து கொண்டிருந்தது, 'அன்பு இல்லம்'. ஆனால் அதன் புது மருமகள் ஐஸ்வர்யாவை விட ஒன்றும் பெரிதாய் ஒளிர்ந்து விடவில்லை. ஃபேஷன் உலகின் முடிசூடா மன்னன் வசீகரனுக்கும், ஐஸ்வர்யாவிற்கும், இன்று திருமணம் இனிதாக முடிந்திருந்தது. இன்று அவர்களின் முதலிரவு. ஐஸ்வர்யா அவனுடைய அறையில் தான் இருக்கிறாள். இல்லை, இல்லை.... அவர்களுடைய அறையில் இருக்கிறாள். நல்ல நேரத்திற்கு இன்னும் பத்து நிமிடங்கள் இருந்ததால், வசீகரன் வெளியில் காத்திருக்க வைக்கப்பட்டு இருக்கிறான்.
கட்டுக்கடங்காத ஆவலுடன், அந்த பத்து நிமிடங்களை கழிக்க முடியாமல் அமர்ந்திருந்தான் வசீகரன். இது முழுக்க முழுக்க பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் தான் என்றாலும், நாம் இதை அரேஞ்டு மேரேஜ் என்று சொல்வதற்கில்லை. ஐஸ்வர்யாவின் புகைப்படத்தை பார்த்த மாத்திரத்திலேயே நமது ஹீரோ கிளீன் போல்ட் ஆனான். அவளைப் பார்த்த அந்த நொடியில் இருந்தே, அவன், அவளை, காதலிக்க தொடங்கி விட்டான். அதனால், இதை நாம் ஹாஃப் லவ் மேரேஜ் என்று கூறலாம். அந்த பத்து நிமிடத்தை கடக்க முடியாமல் காத்திருந்தவனுக்கு, அவன் முதன்முதலில் ஐஸ்வர்யாவின் புகைப்படத்தை பார்த்த நாளில் நடந்த நிகழ்வுகள் நினைவுக்கு வந்தன.
*ஒன்றரை மாதத்திற்கு முன்*
வசீகரன்...! பெயருக்கு ஏற்றார் போல் உண்மையிலேயே வசீகரமானவன். பார்த்த மாத்திரத்திலேயே, எந்தப் பெண்ணும் தனது மனதை பறி கொடுக்கக் கூடிய அளவிற்கு கவர்ச்சி நிறைந்தவன், அழகானவன். ஆனால், வசீகரனை வசீகரிக்கும் அளவிற்கு, எந்த ஒரு பெண்ணும் அவன் கண்களில் தென்படவே இல்லை.
தன் பெற்றோர், தனக்காக பார்த்த அத்தனை பெண்களையும் வேண்டாம் என்று நிராகரித்தான் வசீகரன். அது, அவன் பெற்றோரை கலக்கம் கொள்ளச் செய்தது. நாளடைவில், பெண்களின் புகைப்படங்களை பார்ப்பதைக் கூட அவன் விரும்பவில்லை. தனது வியாபார விஸ்த்தரிப்பில் அவனது முழு கவனமும் இருந்ததால், திருமணம் பற்றிய எண்ணமே அவனுக்கு ஏற்படவில்லை.
இந்த சந்தர்ப்பத்தில் தான், அவனுடைய அம்மா ரத்னா, ஒரு தந்திரத்தை கையாண்டார். அவர் ஐஸ்வர்யாவின் புகைப்படத்தை, அவனது மடிக்கணினியின் மீது வைத்துவிட்டு, திரைச்சீலையின் பின்னால் ஒளிந்து கொண்டார். குளியல் அறையிலிருந்து வெளியே வந்த வசீகரன், ஐஸ்வர்யாவின் புகைப்படத்தைப் பார்த்தவுடன், அவன் கால்களுக்கு அடியில் வேர் விட்டதைப் போல, அதே இடத்தில் அசையாமல் நின்றான். எளிமையான உடையிலும் மிக வனப்புடன் இருந்த ஐஸ்வர்யாவின் வெள்ளந்தியான சிரிப்பு, அவனை அப்படி கட்டிப் போட்டிருந்தது.
தனது மகன், சிலை போல நிற்பதைப் பார்த்து, தன் தந்திரம் பலித்துவிட்டதை புரிந்து கொண்டு, ஒரு நமுட்டு சிரிப்புடன், திரைச்சீலையின் பின்னால் இருந்து வெளியே வந்தார் ரத்னா.
"வசி... நீ ஆஃபீஸ்லயிருந்து வந்துட்டியா? என்ன இது, உன் கையில? ஓ... இந்த போட்டோவை, ராமு இங்க வச்சுட்டு போய்ட்டானா? நான் சாரோட ரூம்ல வைனு சொன்னேன். அவன், உன்னோட ரூம்னு நெனச்சுக்கிட்டான் போல இருக்கு"
என்று அவன் கையிலிருந்த ஐஸ்வர்யாவின் படத்தை பிடிங்கினாள்.
"இரு, நான் உனக்கு காஃபி கொண்டு வரேன்" என்று அவனுடைய அறையில் இருந்து வெளியே செல்ல எத்தனித்தவளை,
"யாரும்மா இந்த பொண்ணு?" என்ற வசியின் குரல் தடுத்தது.
"அவ, உங்க அப்பாவோட ஃபிரண்ட், இளவரசனோட பொண்ணு. அவளை உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு அவருக்கு ஆசை. அதனால, அவ போட்டோவை கொடுத்தனுப்பி இருந்தார்."
"நீங்க என்னம்மா முடிவு பண்ணி இருக்கீங்க? " என்று ஆவலுடன் கேட்டான் வசி.
"இதுல முடிவு பண்ண என்ன இருக்கு? மன்னிச்சிடுங்கன்னு ஒரே வார்த்தை சொல்ல வேண்டியது தான்"
"ஆனா ஏன்?" என்றான்.
"ஏன்னா என்ன அர்த்தம்? எனக்கு தெரியாதா உன்னை பத்தி? மறுபடி, மறுபடி உன்னை தொந்தரவு பண்றதுக்கு எனக்கு கஷ்டமா இருக்கு. அதனால தான், வேண்டாம்னு சொல்லிடலாம்னு முடிவு பண்ணிட்டேன்"
"அவரு, அப்பாவோட ஃபிரண்டுன்னு சொல்றிங்க, நாம பேசி முடிவெடுக்கலாமே"
"அதைப் பத்தியெல்லாம் நீ கவலைப்பட வேண்டிய அவசியமே இல்ல. எங்ககிட்ட விடு, அவரை நாங்க சமாளிச்சுக்குறோம்"
"மா, கொஞ்சம் இருங்க... நான் நினைக்கிறேன்னா..."
"நீ ஒன்னும் நினைக்க வேண்டாம். நான் வழக்கம் போல, உன்னை எமோஷனல் பிளாக்மெயில் பண்ணுவேன்னு நீ பயப்படாதே. நான் இந்த தடவை அதெல்லாம் செய்ய மாட்டேன். சரியா?"
வசீகரன் ரத்னாவின் கையை பற்றி நிறுத்தினான். அவனை "என்ன?" என்பது போல் பார்த்தார் ரத்னா.
"எனக்கு இந்த பொண்ண பிடிச்சிருக்கு, மா" என்றான்.
ரத்னா அவனுடைய நேரடி பதிலால் அதிர்ந்து தான் போனார்.
"என்ன???? நெஜமா தான் சொல்றியா? நீ அவசரப்பட வேண்டிய அவசியமில்ல. யோசிச்சு நிதானமா சொல்லு"
"இல்லம்மா, எனக்கு உண்மையாவே, இந்த பொண்ண பிடிச்சிருக்கு"
"என்ன, திடீர்னு மனச மாத்திகிட்ட? வழக்கமா, உனக்கு கல்யாணத்தில் விருப்பம் இல்லன்னு சொல்லுவியே?"
"எனக்கும் எதுவும் தெரியலம்மா. ஆனா, எனக்கு இந்த பொண்ண பிடிச்சிருக்கு"
"லவ் அட் ஃபஸ்ட் சைட்டா?" என்று சிரித்தார் ரத்னா.
"எனக்கு தெரியலம்மா"
"உனக்கு என்ன தான் தெரியும்?"
"இந்த பொண்ண எனக்கு பிடிச்சிருக்கு. அவ்வளவு தான் எனக்கு தெரியும்".
"அப்பாடா... ஒரு வழியா ஒத்துக்கிட்டியே. ஏங்க.... நம்ம பிளான் சக்சஸ் ஆகிடுச்சு" என்று கத்தினார் சந்தோஷமாக.
வசீகரன் அவளை ஏதோ பேயை பார்ப்பதை போல பார்த்துக் கொண்டு நின்றான், ஒன்றும் புரியாதவனாய்.
"அவனுடைய அப்பா அரவிந்த், அவனுடைய அறையில் சிரித்துக் கொண்டே நுழைந்தார்.
"என்னம்மா இதெல்லாம்?" என்றான்.
"ஒரு சின்ன டிராமா தான்" என்றார் அரவிந்தன்.
"டிராமாவா?"
"ரத்தினா மனசுல பட்டுச்சு, உனக்கு இந்த பொண்ண நிச்சயமா பிடிக்கும்னு. எங்களுக்கு தான் தெரியுமே, நீ எவ்வளவு நல்லவன்னு. அதனால தான் உன் ரூட்ல வந்து உன்னை ஒத்துக்க வச்சோம்" என்று சிரித்தார் அரவிந்தன்.
"எனக்கு இந்த பொண்ண பிடிக்கும்னு, உங்களுக்கு எப்படி மா தெரியும்?" என்றான் வசீகரன் ஆச்சரியமாய்.
"நீ எத்தனை பொண்ணை வேண்டாம்னு சொல்லி இருக்கே... உனக்கு எப்படிப்பட்ட பொண்ணு பிடிக்கும்னு ஓரளவுக்கு எனக்கு புரிஞ்சி போச்சு" என்றார் ரத்னா.
"ஐ லவ் யூ மா" என்றான் அவன் ரத்னாவை அணைத்துக் கொண்டு.
"என் மருமகளுக்கும் கொஞ்சம் மிச்சம் வை" என்று சிரித்தார் ரத்னா.
களுக் என்று சிரித்த வசீகரனை, யாரோ தோளை பிடித்து குலுக்குவது போல உணர்ந்து, கண்ணை விழித்து பார்த்தான். அப்போது தான் அவனுக்குப் புரிந்தது, அவன் கடந்த காலத்தை நினைத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பது.
"என்னடா, யோசிச்சுகிட்டு இருக்க? உன் ரூம்க்கு போ. டைம் ஆயிடுச்சு" என்றார் ரத்னா.
அவனது அறைக்குச் செல்ல எத்தனித்த போது,
"ஆல் த பெஸ்ட்" என்று தனது கட்டை விரலை உயர்த்தி கண்ணடித்தார் ரத்தனா.
"நீங்க ரொம்ப ஓவர், மா" என்று தலையசைத்தபடி கூறினான் வசீகரன்.
"நான் எப்பவுமே இப்படித் தானே?" என்று சிரித்தார் ரத்னா.
ஒரு மெல்லிய பதற்றம் வசீகரனின் மனதிற்குள் ஊடுருவியது. இன்று தான் முதன் முறையாக அவன் ஐஸ்வர்யாவிடம் நேரடியாகப் பேச போகிறான். இதற்கு முன் ஓரிரு முறை ஃபோனில் பேசியிருந்தாலும், அவையெல்லாம், வெகு சாதாரணமான அழைப்புகளே. அதுவும் கூட, ஐஸ்வர்யாவிடம் பேச வேண்டுமென்ற வசிகரனின் ஆவலை புரிந்து கொண்டு, ரத்னா வலிய ஐஸ்வர்யாவிற்கு ஃபோன் செய்து, வசீகரனிடம் கொடுத்து பேச சொன்னது. வசீகரனின் ஃபோன் நம்பரை ரத்னா கொடுத்தும் கூட, ஐஸ்வர்யா அவனுக்கு ஒருமுறை கூட ஃபோன் செய்யவே இல்லை. ஐஸ்வர்யாவை பெண் பார்க்க, அவள் இல்லம் சென்ற போது கூட, அவள் மிகவும் கூச்ச சுபாவத்துடன் காணப்பட்டாள். அது வசீகரனுக்கு மிகவும் பிடித்துப் போனது. இப்படி கூச்ச சுபாவம் உள்ள பெண்களை எல்லாம் இந்த காலத்தில் பார்ப்பது அரிதானது தானே? ஆனால், அவள் அவனுடன் பேசுவதை தவிர்த்த போதெல்லாம், அவனுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது.
ஆனால் இன்று, அவளால் அவனிடம் பேசாமல் இருக்க முடியாது.... அவனை விட்டு ஓடவும் முடியாது. தன்னுடைய எண்ணத்தை எண்ணி சிரித்துக் கொண்டே கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான் வசீகரன். அவன் கண்ணெதிரில் விரிந்த காட்சியை பார்த்து பெருமூச்சு விட்டான் வசீகரன். தனது உடைகளை மாற்றிக் கொண்டு, ஏற்கனவே தூங்கிவிட்டிருந்தாள் ஐஸ்வர்யா.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top