வாசிப்பு
ஒரு நல்ல எழுத்தாளனாவதற்கு முதல் படி, ஒரு நல்ல வாசகனாவது தான்.
நூலகக் காதலைப் பற்றி சொன்னேன் சென்ற அத்தியாயத்தில். ஆனால் இன்னும் என் மனதிற்கினிய நூல்களை அறிமுகப்படுத்தவில்லை அல்லவா?
வாசிப்புப் பழக்கம் தொடங்கியது சிறுவர்மலரில் என்றாலும், பத்து வயதிலேயே அது நாவல்களை எட்டுமளவு சென்றுவிட்டது.
நூல்களுக்காக எங்கள் வீட்டு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகை சொற்பம்தான் என்பதாலும், அது பள்ளிக்கூடம் திறந்ததும் வாங்கும் பாடப்புத்தகங்களிலேயே தீர்ந்துவிடும் என்பதாலும், நூலகம் எனது கடவுள். குழந்தைகள் பிரிவின் புத்தகங்கள் அனைத்தும் வெகு சீக்கிரமே அலுத்துவிட்டது.
எத்தனை நாள்தான் 'திப்பிலி ராஜா, மரியாதை ராமன், விக்கிரமாதித்தன்' மட்டுமே வாசிப்பது?? எப்படிடா பெரியவர் பிரிவில் நுழைவது என்று திட்டமெல்லாம் தீட்டி யார்கண்ணிலும் படாமல் நுழைந்து 'மலை பங்களா மர்மம்', 'சவப்பெட்டியும் சந்திரனும்' போன்ற கதைகளை வாசித்து வந்துவிட்டு இரவில் பயந்ததெல்லாம் பெரிய கூத்து!🤣
பலவாறான நூல்களில், என்னைக் கவர்ந்தது "ஹாஸ்யம்" எனப்படுகிற நகைச்சுவை நூல்கள்தாம்! வெறும் எழுத்துக்களைக் கொண்டு ஒரு மனிதனை வயிறு வலிக்கச் சிரிக்க வைக்க முடியுமா என்று நான் நினைத்தபோது, அந்த சந்தேகத்தை அழகாக முறியடித்து என்னையும் கண்ணில் நீர் வரவர சிரிக்க வைத்தார் தேவன்.
தேவன் என்கிற ஆர்.மகாதேவன். இன்னும் தெரியும்படி சொன்னால், 'துப்பறியும் சாம்பு' என்னும் ஹாஸ்ய மணிமகுடத்தின் ஆசிரியர். எவரையும் எள்ளாமல், இகழாமல், துன்புறுத்தாமல், காயப்படுத்தாமல், சுத்தமான நகைச்சுவையை வழங்கிய இலக்கிய மேதைகளுள், அவர் முன்னோடி. அவரது சிறுகதைத் தொகுப்புகளை, இப்போது படித்தாலும் உதட்டில் ஒரு குறுஞ்சிரிப்பில் தொடங்கி, பின் வெடிச்சிரிப்பு உத்தரவாதம்!
'துப்பறியும் சாம்பு'வை கோவை புத்தகத் திருவிழாவின்போது கிழக்கு பதிப்பக ஸ்டாலில் பார்த்துவிட்டு, அங்கேயே அழுது அடம்பிடித்து வாங்கிவந்து, தூங்கும்போதுகூட கட்டிப்பிடித்து உறங்கிய கதையெல்லாம் இப்போது நினைத்துப் பார்த்தாலும் பெருமையாகத் தான் இருக்கிறது, என் ரசனையின் தரத்தை நினைத்து.
தேவனில் வழியிலேயே, அடுத்தடுத்து, சாவியின் (அமரர் சா.விஸ்வநாதன்) 'வாஷிங்டனில் திருமணம்' மிகமிகப் பிடித்த நூல். எப்படி எழுபதுகளில் இப்படியொரு காலத்தை வென்ற படைப்பொன்றைப் படைத்திட முடிந்ததென ஒவ்வொரு முறையும் அந்த புத்தகத்தைத் தொடும்போதெல்லாம் எண்ணிப்பார்த்து சிலிர்த்துக்கொள்வேன். ஒவ்வொரு வரியிலும் பொங்கும் உற்சாகமும், ஊற்றெடுக்கும் மனமகிழ்வும் இதுவரை மறைந்திடவில்லை. மாயாஜாலம்போல, புத்தகத்தின் பக்கங்களை மட்டும் திருப்பும் நம்மைக்கூட, எப்படியோ அமெரிக்காவின் தெருக்களில் மாக்கோலம் போட வைத்துவிடுவார் சாவி!
அடுத்தது மிக முக்கியமான இலக்கிய வகை, என் அம்மா எனக்கு அறிமுகப்படுத்தியது.
எங்க அம்மாவுக்கு மேடை நாடகங்கள் என்றால் கொள்ளைப் பிரியம். எங்கள் ஊர்த் தமிழ்ச் சங்கம் சார்பாக, வளரும் இளம் கலைஞர்களுக்கான ஒரு மேடை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது ஒருமுறை. அதன் நிகழ்ச்சி நிரலில், மூன்றாம் நாள் ஒரு நாடகம் இருந்தது. என் அம்மா என்னையும் வற்புறுத்தி அழைத்துச் சென்றார். நாடகமென்றால் வெறும் அழுவாச்சி என்றுதான் அப்போது என்னுடைய நிலைப்பாடு. அதை முதல் இரண்டே நிமிடத்தில் உடைத்தது அந்த நாடகம்.
'விண்வெளிக் காதலி' என்பது நாடகத்தின் பெயர். கேட்டதுமே ஆர்வம் வருகின்றதா?
கதை இதுதான்: ஏலியன் எனப்படும் அயலுலக ஜீவி ஒன்று, ஒரு எழுத்தாளனின் வீட்டுக்கு வருகிறது, பெண்ணுருவில். தன்னை அறிமுகம் செய்துகொள்ளும் ஜீவி, மனிதர்களின் வாழ்க்கையை படிப்பதற்காக வந்திருப்பதாகச் சொல்லும். மேலும் தன்னைப்பற்றி யாரிடமாவது சொன்னால் அவனைக் கடத்திச் சென்று அவன் நினைவுகளை அழித்துவிடுவதாக பயமுறுத்தும். அதேநேரம், எழுத்தாளனின் மாமனாரின் நண்பர் மகள் அவர்கள் வீட்டுக்கு வருவாள். ஆச்சரியம் என்னவென்றால் அவளது உருவமும் அயல்ஜீவியின் உருவமும் ஒரேமாதிரி இருக்கும். (மேடையில் ஒரே பெண்தான் நடிப்பார். ஆனால் அரைக்கண இடைவெளியில் உடையை மாற்றி, நடையை மாற்றி, பாவனைகளை மாற்றி, அத்துணை கச்சிதமாக நடித்திருப்பார்!)
இந்தப் பெண்மீது எழுத்தாளனின் மச்சான் (மனைவியின் தம்பி) மையல் கொள்ள, அயல்ஜீவியைக் காதலிக்கிறான் என நினைத்து அவர்கள் காதலைப் பிரிக்க முயலும் எழுத்தாளன்; நேரடியாக சொல்ல முடியாததால் மறைமுகமாக அவன் அதைத் தன் மனைவியிடம் சொல்ல முயலும்போது, அவன் எழுதும் கதையைத் தான் சொல்கிறானென அவள் நினைத்துக்கொள்ளும் மனைவி; தன்னைப் பார்த்தால் ஏன் நடுங்குகிறான் எனப் புரியாத நண்பரின் பெண்; கிட்டத்தட்ட அரைக்கிறுக்கான ரோமியோ பாணியிலான மச்சான்; அவனது நண்பன் என்ற பெயரில் ஒரு பைத்தியம்.
தொடர்ந்து மூன்று மணிநேரங்கள், ஒரு மாயவலையில் கட்டுண்டதுபோல் அமர்ந்திருந்தேன் நான். சினிமா போன்று அதீத எபெக்ட்ஸ் எதுவும் கிடையாது. வெறும் மேடை விளக்குகளை மட்டும் கொண்டு அனைத்துக் காட்சிகளையும் அத்துணை தத்ரூபமாக செய்த அந்த நாடகக் குழுவினரின் முயற்சி மிகச் சிறப்பு. இன்று அவர்களனைவரும் பெரிய இடத்தில் இருப்பார்கள் நிச்சயமாக.
இந்த நாடகத்தைப் பார்த்துவிட்டு வந்து, பள்ளிக்கூடம் முழுவதும் நான் சொல்லிச் சொல்லி மாய, பரிதாபம் என்னவென்றால், யாருக்கும் அது அத்தனை பெரிதாகத் தெரியவில்லை. அந்த ஆர்வமும் இல்லை. நான்தான் ஆலாய்ப் பறந்தேன், உடனே இதுபோல் இன்னுமொரு நாடகம் பார்த்தேயாகவேண்டுமென. நாங்களென்ன நகரவாசிகளா? நாரத கான சபாவிற்குச் சென்று நாடகம் பார்ப்பதற்கு. பெரிய நாடகாசிரியர்கள் சிடிக்கள் கூட, ஐநூறு அறுநூறு ரூபாய்க்கு விற்றன. அப்பா தோலை உரித்துவிடுவார் அதையெல்லாம் கைகாட்டினாலே!
என்ன செய்வது? மீண்டும் கைகொடுத்தது நூலகம். இதுவரை தொட்டிராத நாடக நூல்கள் பக்கம் அழைத்துச் சென்றது ஆவல்.
அறிஞர் அண்ணா முதல் துக்ளக் சோ வரை எத்தனையோ நாடகங்கள். எப்படிப் படித்துப் புரிந்து உணரப் போகிறோமோ என மலைக்க வைத்தன. கண்ணதாசன் கூட நாடகங்கள் எழுதியுள்ளார், தெரியுமா?
சோ அவர்களின் ஒரு நாடக நூலை வாசிக்கத் தொடங்கினேன். "யாருக்கும் வெட்கமில்லை". அது ஹாஸ்யம் கலந்த சமூக செய்தி நாடகம். வேலையில்லாத வக்கீலாக வரும் இளம் நாயகன்.. முதல் வழக்காக அவனுக்குக் கிடைப்பது ஒரு பெண்ணின் விபச்சார வழக்கு. நான் நிரபராதி என அவள் கூறுவதை அவன் மட்டுமே நம்புகிறான். ஆச்சாரமான தனது குடும்பத்தை எதிர்த்துக்கொண்டு, அவளுக்குத் தன் வீட்டிலேயே அடைக்கலம் தருகிறான். அவளைத் தன் சினேகிதி என அறிமுகப்படுத்துகிறான் அவர்களுக்கு. திட்டித் தீர்க்கும் அன்னையையும், முகத்தைத் திருப்பிக்கொள்ளும் தந்தையையும் அவன் சளாளிக்கும் விதங்கள் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும்.
கொஞ்ச கொஞ்சமாகத் தன் சாதுர்யப் பேச்சாலும், சாந்த குணத்தாலும் மாமா மாமியை வென்றுவிடுகிறாள் அப்பெண். நம் வக்கீலுக்கும் அவள்மீது காதல் வருகிறது. ஆனால் ஒருநாள் அவள் கையிலிருந்த மோதிரத்தைப் பார்த்துவிடும் மாமிக்கு, நெஞ்சே நின்றுவிடுகிறது. அது அவரது மூத்த மகனின் மோதிரம். அதைப்பற்றிக் கேட்கும்போது, உண்மை வெளிவருகிறது.
காதல் ஆசை காட்டி, அவளை மோசம் செய்துவிட்டு, தன்னை நம்பி வீட்டை விட்டு வந்தவளை ஒரு லாட்ஜில் அனாதையாக விட்டுவிட்டு, பணத்தோடு வெளிநாடு சென்றுவிடுகிறான் அந்த மூத்த சிகாமணி. வெளிநாட்டில் சம்பாரிக்கிறான் என்று ஊரெல்லாம் பெருமை பேசித்திரிந்த அன்னைக்கும் தந்தைக்கும் தலையில் இறங்கியது இடி. உண்மையைத் தெரிந்துகொள்ளும் நம் வக்கீல், தன் மனது சுக்குநூறாக உடைவதை உணர்கிறான். இருந்தாலும் தளராமல் இந்த வழக்கை நடத்தி, தன் அண்ணனையே கோர்ட்டுக்கு இழுக்கிறான்.
வீட்டில் வந்து தம்பியை வசைபாடும் அண்ணன், சப்போர்ட்டுக்காகத் தன் அன்னையையும் பார்க்க, அவரோ, மெல்ல நெருங்கி வந்து பளாரென அறைகிறார் அவனை. ஒரு வார்த்தை கூட பேசாமல், அந்தக் காட்சியில் அனைவரது மனோநிலையையும் தத்ரூபமாக வடிக்கிறார் சோ.
இறுதியில் வழக்கில் குற்றவாளியாக அண்ணனை நிறுத்தி, நிரபராதி என அப்பெண்ணிற்கு நீதி வாங்கிடும் அந்த நிமிடத்தில், அப்பெண் நீதிபதியைப் பாதியில் நிறுத்துகிறாள். நான் குற்றமற்றவள் எனத் தெரிவதற்காகத் தான் உயிரைக் கையில் பிடித்திருந்ததாகச் சொல்லி, கோர்ட்டுக்கு வரும்போதே விஷத்தை அருந்திவிட்டதாகவும் கூறிட, நம் வக்கீல் அதிர்ந்து போகிறான். நீதிமன்றக் கூண்டிலேயே அவள் உயிரை விட, பார்க்கும் நாயகனோடு, படிக்கும் நமக்கும் கண்கள் கலங்குகின்றன.
என்னை உலுக்கிய ஒரு சமூக இலக்கியமாக இன்றுவரை அந்நூல் என் மனதில் உள்ளது. பெண்ணியம் பற்றி அந்நூல் கூறும் ஆணித்தரமான கருத்துக்கள் பசுமரத்தாணியாகப் பதிந்துவிட்டன நெஞ்சில்.
என்னை நிறையப் பேர், "திமிர் பிடிச்சவ" , "ஆட்டிட்யூட் காட்டறவ" என்று காதுபடவே பேசியுள்ளனர். கல்லூரியில் அதனால் எத்தனையோ பிரச்சனைகளும் கூட வந்துள்ளன. சீனியர் மாணவிகளுக்கு, எங்களை அடிமையாக நடத்த ஆசை. பணியாமல் நான் நின்றபோது, நிறையவே தொந்தரவு கொடுத்தனர். எழுத்தாளர் உலகிலும் கூட, சிலரோடு பூசல்கள் வந்திருக்கின்றன. எனது 'ஆட்டிட்யூட்' சரியில்லையாம்!
எனக்கு வருத்தங்களே வந்ததில்லை. ஏனெனில், அவர்களுக்கு என்னைத் தெரியாது. என் தன்மானமும் துடுக்குத்தனமும் எனது பெருமைமிக்க சொத்துக்கள். வளைந்துவிடாமல் நேரே நிற்கும் முதுகெலும்பு எனது. அதற்கு முக்கியக் காரணமாக இளமையில் கற்ற இந்நூல்களைச் சொல்லலாம்.
சரி, மீண்டும் நாடகங்களுக்கு வருவோம். நாடக உலகில் தனக்கென ஒரு தனி இடம் பிடித்த இன்னொரு சிறந்த நாடகாசிரியர்- கிரேஸி மோகன்.
'ஜுராசிக் பேபி, சாக்லேட் கிருஷ்ணா, மீசை ஆனாலும் மனைவி" என, பெயர்களிலேயே நம் மனதைக் கொக்கி போட்டுவிடுவார் அவர். நாடக நூல்களால் எனக்கு அறிமுகமான பின்னர்தான், அவர் திரைப்படங்களுக்கும் வசனம் எழுதுவார் என்பது தெரியும்! "பஞ்சதந்திரம், பம்மல் கே சம்பந்தம், மைக்கேல் மதன காமராஜன், வசூல்ராஜா எம்பிபிஎஸ்" போன்ற திரைப்படங்களின் நகைச்சுவை வசனங்கள் இன்றும் நம்மைக் கவலைகள் மறந்து சிரிக்க வைக்கிறதென்றால், அதன் அனைத்துப் பெருமையும் அமரன் கிரேஸி மோகனையே சாரும்.
அவரது 'ஜுராசிக் பேபி' நாடகத்தை நான் பன்னிரெண்டாம் வகுப்புப் படித்தபோது எங்கள் பள்ளியின் ஆண்டுவிழாவுக்கு நடத்தலாமென ஆசைப்பட்டேன் நான். ஆனால் அதற்கான சரியான அனுமதிகள் எல்லாம் வாங்குவதற்கு வசதிகள் அப்போது இல்லை. (விடுதியில் இருந்தேன், கைபேசிகளோ, கடிதங்களோ ஒண்ணும் கிடையாது. பின்ன என்ன பண்ணுவது?) என் நண்பர்களும் கதையைக் கேட்டுவிட்டு அவ்வளவு ஆர்வமாக இருந்தனர். ப்ச்.. ஏமாற்றம்தான் அவர்களுக்கும். (ஆனால் என் சிந்தனை வீணாகவில்லை. நானாக ஒரு நாடகத்தை எழுதி அதை அரங்கேற்றிய கதை வேறொரு அத்தியாயத்தில் சொல்கிறேன்!😉🙃)
நகைச்சுவையை மோகனைப் போல் எழுத இன்னொருவர் பிறக்கவில்லை என்பது என் அசைக்கமுடியாத கருத்து. சிலேடை, எதுகை-மோனை, ஆங்கில-தமிழ் ஒத்த சொற்களின் சொல்லாடல், சிறிய கருத்துக்களையும் பெரியளவில் விவரிக்கும் உயர்வு நவிற்சியணி, இடைவிடாது சிரிக்க வைக்கும் அந்த எனர்ஜி!! அப்பப்பா!! நாடக நூல்களன்றி,பிற உரைநடை நூல்களிலும் கூட, இலகுவாக நம்மைச் சிரிக்க வைத்துவிடுவார் மனிதர்! ஒரு சின்ன பகுதி, அவரது புத்தகத்திலிருந்து:
இப்பொழுதும் எழுதுகிறார்கள் நகைச்சுவை. ஆனால் அந்த 'மேஜிக்' இருப்பதில்லை அதில். உங்களுக்கு யாராவது தெரிந்தால் சொல்லுங்கள்.
அவசரமாக கொஞ்சம் சிரிப்புத் தேவைப்படுகிறது இங்கே.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top