போவோமா ஊர்கோலம்..?

சென்ற ஞாயிறு வீட்டிற்குச் சென்றிருந்த போது அப்பா கேட்டார், 'டிசம்பரில் எல்லாருக்கும் லீவு வருதே.. எங்கேயாச்சும் டூர் போலாமா?'

நானும் அம்மாவும் ஒருவரையொருவர் ஒருவித மிரண்ட பார்வையில் பார்த்துக்கொண்டோம். அப்பார்வைக்குக் காரணம் இருந்தது. அந்தக் கதையை சொல்கிறேன் வாருங்கள்.

ஆறு மாதங்களுக்கு முன்னால்...

மூன்றாம் வருட மருத்துவத் தேர்வுகளை வெற்றிகரமாக முடித்தபோது கிடைத்த மே மாத விடுமுறையை, ஒழுங்காக வீட்டிலிருந்து கழிக்காமல், சுற்றுலா செல்லலாமெனப் பேச்செடுத்துவிட்டேன்.

எங்க அப்பாவும், பொண்ணு ஆசைப்பட்டுட்டாளே என, அவசர அவசரமாக இந்திய ரயில்வேயின் வலைத்தளத்தைத் திறந்து டிக்கெட் தேடத் தொடங்கினார். ஒரேயொரு ரயில் மட்டும்தான் நாங்கள் விரும்பும் நாளில் சீட்டுக்களுடன் இருந்தது. அதையே பதிவும் செய்துவிட்டார் அவர்.

எங்கே தெரியுமா? பெங்களூர்!

இங்கே ஒரு முக்கியமான இடைச்செருகல்: இருபது வயதுக்கு மேற்பட்ட அன்பர்கள், பெங்களூர் போன்ற ஊருக்கு, பெற்றோருடன் சுற்றுலா செல்கிறீர்கள் என்றால், உங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். அதுவும் என்னைப்போல ஒண்டிக்கட்டையாக, சகோதர சகோதரிகள் யாருமின்றி, பேச்சுத்துணைக்குக் கூட ஆளின்றி சென்றால், எக்ஸ்ட்ரா அனுதாபங்கள்.

பெங்களூரின் வானிலைக்கும், அதன் வனப்புக்கும், கண்ணுக்குக் குளிர்ச்சியான க்யூட்டான ஆண்களின் அணிவகுப்புக்கும், தனியாகப் போயிருந்தால் கூட செம்மையா என்ஜாய் பண்ணியிருப்பேன். எங்க மம்மியையும் டாடியையும் வைத்துக்கொண்டு நிம்மதியாக சைட்டடிக்கக் கூட முடியாது நொந்தேன்.

சரி கண்ணுக்குத்தான் விருந்தில்லை, வயிற்றுக்கேனும் ஏதேனும் வெரைட்டியாகக் கிடைக்கும் என எதிர்பார்த்து, மீண்டும் ஏமாந்தேன். பெங்களூரில் தங்கியிருந்த நான்கு நாட்களும் ஒரு மெஸ்ஸில் தோசையும் உப்புமாவும் மட்டுமே காலையும் மாலையும் சாப்பிட்டோம் என்று சொன்னால் நம்புவீர்களா? நம்பாவிட்டாலும் அதுதான் உண்மை. பெங்களூரின் பல்லாயிரக்கணக்கான க்ளப்களும் கஃபேக்களும் என்னைக்கண்டு கைகொட்டிச் சிரித்தன.

எல்லாவற்றையும் விடக் கொடுமை எது தெரியுமா?

லால்பாக் பூங்காவிற்குச் சென்றபோது, இன்ஸ்டாகிராமிற்காக இரண்டொரு புகைப்படங்கள் எடுக்க ஆசைப்பட்டு செல்பிக்காக செல்போனை உயர்த்தியபோது, எங்கம்மா வந்து 'நான் எடுத்துத் தர்றேனே' என கைபேசியை வாங்கினார். முந்தைய அனுபவங்களால் மன உளைச்சல் அடைந்திருந்த நானோ, சற்றுத் தயங்கினேன். ஏனெனில் எங்கம்மாவுக்கும் இந்த கேமரா பட்டனுக்கும் ஏதோ பூர்வ ஜென்ம பகை போலும். அவர் தேடும் நேரத்தில் அது 'வீடியோ மோட்' ஆக மாறிவிடும். சில ஆண்டுகளுக்கு முன்னால் கேரளா சென்றிருந்த போது, ஒரு நாள் முழுவதும் வீடியோ பட்டனை அழுத்தி அழுத்தி ஃபோட்டோ எடுக்க முயன்று, இறுதியில் மிஞ்சியதோ மூன்று மணிநேர நீளத்தில் இருட்டான நான்கு காணொளிகள் தான்.

இம்முறை அதிஜாக்கிரதையாக கேமரா செட்டிங்கை ஒருமுறைக்கு இருமுறை சரிபார்த்து அவரிடம் தந்தேன். கூடுதலாக, என் மனதையும் பக்குவப்படுத்திக்கொண்டேன், அவர் எப்படி எடுத்தாலும் அதிராமல் இருப்பதற்கு.

தள்ளிச்சென்று பூக்களை ரசிக்கும்போது புகைப்படங்கள் எடுக்குமாறு சொல்லிவிட்டு நான் நகர, சரியென அவரும் கேமராவால் என்னைக் குறிவைத்துக்கொண்டு நிற்க, நான் ஒரு பத்துப் பதினைந்து நிமிடங்களுக்கு அங்குமிங்கும் சென்று 'போஸ்' கொடுத்துவிட்டுத் திரும்பி வந்தபோது, என் கைபேசித் திரையில் இருந்ததோ முகமறியா நபர்களின் புகைப்படம். என் பக்குவப்பட்ட மனதே கொதித்தது. என்னாச்சு எனக் கேட்டதற்கு, 'ஆமா.. நீ தூரமா போயி நின்னுட்ட, எல்லாரும் குறுக்க வந்துட்டே இருக்காங்க.. என்ன பண்றது நானு?' என்றார்.

லூசு மாதிரி தன்னந்தனியாக பூக்களைத் தொட்டுத் தடவி முகர்ந்து பார்த்துக்கொண்டு நான் நின்றதைக் கண்டு யார்யார் என்ன நினைத்தார்களோ! பெருமூச்சு விட்டுவிட்டு தலையைத் தொங்கப்போட்டுக்கொண்டு நடந்தேன்.

அடுத்த நாள் மந்திரி மால் சென்றோம். ஐந்தாயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் நான்கு தளங்கள் கொண்ட மெகாமால் அது. என் பெரியப்பா பெண் பெங்களூரில் இரண்டு ஆண்டுகள் வேலைபார்த்தபோது தடுக்கி விழுந்தால் இங்குதான் எழுவார்! "'ப்ரூக்ஃபீல்ட்ஸ்' எல்லாம் சிறுசு.. மந்திரி மாலை வந்து நீ பாக்கணும்" என வானளவு புகழ்ந்து என்னுள் ஆசையை வளர்த்துவிட, நானும் ஆவலுடன் அங்கே போகவேண்டும் என அப்பாவிடம் கூறிவிட, எங்கம்மா என்ன செய்தார் தெரியுமா?

அதிகாலை ஆறரை மணிக்கு அலாரம் வைத்து எழுப்பினார்.

ஆம். விடுமுறை சுற்றுலாவில், அதுவும் ஒரு ஞாயிற்றுக்கிழமையில், ஆறரை மணிக்கு அலாரம் வைத்து எழுந்த குடும்பம் நாங்கதான்!

ஆட்டோவுக்கு பேரம் பேசி பலிக்காமல், பேருந்தும் ஏறத் தெரியாமல், தெரிந்த ஓரிரண்டு கன்னட, இந்தி, தெலுங்கு வார்த்தைகளை எல்லாம் பிரயோகப்படுத்தி வழிகேட்டு, மூன்று மைல் நடந்து கோரமங்களாவை அடைந்தால், வாசலில் நின்றிருந்த காவலாளி எங்களைக் கண்டு கன்னடத்தில் சிரித்தார். எங்கள் எதிரிலோ இன்னும் திறக்காத வணிக வளாகம். கூட்டிப் பெருக்கும் பெண்மணிகளே எங்களுக்குப் பின்னர்தான் வர, அவர்களுடன் சேர்ந்துகொண்டு உள்ளே இழுத்துச்சென்றார் எங்கம்மா.

நான் ஒரு 'morning person' அல்ல. அதுவும் ஞாயிறுகளில் நிச்சயமாகக் கிடையாது. என் பகல்கள் நண்பகல்களில் தான் தொடங்கும். வீட்டில் இருந்த வரையில் அம்மாவின் சுப்ரபாதத்திற்கு எழுந்து முனகிக்கொண்டே பணிகள் செய்தாலும், ஏழு வருடங்கள் விடுதியில் இருந்திட்டதால், ஞாயிறுன்று உதிக்கும் ஞாயிறை நான் சந்தித்தே ஆண்டுகளாயிற்று. எனவே உச்சக்கட்ட எரிச்சலில் உச்சுக்கொட்டிக்கொண்டே புறவாசல் வழியாக நுழைந்து ஆளற்ற மாலுக்குள் நான் நுழைய, அப்போதுதான் கடைகளைத் திறந்துகொண்டிருந்த ஆட்களெல்லாம் எங்களை வினோதமாகப் பார்க்க, மாலின் கண்ணாடிச் சுவரை உடைத்துக்கொண்டு எங்கேனும் குதித்துவிடலாமா என்றுகூட யோசித்தேன் ஒருகணம்.

மந்திரி மாலின் சிறப்பம்சம் என்னவென்றால், மாலுக்குள்ளேயே மெட்ரோ ரயில் ஓடும். ஆம்! நமது சென்னை மெட்ரோ எப்படி பாதாளத்திற்கு எல்லாம் போய்வருகிறது, அதுபோல இங்கே மாலுக்குள் சென்றுவரும் மெட்ரோ ரயில் இருந்தது. (மாலின் பணியாளர்கள் பாதிப்பேர் அதில்தான் வந்து இறங்கினார்கள்). KGF Chapter 2 மற்றும் RRR படங்களின் காலைக்காட்சி பார்க்க சில கும்பல்கள் மெட்ரோவில் வந்து இறங்கினர் ஒன்பது மணிக்கு. அவர்களைப் பின்தொடர்ந்து நான்காவது மாடிக்குச் சென்றோம்.

வந்ததற்கு படமாச்சும் பார்க்கலாம் எனக் கேட்க, பெற்றோரோ கொந்தளித்தனர்.
'அம்பது ரூவா பாப்கார்னை ஐநூறு ரூபாய்க்கு விப்பான்! கேட்டா டேக்ஸ், ஜிஎஸ்டின்னு கதை விடுவான்! டிக்கெட் காசும் குறைச்சல் கிடையாது. டிவி மாதிரி ஸ்க்ரீனை வச்சிக்கிட்டு முன்னூறு ரூவா கறப்பான்! இதெல்லாம் கேபிடலிசம்! சுரண்டல்! கரப்ஷன்! இந்திய பொருளாதாரத்தின் மரணம்' என்றெல்லாம் பேசத் தொடங்க, மீண்டுமொரு மே புரட்சி வெடிக்க வேண்டாமென அவர்களை அழைத்துக்கொண்டு அகன்றுவிட்டேன் அங்கிருந்து.

மனசெல்லாம் சோர்ந்துபோய் தோள்கள் தொய்ந்து முகம் துவண்டு நான் நடக்க, அவர்களோ காலை உணவுக்கு மெஸ்ஸுக்கே திரும்பிப் போய்விடலாம் எனப் பேசிக்கொண்டு வர, இதற்குமேல் பொறுமையாக இருந்தால் தகாதென, ஓடிச்சென்று மெட்ரோவிற்கு டிக்கெட் வாங்கிவிட்டேன்.

சும்மா சொல்லக்கூடாது. பெங்களூர் மெட்ரோ சிஸ்டம் உண்மையாகவே சூப்பர்ப்பா! முப்பது ரூபாய் டிக்கெட்டுக்கு எத்தனை தூரம் கொண்டுவிடுகிறான்! Majestic டெர்மினல்தான் பெங்களூரில் நான் பார்த்தவற்றிலேயே தகுதியான சுற்றுலாத் தலம். இரண்டு மெட்ரோ ரயில் பாதைகள் ஒன்றையொன்று கடந்துசெல்லும் இடம்தான் இந்த மெஜஸ்டிக். சுமார் நூறு அடி ஆழத்தில் நிலத்தடியில் அமைந்திருக்கும் இந்த மெட்ரோ நிலையத்துக்குள், நான்கு எஸ்கலேட்டர்கள், எட்டு எலிவேட்டர்கள், அது போறாதென படிக்கட்டுகள் வேறு! நுழைவாயிலே ஏதோ ஏர்ப்போர்ட் போலப் பளபளத்தது. சுவர்களெல்லாம் மாடர்ன் ஆர்ட். டிக்கட் எடுக்கக் கூட கம்ப்யூட்டர் கியாஸ்க்!

வாங்கிய டிக்கெட் காசுக்கு நெடுநேரம் நடந்து சுற்றிப்பார்த்து, வருவோர் போவோரையெல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டு அங்குமிங்கும் நாங்கள் அலைந்துகொண்டிருக்க, அங்கிருத்த துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புப் படையினர் எல்லாம் எங்களை சற்று வினோதமாகப் பார்க்க, எங்கே சுட்டுவிடுவார்களோ என நாங்களும் இடத்தை காலி செய்தோம். வெளியே சென்று சிற்றுண்டிக் கடையொன்றில் (கவனிக்க: இங்கேயும் ஒரு மெஸ்ஸை கண்டுபிடித்துவிட்டார்கள்) சாப்பிட்டுவிட்டுத் திரும்பி மீண்டும் அதே நிலையத்துக்குள்ளேயே நுழைந்தோம்.

மீ்ண்டும் முப்பது ரூபாய்க்கு டிக்கெட் வாங்கிவிட்டு ரயிலேறியபோது, எனக்கும் எங்க அப்பாவுக்கும் ஒரே மாதிரி குயுக்தியான, கோணலான சிந்தனை! (என்ன பண்றது, அப்பா பொண்ணாச்சே நானு!) பயணச்சீட்டு எடுத்த ஸ்டேஷனில் இறங்காமல் தள்ளிப்போய் இறங்கினால் என்ன ஆகும்?

பார்த்துவிடுவோம் என முடிவெடுத்தோம். எங்கம்மா தலையில் அடித்துக்கொண்டார். கே.எஸ்.ஆர் நிலையத்துக்கு டிக்கெட் எடுத்துவிட்டு, தள்ளிப்போய் விஜய்நகரில் இறங்கினோம். நிலையத்திலிருந்து வெளியே செல்லும் மின்கதவு எங்களுக்குத் திறக்கவில்லை! 'அப்பவே சொன்னேன் கேட்டீங்களா?' என்ற அக்மார்க் டயலாக்கை அம்மா சொல்ல, அப்பா விடாமல் மீண்டும் டிக்கெட் காயினைச் செருகி முயற்சி செய்ய, திடீரென அலாரம் அடிக்க ஆரம்பித்துவிட்டது!

போச்சுடா, துப்பாக்கிப் படை வந்து பிடிச்சுக்கப் போகுது போல என நான் பயப்பட, அப்பாவோ போன ஸ்டேஷனில் இறங்க மறந்துட்டோம் என அப்பட்டமாக பொய் சொல்ல, கணினி கவுண்ட்டரில் அமர்ந்திருந்த பெண்மணியோ நமட்டுச் சிரிப்புடன் அபராதம் மட்டும் கட்டிவிட்டுப் போகச்சொன்னார். அபராதத் தொகை: அதே முப்பது ரூபாய். ஹிஹி.

அந்நாள் முழுக்க கோயில் கோயிலாக சென்று தரிசனம் செய்யத்தான் எனக்கு விதிக்கப்பட்டிருந்தது. எனது மால், சினிமா கனவுகளெல்லாம் பஸ்பமாக, நானும் என் பூர்வ ஜென்ம பாவங்களை நினைத்து வருந்திக்கொண்டே நடந்தேன். கோயிலில் கூட எத்தனையோ அம்சமான முகங்களை எல்லாம் பார்த்தேன்.. அசப்பில் பாலிவுட் ஹீரோ போல இருந்தான் ஒருத்தன். நான் தனியாக வந்திருப்பதாக நினைத்து என்னைப் பார்த்துப் புன்னகைக்க, எங்கம்மாவோ அப்போதென்று வந்து என் நெற்றியில் திருநீர் பட்டையை மூன்று விரல்களால் போட்டுவிட, அவன் முகத்தைத் திருப்பிக்கொண்டு போயே விட்டான். இதற்குப்பிறகு எங்கே நான் அழகான ஆண்களைத் தேடுவது!? ஆஞ்சநேயரை தான் தேடிட்டுப் போனேன்.

நான்கு நாட்கள் நான்கு யுகங்களாகக் கடந்தன. பெங்களூர் மென்மழைகளும், குளிரான இளங்காற்றும் என்னை கிளம்பவே இயலாமல் தடுத்தாலும், சந்தோஷம் கைக்கெட்டி வாய்க்கெட்டாத நிலையில் சண்டையும் சச்சரவுமாக இங்கே இருந்து என்னபயன் எனவும் தோன்ற, பெட்டியைக் கட்டிவிட்டேன். கிடைத்திருந்ததோ செகண்ட் ஏசி. அதாவது ரயிலின் சாதாரண கோச் போலவே, ஆனால் முழுக்க மூடி குளிர்சாதன வசதியோடு. வரும்போது 'சேர் காரி'ல் வந்ததால் இம்முறை நன்றாக படுத்துக்கொண்டு செல்லலாம் எனப் பரோபகார மனதோடு அப்பா பயணச்சீட்டு வாங்கியிருந்தார். ஆனால் நிகழப்போகும் ஆபத்தை அப்போது நாங்கள் அறியவில்லை.

இரவு சுமார் ஏழு மணிக்கு பெர்த்தை விரித்து, நான் மேலேயும், அப்பா நடுவிலும், அம்மா கீழ் பெர்த்திலும் சாய்ந்தோம். நான் ஹெட்போன் மாட்டிக்கொண்டு சினிமா பார்த்துக்கொண்டிருந்தேன், ஒன்பது மணிக்கு படம் முடிந்ததும் மூடி வைத்துவிட்டு கண்ணயர்ந்தேன்.

சுமார் பதினோரு மணிக்கு ஆரம்பித்தது அது.

இரண்டு காதுகளின் அருகிலும் இராட்சத ரம்பம் வைத்து இரண்டாயிரம் மரங்களை அறுத்துத் தள்ளுவதுபோன்ற குறட்டை சத்தம். திடுக்கிட்டு முழித்துவிட்டேன் நான். சுற்றுமுற்றும் இருட்டில் பார்த்தபோது, எங்களுக்கு எதிர் வரிசையில் நடு பெர்த்திலிருந்து வந்தது அந்தக் கொடூரமான சத்தம். தாட்டியான மும்பைகார் ஒருத்தர், எங்கள் காதுகளை சம்ஹாரம் செய்துகொண்டிருந்தார். கீழே குனிந்து பார்த்தபோது, என் அம்மாவும் கொட்டக்கொட்ட முழித்திருந்தார். எங்கப்பா, அவருக்கு மூன்றடி தூரத்திலிருந்து வரும் அச்சத்தத்தைப் பொருட்படுத்தாமல் பூப்போல உறங்கிக்கொண்டிருப்பதைக் கண்டு என் கண்கள் வெளியே பிதுங்கி விழாத குறை.

இறங்கி வந்து அம்மாவிடம் என்ன இழவு இது எனக் கடிந்தேன். எனக்கென்ன தெரியும் என பதிலுக்குக் கடிந்தார் அவர்.

மற்ற இரு பெர்த்தில் இருந்த இளைஞர், இளம்பெண் எல்லாரும் முழித்துவிட, எனக்கோ அங்கே இன்னொரு நிமிடம் இருந்தால் தலையே வெடித்துவிடும் எனத் தோன்ற, ஏசி கோச்சின் கதவைத் திறந்து வெளியே நடைபாதைக்கு வந்துவிட்டேன். கதவருகே படிக்கட்டில் அமர்ந்து இரவின் காட்சிகளைப் பார்த்துக்கொண்டு, குறட்டை இல்லாத நிசப்தத்தை சற்றே அனுபவித்துக்கொண்டிருந்த நேரத்தில் கூடவே பின்னால் தொந்தரவு செய்ய வந்துவிட்டார் என் தாய்.

"நடுராத்திரியில இப்படி வயசுப்பொண்ணு தனியா உட்கார்ந்திருக்கறத யாராச்சும் பாத்தா என்ன நெனைப்பாங்க?"

'ஓடற ரயில்ல, பேர்தெரியாத இடத்துல, யாருன்னே தெரியாத ஆளுங்க என்னைப் பார்த்து என்ன நினைச்சா எனக்கென்ன?' என வாய்வரை வந்ததை விழுங்கிவிட்டு, குறட்டை நின்றுவிட்டதா எனக் கேட்டேன். இல்லை என்றார்.

"அப்பறம் எதுக்கு நான் உள்ள வரணும்?"

"அதுக்குன்னு, டிக்கட்டை வாங்கிட்டு ஏசில போகாம இருக்கறதா?"

எனக்கு இந்த லாஜிக் சுத்தமாகப் புரியவில்லை. காசு கொடுத்து கர்மவினையை வாங்கிக்கொள்வது என்பார்களே.. அதுதான் இதுவோ?

'இந்தப்பக்கம் கூப்பிடறதுக்கு பதிலா அந்தப்பக்கம் பிடிச்சு தள்ளிவிட்டுரு தாயே, சந்தோஷமா போறேன் நான்..' என சொல்லாமல், இரண்டு நிமிடத்தில் வருவதாக வாக்களித்து அனுப்பிவைத்தேன் அவரை.

பத்து நிமிடம் முகத்தில் குளிர்காற்று வாங்கி ஆசுவாசப்பட்டுக்கொண்டு, பின்னர் பெருமூச்சுடன் உள்ளே சென்றபோது, என் அம்மா கோபமாக என் அப்பாவைத் தட்டி எழுப்பிக்கொண்டிருந்தார்.

"பெட்டியே தூக்கமில்லாம தவிக்குது, நீங்க இப்படி அடிச்சுப் போட்டாப்புல தூங்கறீங்களே!?"

அவர் தேமே எனக் கண்களைக் கசக்கிக்கொண்டு எழுந்தார்.
"என்னம்மா சத்தம்?"

"குறட்டை விடறான் அந்த ஆள்! எழுப்பி அமைதியா தூங்க சொல்லுங்க."

இந்த இடத்தில் என் அப்பாவைப் பற்றி சொல்லவேண்டும். தமிழ் நடிகர் தனுஷை அறிவீர்கள் அல்லவா? அதுதான் என் அப்பாவின் சரீரம். மிஞ்சிமிஞ்சிப் போனால் நாற்பது கிலோ இருப்பார். ஒல்லியான முகம், பாவமான எக்ஸ்பிரஷன். சத்தம் போட்டுக்கூட பேசமாட்டார், தெரிந்தவர்களிடமே. இதில் எங்கே ஒரு அந்நியரை எழுப்பி வம்பு பண்ணுவது!?

அதற்குள் பக்கவாட்டில் இருந்த ஜன்னல் சீட் ஆசாமி ஒருவர் எழுந்து தைரியமாக குறட்டை மிஷினைத் தட்டி எழுப்பினார்.
"இப்படி குறட்டை விட்டா மனுஷங்க எப்டி தூங்கறது?" என ஏதேதோ கன்னடத்திலும் இந்தியிலும் பேசி, அம்மனிதரை எழுப்பிவிட்டுவிட்டு, இவர் சென்று படுத்துக்கொள்ள, நாங்கள் அனைவரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டோம்.

எங்கள் மகிழ்ச்சி அரைக்கணம் கூட நீடிக்கவில்லை. வந்து எழுப்பினாரே ஒரு உத்தம சிகாமணி, அந்த ஆள் இப்போது குறட்டை விடத் தொடங்கியிருந்தார்!

எனக்கு வாழ்க்கையே வெறுத்துவிட்டது எனச் சொன்னால் மிகையில்லை.

வாழ்க்கையில் இதுவரை குறட்டை விடும் நபர்களுடன் சேர்ந்து உறங்கியதில்லை நான். எங்கள் வீட்டில் தனி அறை எனக்கு. விடுதியில் எல்லாரும் இளம் வயது. குறட்டை பிரச்சினையெல்லாம் ஒருபோதும் கிடையாது. அதிலும் இம்மாதிரி ரம்பங்களை கேட்டதே கிடையாது.

நீங்கள் குறட்டை விடுபவரா? அதை நீங்கள் அறிவீர்களா? அறிந்தும் பொதுப் போக்குவரத்தில் (பேருந்து, ரயில், விமானம்) சென்று அங்குள்ளவர்களை அசவுகரியப்படுத்துவீர்களா? அப்படியென்றால் I HATE YOU. I HATE YOU TO THE CORE. அது நம்மால் கட்டுப்படுத்த இயலாத பழக்கம் என நான் அறிவேன். விஷயம் குறட்டையில் இல்லை. உங்களது சமூக சிந்தனையில் இருக்கிறது.

எத்தனையோ மருத்துவ வசதிகள் மிகுந்திருக்கும் இந்நாட்டில், தனது குறட்டைப் பழக்கத்தைப் பற்றித் தெரிந்தும் ஒன்றுமே செய்யாமல், ஏழு அந்நிய மனிதர்களின் உறக்கத்தைக் கெடுத்துவிட்டுத் தான்மட்டும் நிம்மதியாக உறங்க என்ன உரிமை இருக்கிறது அவர்களுக்கு?

எனக்கு சிகரெட் பழக்கம் இருக்கிறது என்பதற்காக; என்னிடம் சிகரெட் இருக்கிறது என்பதற்காக உங்கள் முகத்தில் ஊதித் தள்ளினால் நீங்கள் பொறுப்பீர்களா? என்னிடம் பணம் இருக்கிறது என்பதால் உங்கள் பொருட்களை நான் நாசம் செய்தால் நீங்கள் வாளாவிருப்பீர்களா?

விடிய விடிய சக பயணிகளுடன் கதைபேசிக்கொண்டு அம்மாவும் நானும் இருக்க, அப்பாவோ மீண்டும் உறங்கிவிட்டார் ஐந்து நிமிடங்களில். என் தந்தை ஒரு யோகி என்பதை அன்றுதான் நான் அறிந்துகொண்டேன். அதிகாலை நான்கு மணியளவில் திருச்சியில் வந்திறங்கியபோது, ஓரடி கூட எடுத்துவைக்காமல் கைப்பையில் இருந்த துண்டை விரித்து நடைமேடையிலேயே நான் படுத்துவிட, அருகிலிருந்த பெஞ்ச்சில் என் தந்தையும் கட்டையாய் நீட்டிவிட, என் அம்மா தலையில் கைவைத்துக்கொண்டு அவரது தலைமாட்டில் அமர்ந்துவிட்டார்.

வெய்யில் வந்த பிறகுதான் கண்களைத் திறந்தேன். அங்கேயே கும்பிடு போட்டு, இனிமேல் சுற்றுலா எங்கேனும் போகலாம் எனக் கேட்டால் காலிலுள்ளதை கழற்றி அடிக்கவும் என விண்ணப்பம் வைத்துவிட்டு, நான் விடுதிக்கு வந்தேன்.

என் நிலமை புரியாமல், "நாலு நாள் பெங்களூர் ட்ரிப்! செம்மையா என்ஜாய் பண்ணியிருப்பியே?" என நண்பர்கள் வினவ, ஓவெனக் கதறி என் கதையை ஒப்பித்து, என் நிலமை யாருக்குமே வரக்கூடாது எனப் புலம்பித்தீர்த்தேன். ஆறுதலாகத் தோளை தட்டிக்கொடுத்து, 'விடு விடு, அடுத்த ட்ரிப் உன் பாய்ஃப்ரெண்டோட போவியாம்.. கவலைப்படாத' என்றனர் அவர்கள்.

ஆறு மாசமாகத் தேடுகிறேன்.. அந்த பாய்ஃப்ரெண்ட்டைத் தான் எங்குமே காணவில்லை. கிடைத்தால் கூட்டிக்கொண்டு சுற்றுலா போகலாம், குறட்டைகளற்ற ரயில்களில்.

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top