நல்ல நண்பன்

நண்பர்கள்.

எனக்கு முதல் நண்பர்கள் புத்தகங்கள் தான். மனுஷங்களைப் பார்த்து, பழகி, பிடிச்சிப்போய், நட்பாகிற மாதிரி தான் நான் புத்தகத்தை சந்திச்சேன், பழகினேன், நட்பாகினேன்.

நடக்கத் தொடங்கறதுக்கு முன்னாடியே, பயங்கர துறுதுறு குழந்தை நான். சுட்டிக் குழந்தை படத்துல வர்ற பையன் மாதிரி, தவழ்ந்தே எங்கயாச்சும் போயிடுவேனாம். சாப்பிட வைக்கறதுக்குள்ள எங்க வீட்டு ஆளுங்க எல்லாரும் போதும்டா சாமின்னு ஆகிடுவாங்க. சித்தி, அக்கா எல்லாரும்கூட எப்படியோ என் பின்னாடி ஓடிவந்து பிடிச்சு சோறு ஊட்டிடுவாங்க.. ஆனா பெரியம்மாக்கள்? அத்தோட, பாட்டி?

எங்க பெரியம்மா என்னை மடியில உட்காரவச்சு முந்தானையாலபெல்ட் மாதிரி என்னை சுத்தி கட்டிப்பாங்க. ஆனாலும் நம்ம அடங்குவோமா? கத்தி, அழுது, ரகளை பண்ணி, எப்டியோ தப்பிச்சுத் தரையில இறங்கி ஓடிடுவோம். ஆனா பாட்டி ஜீனியஸ். சும்மாவா...? அந்தக் காலத்து மூணாப்பு அவங்க! செய்தித்தாளை நல்லா விரிச்சு, கலர்கலரான படங்களை எல்லாம் என் கண்ணுல படறாமாதிரி வைச்சிடுவாங்க. நானும், பொம்மை பாக்கற ஆர்வத்துல பேப்பர் மேலயே உட்கார்ந்துக்கிட்டு எதையோ பாத்துட்டு இருக்கற கேப்ல, எனக்கே தெரியாம முழுக் கிண்ணத்து சாப்பாட்டையும் ஊட்டிருவாங்க!😎

படிக்கத் தொடங்குறதுக்கு முன்னவே, படக்கதைகள், அதாவது காமிக்ஸ் பார்க்கக் கத்துக்குடுத்துட்டாங்க. நல்ல காலமா அப்போவெல்லாம் எங்க வீட்டுல டிவி இல்லை (டிவி கண்டுபிடிக்கப்பட்டாச்சு, ஆனா நாங்க வாங்கல. ஒரு ட்ரான்ஸிஸ்டர் மட்டும் இருந்ததா ஞாபகம்... இல்ல.. ஒரு டேப் ரெக்கர்டரும் இருந்தது). செல்போன்கள் இன்னும் செங்கல் வடிவத்தில் தான் இருந்தது. அதில் பேச மட்டும்தான் முடிந்தது. அதுனால, அம்புலிமாமாவும், சிறுவர்மலரும் தான் எனக்கு.

பளீர்னு தெரியுற வண்ணங்களோட இருக்கற அந்தக் குட்டிக் குட்டி ராஜாக்களும், கிளி, மான், முயல் போன்ற க்யூட்டான பொம்மைகளும் என்னை ஈர்க்க, அம்மாவை வேலைக்குப் போக விடாம நச்சரிச்சு 'அது என்ன பண்ணுது?', 'இவன் எங்க போறான்?' எப்படின்னு கேள்வியா கேட்டுத் துளைக்க, அவங்க எதையோ சொல்லி மழுப்ப, நான் எனக்காக நானே ஒரு கதையை உருவாக்கிக்கிட்டு எனக்குள்ள சொல்லிக்கிட்டு சந்தோஷப்பட்டுக்குவேன்.

அப்பறம் பள்ளிக்கூடத்துக்குப் போக ஆரம்பிச்சப்போ, அந்த புத்தகங்கள்லயும் பொம்மை தேடிட்டே இருப்பேன். சம்மந்தமே இல்லாத, வேற வேற பக்கங்கள்ல இருக்கற பொம்மைப் படங்களை இணைச்சு நானா ஒரு கதை பண்ணுவேன்.. அதை என்னோட பரிதாபகரமான நண்பர்களை விடாமப் பிடிச்சு அவங்ககிட்டவும் சொல்லிக்காட்டுவேன். அவங்களும் சளைச்சவங்களா? மேரியின் லிட்டில் லாம்ப்பும், பாபா ப்ளாக் ஷீப்பும் ஒன்றாக ஊருக்குப் போன கதையெல்லாம் தயாரிப்பாங்க அவங்களும்! சங்கர் பட பட்ஜெட்ல நாங்க முயல்-ஆமை கதையை சினிமாவா எடுத்தோம்... அந்த வயசுலயே!!

எழுத்துக்கள் கற்றுக்கொண்ட பின்னர், ஒரு புது உலகமே திறந்ததுபோல் இருந்தது. அதுவரை புரியாத கிறுக்கல்களாய் இருந்த சினிமா பட போஸ்டர்கள், பேருந்தின் பலகைகள், காலண்டரின் ராசிபலன்கள் எல்லாமே அர்த்தமாகத் தொடங்கியது. குட்டி ராஜாக்களும், தேவதைகளும், முயல்களும் சிங்கங்களும் என்ன பேசறாங்கன்னு புரிஞ்சது... அதாவது, கொஞ்ச கொஞ்சம் புரிஞ்சது.

சொற்களாகப் பேசத் தெரியாமல், எழுத்துக்களை மட்டும் உச்சரிச்சு, அது என்னன்னு கேட்டு வீட்டு ஆளுங்களை நச்சரிச்சு.. எப்படியோ மூன்றாம் வகுப்பு வர்றதுக்குள்ள தமிழ்ல சரளமா படிக்கக் கத்துக்கிட்டேன். சிறுவர்மலர் வந்தால், கையில் எடுத்த இருபது நிமிடங்களில் மொத்த இதழையும் முடிக்குமளவு தேறியும்போனேன்.

அதன்பிறகு அறிமுகமான ஒரு சொர்க்கம் தான் எங்க ஊரு லைப்ரரி. வேற எங்கயும் இல்ல.. எங்க பாட்டியின் நெய்க்கடைக்கு நேர் எதிரில், சாலையின் மறுபுறத்தில். சித்திகள், அக்காவெல்லாம் மாத நாவல்களும், அரசு வேலைப் போட்டித் தேர்வுக்குப் படிக்கும் புத்தகங்களும் எடுப்பதற்காகச் செல்வர். நான் முதலில் வேடிக்கை பார்க்கப் போவேன். பெரிய்ய.. உயரமான மேற்கூறையோடு, அகன்ற கண்ணாடி ஜன்னல்களோடு, திரும்பும் இடமெல்லாம் புத்தகங்களும், பழைய, புதிய புத்தகங்களின் கலப்பான வாசனையும்... எல்லாமே பிடிக்கும். ஏன், மேலடுக்கில் இருக்கற புத்தகத்தை எடுக்கறப்போ மூக்குல ஏறுமே தூசி, அதையும் அவ்வளவு பிடிக்கும்.

நான் படிக்கும் பள்ளி ஒரு ஊர்லயும், பாட்டி வீடு பக்கத்து ஊர்லயும் இருந்ததால, எப்ப பாட்டி வீட்டுக்குப் போவோம்னு அடம்புடிச்சு அழுவேன். அது பாட்டிக்காக, பெரியம்மாவுக்காக இல்ல, நூலகத்துக்காகத்தான்னு எங்கப்பாக்குப் புரிஞ்சதும், 'நம்ம ஊர்லயே லைப்ரரி இருக்கே' என்று சொல்லிக் கூட்டிச்சென்றார்.

வாழ்க்கையில் என்றுமே அத்தனை ஆச்சரியப்பட்டதில்லை நான். ஏனென்றால், உடுமலைக்கு மட்டுமே உண்டான ஒரு சிறப்பம்சம்னு நான் லைப்ரரியை நினைச்சுக்கிட்டு இருந்தப்போ, ஊருக்கு ஒரு சொர்க்கம் இருக்கும்னு சொன்னா, உங்களுக்கு எப்படி இருக்கும்? எங்கள் மகாலிங்கபுரம் ரவுண்டானா அளவுக்கு, பொது நூலகமும் அவ்ளோ பிடிக்கும் எனக்கு.

பின்னர் வருடங்கள் கழித்து மீண்டும் பாட்டி ஊருக்கே நாங்கள் வந்துவிட்ட பிறகும், ஒரே ஊருக்குள் இரண்டு மூன்று நூலகங்கள் இருக்குமென்பது தெரிந்தது இன்னும் ஆச்சரியப்பட்டேன். என் ஆசைக்காக, கிளை நூலகம் ஒன்றிற்குப் பக்கத்துத் தெருவில் வீடுபார்த்தார் அப்பா. அதற்குள் பள்ளியிலும் நூலகம் உள்ளதெனக் கண்டறிந்துவிட்டேன். அந்த ஒரு வருடம்.. ஏழாம் வகுப்பு.. நேரு நகர்.. என் வாழ்க்கையில் மிகமிகப் பசுமையான பக்கம். பகலில் பள்ளிக்கூடத்து நூலகம். மாலையில் ஊரகக் கிளை நூலகம்.

பள்ளியில் எப்பவும் லைப்ரரி போக விட மாட்டார்களே? என்ன செய்வது? கிடைக்கும் ரிசெஸ்(இன்டர்வல்) இடைவேளைகளின் போதெல்லாம் அசுர வேகத்தில் ஓடிப்போய் ஒரு நாலு பக்கமாவது படித்துவிடுவது. பின்னர் உணவு இடைவேளையின்போதும், இரண்டே நிமிடத்தில் அவசர அவசரமாக டிபன்பாக்ஸை காலி செய்துவிட்டு, கிடைக்கும் முப்பத்தைந்து நிமிடங்களில் முடிந்த அளவுக்குப் புத்தகத்தில் புதைந்துவிடுவேன்.

"அது எப்படி மது நீ மட்டும் எல்லா இன்டெர்வல் போதும் லேட்டாவே க்ளாசுக்கு வர்ற??" என்று எங்கள் கணக்கு டீச்சர் இரைந்து கத்துவது இப்போதும் கேட்கிறது.

லைப்ரரி மிஸ் (லைப்ரேரியன் என்பதெல்லாம் இப்போது கற்றுக்கொண்டது.. அப்போவெல்லாம் ஸ்கூலில் இருந்தாலே மிஸ் தான். பள்ளிக்குள் பேப்பர் கடை வைத்து நடத்தும் பெண்மணியை எல்லாம் ஸ்டோர் மிஸ் என்று கூப்பிட்டுக் கொண்டிருந்தோம்🙈.. நானாவது பரவாயில்லை.. சில பேர் துப்புறவாளர்களை ஆயா மிஸ் என்றெல்லாம் அழைப்பர்😂😂) ரொம்ப நெருக்கமானவர் எனக்கு. கடல் மாதிரி இருக்கும் லைப்ரரி ஹாலில், அவர் மட்டும் தனித்தே இருந்த காலத்தில், நானும் சென்று அவரது தனிமைக்குத் துணை சேர்த்ததாலோ என்னவோ, என்னைப் பிடித்துப்போனது அவருக்கு.

குழந்தைகள் செக்ஷன் தவிர்த்து, மற்ற அலமாரிகளைத் திறக்க அனுமதியளித்தார் எனக்கு மட்டும்! அத்தோடு, அவசர அவசரமாக அள்ளிக் கொட்டிக்கொண்டு ஓடி வராதே என அறிவுரைத்து, நூலகத்துக்கே சாப்பாட்டை எடுத்துவந்து, அவருடன் அமர்ந்து சாப்பிடச் சொல்லிவிட்டார். அந்த நூலகர் இன்னும் என் நன்றிமிக்க மனிதர்கள் பட்டியலில் கவுரவமான இடத்தில் இருக்கிறார்.

அடுத்த ஆண்டு. பணிமாற்றம். வேறு ஊர். வேறு பள்ளி. அங்கும் நூலகம், ஆனால் கொஞ்சம் சிறுசு. வீட்டின் அருகே எந்த நூலகமும் இல்லை. 'கோவிலில்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்' என்ற பழமொழியை அடித்துத் திருத்திவிட்டு, 'நூலகம் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று மாற்றி எழுத வேண்டும். வாழ்வில் அத்தனை தனிமையை உணர்ந்ததே இல்லை என்பதுபோல் சோர்ந்துபோனேன் நான்.

பள்ளிக்கூட நூலகம் என் நிரந்தர வாசஸ்தலம் ஆனது. வகுப்பில் இல்லாவிட்டால் நூலகத்தில் தான் இருப்பாள் என்று என்னைத் தெரிந்த எவரும் சொல்லும் அளவுக்கு முற்றிவிட்டது, புத்தகப் பைத்தியம். டிக்கின்ஸ், லெவிஸ் கரோல், ரவுலிங், ஸ்டீவன்சன், எனிட் ப்ளைட்டன் என்று வாசிப்பு வட்டம் ஆங்கிலத்தில் விரிந்துகொண்டே போனபோது, தமிழ் மட்டும் தினமலரோடும், அவ்வப்போது படிக்கும் ஆனந்த விகடனோடும் நின்றது. கடவுளாக அனுப்பிவைத்ததுபோல, தமிழ் ஆசிரியை வந்தார் எனக்காக.

தமிழை அவ்வளவு அழகாக, சுவாரசியமாக, விரும்பத்தக்கதாக மாற்றினார் அவர். அதுவரை உரைநடைகள் மட்டுமே படித்துக்கொண்டிருந்த எனக்கு, கவிதைகள் காட்டினார். எங்கள் பள்ளி நூலகத்தில் ஆசிரியர்கள் மட்டுமே புத்தகத்தை இரவல் எடுக்கமுடியும் என்ற முட்டாள்தனமான சட்டம் இருந்ததால், எனக்காக அவர் வந்து கையெழுத்திட்டு புத்தகங்கள் எடுத்துத் தருவார். எங்கள் மலையாள நூலகர் பெண்மணிக்கு எங்களது தமிழ்க்காதல் புரிந்துகொள்ளச் சற்றே சிரமமாக இருந்தது போலும். ஆனால் நாட்கள் சென்றதும் அவரும் அடியேனுக்கு ஆப்த நண்பராகிவிட்டார்.

எங்கள் பள்ளியின் அடுத்த முட்டாள்தனமான சட்டம், ஒரேயொரு பாடவேளையை லைப்ரரிக்கும் PT வகுப்புக்கும் பொதுவாக ஒதுக்கித் தொலைத்திருந்தனர். யாராவது மைதானத்தை விட்டுவிட்டு நூலகத்துக்குள் வருவானா? மலையாள நூலகருக்கும் அது வசதியாகப் போய்விட்டது. கைபேசியில் ஜேசுதாஸ் பாடல்களைப் போட்டுக் கேட்டுக்கொண்டு தனது நூலக சாம்ராஜ்ஜியத்தின் ஒற்றை அதிபதியாகப் பொழுதைக் கழிப்பார்.

புத்தகத்தை நேசித்த பாவத்துக்கு, PT பாடவேளையை தியாகம் செய்து நூலகத்துக்கு ஓடி வருவேன் நான் மட்டும். வேறு யாரையும் அழைத்தாலும் வருவதில்லை. விளையாட முடியாத நிலையில், உடம்பு சரியில்லாத ஓரிருவர் மட்டும் தூங்குவதற்காக வருவர். இல்லையெனில் நகம் வெட்டாமல், முடி வெட்டாமல் வந்த ஒழுக்கசீலர்கள் பீ.டி சாரிடமிருந்து தப்பிக்க இங்கே வருவர். அதைத்தவிர, படிப்பதற்காக நூலகம் வந்த ஒருவரையும் எங்கள் பள்ளியில் சத்தியமாக நான் பார்த்ததேயில்லை!

போகப்போக நூலகருடன் ஏற்பட்ட பழக்கத்தால், நூலகர் வேறு எங்காவது வேலையில் இருக்கும்போது, சாவியை என்னிடம் தந்து நூலகத்தைத் திறக்கச் சொல்லுமளவு வந்தது. கிட்டத்தட்ட இரண்டாவது நூலகர் போல ஆகியிருந்தேன் நான்.

"பயாலஜி ரெஃபரன்சா அக்கா? மூணாவது டோர், மேல் ஷெல்ஃப்."

"பிசிக்ஸ் புக்கா சார்? மேக்மில்லன் நாலாவது எடிஷன் தான் இருக்கு.. பரவாயில்லையா?"

"ஐஷூ.. ஃபேமஸ் ஃபைவ் நாலு புக் தான் இருக்கு. எவ்வளவு தேடுனாலும் அது மட்டும்தான் கிடைக்கும். வேற எந்த நம்பரும் இல்ல. இருபத்தி ஒன்னு இருக்கணும்.. ஆனா எங்கயோ தொலைஞ்சு போயிருக்கு."

ஆனால் அதற்குள் வகுப்புத் தேர்வுகள், வாரத் தேர்வுகள், மாதத் தேர்வுகள், மிட்-டெர்ம் தேர்வுகள் என்று ஒரு சுனாமியாக வந்து பத்தாம் வகுப்பு எங்களைத் தாக்கிட, கண்ணீருடன் நூலக நேரங்களுக்கு விடைகொடுக்க வேண்டியிருந்தது. அடுத்து சேர்ந்த நாமக்கல் பள்ளியில், நூலகம் என்ற பெயரில்கூட எதுவும் இல்லை. ஏன், விளையாட்டு, உடற்பயிற்சி வகுப்புகளே கூட இல்லை. இனி எங்கே புத்தகம் வாசிக்க?

அப்பறம் என்ன ஆச்சு? போதைப்பொருள் கடத்திட்டு வர்றமாதிரி, வீட்டுல இருந்து புக்கை கடத்திட்டு வருவேன் நான்! அங்கயும் அடங்கலை பாத்தீங்களா? படிக்கும் ஆர்வமோ என்னமோ, எனக்கு அசாதாரணமான நினைவு சக்தி போன்று ஏதோ இருந்தது. புத்தகங்கள் எந்த அளவில், எவ்வளவு பெரிதாக இருந்தாலும் எனக்கு பயமளித்ததில்லை. பாடப்புத்தகங்களும் அவ்வாறே. கவனக்கூர்மை அச்சுப்பிசிறாமல் எத்தனை பக்கங்களை வேண்டுமானாலும் ஒரே முறையில் படித்துவிடுவேன்.

சுமார் இரண்டாயிரம் மாணவர்கள் படித்த எங்கள் பள்ளியில், இன்னும் 'மது' என்றால் ஆசிரியர்கள் அனைவரும் வாஞ்சையுடன் நினைவுகூறும் ஒரு extraordinary மாணவி நான். படிப்பு, எழுத்து, பேச்சு அனைத்திலுமே 'மது' என்றால் ஒரு முத்திரை. ஒரு பெஞ்ச்மார்க். புத்தக நட்புகள் நிறைய மனித நட்புகளையும் தந்தது. புனைவுக் கதைகள் மட்டுமன்றி, தத்துவம், உடலியல், உலகியல், வானவியல் என்று பெரிய வாசிப்பு வட்டம் எனது. கிட்டத்தட்ட ஆறாம் வகுப்பு முடிப்பதற்குள் நமது வானவெளி, பேரண்டம் எல்லாம் புரிந்துவிட்டது எனக்கு.

எல்லாமே புத்தகம் மட்டுமே. காகித்தாலான, வாசமுள்ள, உயிருள்ள புத்தகங்கள் அவையனைத்தும். க்விஸ் எனப்படும் வினாடிவினா போட்டிகளில் ஆறாம் வகுப்பு முதலே அடியேனின் குழு தான் எப்போதும் வெற்றி பெறும். விரிவான வாசிப்பு மட்டும்தான் அதற்குக் காரணம் என்பதை ஆணித்தரமாக நம்புகிறேன் நான். எங்கோ, எப்போதோ படித்த ஒரு சின்ன செய்தித் துணுக்கினால், ஒரு மிகப்பெரிய போட்டியில் முதல் பரிசை வென்றோம் நாங்கள்!

இப்போதும், படிப்பதற்கும், தலைக்கு வைத்துப் படுப்பதற்கும், உற்ற துணை புத்தகங்கள் தான். புத்தகங்களைக் கடவுள் போல மதிப்பேன். இந்தத் தூக்கம் வந்தால் மட்டும் தடுக்க முடிவதில்லை.. அப்படியே தலை தொங்கிவிடுகிறது!😅🙈

வாழ்க்கையில் இதுவரை என்னை ஏமாற்றாத, உண்மையான நண்பர்கள் அந்தப் புத்தகங்கள் தான். படிக்கும்போதெல்லாம் ஒரு புதிய உலகிற்கு அழைத்துப் போய், மனதில் இருந்த கவலைகள், கலக்கங்களைத் துடைப்பதில் அவற்றுக்கு இணை அவையே. நீங்களும் ஒரு முறையேனும் புத்தகங்களுடன் நட்புப் பாராட்ட முயன்று பாருங்கள்.

நிச்சயம் ஏமாற மாட்டீங்க!

:)

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top