தானம்
"ஃபர்ஸ்ட் டைமா??"
என் பதற்றச் சிரிப்பைப் பார்த்துக் கேட்கிறார்.
நான் தலையை மேலும் கீழும் அசைக்கிறேன்.
"பயப்படாத.. முதல் டைம்தான் இப்படி இருக்கும். அப்பறம் பழகிடும்."
கல்லூரி ஆடிட்டோரியம்.
காலை ஒன்பது நாற்பது.
வெள்ளையும் இளஞ்சிவப்புமாய்க் கோடுபோட்ட குர்த்தி, இளஞ்சிவப்பிலேயே துப்பட்டாவும், ஜெக்கிங்க்ஸ் எனப்பட்ட, எனக்குப் பிடித்த, ஃபிட்டான பேண்ட்டும். எதற்காக இன்று இந்த உடையைத் தேர்ந்தெடுத்தேன் என்றால்... முக்கால் கை வைத்திருந்தாலும், எளிதாக மடக்கி விட முடியும் அதை.
எதற்காக மடக்கிவிடணும்?
சொல்றேன்... ம்ஹூம்... இல்ல, சொல்லலை.
தானத்தில் சிறந்த தானம் எதுன்னு கேட்டா... நிறைய பேர் நிறைய சொல்வாங்க. ஆனா எதுவா இருந்தாலும், தானம் செஞ்சுட்டு, அதை வெளியே சொல்றது நல்லதில்லை இல்லையா? யாருக்கு எப்படியோ, ஆனால், வலதுகை கொடுக்கறது இடதுகைக்கு தெரியாமல் இருக்கணும்னு தான் எனக்கு எங்க வீட்ல சொல்லித்தந்தாங்க. நிஜமாகவே வலதுகை தான் கொடுத்தது. இடது கைக்கு இதுவரை தெரியல.
சோ, என்னன்னு கேட்காதீங்க.
(பின்ன எதுக்கு இந்த பில்டப்??
ஹிஹி.. குறிப்புணர்த்துதல் எதாவது ட்ரை பண்ணலாம்னு தான்..)
கலையரங்கத்துக்குள்ள போயி, கிட்டத்தட்ட ஒரு வருஷம் ஆகப்போகுது. போன வருஷம் பிப்ரவரியில ஒரு செமினார்க்கு போனது. பத்தடி தூரத்துல தான் இருந்தது, ஆனாலும் பூட்டியிருக்கறதால, போகல. இன்னிக்குத் திறந்திருந்தது. தட்டுமுட்டு சாமான்கள் மாதிரி தரையெல்லாம் நிறைய பரப்பி வச்சிருந்தாங்க. ஐஸ் பெட்டிகள், வெள்ளைத் துணிகள், போர்வைகள், பிஸ்கட் பாக்கெட்டுகள். பல வருஷம் காணததைத் கண்ட ஆர்வம், முதல் முறையா ஒரு வித்தியாசமான செயலை செய்யற பதற்றம்.. ரெண்டும் சரிவிகிதத்துல கலந்த மாதிரி ஒரு உணர்வு. ஆட்கள் அங்கயும் இங்கயும் வேகவேகமா நடந்துக்கிட்டு இருக்காங்க.
முதலாவதா இருந்த டெஸ்க் கிட்ட நின்னேன்.
தேவையான படிவம் எல்லாம் நிரப்பி முடிச்சதும், நடுவிரல்ல குத்தி ஒருதுளி சிவப்பு வரவழைச்சு, சின்ன கண்ணாடி டப்பால இருந்த நீலக்கலர் காப்பர் சல்ஃபேட்ல கரைச்சு விட்டாங்க. சுமார் மூணு நாலு வினாடி அது கரையாம நின்னதும், திருப்தியான முகத்தோட என்னைப் பார்த்து தலையை ஆட்டுனாங்க அந்த லேடி. மறுபடி அதே சிவப்பை ஒரு டைல்ஸ் கல்லுல மூணு புள்ளியா வச்சாங்க. முதல் வருஷத்துல படிச்ச ப்ராக்டிகல் எல்லாம் ஞாபகம் வந்தது. கூடவே லேசான ஏக்கமான சிரிப்பும்.
எனக்குத் தெரிஞ்சதையே தான் செஞ்சாலும், எனக்குத் தெரிஞ்ச முடிவுதான் வரப்போகுதுன்னாலும், எதோ ஆர்வத்துல கண்ணெடுக்காம அந்த வெள்ளை செராமிக் பலகையையே பார்த்துட்டு நிக்கறேன் நான்.
"ஏ பாஸிட்டிவ் தானே?"
"ஆமா மேடம்."
"சரி, BP பாத்துடுங்க."
அடுத்த மேசை. அடுத்த வரிசை.
அதே முதல்வருட ப்ராக்டிகல் ஞாபகம். அப்போது பார்த்த அதே ரிசல்ஸ். மத்தவங்களுக்குக் கூட சிற்சில மாற்றங்கள், நான் மட்டும் ஏதோ அச்சுவார்த்த மாதிரி, எல்லா இடத்துலயும் இரண்டு வருசத்துக்கு முன்னத்த மதிப்புகளே, அப்படியே. கொஞ்சம் வினோதமா இருந்தது, எனக்கே.
ஒரு ப்ளாஸ்டிக் பை. அதுல பேரு, பிபி, இன்னபிற விவரங்கள். கையெழுத்துப் போட்டு அந்தப் பையை வாங்கிட்டுப் போய் எனக்கு குடுத்த இடத்துல உட்காரறேன், படுக்க சொல்லி, போர்வையும் போர்த்தி விடறாங்க.
"தலையை நிமிர்த்தாதீங்கம்மா. ப்ளாட்டா படுங்க."
படுத்தேன்.
சீலிங் இருபதடிக்கும் அதிகமான உயரத்தில். சில குறுக்குவாட்டு பீம்களும் அதனுடன். மூலையில் ஒட்டடை. அதாவது, சிலந்தி வீடு.
இரண்டு பெரிய சிலந்திகள் அசையாமல் இருந்தன. ஒன்று மட்டும் அங்குமிங்கும் ஊர்ந்தது. கண்கள் அதில் பதிந்தன. கண்ணாடி இல்லையென்றால் அவை தெரிந்திருக்காது. அதையே ஆர்வமாகப் பார்த்துக்கொண்டிருந்தபோது, "நீடில் போடறேன்" என்றது ஒரு புதுக்குரல், பக்கவாட்டில். நிமிரக்கூடாது என்ற கண்டிப்பான ஆணையினால், கைகளில் கைபேசியை இறுக்கிப் பிடித்துக்கொண்டு, உம் கொட்டினேன்.
மஞ்சள் நிற ஸ்ட்ரெஸ் பால் (ஸ்மைலி போட்ட பந்து) ஒன்று வலது கைக்கு வந்தது. சில்லென திரவமொன்று தேய்க்கப்படும் சிலிர்ப்பு, கூடவே எறும்பு கடித்ததுபோல் முழங்கையில் ஒரு உணர்வு.
அவ்வளவுதான்.
முதல் முறை. பதற்றமும் பயமும் ஆர்வமும் மகிழ்ச்சியும் சேர்ந்த இனிமையான உணர்ச்சி.
முதல் ஹாஸ்பிடல் விசிட்,
முதல் வெள்ளை கோட்,
முதல் ஸ்டெத்தஸ்கோப்,
முதல் இதயத்துடிப்புக் கேட்டல்.
இதுபோன்ற முதல்கள் வரிசையில் இன்று இதுவும். வயிற்றுக்குள் ஒரு படபடப்பு, மூச்சு ஒருநிமிடம் எகிறியது. ஆனால் மூளையே அதற்குள் அதை அடக்கி, அதிகம் பதறினால் அட்ரீனலின் கலந்துவிடும், அப்பறம் தரும் பொருள் வீணாகிவிடக்கூடும் என அதட்டி, மூச்சை சமனாக்கியது.
சிலந்திகள் ஊர்ந்துகொண்டே இருந்தன விட்டத்தில். நீண்ட இரும்புக்குழல் கொண்டு தொங்கிய மின்விசிறியில் சிலநேரம் பார்வை பதிந்தது. கைகள் பஞ்சுப் பந்தை அழுத்திக்கொண்டிருந்தது. ஐந்து நிமிடத்தில், "போதும், எடுத்துடலாம்".
மீண்டும் ஒரு எறும்புக் கடி. இப்போது மற்ற கையில் நிஜமாவே கொசுக்கடி.
"இந்த ப்ளட் பேங்க் ஆளுங்களும் வேற வந்திருக்கு போல? ஜன்னலை சாத்தலையா?" நேரங்கெட்ட நேரமென்றாலும், அந்த ஜோக்குக்கு சிலர் சிரித்தனர்.
ஒரு ஜூஸ் பாக்கெட், ஒரு பிஸ்கட் பாக்கெட். ஜூசை வேகமாகக் குடித்தேன். கரிசனமாகப் பார்த்தார் ஒரு லேடி.
"எதாவது பண்ணுதா? மயக்கம்? தலைசுற்றல்?"
எதுவும் இல்லை என்று தலையாட்டினேன். எனக்குத் தெரிந்தவரை, எங்கள் விடுதியின் மாணவிகளிலேயே ரொம்ப ஹெல்த்தி, நான்தான். அதாவது, நிறைய அசாத்திய வேலைகள் செய்து, ஆச்சரியப் பார்வைகள் வாங்குவது அடியேன்தான்.
"கன்கிராட்ஸ். ஃபர்ஸ்ட் டைம் இல்ல? இனி அடிக்கடி வாங்க!"
"எங்க!? முன்னூறு மில்லி உறிஞ்சியெடுத்துட்டு, நூறு மில்லி ஃப்ரூட்டி தான குடுக்கறீங்க."
அந்த லேடி சிரிக்கிறார். சிரித்துத்தானே ஆகவேண்டும்; என் மனதைக் கஷ்டப்படுத்தாமல் இருக்க!
சட்டெனக் கொசுக் கடிக்கவும் வேகமாக ரிஃப்லெக்ஸில் அதை அடிக்கக் கையோங்க, "ஐயையோ.. சடனா எந்த அசைவும் பண்ணக்கூடாது. ப்ளாஸ்திரி கழண்டு வந்துடும்!!" பதறிப்போய் சொன்னவாறு என் கையைப் பிடித்து மடக்கி வைத்தார் ஒரு க்யூட்டான டாக்டர். ('எந்த நேரத்துல என்ன நெனப்பு..?' அதானே? டாக்டருக்கு இருபத்தி நாலு மணிநேரமும் ட்யூட்டி தான். சோ, கிடைக்கற இந்தமாதிரி கேப்ல தான் இதையெல்லாம் பண்ணனும். சைட், லவ், கல்யாணம்... எல்லாமே வேலைக்கு நடுவுல கிடைக்கற நுண்ணிய இடைவெளியிலதான்!☺)
"பேர் சொல்லுங்க?"
"மது."
நிமிர்ந்து பார்க்கிறார் சான்றிதழ் எழுதுபவர்.
"சர்ட்டிபிகேட்ல முழுப் பெயர் போடணும். அதை சொல்லுங்க."
சொன்னேன். தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதி, வெற்றிப் புன்னகையுடன் நீட்டினார். நன்றி சொல்லி நான் வாங்க, "நாங்கதான் தேங்க்ஸ் சொல்லணும்.." என்றபடி அவர் தந்தார்.
க்யூட் மருத்துவருக்கு ஒரு டாட்டா காட்டிவிட்டு, மாஸ்க்கின் பின்னால் ஒரு சிரிப்பையும் சிந்திவிட்டு, அவரும் சிரித்ததாக மனசுக்கு சொல்லிக்கொண்டு, அறைக்குத் திரும்புகிறேன்.
அப்பாவுக்கு ஃபோன் போட்டேன். சான்றிதழையும் 'வாட்சாப்'பினேன். அவர் சிரித்தார். கன்கிராட்ஸ் என்றார். மறுபடியும் குடுப்பேன் என்றேன். சரி பத்திரம், நிறைய ஜூஸ் குடி என்றார்.
அவருக்கு சக்கரை, அம்மாவுக்கு பித்தம்.
பதினெட்டில் ரொம்ப ஆர்வமாக இருந்தேன்; ஆனால் அப்போது வீட்டினர் தடை. எனக்குமே லேசான பயம். இப்போது அது தொலைந்திருந்தது. பார்த்துவிடலாம் என்று போய்விட்டேன்.
பயம் முற்றிலும் போய்விட்டது. கையை மடக்கும்போது மட்டும் லேசாக சுள்ளென வலிக்கிறது.
மறுபடியும் க்யூட் மருத்துவர் வருவதாக இருந்தால், லிட்டர் கணக்கில் கூட குடுக்கலாம் எனத் தோன்றியது.
சிரிக்கிறேன் எனக்குள்ளே!😊😉
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top