22
ஆதித்தன் தன் இருப்பினை உலகறியச்செய்யும் அந்த ரம்மியமான அதிகாலைப்பொழுதானது திருவிழாவிற்கான பரபரப்புடன் விடையூரில் புலர ஆரம்பித்தது .
பெரிய பெரிய ராட்டினங்களும் , பல புத்தம் புதிய பொம்மைக்கடைகளும்,விளையாட்டுப் பொருட்களும் சிறார்களை பரவசத்தில் ஆழ்த்த இளைஞர்களையும் பெண்களையும் கவரும் பல கேளிக்கை நிகழ்ச்சிகளும்,நடன நிகழ்ச்சிளும் புதுப்பொலிவுடன் நடைபெற்றுக்கொண்டிருந்தது.
ராம் திருவிழாவிற்கான வேளைகளை கர்மசிரத்தையுடன் மேற்பார்வையிட்டுக்கொண்டிருக்க விஷ்ணு , ஜீவா , பாலா,ராஜீவ் ஆகியோர் சிறிது நேரம் ராம்முக்கு உதவி செய்வதும் சிறிது நேரம் திருவிழா கேளிக்கைகளை கண்டுகளிப்பதுமாக மகிழ்ச்சியுடன் வளையவந்துகொண்டிருந்னர். ராஜீவ்வும் அவர்களின் நண்பர் கூட்டனியில் ஒரு உறுப்பினர் ஆகியிருந்தான்.
இதுவரை கிராமத்து திருவிழாவினை திரைப்படங்கள் மற்றும் கதைகளின் வாயிலாக மட்டுமே கண்ணுற்று வந்த மூவருக்கும் இது பல வித்தியாச பரவச அனுபவங்களை ஈட்டித்தந்து கொண்டிருந்தது . ஒவ்வொரு நொடிகளையும் அவர்கள் தங்களின் மனப்பெட்டகத்தினுள் பொக்கிஷமாக பாவித்து சேகரித்துக்கொண்டிருந்தனர் .
கௌரியுடன் நின்றுகொண்டு கேளிக்கை நிகழ்ச்சிகளைக் கண்டுகொண்டிருந்த வேதா பட்டுவேட்டி சட்டையுடனும் சிறிது சந்தனக்கீற்றை தன் நெற்றியிலும் இட்டுக்கொண்டு காற்றில் அலைபாய்ந்த கேசத்தை தன் கைவிரல்களால் மொத்தமாகக் கோதிக்கொண்டு கம்பீரநடையுடன் வந்துகொண்டிருந்த விஷ்ணுவைக் கண்டதும் இவன் தன்னவன் என்ற எண்ணம் தலைதூக்க அவனின் இலட்சனமான அழகில் சுற்றம் மறந்து போய் சற்றுநேரம் அப்படியே அவனையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள் . ( அப்பட்டமாக சொல்ல வேண்டும் என்றால் அநியாயத்துக்கு சைட் அடிச்சிட்டு இருந்தா 😅😅😅😅😅 )
மனம் அவனோடு சேர்ந்து கைக்கோர்த்துக்கொண்டு உலவவேண்டும் என விருப்பம்தெரிவித்தாலும் சுற்றுப்புறம் கருதி தன் ஆசைக்கு சற்றுநேரம் அணைக்கட்டி வைத்தாள் அவள்.
இப்படியே சிறிது நேரம் சென்றுகொண்டிருக்க விஷ்ணுவை நோக்கி வந்த வேலையாள் மூர்த்தி “ தம்பி … ஐயா உங்களை எல்லாம் கோவிலுக்கு உள்ள கூப்பிட்டாரு... சாமி கும்பிட டைம் ஆகுதாம் என்று கூறி கையோடு அழைத்தும் சென்றான் .
பிரகாரத்திற்கு அவர்கள் வந்து சேரவும் கருவறையில் அர்ச்சகர் அர்ச்சனையை ஆரம்பித்தார் . அவர் காட்டிய கற்பூரஜோதியில் ஜ்வாஜல்யமாக ஜொலித்த அந்த மரகதலிங்கத்தைப் பார்க்க பார்க்க மனத்தினுள் அழுத்திக்கொண்டிருந்த வலியயெல்லாம் தொலைந்துபோய் இறகினால் வருடியது போன்ற இதம் அனைவரையும் ஆட்கொண்டது .
ஒரு சிறு புன்னகை உதட்டினில் தவழ விஷ்ணுவைப் பார்த்துக்கொVண்டிருந்த ஈஷ்வரபாண்டியனின் எண்ணம் ஒருவாரத்திற்கு முன்னர் நடந்த நிகழ்வில் சுழன்று கொண்டிருந்தது .
தன் கையில் கூரிய ஆயுதத்துடன் ஈஷ்வரபாண்டியனின் மயக்கத்தை தெளிவித்துக் கொண்டிருந்த விஷ்ணுவத் தாக்க எத்தனித்த வருணை திடீரென வலிமையான இரண்டு கரங்கள் அவனைப் பின்புறமிருந்து அவனைப் பிடித்து இழுத்து அவனின் கன்னத்தில் ஓங்கி அறைந்தது.
அதிர்ந்துபோய் அந்த கரத்திற்கு உர்யவனைப் பார்த்து உறைந்து நின்றான் வருண். தனக்கு பின்புறம் நடக்கும் களேபரத்தின் சப்தம் கேட்டு திரும்பிய விஸ்ணுவிற்கும் பேரதிர்ச்சி காத்திருந்தது.
ரௌத்திரத்தில் விழிகள் இரண்டும் சிவந்திருக்க கை நரம்புகள் புடைக்க முன்ஜென்மத்தில் ராஜசிம்மனாக அறியப்பட்ட ராஜீவே அங்கு வருணை அடித்துக்கொண்டிருந்தான்.
"டேய் துரோகி… இன்னும் அதே மூர்க்க எண்ணத்தோடயே இருக்கியே… சின்ன அளவுக்கு கூடவா உன் மனசுல நல்லது எது கெட்டது எதுன்னு யோசிக்கத் தெரியலை… இப்பவும் அதே கெட்ட சிந்தனையோட இருக்கியே இடியட்… " என்றவாறு வருணின் முகத்திலேயே ஆத்திரத்துடன் ஓங்கிக் குத்தினான் ராஜீவ்.
"நீ… நீயும் வந்துட்டியா...டேய் ரெண்டு பேரும் ஒன்னா சேர்ந்து வந்துட்டீங்களா… உங்களை உங்களை சும்மா விடமாட்டேன்டா… என்னோட திட்டத்துக்கு தடையா இருக்குறதையே வேலையா வச்சிட்டு இருக்க உங்களை நான் என்ன பன்றேன்னு பாருங்க… " என்று ராஜீவின் அடியின் தாக்கத்தினால் கீழே விழுந்த வனுண் கத்திக் கொண்டிருந்தான்.
வருண் இவ்வாறு கத்திக் கொண்டிருக்க விஷ்ணுவிற்கோ ராஜீவ்விற்கு அனைத்தும் நினைவிற்கு வந்துவிட்டதை நினைத்து ஆனந்த அதிர்ச்சியாக இருந்தது . "ராஜீவ்… உங்களுக்கு… உங்களுக்கு… எல்லாம் ஞாபகம் வந்துடுச்சா… நீங்க எப்படி இங்க வந்தீங்க…" என ராஜீவிடம் கேட்டுக்கொண்டிருந்தான் விஷ்ணு.
"ஆமா விஷ்ணு… எல்லாமே நியாபகம் வந்துடுச்சு…எல்லா கதையும் நான் அப்புறம் சொல்றேன்... நேரமாகிட்டே இருக்கு முதல்ல இங்க இருந்து கிளம்பனும்… "என விஷ்ணுவை அவசரப்படுத்தினான் ராஜீவ்.
இவர்கள் இவ்வாறு பேசிக்கொண்டிருக்க சற்றே தெளிந்த நிலைக்கு வந்துவிட்ட வருண் தான் தவற விட்ட கைத்துப்பாக்கியைத் தேடி எடுத்துக்கொண்டு அவர்கள் முன் வந்து நின்றான்.
நீங்க என்னை தாண்டி இந்த லிங்கத்தை எப்படி எடுத்துட்டு போயிடுறீங்கன்னு நானும் பாக்கிறேன் டா என்று வருண் அவர்களின் புறம் கைத்துப்பாக்கியைக் குறிபார்த்தான்.
“ வருண் … நீ என்ன பிரயத்தணப்பட்டாலும நான் இந்த மரகதலிங்கத்தை உன்கிட்ட கொடுக்கமாட்டேன் . நான் சொல்றதை புரிஞ்சிகிட்டு என் வழியில இருந்து விலகிடு . “ என்று கூறிய விஷ்ணு மேலும் வருண் வேண்டாம் இது தெய்வ சங்கல்பம் இதில் உன்னோட கெட்ட புத்தியை கொண்டு வராதே முன் ஜென்மத்தில் அரசனுக்கு செய்த ராஜதுரோகத்தை விட இது உன்னை அதல பாதளத்திற்கே கொண்டு சேர்க்கும் வீணாய் வழியை மறைக்காத பாவத்தை தேடிக்காத செய்த செயலுக்கு வருந்த பாருடா... என்று அவனும் வீர ஆவேசமாய் பேசினாலும் மேலும் அவனை பழிபாவத்திற்கு ஆளாகமல் தடுக்க மன்றாடினான்…
டேய் இவனுக்கு வாலை ஆட்டி சேவகம் பார்த்து குரைக்கும் தளபதியா இருந்த நீ எனக்கு அறிவுறை சொல்றியா ? என விஷ்ணுவை ஏளனமாகப் பேசி பின் ராஜீவை நோக்கி "ஒரு ராஜாவா உனக்கு உண்மை எது பொய் எதுன்னே கண்டுபிடிக்க முடியலை… இதுல நீ என்னை குறை சொல்றியா… உங்க ரெண்டு பேருக்கும் எனக்கு அறிவுறை சொல்ற அளவுக்கு தகுதியும் இல்லை நீங்க எனக்கு சமமானவங்களும் இல்ல…" என்று கூறியவன் மேலும்
உங்களை கொன்னுட்டுதான் இந்த லிங்கத்தை எடுத்துட்டு போகனும்ன்னு இருந்தா அதை மாத்த யாரலாதான் முடியும் . உங்க ரெண்டு பேருக்கும் போன ஜென்மத்துலயும் சரி இந்த ஜென்மத்துலயும் சரி முடிவு என் கையிலதான்னு உங்களோட கடவுளே எழுதிருக்கான் போலடா எனக்கூறிக்கொண்டே மீண்டும் விஷ்ணுவைத்தாக்க முற்பட்டான் வருண்.
அதற்குள் மயக்கம் தெளிந்து எழுந்த ஈஷ்வரபாண்டியன் அனைத்தையும் பதைபதைப்புடன் நோக்கிக்கொண்டிருந்தார். ஈஷ்வரபாண்டியன் வருணை எப்படியாவது தடுக்க வேண்டும் என்று எண்ணியவர் அவனறியாமல் அவன் பின் சென்று தான் .தேடி எடுத்துவந்த கட்டையால் வருணின் தலையில் பலமாகத் தாக்கி அவனை உதைத்தார். உதைத்த வேகத்தில் அங்கிருநத பாறையில் வருணின் தலை மோதியதால் சுயநினைவு இழந்து மூர்ச்சையானான் வருண்.
மயங்கி விழுந்த வருணையே சிலநாழிகை நேரம் வேதனையுடன் பார்த்துக்கொண்டிருந்த விஷ்ணுவிடம் “ விஷ்ணு…,ராஜீவ்…. நேரம் ஆகுது வாங்க இந்த லிங்கத்தை கோவில்ல வச்சிடலாம் “ எனக்கூறிய ஈஷ்வரபாண்டியனின் பேச்சிற்கு செவிமடுத்து அங்கிருந்து மரகத லிங்கத்தை எடுத்துக்கொண்டு மூவரும் புறப்பட்டனர் .
ஈஷ்வரபாண்டியனின் காரில் விஷ்ணு, ராஜீவ் , ஈஷ்வரபாண்டியன் ஆகிய மூவரும் அவ்வூர் சிவன் கோவிலை நோக்கி சென்றுகொண்டிருந்தனர் .மூவரின் உள்ளத்திலும் வெவ்வேறான உணர்ச்சிப் பிராவகங்கள் ஊற்றெடுத்துக் கொண்டிருந்தன.
"ராஜீவ்… நீங்க எப்படி இங்க வந்தீங்க? உங்களுக்கு எப்படி முன் ஜென்ம நிகழ்ச்சி எல்லாம் நியாபகம் வந்துச்சு?" என தன் மனதில் சுற்றிக்கொண்டிருந்த கேள்வியை மீண்டும் கேட்டான் விஷ்ணு.
அதற்கு ஒரு சிறு புன்னகையை பதிலாக உதிர்த்த ராஜீவ் " இங்க வரதுக்கு முன்னாடி வரைக்கும் எனக்கு எதுவும் நியாகத்துக்கு வரலை விஷ்ணு...ஆனா உன்னை முதல் முதல்ல மீட் பண்ணப்பவே எனக்கு உன்னை எங்கேயோ பார்த்த ஃபீலிங்… பட் எனக்கு அது என்ன எப்படின்னு சரியா சொல்லத் தெரியலை… இங்க நான் வந்தது ஒரு மிராக்கிள் தான்... இன்னைக்கு எனக்குத் தூக்கம் சரியா வரலை மனசுக்கு என்னவோ போல இருந்துச்சு… தூக்கம் தான் வரலையேன்னு புக் படிச்சிட்டு இருந்தேன். அப்போதான் ஜன்னல் பக்கமா அங்கள் அவசர அவசரமா எங்கேயோ கிளம்பிட்டு இருந்தாரு… முகத்திலயும் ரொம்ப பதட்டம் தெரிஞ்சுது.
அப்புறம் அவர் பின்னாலேயே நீயும் வந்த…அவருக்கு தெரியாம அவரை ஃபாலோவ் பன்றன்னு எனக்கு நல்லாவே புரிஞ்சிடுச்சு..எனக்கு அப்பவே சம்திங் ஃபிஷ்ஷியா தெரிஞ்சுது…அப்படி இந்த மிட்நைட்ல என்ன விஷயமா ஆளாளுக்கு பதட்டமா இரகசியமா வெளிய போறீங்கன்னு தெரிஞ்சிக்கிற ஒரு ஆர்வத்துல தான் இங்க வந்தேன்.
நீ எப்படி இந்த பில்டிங் உள்ள வந்தியோ அப்படியே நானும் வந்தேன். ஈஷ்வரபாண்டியன் அங்கிள் கிட்ட இந்த துரோகி எல்லா விஷயத்தை பத்தியும் அங்கிள் கிட்ட சொல்லிட்டு இருந்ததை நானும் கேட்டுட்டு இருந்தேன்… அவன் சொல்ல சொல்லத்தான் எனக்கு கொஞ்சம் கொஞ்சமா எல்லாமே ஞாபகத்துக்கு வந்துட்டு இருந்துச்சு… அப்படியே தலை சுத்துற மாதிரி ஒரு சுரீர்னு ஒரு வலி… அந்த வலி கொஞ்சம் கொஞ்சமா போகும்போதுதான் எனக்கு எல்லாமே தெளிவா விளங்குச்சு. அப்போதான் உன்னை அடிக்க அந்த துரோகி வந்துட்டு இருந்தான்…ராஸ்கல்… அவன்லாம் எப்படித்தான் மனிஷ ஜென்மத்தில வந்து பிறந்தானோ…" என ராஜீவ் தான் அங்கு எப்படி வந்தோம் என்பதையும் தனக்கு எப்படி முன்ஜென்ம நினைவுகள் வந்தது என்பதையும் சொல்லிக்கொண்டிருந்தான்.
"தம்பி..நீங்க ரெண்டு பேரும் தயவு செஞ்சு என்னை மன்னிச்சிடுங்கப்பா… நானா இந்த மாதிரி ஒரு ஈன வேலையை செய்யத் தனிஞ்சேன்னு நினைக்கிறப்ப ரொம்ப கேவலமா இருக்கு… எல்லாம் என் முட்டாள்தனம்" என்றபடி வருந்திக்கொண்டிருந்தார்.
உடனே ராஜீவ் "இல்ல அங்கிள் அப்படி எல்லாம் சொல்லாதீங்க.. நீங்க இல்லைன்னா கண்டிப்பா இந்த லிங்கத்தை கண்டுபிடிச்சிருக்கவே முடிஞ்சிருக்காது. அந்த வருண் எப்பவோ இந்த லிங்கத்தை கடத்திக்கிட்டு போய்ருப்பான்… உங்களால தான் அது தடைப்பட்டு நம்ம லிங்கம் நம்ம கோவிலுக்கே கிடைச்சிருக்கு… நீங்க இதுக்கு சந்தோஷம்தான் படனும்" என்று அவரின் வருத்தத்தை போக்கிக்கொண்டு இருந்தான். அதையே விஷ்ணுவும் கூறி ஈஷ்வரபாண்டியனின் தர்ம சங்கடத்தை போக்கினான்.
“ அங்கிள் இந்த லிங்கத்தை கோவில்ல கொண்டு போய் எந்த இடத்துல வைக்கிறது . எந்த சன்னிதானத்திலும் திடீர்னு போய் வச்சிட முடியாது . பல கேள்விகள் பிரச்சனைகள் எல்லாம் பயங்கரமாக கிளம்பும் . உண்மையை சொன்னாலும் கண்டிப்பாக இந்த உலகம் ஒத்துக்காது . இப்ப என்ன பண்றதுன்னு புரியலையே அங்கிள் …. " என்று காரை செலுத்திக்கொண்டே கவலை தோய்ந்த முகத்துடன் கேட்டான் விஷ்ணு.
அவனின் கவலையை உணர்ந்தவராய் “அதுவும் உண்மைதான் விஷ்ணு ... நீ சொல்றது எனக்கு நல்லா புரியுது . நம்ம கோவில்ல ஒரு நிலவறை இருக்கு . அதை இதுநாள் வரைக்கும் யாரும் திறந்தது இல்லை. திறந்து பலப்பல வருஷம் ஆகிருக்கும் . பல வருஷங்கள் ஆனதால நாங்களும் அதை திறக்காம அப்படியே விட்டுட்டோம் . இந்த லிங்கத்தை கொண்டுபோய் கோவில் நிலவறையில வச்சிடலாம்” என்று யோசனை கூறினார் ஈஷ்வரபாண்டியன்.
“ சரி அங்கிள் நிலவறையில வச்சிட்டா லிங்கத்தை எப்படி பிரதிஷ்டை பண்ண முடியும் . ஒரு நிலவறையில இருந்து இன்னொரு நிலவறைக்கு மாத்தினமாதிரி தானே இருக்கும் . “ தன் ஐயத்தை வெளியிட்டான் விஷ்ணு.
“ இல்லப்பா விஷ்ணு அப்படி ஆகாது . இப்ப நம்ம கோவில்ல கும்பாபிஷேகமும் திருவிழாவும் நடக்கப்போகுது இல்லையா … அதுக்காக கோவிலை சுத்தம் பண்ணுவாங்க அப்போ நிலவறையையும் சேர்த்து சுத்தம் பண்ண சொல்லியிருக்கேன் . சுத்தம் பண்றதுக்கு ஆளுங்க நாளைக்குத்தான் வராங்க… நாம அந்த நிலவறையில வச்சிடலாம். ஏற்கனவே நம்ம ஊர்ல மரகதலிங்கம் இருந்ததா கோவில் பொக்கிஷ அறைல கிடைச்ச ஓலைச்சுவடில இருக்கு..
நான் இப்ப இதை ஏன் சொல்றேன்னா நம்ம கோவில்ல மரகதலிங்கம் இருந்துருக்குன்னு இந்த ஓலைச்சுவடியே அத்தாட்சியா இருக்கு . இந்த சமயத்துல நம்ம கோவில் நிலவறையில இந்த மரகதலிங்கம் கிடைச்சா கண்டிப்பா யாருக்கும் அவ்வளவா சந்தேகம் வராது . அப்படி ஏதாவது வந்தாலும் நான் பார்த்துக்கிறேன் . நீ கவலைப்படாத" என தன் யோசனையையும் கூறி அவனுக்கு ஆறுதலும் சொல்லி தேற்றினார் ஈஷ்வரபாண்டியன் .
அவரின் யோசனையும் விஷ்ணுவிற்கும் , ராஜீவிற்கும் மிகச் சரியானதாகப்படவே அவர் கூறியபடியே நடக்கலானான் விஷ்ணு .
சற்று நேரத்திலேயே கோவில் வந்துவிடவும் யாரும் தென்படுகின்றனரா என்று சுற்றும் முற்றும் பார்த்தனர் மூவரும். இன்னும் இரவு தன் ராஜ்ஜியத்தினை இருள் பூசி ஆட்சிசெய்து கொண்டிருந்ததாகையால் யாரும் அந்நேரத்தில் அங்கிருக்கவில்லை.
விரைவாக ஈஷ்வரபாண்டியன் தன்னிடமிருந்த திறவுகோலைக்கொண்டு கோவில்கதவை திறந்தார் . அவர் கதவினைத் திறந்தவுடன் விஷ்ணுவும் லிங்கத்துடன் கோவிலுக்குள் சென்றான் . நிலவறையையும் சீக்கிரம் அடைந்தனர் . ஈஷ்வரபாண்டியன் கூறியபடியே நிலவறையானது மை இருள் அப்பி ஒட்டையுடன் காட்சியளித்து பயங்கர நிசப்தமானதாயிருந்தது. எப்படியோ அதிவிரைவாக அனைத்தையும் திட்டமிட்டபடியே செயல்படுத்தினர் மூவரும்.
எல்லாவற்றையும் கச்சிதமாக நிறைவேற்றிய பிறகு கோவிலை விட்டு வெளியேறியவர்கள் ஈஷ்வரபாண்டியனின் இல்லத்தினை நோக்கி வண்டியை மகிழ்ச்சியுடன் செலுத்த ஆரம்பித்தனர் . மறுநாள் எதிர்பார்த்தது போலவே நிலவறையை சுத்தம் செய்யச்சென்ற ஆட்கள் மரகதலிங்கத்துடன் வெளிப்பட ஊரெல்லாம் அதே பேச்சாகவே இருந்தது. சில பல அரசாங்க சம்பிரதாயங்களும் விவாதங்களும் முடிந்து நம் விஷ்ணுவின் எண்ணப்படி மரகதலிங்கமும் மீண்டும் பிரதிஷ்டை செய்யப்பட்டு இதோ தீப ஆரதனையும் ஜகஜோதியாக நடந்து கொண்டிருக்கிறது .
இவற்றையெல்லாம் நினைத்து பார்த்த ஈஷ்வரபாண்டியனும் தான் செய்ய இருந்த பாவத்திலிருந்து காப்பாற்றப்பட்டோமே என்று மனசாந்தி அடைந்தார்.
கோவிலில் பூஜை அனைத்தும் முடிந்த பிறகு ஈஷ்வரபாண்டியனிடம் வந்த விஷ்ணு “ அங்கிள் … உங்களுக்கு என் நன்றியை எப்படி சொல்றதுன்னே தெரியலை … மனசை அழுத்திக்கிட்டு இருந்த சங்கடங்கள் எல்லாமே காணாம போய்டுச்சு … நீங்க இல்லன்னா கண்டிப்பாக இவ்வளவு ஸ்மூத்தா எந்த விஷயமும் நடந்துருக்காது… தேங்க்ஸ் அங்கிள்… தேங்க்ஸ் அ லாட் அங்கிள் “ என தன் நன்றியை தெரிவித்தான் அவன். உடன் ராஜீவ்வும் அவருக்கு நன்றியைத் தெரிவித்தான்.
“ என்னப்பா உன் அப்பா உனக்கு ஏதாவது ஹெல்ப் பண்ணா இப்படித்தான நன்றி சொல்லி அவரை அந்நியப்படுத்துவியா… நீயும் எனக்கு என் மகன் மாதிரி தானே ராஜா… எனக்கு எதுக்கு இந்த நன்றியெல்லாம் சொல்லு… அந்த வருணை நினைச்சாதான் எனக்கு இன்னமும் ஆத்திரம் போகமாட்டேங்குது.. அந்த காட்டிலேயே அவன் அடிபட்டு உதவி செய்ய யாரும் இல்லாம திண்டாடியிருக்கனும். ஆனா நீ அவனுக்கு வைத்தியமும் செஞ்சு ஹாஸ்பிட்டல்லயும் சேர்த்துட்ட … இப்படியும் ஒரு பிள்ளை அப்படியும் ஒரு பிள்ளை … சரி இப்ப வருணுக்கு எப்படி இருக்காம் ? மருத்துவமனையினில் அனுமதிக்கப்பட்டிருக்கும் வருணின் நிலையைப்பற்றி விசாரிக்கலானார் ஈஷ்வரபாண்டியன்.
“ உடம்புக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையாம் அங்கிள் நல்லாதான் இருக்கான் தலையில பலமா அடிபட்டதால அம்னீசியா வர சான்ஸ் இருக்காம்….”
“ ஹ்ம்ம்…. பூர்வஜென்ம நினைவு வந்துடுச்சுன்னு சொல்லி பண்ண அமர்க்களத்துக்குதான் இப்போ இந்த ஜென்ம நினைவு கூட இல்லாதபடி ஆகிட்டானோ என்னவோ… ஈஷ்வரா…." எனக்கூறி பெருமூச்செறிந்தார் ஈஷ்வரபாண்டியன் .
அதற்குள் யாரோ ஈஷ்வரபாண்டியனை வேலை நிமித்தம் அழைக்கவும் அவர் அங்கிருந்து சென்றார். பின் தன் நண்பர்கள் இருக்கும் இடத்திற்கு க்சென்றான் விஷ்ணு. விஷ்ணுவின் முகத்தில் இதுநாள் வரை தொலைந்திருந்த அந்த ஆனந்தம் இன்று கிடைத்து அவனின் கலையான முகத்திற்கு மேலும் வாத்ஸல்யத்தைக் கொடுத்திருந்தது.
"அப்பாடா… டேய் யப்பா விஷ்ணு… இன்னைக்குதான்டா நீ தெளிவா பளிச்சுன்னு இருக்க… இத்தனை நாளா என்னை என்ன பாடு படுத்தியிருக்க தெரியுமா… உனக்கு திருவிழா பிடிச்சிருக்குன்னு முன்னாடியே தெரிஞ்சிருந்தா எந்தெந்த ஊர்ல விழா நடக்குதோ அங்கங்க எல்லாம் கூட்டிப்போயிருந்துருப்பேனே…ஊர் ஊரா சுத்துறது கூட அவ்ளோ டயர்டா இருந்துருக்காது … ஆனா இவன் ஒருத்தனை வச்சு நான் பட்ட கஷ்டம் இருக்கே….ஷப்பா…." என்று சலிப்படைந்த தொனியில் கூறினான் ராம்.
"டேய்… விட்றா... இப்ப என்ன ? அவன்தான் இப்ப சரியாகிட்டான்னு சொல்லிட்டியே… மறுபடியும் ஏன் அதையே பேசிட்டு இருக்க...விடு மச்சி" என விஷ்ணுவிற்கு சாதகமாகப் பேசினான் ஜீவா.
ஏற்கனவே ஜீவாவிடம் மரகதலிங்கம் கிடைத்த அன்று இரவு நடந்த அனைத்து நிகழ்வுகளையும் கூறியிருந்தான் விஷ்ணு. ஜீவாவிற்கும் இது மிகவும் மகிழ்ச்சியான செய்தியாகவே இருந்தது.
இவர்களனைவரும் இவ்வாறு பேசிக்கொண்டிருக்கையில் சற்று தூரத்தில் கௌரியுடன் நின்றுகொண்டிருந்த வேதாவின் கண்கள் மறுபடியும் மறுபடியும் விஷ்ணுவை நோக்கியே வட்டமடித்துக்கொண்டிருந்தன. “ ம்க்கும்… ம்க்கும் …. “ என்று கௌரி எழுப்பிய கனைப்புச் சப்தத்தில் தன் சுற்றுப்புறம் உணர்ந்தவள் தன் அருகில் தன்னையே முறைத்துப்பார்த்துக்கொண்டு இருக்கும் கௌரியைக் கண்டு அசடு வழிய ஆரம்பித்தாள் .
“ என்னடி …. என்னவோ வந்த புதுசுல அவன் முசுடு , கிசுடுன்னு திட்டிட்டு இருந்த … இப்ப என்ன ஆச்சு உனக்கு… எப்ப பார்த்தாலும் அந்த பையன் விஷ்ணுவையே வைச்ச கண்ணு வாங்காம பார்த்துட்டு இருக்க… வீட்டில என்னடான்னா அவன் பின்னாடியே சுத்திட்டு இருக்க… விஷ்ணுவை கூப்பிடுன்னு சொன்னா போதும் துள்ளிக்கிட்டு ஓட்ற… என்னடி என்ன நடக்குது இங்க … “
“ அது … அது … மாமி…” என்று இழுத்தவள் மேலும் வார்த்தை வராமல் திணற சரியான நேரத்தில் அங்கு ஆஜர் ஆகினர் நண்பர்கள் அனைவரும். அப்போது ராம், “ அம்மா… அத நான் சொல்றேன்… இவ்வளவு நாள் எனக்கு நண்பனா மட்டும் இருந்தவன் இப்ப எனக்கு சொந்தக்காரன் ஆகப்போறான்மா..” எனக் கூறி இடைவெளி விட்டு வேதாவைப்பார்த்து ஈஈஈஈஈ என்று இளித்தான் ராம். இதனைக் கேட்ட அவனின் மற்ற நண்பர்களுக்கும் ஆனந்த அதிர்ச்சி.
ஏற்கனவே வேதாவின் நடவடிக்கைகளில் சந்தேகம் கொண்டிருந்த கௌரிக்கு ராமின் இப்பேச்சு விஷயத்தை ஊர்ஜிதப்படுத்தியது… “ என்னடா இப்படி சொல்ற … வேதாவோட அப்பா ரொம்ப கண்டிப்பானவர்டா… எனக்கு பயமா இருக்கு … உங்க விளையாட்டுக்கு நான் வரலை சாமி… என அங்கிருந்து நகரப்பார்த்தவரை நிறுத்தி “ மிஸஸ் கௌரி ஈஷ்வரபாண்டியன் எங்களுக்கு அதேல்லாம் தெரியாது… உங்க உடன்பிறப்புகிட்ட பேசி எங்க ரெண்டு பேரையும் சேர்த்து வைக்கிறது உங்க பொறுப்பு “ என்றவாறு அங்கு வந்து அவர்களுடன் சேர்ந்தான் விஷ்ணு .
“ என்னடா இப்படி வம்புல மாட்டி விட்றீங்க… ஏதோ நான் நல்ல அம்மாவா இருக்கப்போய் உங்களுக்கு ஹெல்ப் பண்ண சம்மதிக்கிறேன்… என் தம்பி கிட்ட இதுபத்தி பேசுறேன்… ஆனா ஓவரா அட்வாண்டேஜ் எடுத்தீங்க ரெண்டு பேரையும் பின்னிடுவேன் பார்த்துக்கங்க “ எனக்கூறியவுடன் அவரை ஆனந்த பாய்ச்சலுடன் கட்டியனைத்த வேதாவை ஆசையுடன் பார்த்துக்கொண்டிருந்தான் விஷ்ணு . அவர்களிருவரின் கண்களிலும் எதிர்காலத்தைப்பற்றிய கனவுகள் பளிச்சிட்டுக்கொண்டிருந்தது . அவர்களின் மகிழ்ச்சி என்றென்றும் நிலைத்திருக்க இறைவனின் ஆசீர்வாதமாய் கோவில் மணியும் ஒலித்துக்கொண்டிருந்தது .
சுபம்
முற்றும் ☺️☺️☺️☺️☺️
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top