17



      அந்த மோதிரம் ராமினுடையது என்ற ஜீவாவின் பதிலில் அதிர்ச்சியில் உறைந்து    நின்றான் விஷ்ணு. “ டேய் ...டேய் விஷ்ணு...என்னடா ஆச்சு ... ஏன் இப்படி டென்ஸ்டா இருக்க? சொன்னாதானே தெரியும்.சொல்லுடா விஷ்ணு ...” என விஷ்ணுவை உலுக்கியபடி கிட்டத்தட்ட  கத்தியேவிட்டான் ஜீவா . 

      ஜீவாவின் சத்தத்தில் தன்னிலைக்கு வந்த விஷ்ணு “ ஒன்னும் இல்லைடா “ என்றவாறு அவ்விடத்திலிருந்து நகர எத்தனித்தான். அவனுக்கு முன்பாக சென்று அவனின் வழியை மறித்த ஜீவா “ இங்க பாரு விஷ்ணு ... நான் உன் ஃப்ரண்ட் உன் கூட ஸ்கூல் டேஸ்ல இருந்து பழகிட்டு வரேன். நீ எந்த எந்த சமயத்துல எப்படி எப்படி ரியாக்ட் பண்ணுவன்னு எனக்கு நல்லாவே தெரியும் .எனக்கு தெரிஞ்ச வரையில் நீ இப்படி விசித்திரமா நடந்துகிட்டதே இல்லை. இப்படி நீ வியர்டா நடந்துகிட்டு இருக்கன்னா அதுக்கு பின்னாடி கண்டிப்பா ஒரு ஸ்ட்ராங்க் ரீஸன் இருக்கும் . என்கிட்ட உண்மையை மறைக்க ட்ரை பண்ணாத விஷ்ணு ... ப்ளீஸ் சொல்லு என்ன விஷயம் “ என வருத்தத்துடன் கேட்டான். 

    ஜீவாவின் கெஞ்சல் விஷ்ணுவின் மனதைப்பிசைய அவனிடம் சொல்லிவிடலாம் எனவும் நினைத்தான். ஆனாலும் வேதாவைப் போல இவனும் தான் கூறுவதை நம்பாமல் தன்னையே கேலி செய்வானோ என்ற ஐயத்துடன் உண்மையை கூறுவதைத் தவிர்த்தான்.

ஆனாலும்  பள்ளிப்பருவத்திலிருந்தே விஷ்ணும் ஜீவாவும் உற்ற நண்பர்களாக இருந்து வந்துள்ளதால் விஷ்ணுவின் ஒவ்வொரு அசைவும் ஜீவாவிற்கு அத்துப்படி. சட்டென்று விஷ்ணுவிற்கு முகம் மாறினால் கூட நொடியில் அதை  கண்டுபிடிப்பவனாயிற்றே...ஆகையால் இப்பொழுதும் விஷ்ணு கூறுவதில் இருந்தே ஏதோ பொய்யுரைக்கிறான் என யூகித்துவிட்டான் ஜீவா. 

"இங்க பாரு விஷ்ணு… நீ மத்தவங்க கிட்ட  இருந்து என்ன வேணாலும் மறைக்கலாம்… ஏன் ராம் கிட்ட இருந்து கூட தப்பிச்சிடலாம்... ஆனா மகனே என்னை சாதாரணமா நினைச்சிடாத உன்னோட ஆதியில இருந்து அந்தம் வரைக்கும் எனக்கு நல்லா தெரியும் மரியாதையா என்ன மறைக்கிறன்னு என் கிட்ட சொல்லிடு… இல்லன்னா இப்பவே இங்க இருந்து கிளம்பிடலாம்.

நீ இங்க வந்ததில இருந்துதான் ஆளே ரொம்ப மாறிட்ட எப்பவும் மர்மதேசம் சீரியல் ஆர்டிஸ்ட் மாதிரி சுத்திட்டு இருக்கன்னு ராம் சொல்லிட்டு இருந்தான்" என்றவன் மேலும் டேய் நாங்க உன்னோட ஃப்ரெண்டாஸ்டா… எங்க கிட்ட கூட உன் மனசுல அரிச்சிட்டிருக்க விஷயத்தைப் பத்தி சொல்லக்கூடாதா?" என அழுத்தமாக கேட்டான் ஜீவா.

அவனின் அதீதமான வற்புறுத்தலினாலும் தன் மீது அவன் கொண்ட அக்கறையினாலும் மனம் மாறிய விஷ்ணு தான் அவ்வூரிற்கு வந்தது முதல் இன்று வரை நடந்த சம்பவங்கள் அனைத்தையும் கூறினான் அந்த மோதிரம் தவிர. இவையனைத்தையும் கேட்ட ஜீவா “ “ என்னடா சொல்ற விஷ்ணு ... எல்லாம் ரொம்ப ஆச்சரியமா இருக்குடா... அப்ப அந்த ராஜீவ் கூட உன் கனவுல ஏற்கனவே பார்த்தவன் தானா? எப்படிடா கனவுல பார்த்தவன் அப்படியே நேர்ல வர முடியும் . ஏதோ மாயாஜால படம் பார்த்த மாதிரி இருக்கு விஷ்ணு... இதை ஏன் முதல்லயே சொல்லலைடா ? “ என ஆச்சரியத்துடனும் கேள்வியுடனும் முடித்தான் . 

      “ எப்படிடா நான் இதை வெளிய சொல்ல முடியும் . நீயே நான் சொன்ன பிறகு மாயாஜால கதையில வர ஸீன்ஸ் போல இருக்குன்னு சொல்ற ... அன்னைக்கு வேதாகிட்ட சொன்னபோது அவ ஏதோ ஹிஸ்டாரிக்கல் கதையைப்படிச்சிட்டு உளறிட்டு இருக்கேன்னு சொல்றா...இந்த லட்சனத்துல நான் எப்படி நார்மலாகவும் எல்லார்கிட்டயும் உண்மையை சொல்லிட்டும் இருக்க முடியும் ...ஜஸ்ட் ஒன் செகண்ட் திங்க் ஆஃப் இட்... யூ வில் ரியலைஸ் மை சிச்சுவேஷன் “ என விஷ்ணுவும் தன் பக்க நிலைமைர்யை விளக்கினான் . 

தன் நண்பனின் வார்த்தைகளில் உண்மை இருப்பதை உணர்ந்த ஜீவா அவன் இவ்வளவு நாட்கள் எவ்வாறு மனக் குழப்பத்தில் உழன்று கொண்டிருந்திருப்பான் என்று நினைக்கும்போதே மனத்தினில் வருத்தம் மேலோங்கியது.

மேலும் விஷ்ணு அதைப்பற்றி பேச முற்பட்டபோது அவனை இடைமறித்த ஜீவா,  “டேய் டேய் இருடா... கொஞ்சம் பொறுடா...நீ பாட்டுக்கு பேசிட்டே போற ... நான் உன்னை நம்பவேயில்லைன்னு எப்படா சொன்னேன். எனக்கு இந்த பூர்வஜென்ம புனர்ஜென்ம விஷயங்கள்ல எல்லாம் நம்பிக்கையோ ஈடுபாடோ இன்னைக்கு காலையில் வரைக்கும் இல்லைடா ... ஆனா உன்கிட்ட பேசின இந்த நிமிஷத்திலிருந்து நான் இதை நம்பறேன் .கண்டிப்பா அந்த மரகதலிங்கத்தை கண்டுபிடிக்க உனக்கு நானும் ஹெல்ப் பண்றேன்டா” என விஷ்ணுவின் கையைப் பற்றிக்கொண்டு கூறினான். 

       “ ரொம்ப தேங்க்ஸ்டா ஜீவா ! என்னை நம்பினதுக்கு ... பட் இது என்னோட பிரச்சனை ... நானே இதை பார்த்துக்குறேன் . நீ எதுக்கு தேவை இல்லாம இந்த விஷயத்துல வந்து மாட்டிக்குற ... “ என கூறிக்கொண்டே வந்த விஷ்ணுவை இடைமறித்த ஜீவா “ இன்னொரு முறை என் பிரச்சனை உணன் பிரச்சனைனு பிரிச்சு பிரிச்சு பேசிக்கிட்டு இருந்தா நான் மனுஷனாவே இருக்க மாட்டேன்டா ... எப்ப இருந்து நீ நான்னு பிரிச்சு பேச கத்துகிட்ட விஷ்ணு... அதெல்லாம் எனக்கு தெரியாது அந்த லிங்கத்தைக் கண்டுபிடிக்கிற வரை நான் உன் கூடதான் இருப்பேன் “ என்று கூறினான். 

    தன் நண்பன் தன் மீது கொண்ட அக்கறையையும் பாசத்தையும் அதீத நம்பிக்கையையும் நினைக்கையில் விஷ்ணுவின் மனது புளங்காகிதம் அடைந்தது. தன் நண்பன் தன்மீது கொண்ட அன்பில் மெய்சிலிர்த்து நின்றவனின் கவனத்தை கலைத்தது ஜீவாவின் சந்தேகக் குரல்

"டேய் விஷ்ணு நீ சொன்ன முன்ஜென்ம கதைல உனக்கு உண்மை எல்லாம் தெரிஞ்சு எல்லா விஷயமும் நியாபகத்துக்கு வந்துடுச்சுல்ல அதே போல நீ ராஜசிம்மன்னு சொன்ன அந்த ராஜீவிற்கும் நியாபகம் வந்துருக்கனும்ல" என ஐயத்துடன் வினவினான் ஜீவா.

"அதுதான்டா  எனக்கும் ஒன்னும் புரியல…ராஜீவ்க்கு ஏதாவது நியாகம் வந்துச்சா இல்ல வரலையான்னு ஒன்னும் தெரியல… முதல்ல இவன் ராஜசிம்மன்தானா இல்லைன்னா உருவ ஒற்றுமை மட்டும் இருக்கான்னும் தெரியலை" என்று அனைத்து சாத்தியமான முறைகளிலும் தான் சிந்தித்திருப்பதை ஜீவாவிடம் தெளிவுபடுத்தினான் விஷ்ணு.

"அப்போ அந்த வளவன் மாதிரி இருந்தவன்...அவன் ஏதாவது உன்ன தெரிஞ்ச மாதிரி நடந்துகிட்டானா?" ஜீவாவின் கேள்வியின்  தொனியில் அதை தெரிந்து கொள்ளும் ஆர்வம் தொக்கி நின்றது.

" அவனுக்கு இந்த ராஜீவே பெட்டர்டா இவனாச்சும் கண்ணு முன்னாடி இருக்கான். ஆனா அந்த வளவன் மாதிரி இருக்குறவன் யாரு? எங்க இருக்கான் , அவன் பேரு என்ன? இப்படி எந்த ஒரு விஷயமுமே தெரியாதுடா" என்று வருத்தத்துடன் வந்தது விஷ்ணுவின் பதில்.

"டேய்… டேய்… எங்க விஷ்ணு எப்பவும் ஸ்போர்டிவ்வா இருக்குற ஆளுடா… இப்படி முகம் வாட்டாமா இருந்தா விஷ்ணு மாதிரியே இல்ல.. வேற ஒரு ஆளு மாதிரி இருக்க … விஷ்ணுண்ணா பளிச்சுன்னு இருக்க வேணாமா… என்று நண்பனின் வருத்தத்தை போக்குவதற்காக கூறினான் ஜீவா. 

பிறகு தன் கையில் உள்ள மோதிரத்தேப் பார்த்தவன் சந்தேகம் தொக்கி நிற்கும் குரலுடன் “ விஷ்ணு ... எல்லாம் சரிடா...ஆனா நீ ஏன் தேவை இல்லாம ராமோட மோதிரத்தை எடுத்து வச்சிட்டிருக்க?.ராமோடதுன்னு தெரிஞ்ச உடனே ஏன் அவ்வளவு ஷாக் ஆகிட்ட? என வினாவோடு முடித்தான் ஜீவா. 

         விஷ்ணுவோ சற்று தயக்கத்துடன் “ ஜீவா... நான் அந்த மரகதலிங்கம் இருந்த இடத்தில இருந்தது இந்த மோதிரம்தான்டா ... இந்த மோதிரத்தோட சொந்தக்காரன்தான் மரகதலிங்கத்தை எடுத்துருப்பான்னு நினைச்சுதான் இந்த மோதிரத்தை எடுத்து வச்சிட்ருந்தேன்...  ஆனா இந்த மோதிரம் ராமோடதுன்னு நீ சொன்ன உடனே ஐ வொண்டர்ட்... ஐ கான்ட் பிலீவ் இன் மை ஓன் இயர்ஸ்டா....”.எனக் கூறினான். 

        விஷ்ணு கூறியவுடன் அதிர்ச்சி தாங்காமல் “டேய்…. என்னடா சொல்ற… நீ சொல்றதெல்லாம் சத்தியமா நம்ப முடியலடா… நிஜமா இந்த மோதிரத்தை அங்கிருந்தா எடுத்த… இது எப்படிடா அங்க போயிருக்கும். ராம் ஏன் தேவையில்லாம அங்க போகப்போறான்." அதிர்ச்சி ததும்பிய குரலில் கேட்டான் ஜீவா.

       “ அததான் ஜீவா நானும் முதல்ல உன்கிட்ட சொன்னேன்... அந்த இடத்துக்கு எப்படி ராமோட மோதிரம் போயிருக்கும்… கேள்விக்கு மேலே கேள்வி இருக்கு … ஆனா அதுக்கு பதில்தான் லேசில கிடைக்கமாட்டேங்குது ஜீவா.” என தன் நண்பனிடம் கூறினான் விஷ்ணு 

         ஜீவாவோ தலையில் கைவைத்துக்கொண்டே அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்துவிட்டான் .விஷ்ணு கூறிய முன் ஜென்ம கதைகள் ஒரு புறம் அதிர்ச்சியைக் கொடுத்தது என்றால் அக்குகையில் கிடைத்தது ராமின் மோதிரம் என்ற செய்தி மறுபுறம் அதிர்ச்சியைக் கூட்டியது . சில நொடிகளுக்குப்பிறகு விஷ்ணுவை நோக்கியவன் 

        “மச்சி.... இது நல்லா பொருமையா கையாள வேண்டிய விஷயம்... சட்டு சட்டுன்னு எந்த முடிவுக்கும் வந்துட முடியாது... முதல்ல ராமோட ஆக்டிவிட்டீஸ கவனிக்க ஸ்டார்ட் பண்ணலாம். அவன் எங்க போறான்… எங்க வறான் இப்படி ஒவ்வொன்னா கவனிக்கனும். அப்பதான் நம்மலால எந்த ஒரு முடிவுக்கும் வர முடியும் அது தான் சரியாவும்  இருக்கும் “ என்றான் . 

            “ எஸ் ஜீவா... அதான் சரின்னு எனக்கும் தோனுது . பட் என்னால இப்பவும் நடக்கிறதை  நம்ப முடியலடா.... தலையே வெடிக்கிற அளவுக்கு பாரமா  இருக்கு ... “ என்றான் விஷ்ணு . 

           “ என்னடா நம்ப முடியல...தலை வெடிக்கிற அளவுக்கு உனக்கு என்ன பிரச்சனை விஷ்ணு... என்ன சீரியஸா பேசிட்டு இருக்கீங்க ரெண்டு பேரும் “  என்று கேட்டபடியே அறைக்குள் நுழைந்தான் ராம். 

             சட்டென்று கையில் இருந்த மோதிரத்தை பேண்ட் பாக்கெட்டுக்குள் போட்டு மறைத்துக்கொண்டான் ஜீவா . திடீரென்று ராம் அறைக்குள் வருவான் என இருவரும் எதிர்பார்த்திராத காரணத்தால் சற்று திணறித்தான் போனார்கள் . 

      

      “ அது ஒன்னும் இல்ல மச்சி ... சும்மாதான்  பேசிட்டு இருந்தோம்... அப்படி ஒன்னும் பெரிய விஷயம் இல்ல ... சரி அதை விடு சாப்பாடு ரெடி ஆகிடுச்சா ? சாப்பிட போகலாமா ? ..ரொம்ப பசிக்குதுடா ... வா வா கிளம்பலாம்” என்றபடி பேச்சை திசை திருப்பினான் விஷ்ணு . 

        “ அது  எப்பவோ ரெடி  ஆகிடுச்சு  தடிமாடு ... நீங்கதான்  சாப்பிட   வராம  இங்க  வட்ட  மேசை  மாநாடு  போட்டுக்கிட்டு இருக்கீங்க ... “ என்று  அங்கலாய்த்தவனின்  வாயைப் பொத்தி  “ போதும்டா...பசியே  போய்டும் போல  இருக்கு   புறப்படலாமா சாமி....” என தன் உணர்ச்சகள் வெளியே தெரியாத வண்ணம் மறைத்துக்கொண்டு கேட்டான்  ஜீவா . 

         சாப்பாட்டு மேசையை அலங்கரித்துக்கொண்டிருந்த தென்னிந்தியவகை சிற்றுண்டி அங்கு வந்தவர்களின் நாசியை வருடி நாவின் சுவையரும்பை மலரச்செய்துகொண்டிருந்தது. அவர்கள் சாப்பிட்டு முடிக்கவும் ராமின் தந்தை ஈஸ்வரபாண்டியன் அவ்விடத்திற்கு வரவும் சரியாக இருந்தது .அங்கு வந்த ஈஸ்வரபாண்டியன் தன் தனயனிடம் “ தம்பி ... திருவிழாக்கு  செய்ய வேண்டிய வேலை எல்லாம் நான் நேத்து சொன்னேனே அதை எல்லாம் முடிச்சிட்டியாப்பா ? “ என்று கேட்க ஆரம்பித்தார் 

    

      “ முடிச்சிட்டேன்ப்பா... இன்னும் ரெண்டு மூனு வேலைதான் மீதம் இருக்கு .... அதுவும் இன்னும் கொஞ்ச நேரத்துல முடிஞ்சிடும்ப்பா....”என்று பவ்யமாக கூறினான் ராம். 

“ சரி...சரி... சீக்கிரம் சாப்பிட்டு ஆகவேண்டிய காரியங்களை எல்லாம் லேட் ஆக்காம சீக்கிரம் முடிக்க பாரு தம்பி... திருவிழா தேதி நெருங்கிட்டே இருக்கு ... அக்கம்பக்கத்து ஊர்ல இருந்து கூட நம்ம ஊர் திருவிழாவ பார்க்க ஜனங்க வருவாங்க ... யாரும் ஒரு குறையும் சொல்லாதமாதிரி நம்ம ஊர் திருவிழா நடக்கனும் புரியுதா தம்பி” என அழுத்தமாக சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார் ஈஸ்வரபாண்டியன். 

       அவர் அங்கிருந்து சென்றவுடன்  அவசர அவசரமாக சாப்பிட்டு முடித்த ராம், “ மச்சீஸ்... ஐ ஹேவ் டூ லீவ் நவ்டா ... டைம் ஆகிடுச்சு ... நான் திருவிழாக்கான ஏற்பாடெல்லாம் செய்ய ஆரம்பிக்கனும்... நீங்க மெதுவா சாப்பிட்டு அப்புறம் எனக்கு கால் பண்ணுங்க நான் கொஞ்சம் வெளிய போய்ட்டு வந்துட்றேன் “ என படபடவென்று பேசிவிட்டு மின்னல் வேகத்தில் மறைந்தான். அவன் சென்ற திக்கையே பார்த்துக்கொண்டிருந்தனர் விஷ்ணுவும் ஜீவாவும். 

           

   தொடரும் 

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top