10
நாம் இப்பொழுது விஷ்ணுவர்மனை சந்திக்கும் இவ்வேளையில் அவன் அந்த ராஜாங்கத்தின் சிறைச்சாலையின் ஒரு தனி அறையில் வேதனையே உருவாக விட்டத்தைப் பார்த்தபடி நின்றுகொண்டிருந்தான் . அவன் முகத்தில் எப்பொழுதும் தவழும் அந்த புன்னகை அவனுக்கும் தனக்கும் பூர்வஜென்ம பகை உள்ளதுபோல் அவனை விட்டு தொலைதூரம் சென்றுவிட்டிருந்தது . எப்பொழுதும் ஜ்வாஜல்யமாக திகழும் முகத்திலோ துயரத்தின் சாயலே ஊற்றெடுத்திருந்தது . அவன் மனமோ அரசவையினில் இன்று காலை நடந்த நிகழ்ச்சிகளை வருத்தத்துடன் அசைபோட்டிக்கொண்டிருந்தது .
ஓர் இரவு எப்படி தன் வாழ்க்கையையே மாற்றிவிட்டது என்று அவன் மனம் சிந்தித்தது . இப்பொழுதும் அவன் மனம் நடந்தது அனைத்தும் உண்மைதான் என்பதை ஒப்புக்கொள்ள மறுத்துக்கொண்டிருந்த வண்ணம் இருந்தது .
தன் சிந்தனை ஓட்டத்தை இன்று காலை அரசவையில் நடந்த நிகழ்ச்சிகளின் புறம் திருப்பி மறுபடியும் நடந்ததை நினைத்துப்பார்த்தான் .
விஷ்ணுவர்மன் தன் மேல் தவறில்லை என்று எவ்வளவு வாதிட்டாலும் அதை நம்ப ராஜசிம்மனின் மனம் மறுதலித்துவிட்டது . அவனது சிந்திக்கும் திறன் மரகதலிங்கம்பால் அவன் கொண்டிருந்த பற்றுதலால் மங்கிக்கொண்டிருந்தது .
“ விஷ்ணுவர்மா..... நான் உன்னிடம் மிகுந்த நம்பிக்கை வைத்ததும் , உன்னை என் உற்ற நண்பனாக நினைத்ததும் என் தவறுதான் என்பதை நிரூபித்துவிட்டாய் .
இப்படி ஒரு துரோகத்தை செய்வதற்கு உன் மனம் எப்படி துணிந்தது. உன்னை இனிமேலும் நம்புவதற்க்கு என் மனம் தயாராகயில்லை . நீதான் இக்குற்றத்தை செய்தாய் என்பதற்கு சாட்சியாக இந்த காவலர்களும் மேலும் இதற்கு ஆதாரமாக நான் உனக்கு அளித்த இந்த மோதிரமும் இருக்கின்றது . உன்னிடம் இதற்கு மேலும் இப்படி அமைதியாக விசாரித்தால் எப்பொழுதும் உண்மை வெளிவராது . அதை வெளிக்கொணர வேண்டிய விதத்தில்தான் விசாரிக்க வேண்டும் “. என்ற ராஜசிம்மன் காவலர்களை அழைத்து விஷ்ணுவர்மனை சிறைப்படுத்துமாறு உத்தரவிட்டான் .
காவலர்களும் விஷ்ணுவர்மனை கொண்டு போய் சிறையில் அடைத்தனர் . சிறையில் அடைத்த விஷ்ணுவர்மனுக்கு தன்னை தன் உற்ற நன்பனாக பாவித்த ராஜசிம்மனே தன்னை நம்பாமல் இருந்தது அவனுக்கு மிகுந்த வேதனையை அளித்திருந்தது .
“ என் மேல் வன்மம் கொண்ட யாரோதான் இப்படி என் போலவே மாறுவேடமனிந்து அந்த இழி செயலை நிகழ்த்தியிருக்கிறார்கள் . எப்படி இருந்தாலும் அந்த மரகதலிங்கத்தை காப்பாற்றுவதாக நான் உறுதி அளித்திருக்கிறேன் . அந்த வாக்கை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் . அதற்க்கு இங்கேயே அடைபட்டிருந்தால் வேலைக்கு ஆகாது . எப்படியாவது இங்கிருந்து தப்பித்துச் செல்லவேண்டும் “ என நினைத்தவன் அங்கிருந்த தப்பிக்கும் வழியைப்பற்றி யோசிக்கலானான் .
தான் இங்கிருந்து வெளியே செல்ல இரவு நேரம்தான் உத்தமமாக இருக்கும் என்று எண்ணிய விஷ்ணுவர்மன் இரவு நேரத்திற்காக காத்திருக்கலானான் .
அவன் எதிர்பார்த்திருந்த அந்த இரவு வேளையும் வந்தது . அங்கு அவனை காவல் காத்துக்கொண்டிருந்த வீரர்கள் இருவரில் ஒருவன் இயற்கை உபாதையை கழிக்கவேண்டி அவ்விடத்திலிருந்து அகன்றான் . மற்றொருவனோ தூக்கத்தின் பிடியில் தன்னைத் தொலைத்திருந்தான் . இதுதான் தக்க தருணம் என்று உணர்ந்த விஷ்ணுவர்மன் தன் தப்பிக்கும் மார்க்கத்தை பின்பற்றலானான் . அந்த சிறைச்சாலையின் அறைக்கதவு இரும்புக்கம்பிகளால் செய்யப்பட்டிருந்தது . ஒவ்வொரு கம்பிக்கும் நடுவிலும் சிறு இடைவெளி இருந்தது . அதைப்பார்த்ததும் அவனுக்கு தான் அடுத்தடுத்து என்ன செய்யவேண்டும் என்பது தெளிவானது .
அந்த இரும்புக்கம்பிகளின் இடைவெளியில் தனது கையை நுழைத்து அந்த கம்பிகளை விலக்கி அந்த இடைவெளியை பெரிதாக்க எண்ணினான் . அது போலவே தன் பலங்கொண்ட மட்டும் நன்றாக பிடித்து இழுத்தான் . அவனுடைய பலத்திற்க்கு இசைந்து கொடுத்து அந்த கம்பிகளும் தன் பிடியை தளர்த்தி விரிந்தது . தூங்கிக் கொண்டிருந்த காவலன் விஷ்ணுவர்மன் இருந்த அறைக்கு சற்று தள்ளி அமர்ந்திருந்ததினால் அவனுக்கு யாதொரு சப்தமும் கேட்கவில்லை .
அந்த கம்பிகளின் வழியே இவனுடைய ஆஜானுபாகுவான உருவம் நுழைந்து வெளியேற கடினமானதாகவே இருந்தது . ஆயினும் எப்படியோ அதிலிருந்து வெளியே வந்துவிட்டான் . பின் அங்கிருந்து அகன்றவன் மெதுவாக தன் காலடி ஓசை வெளியே எழாத வண்ணம் நடந்து சென்றான் . ஆங்காங்கே ஏற்றப்பட்டிருந்த தீப்பந்தத்தின் ஒளி அங்கே வெளிச்சத்தை கொடுத்துக்கொண்டிருந்தது . அந்த சிறைச்சாலையினுள் அவன் இதுவரை ஒரு இரண்டு அல்லது மூன்று முறை பிரவேசித்திருந்தான் என்பதினால் அந்த சிறைச்சாலையின் கட்டமைப்பு ஓரளவு அவனுக்கு பரிட்சையமானதாக இருந்தது .
சற்று தூரம் சென்றவனின் செவிகளில் யாரோ வரும் அரவம் கேட்கவே சட்டென்று தேங்கி நின்றான் . உடனே அருகில் இருந்த ஒரு பெரிய தூணின் அருகில் தன்னை மறைத்துக்கொண்டு நின்றான் . அங்கே காவலாளி ஒருவன் வந்துகொண்டிருந்தான் . தான் என்ன செய்ய வேண்டும் என்பதை நொடியில் யோசித்த விஷ்ணுவர்மன் சட்டைன்று அந்த வீரனின் முன் வந்து குதித்தான் . ஒரு நொடி அதிர்ச்சியில் உறைந்த அந்த வீரன் சுதாரிப்பதற்க்குள் அவனின் முகத்தில் தன் கை முஷ்டியினால் ஓங்கி ஒரு குத்துவிட்டான் . திடீரென்று நிகழ்ந்த தாக்குதலால் அதிர்ச்சி அடைந்த அந்த வீரன் அப்படியே மயங்கி சரிந்தான் .
அவனை உடனடியாக சற்று மறைவான இடத்திற்கு இழுத்துச் சென்ற விஷ்ணுவர்மன் அந்த வீரனின் சீரூடையை தான் அணிந்து கொண்டான் . தன் உடையை அவனுக்கு அணிவித்து அவனை அப்படியே படுக்க வைத்துவிட்டு அந்த இடத்தைவிட்டு அகன்றான் .
யாரும் அங்கு இருக்கிறார்களா என்ற சந்தேகத்தை ஊர்ஜிதப்படுத்த சுற்றும் முற்றும் பார்த்தவன் யாரும் இல்லை என்பது தெளிவான பின்பு அங்கிருந்து விருட்டென்று கிளம்பினான் . கூடுமானவரை விரைவாக அந்த சிறைச்சாலையிலிருந்து தப்பிக்கவேண்டும் என்ற நினைவுடனும் யாரும் இங்கிருந்து செல்லும் வரை தன்மீது சந்ததேகம் வந்துவிடக்கூடாது என்ற சிந்தனையுடனும் ஓட்டமும் நடையுமாக சென்றுக்கொண்டிருந்தான்.
நல்ல வேளையாக யாரும் அவனை கவனிக்கவில்லை அங்கு கவனிக்கவும் அந்த இரவு வேளையில் யாருக்கும் ஆர்வமும் இல்லை . அவனை சக காவலாளி என்றே நினைத்தனர் .சரியாக விஷ்ணுவர்மன் சிறைச்சாலையின் நுழைவாயிலை சமீபித்திருந்த வேளையில் இயற்கை உபாதையின் காரணமாக சென்றிருந்த காவலன் திரும்பி வந்தான் . அங்கே சிறையில் விஷ்ணுவர்மன் இல்லாததையும் , கம்பிகள் ஓர் ஆள் நுழையும் அளவில் வளைந்திருந்ததையும் பார்த்தவனுக்கு மயக்கம் வராத குறைதான் மிஞ்சியது .
அவன் தூங்கிக்கொண்டிருந்த காவலனை அடிக்காத குறையாக எழுப்பினான் . பதறியடித்துக்கொண்டு எழுந்தான் அவன் . “ என்ன செய்துகொண்டிருக்கிறாயடா நீ ? விஷ்ணுவர்மரை காவல் காக்க சொன்னால் தூங்கிக் கொண்டிருக்கிறாய் . இப்பொழுது என்ன செய்வது ? அரசருக்கு தெரிந்தால் நம் என்ன ஆகப்போகிறதோ ?” என்று புலம்பியபடி சிறைக்காவலர்கள் அனைவருக்கும் தகவல் தெரிவித்துக் கொண்டிருந்தான் .
விஷ்ணுவர்மன் அந்த சிறைச்சாலையின் வாயிலை கடக்கும்போதுதான் உள்ளே ஏதோ கலவரம் நடப்பது போன்ற சப்தம் கேட்க ஆரம்பித்தது . பல வீரர்களின் குரலும் ஒருசேர கேட்க ஆரம்பித்தது .
உடனே விஷ்ணுவர்மனும் தான் சிறையிலிருந்து தப்பித்த செய்திதான் அங்கு தீயாய் பரவிக்கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்தவன் காற்றின் வேகத்திற்கு இணையாக அந்த சுற்று வட்டாரத்திலிருந்தே சற்று நேரத்தில் காணமல் சென்றுவிட்டான்.
வீரர்கள் அனைவரும் தேடுதல் வேட்டையில் உடனடியாக ஈடுபட்டனர் . அப்போதுதான் மயங்கிய அந்த காவலனை கண்டுபிடித்த மற்றவர்கள் என்ன ஆயிற்று என விசாரித்தனர் . அங்கு நடந்ததை அவன் கூறியவுடன் கேட்டு திகைத்த காவலர்கள் “ அப்பொழுது அவன் நம் உடையில்தான் இங்கிருந்து தப்பியிருக்கிறான் . விஷ்ணுவர்மரை இங்கு கொண்டுவரும்போதே காவல் சற்று கூடுதலாக இருக்க வேண்டும் என்ற கட்டளையும் நமக்கு பிறப்பிக்கப்பட்டது . ஆனால் நாம் இவ்வளவு அஜாக்கிரதையாக இருந்துவிட்டோமே ! “ என புலம்பிய ஒரு காவலனின் கூற்றை மற்றவர்களும் ஆமோதித்தனர் .
அன்றைய விடியும் பொழுது எப்படிப்பட்ட விபரீதங்களை மன்னனுக்கும் மக்களுக்கும் கொண்டுவரப்போகிறுது என அறிந்த ஆதவன் அவர்களின் இந்த நிலைமையைத் தான் பார்க்க வேண்டுமா ? அல்லது வேண்டாமா ? என நினைத்தானோ என்னவோ தன் பணியை சற்று தொய்வாகவே செய்ய ஆரம்பித்தான் .
பொழுது விடிந்ததோ இல்லையோ விஷ்ணுவர்மன் தப்பித்த செய்தி ராஜசிம்மனுக்கு தெரிவிக்கப்பட்டது . ஏற்கனவே விஷ்ணுவர்மனின் மீது கோபத்தில் இருந்தவனுக்கு இவனின் இந்த செயல் ராஜசிம்மனின் சிந்திக்கும் திறனையே மறைத்துவிட்டது . விஷ்ணுவர்மன் கண்டிப்பாக எதிரிநாட்டு மன்னனுடன் கூட்டு சேர்ந்துவிட்டான் என்றே ஊர்ஜிதப்படுத்திவிட்டான் .
அவனை எப்படியாவது கண்டுபிடித்து வரவேண்டும் என்று வீரர்களுக்கு கட்டளையிட்டான் . தானும் அவர்களுடன் சென்று தேட எத்தனித்தவனுக்கு அப்பொழுதுதான் ஓர் செய்தி ஒற்றனின் மூலமாக கிட்டியது .
அச்செய்தியை கேட்டவன் உடனடியாக வளவனையும் தன் வீரர்களையும் அழைத்தான் . “ வளவா , நாம் இப்பொழுது சற்று சிக்கலான சூழ்நிலையில் இருக்கிறோம் . நம்மிடம் போரில் இருந்து தப்பிச் சென்று தலைமறைவாக வாழ்ந்து வந்த அந்த கோழை வரகுணனுக்கு இப்பொழுது மறுபடியும் நம்மிடம் போர்புரிய வேண்டுமாம் . அந்த செய்தியைத்தான் நம் ஒற்றன் நமக்கு கொண்டு வந்தான் “ . என ராஜசிம்மன் கூறினான் .
அதைக்கேட்ட வளவன் “ ஏற்கனவே போரில் நம்மிடம் தோல்வியுற்று புறமுதுகிட்டு ஓடிய அவனுக்கு மறுபடியும் நம்மிடம் தோற்று ஓட அவனுக்கு ஆசை வந்துவிட்டது போலும் . அதன் காரணமாக அவனே அவன் அழிவைத் தேடிக்கொள்ளப்போகிறான் என்பது திண்ணமாயிற்று “ . என அவனும் கூறினான் .
“ இல்லை வளவா , அவனை அவ்வளவு எளிதாக நினைத்துவிட முடியாது . அவனை வீழ்த்துவதற்கு விஷ்ணுவர்மனின் புத்திகூர்மையும் சமயோசிததன்மையும் முக்கிய காரணங்களாக இருந்தன. இப்போது அவனும் நம் பக்கம் இல்லை.இப்பொழுது வரகுணன் ஒரு அடிபட்ட பாம்பு பழித்தீர்க்கும் எண்ணம் கண்டிப்பாக அவன் மனத்தினில் ஓங்கி வளர்ந்து இருக்கும். சென்ற முறை போர் நடந்த பொழுது விஷ்ணுவர்மனின் பங்கு இருந்தது . இன்னும் கூறப்போனால் அவனால்தான் இந்த வெற்றியே சாத்தியமானது . ஆனால் இப்பொழுதோ அவன் நம் துரோகியாகவல்லவா மாறிவிட்டான் . மேலும் இங்கிருந்து தப்பியும் சென்றுவிட்டான் இனி நம் ஒவ்வொரு அடியையுமே கவனமாக வைக்கவேண்டும் . அலட்சியமாக மட்டும் இருந்துவிடக்கூடாது “ . என்று உரைத்தான் .
வளவன் அதைக்கேட்டு மனதுக்குள் நகைத்துக்கொண்டான் . “ நாம் என்ன நினைத்து விஷ்ணுவர்மனை இந்த சதிவலையில் சிக்க வைத்தோமோ அது எதிர்பார்த்த வெற்றியை நமக்கு கொடுத்துவிட்டது . ஆனால் இந்த வரகுணனின் இந்த போர் செய்தி மட்டும் எதிர்பாராததாக உள்ளதே . ஹ்ம்ம் அந்த கோழையை எண்ணி நாம் கவலைப்படத் தேவையில்லை . அவனைத் தோற்கடிப்பது என்பது என் வரையில் எளிதான காரியம்தான் . இந்த சந்தர்ப்பத்தை எனக்கு சாதகமாக எப்படியாவது மாற்றவேண்டும் என்பதை மட்டும் எண்ணிக்கொண்டு இருந்தான் .
“ அரசே தப்பிச்சென்ற விஷ்ணுவர்மனுக்கும் இப்பொழுது நடக்கவிருக்கும் போருக்கும் ஏதாவது தொடர்பு இருக்கும் என்றே என் மனம் கூறுகிறது “ . என சொன்னான் .
“ அந்த கேள்விக்கான விடையைத்தான் நானும் தேடிக்கொண்டிருக்கிறேன் . கூடிய விரைவில் அது தெரிந்துவிடும் . இப்பொழுது நாம் போருக்கு எந்த நேரத்திலும் ஆயத்தமாக இருக்கவேண்டும் “ என்று கூறினான் .
*************************
மறுபுறம் தப்பிச்சென்ற விஷ்ணுவர்மனை தேடிச்சென்ற வீரர்கள் வெகுதூரம் சென்றபின்பும் அவனைக்காணாமல் தேடிக்கொண்டை இருந்தனர் .
ஆனால் விஷ்ணுவர்மனோ அவர்களைக் கண்காணித்துக்கொண்டிருக்கும் வகையில் சற்று தொலைவில் ஒரு மறைவான இடத்திலிருந்து அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்தான் . அந்த இடத்திலிருந்து பார்த்தால் இவன் அனைவரையும் கவனிக்கலாம் . ஆனால் இவனை யாராலும் பார்க்க முடியாது . அப்படிப்பட்ட ஒரு இடம் அது .
அந்த இடத்திலிருந்து வீரர்கள் சென்றபின் மறைவிலிருந்து வெளிவந்த விஷ்ணுவர்மன் அடுத்து என்ன செய்யவேண்டும் என்று யோசிக்கலானான் .
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top