1

 அந்த உயர் ரக வெளிநாட்டு இறக்குமதி கார் புழுதியை பறக்க விட்டுக்கொண்டு ஜல்லிக்கட்டு காளையைப் போல சீறிக்கொண்டு வந்துகொண்டிருந்தது.

காரின் உள்ளே சென்ற வாரம் வெளியான புதிய ஆங்கில படம் ஓடிக்கொண்டிருந்தது.

அந்த மகிழுந்தின் உள்ளே  மொத்தம் நான்கு பேர் இருந்தனர்.அவர்களின் தோற்றத்திலேயே அவர்கள் நவ நாகரிக இளைஞர்கள் என்பது தெரிந்தது.

    

"டேய் மச்சி  நம்ம ராம் சொன்னபோது கூட நான் நம்பிக்கை இல்லாமதான்டா இருந்தேன் ஆனா இப்ப நம்பரேன்டா எவ்வளவு அழகா இருக்கு இந்த கிராமம்" என்று சிலாகித்து கூறினான் ஜீவா.

"நான்தான் சொன்னேன்ல எங்க ஊரு சூப்பரா இருக்கும்னு நீங்கதான் கிராமத்துல நெட் கிடைக்காது, ஸ்னாப்சாட் யூஸ் பண்ண முடியாது,வாட்ஸாப் செய்ய முடியாதுனு உயிர வாங்கிட்டிங்க. இப்போ பாருங்க ட்யூட்ஸ் எங்க ஊரின் அழகை" என்று கூறி நண்பர்களிடம தன் ஊரின் பெருமையே நூற்றி எட்டாவது முறையாக கூறினான்  ராம்.

"சரி சரி இப்ப என்ன உங்க ஊருக்கு வராமயா போய்ட்டோம் .ஏதோ ஆசைப்பட்டு  கூப்பிட்டன்னு வந்துட்டோம்ல. நான்லாம் வந்தது உன் ஊருக்குதான்டா பெருமை என் எருமை “ என்று கூறி ராமினை வம்பிற்கு இழுத்தான் பாலா .

   காரை ஓட்டிக்கொண்டிருந்த விஷ்ணு இவர்களின் சம்பாஷணைகளை கேட்டுக்கொண்டு வந்தான். அவனுக்கும் அந்த கிராமிய சூழல் மனதினுள் கிளர்ச்சியை ஏற்படுத்தியது.

   இவர்கள் அனைவரும் டெல்லியில் உள்ள பிரபலமான கல்லூரியில் மருத்துவ படிப்பை முடித்தனர்.பயிற்சி மருத்துவர்களாக புகழ்பெற்ற மருத்துவ மனையில் பணிபுரியவிருக்கின்றனர்.

   அதற்கு முன் கோடை விடுமுறையை ராமின் சொந்த ஊரான விடையூரில் கழிக்க முடிவெடுத்தனர்.அதன்படி விஷ்ணுவின் காரில் பயணத்தை மேற்கொண்டனர்.அப்பொழுது நடந்த உரையாடல்களைத் தான் நாம் இவ்வளவு நேரம் பார்த்தோம்.

   சுற்றிலும் பச்சை பட்டாடை உடுத்தியது போலிருந்த வயல்வெளியில் உள்ள நெற்கதிர்கள், வீசும் தென்றல் காற்றிற்கு ஏற்ப நர்த்தனம் செய்து அவர்களை வரவேற்ப்பது போலிருந்தது . மலைத்தொடர்களின் அழகினை இரசித்துக்கொண்டே வந்த விஷ்ணுவின் கண்களுக்கு ஒரு வித்தியாசமான இடம் புலப்பட்டது. அது ஒரு குன்று அதில் பல விசித்திரமான ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன.

"டேய் ராம் அது என்னடா அந்த குன்று ரொம்ப வித்தியாசமா இருக்கு… என்னென்னவோ பெயிண்ட் பண்ணி வச்சிருக்காங்க… " என ஆர்வத்தை அடக்க முடியாமல் கேட்டான்.அக்கேள்வியை கேட்ட மாத்திரத்தில் ராமின் முகம் சுருங்கியது.உடனே பேச்சை திசை திருப்பினான் ராம்.

ராமின் முகமாற்றத்தைக்  கவனித்த விஷ்ணு சட்டென்று ஏதும் கேட்காமல் அமைதியானான். ஆனால் மனதிற்குள் அந்த குன்றைப்பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வம் உருப்பெற ஆரம்பித்தது.

விஷ்ணுவின் மனதினில் உருவான ஆர்வத்தினை அறியாத ராம் "அப்பாடா  நல்ல வேளை பேச்சை மாத்திட்டோம். இல்லைன்னா அந்த கிரகம் பிடிச்ச குன்றை பத்தி சொல்லியிருக்கனும்" என பெருமூச்சுவிட்டான். 

சிறிது நேரத்திலேயே நம் நண்பர்கள் குழு  ராமின் வீட்டை அடைந்தனர். அதைப்பார்த்து யாரும் வீடு என்று சொல்ல மாட்டார்கள் ஏனேனில் பார்பதற்கு அரண்மனை போன்ற தோற்றத்தைக் கொண்டிருந்தது அவ்வீடு. 

ராமின் குடும்பம் விடையூரில் புகழ்பெற்ற குடும்பம் .காலம் காலமாக அவ்வூர் சிவன் கோவிலில் தர்மகர்த்தாவாக இருப்பவர்கள். விடையூரில் உள்ள அநேக இடங்கள் இவர்களுடையது பல நாட்கள்  கழித்து  வரும்  பிள்ளைக்காக அவன் வீட்டில் சமையல் தடபுடலாக நடந்து கொண்டிருந்தது.

  வீட்டினுள் நுழைந்தவுடன் வந்த சமையலின் நறுமணம் ஜீவாவின் நாசியைத் துளைத்தது." நண்பா இன்னைக்கு உங்க வீட்ல செம விருந்து போல வாசமே கமகமனு வருதே "என்றான்

"டேய் சாப்பாட்டு ராமா வாசனைய வச்சே கண்டுபிடிக்கிறயேடா அல்டிமேட் மச்சி நீ.ஆனா ஒரு தப்பு செய்துட்ட டாக்டர்க்கு படிச்சதுக்கு பதிலா போலீஸ் ஆகிருக்கலாம் மொப்ப நாய் செலவாவது மிச்சமாகியிருக்கும் கவர்ன்மென்ட்க்கு" என்று விஷ்ணு ஜீவாவை கேலி செய்தான்

  "ஹே ஷட்டப் மேன் ஐயம் நாட் சாப்பாட்டுராமன் ஜஸ்ட் ஃபூடி" என்று பெருமையாக சொன்னான்.

"ஹிஹி ஃபேஸ்புக் மீம்ஸ் தானே இது .சொந்த டயலாக் பேசுடா இப்படி கடன் வாங்கி பேசாதடா" என மறுபடியும் ஜீவாவின்  காலை வாரினான்  விஷ்ணு .

   இதனிடையில் இவர்களின் சம்பாஷணையை கேட்டவாறு சமையல் அறையிலிருந்து வந்த ராமின் தாய் கௌரி முகமலர்ச்சியுடன் அனைவரையும் வரவேற்றார். மஞ்சள் பூசிய முகத்தில் அளவான குங்குமபொட்டிட்டு லட்சுமிகரமான முகத்துடன் சமையலறையிலிருந்து வந்தவரைப் பார்க்க ஒரு சாயலில் பழைய நடிகை லக்ஷ்மியை ஒத்திருந்தார்.

  "டேய் தம்பி எப்படிப்பா இருக்க? நல்லா சாப்பிட்ரியா இல்லையா ?போன முறை வந்ததவிட இப்போ ரொம்ப இளைச்சிட்டியே " என்றவரை இடைமறித்த பாலா "அம்மா நாங்களும் வந்துருக்கோம் எங்களையும் கொஞ்சம் கவனிக்கலாமே" என்றான்.

"என்ன தம்பி இப்படி கேட்டுட்ட உங்களை கவனிக்காம இருப்பேனா?  ராம்கிட்ட ஃபோன்ல பேசும்போது உங்ககிட்ட பேசாம இருந்தாலே என்ன உண்டு இல்லைன்னு செய்துடுவீங்க இப்போ கேக்கவா வேணும்"என சிரித்துக்கொண்டே கேட்டார்.

  "சரி சரி நேரம் ஆகிடுச்சு சாப்பிட வேணாமா? உங்களுக்காக ரூம்ஸ் ரெடி செஞ்சி வச்சிருக்கேன் போய் குளிச்சுட்டு வாங்க" என்றார்.நால்வரும் குளிக்க சென்றார்கள் அப்போது ராமை மட்டும் கௌரி தனியாக அழைத்தார்.

  " தம்பி வரும்போது அந்த குன்றை பத்தி பிள்ளைங்க ஏதாவது கேட்டாங்களாப்பா?" என பதட்டத்துடன் கேட்டார்."ஆமாம்மா விஷ்ணு கேட்டான் நான்தான் பேச்சை மாத்தி அவனை திசை திருப்பிட்டேன்" என்றான் ராம்

   "ஹப்பா நல்ல வேலை செய்த தம்பி பாவம் பசங்க இங்க சந்தொஷமா இருக்க வந்துருக்காங்க அவங்களுக்கு அந்த குன்றை பத்தி தெரிய வேண்டம்பா " என்றார்.

       ராமினை அழைக்க அப்போது அங்கு வந்த விஷ்ணு அவர்களின் உரையாடல்களை கேட்க நேரிட்டது.அக்குன்றின் பின்ணணியில்  அப்படி என்ன மர்மம் இருக்கிறது  என அறியும் ஆவல்  விஷ்ணுவின் மனதில்  விஷ்வரூபம் எடுத்தது.

   சூரியன்  உச்சியினை தொட்ட வேளை அனைவரும் குளித்து முடித்து தயாராகி டைனிங் டேபிளுக்கு வந்து சேர்ந்தனர்.கௌரி அனைவரும் சாப்பிட வாழை இலையை விரித்துக் கொண்டிருந்தார்.

               சைவ சமையலில் உள்ள அத்தனை உணவுகளும் அந்த டேபிளை அடைத்துக் கொண்டிருந்தன.

           ராமின் தாய்  கௌரி   முதலில்  ஒரு கிண்ணத்தில்  பால் பணியாரம்   வைத்தார்.பின்பு ஒரு முழு  நேந்திரம்  வாழைப்பழத்தை  வைத்தார். அவ்வாழையிலையின் பச்சை நிறத்திற்கும் நேந்திரம் வாழைப்பழத்தின் பூரணமஞ்சள்  நிறத்திற்கும் பார்ப்பதற்கே  ரசனையான காட்சியாக இருந்தது . தொடர்ந்து நால்வகை கூட்டுகள்  , ஆறுவகை பொரியல்கள்   , மெதுவடை , மசால் வடை , அப்பளம் ,பருப்பு பாயாசம் என அடுத்த சில மணித்துளிகளில் அவ்வாழையிலை முழுவதும்  நிரம்பி வானவில் ஜாலத்தினைக்  காட்டியது .

             மல்லிகை மொட்டுக்களாய் இருந்த அரிசி சாதத்தை அன்னக்கரண்டியால் வாழையிலையில் தள்ளி கதம்ப சாம்பாரினை அதில் ஊற்றி மதிய உணவுக்கான பரிபூரணத்தை உண்டாக்கினார். 

பரிமாறியபடியே அனைவரின் ஷேம லாபங்களை விசாரித்துக்கொண்டிருந்தவரை இடைநிருத்தி “ இருங்கம்மா இருங்கம்மா…. எப்படிம்மா இவ்ளோ அயிட்டத்தையும் செஞ்சிங்க நேத்துல இருந்தே சமையல் ரூம் உள்ள நுழைஞ்சி வேலையை ஸ்டார்ட் பண்ணிட்டிங்களா!?” என்ற ஜீவாவின் கிண்டலுக்கு சிரிப்பையே பதிலாக்கினார் கௌரி.

          "அப்பா எங்கம்மா? ஆளையே காணல எங்க போய்ருக்காரு? "என ராம் கேட்டான்.

          "உங்க அப்பா ஏதோ  ஒரு முக்கியமான வேலை வந்துச்சுன்னு விடியகாலைலயே கிளம்பிட்டாருப்பா ......இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவாரு.நீங்க சாப்பிடுங்க "என கூறினார்.

           பொதுவாகவே ஜீவா சாப்பாட்டுப் பிரியன் ஆகையால் ஆர்வமாக சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அதனைப்பார்த்து டேய் டேய் பார்த்துடா எங்களுக்கும் கொஞ்சம் மிச்சம்வைடா.....பாவம் இன்னும் வேலைக்காரங்க கூட சாப்பிடலடா என பாலா கேலி செய்தான்.

           " உடனே ஜீவா டேய் மச்சி நான் ஃபிரண்ட்ஸ் விஷயத்துல சாப்பாட்டை பார்க்க மாட்டேன். சாப்பாட்டு விஷயத்துல ஃபிரண்ட்ஸயே பார்க்க மாட்டேன்" என சீரியசாக கூறினான். 

          

இதைக்கேட்ட ராம் "டேய் நீ எவ்ளோ வேணாலும் சாப்பிடு நாங்க எதுவும் கேக்கமாட்டோம்.ஆனா இப்படி மொக்க போட்டு கொல்லாதடா" என பாவமாக சொன்னான்

          இப்படி கேலியும் கிண்டலுமாக சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

           ஆனால் நம் விஷ்ணுவின் மனதிலோ அந்த குன்றினை பற்றிய எண்ணங்களே ஆக்ரமித்திருந்தன.இம்மர்மத்தினை எப்படியாவது அறிந்து கொள்ள மனம் முரண்டு பிடித்தது.

           

          ஒரு வழியாக அனைவரும் சாப்பிட்டு முடித்தனர்.அனைவருக்கும் தனித்தனி அறைகள் ஏற்பாடு செய்திருப்பதால் அவரவர்களின் அறைக்கு ஓய்வெடுக்க சென்றனர்.

         சூரியன் அஸ்தமனமாகி சந்திரனுக்கு வழிவிட்டிருந்த இரவு வேளையும் வந்துவிட்டது . நாம்  விஷ்ணுவை சந்திக்கும் இந்த நேரம் இரவு உடையை உடலுக்கு சமர்ப்பித்திருந்தவன் கதவைத் தட்டும் சத்தம் கேட்கவும் கதவைத் திறந்தான்.அங்கு ராம் நின்று கொண்டிருந்தான்.

          "என்னடா மச்சி நீ இங்க வந்ததில இருந்து ஒரு மாதிரி இருக்க உடம்பு ஏதும் சரியில்லையா" என நிஜமான அக்கறையோடு கேட்டான் ராம்.

          ராமிடம் தன் மனதில் உள்ளதை கேட்க இதுவே சரியான தருணம் என நினைத்த விஷ்ணு "ராம் ....நான் என்ன கேட்டாலும் நீ உண்மைய மறைக்காம சொல்லனும்" என்று பீடிகை பொட்டான்.

          "என்னாடா விஷ்ணு  நமக்குள்ள என்ன ஒளிவு மறைவு இருக்கு......தாராளமா கேளுடா" என்றான்

           அவ்வாறு ராம்  கூறியதும் விஷ்ணுவிற்கு ஏக சந்தோஷம்.விஷ்ணு  அக்குன்றைப் பற்றி கேட்க வாயைத் திறந்த வினாடி அறை வாயிலில் யாரோ வரும் அரவம் கேட்டது.

                  இருவரும் வாசலை நோக்கினர்.அங்கே வேலைக்காரன் மூர்த்தி நின்று கொண்டிருந்தான்.ராமினைப் பார்த்து "சின்னய்யா ......அம்மா உங்களை கூட்டிட்டு வரச்சொன்னாங்கய்யா" என கூறினான்.

     

               ராம் விஷ்ணுவிடம் "சரிடா நான் போய் என்ன விஷயம்னு கேட்டுட்டு வந்துட்றேன்.... நான் வர லேட் ஆகிடுச்சுன்னா நீ தூங்கு.....  இல்லைன்னா எல்லாம் மார்னிங் பேசிக்கலாம்" என்று கூறி அறையிலிருந்து வெளியேறினான்.மூர்த்தியும் ராமினை பின்தொடர்ந்தான்.

               "ச்ச சிவ பூஜையில கரடி போல இந்த நேரத்திலயா இந்த மூர்த்தி வரனும்...எல்லாம் என் நேரம்...." என தன்னையே நொந்துகொண்டான் விஷ்ணு.

                விஷ்ணுவும் களைப்பாக இருந்ததினால் சிறிது நேரம் இளைப்பாறலாம் என நினைத்து கட்டிலில் பரவினான்.கட்டிலில் படுத்த சிலமணித்துளிகளில் நித்திரா தேவி அவனின் அனுமதி இல்லாமலேயே அவனை ஆட்கொண்டாள்.

               மறுநாள் விடியும் பொழுது அவன் வாழ்வில் என்னென்ன பிரச்சனைகளை கொண்டு வரப்போகிறது என அறியாமல் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தான்.

              ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தவனின்  செவிப்பறையை ஒரு கோரமான அலறல் சத்தம் தீண்டியது.விழுந்தடித்துக்கொண்டு எழுந்தான் விஷ்ணு.இருதயம் படபடவென்று அடித்துக் கொண்டது.மறுபடியும் அச்சத்தம் வரவே அது ஜன்னலின் பக்கமாக வருகிறது என  ஊகித்தான் ஜன்னலை நெருங்கி் சென்று பார்த்தான். அங்கே.......

           

                                                          தொடரும்

             

            

        

            

         

        

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top