ராஜகுமாரி - 2

ஒரு முறை போட்டோகிராபரை உடன் கூட்டி வந்து வீட்டில் உள்ளவர்களை படம் பிடித்தான் ஷரண். அந்த காலத்து பரம்பரை நகைகள் சிலவற்றை இரும்பு பொட்டியிலுருந்து எடுத்து அணிந்துக்கொண்டனர். அதைக்கண்ட ஷரண், இவை விண்டேஜ், எங்கும் கிடைக்காது ஆதலால் எல்லா நகைகளையும் அணியுமாறு உற்சாகப்படுத்த வீட்டில் உள்ள பெண்களுக்கு அவனின் உற்சாகம் தொற்றிக்கொண்டது. அவர்கள் தங்களை அழகுப்படுத்தும் நேரத்தில் முதலில் ராஜாவை போட்டோ பிடிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதன் பின் அறையிலிருந்து பெண்கள் வந்து ஓரமாய் நின்றதும் அவர்களைக் கண்டு அதிர்ச்சியடைந்த ராஜாவைப் பேச இடம் கொடுக்காமல் ஷரண் பெண்களை உடனே ராஜாவின் பின்னால் நிற்குமாறு கட்டளையிட்டான்.

"என்ன இது? வீட்டு பொம்பளைங்கள போட்டோ பிடிக்க வேண்டாம்," ராஜா குறுக்கிட்டார்.

பெண்கள் ஏமாற்றத்துடன் ராஜாவை நோக்க ஷரணோ பீதியடைந்தான். இந்த கிழவனை படம் போட்டால் விற்குமா, என நினைத்தவன் கெஞ்சினான், "இல்லைங்க ராஜா, குடும்பமா போட்டோ போட்டாதான் உங்க சந்ததி நிலைச்சிருக்குன்னு காட்ட முடியும்."

ராஜாவின் மனம் இதை ஏற்கவில்லை. ஷரண் தருவைப் பார்த்து புருவங்களைத் தூக்கினான், "எதாவது பேசு," என.

அவளுக்கும் என்ன சொல்லி இவரை சம்மதிக்கவைப்பதென தெரியவில்லை. ஜனனாயகத்தில் நாடு செல்ல அதற்கு மாறாக பயணித்த ராஜா. இத்தனை ஆண்டுகள் ராஜப் பரம்பரை நிலைத்திருப்பதற்கு இந்த கிழவனின் முரட்டு பிடிவாதமே காரணம். அதுவும் அப்பா இவர்களை விட்டு சென்றதும் இக்கிழவன் எல்லோரையும் ஆட்டிப் படைத்தான், வாழ தைரியமும் கொடுத்தான். "ராஜ பரம்பரை நாம!" என மாரைத் தட்டி பரம்பரைக்காகவே வாழ்ந்துக்கொண்டிருப்பவன்.  ராணிகளும் இளவரசிகளும் வெகுஜன மக்களுக்குக் காட்சி அளிக்கக்கூடாது போன்ற அக்காலத்து விதிமுறைகளைப் பின்பற்றி கலாச்சாரத்தைக் காப்பாற்றுவபவர் ராஜா. இளவரசிகளுக்கு வீட்டைப் பெருக்குவதும் கோதுமை அரைப்பதும் வேலையாகிய பின் இந்த வெத்து கௌரவம் பெரும் கேலியாய் தோன்றியது தருவுக்கு. இருப்பினும் இதை சூசனமாகக் கையாள வேண்டும் என அறிந்திருந்தாள்.

"தாத்தா, அவரு சொல்றது சரி தான். அடுத்த தலைமுறைக்கும் நாம இருக்கோம்னு காட்டனும். வேணும்னா தலைல முக்காடு போட்டு முகம் தெரியாம நிற்கிறோம்."

ஷரணின் கண்கள் விரிந்தன, இது என்ன புது கூத்து.

தரு கெஞ்சும் விதமாய் இவனைப் பார்த்தாள். அவளால் இவ்வளவு தான் முடிந்தது. கிட்டியது புல்லாயினும் அதைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென ராஜா மீண்டும் எதிர்பு தெரிவிப்பதற்குள் ஷரண் பெண்களை முகத்தை மூடிக்கொண்டு பின்னால் நிற்க சொன்னான். கருப்பு வெள்ளை படத்தில் கழுத்திலிருந்து தொப்புள் வரையும் கையிலிருந்து முழங்கை வரையும் நீண்ட சங்கிலிகள் மட்டும் தெரிந்தன. 

"இவ்வளவு அழகை உங்க ராஜா இந்த சின்ன கோட்டைக்குள்ள அடைக்க பார்க்கிறாரு. நல்ல வேளை, எனக்காவது தரிசனம் கிட்டியது," ஷரணின் கொஞ்சல்கள் தருவை சிலாகித்தன. விரல் கோர்த்த காலம் கரை ஏறி இப்போது முத்தங்களில் முட்டி மோதி வந்து நின்றது. உயிரையே உரியும் உதடுகள் அவனது. 

போட்டோ எடுத்த பின் அடுத்த ஐந்து நாட்கள் ஷரணைக் காணவில்லை. எழுத்து வேலையில் அவன் மும்முரமாக, அவனின் இல்லாமையில் வளர்பிறைபோல் தருவின் ஏக்கம் கூடியது. மொட்டை மாடியில் இவள் குளிர்காயும் அந்நிலவின் ஒளியை ஷரணும் அனுபவிப்பதாக தரு கற்பனைச் செய்தாள் ஆனால் ஷரணோ விளக்கொளியில் விரல் வலிக்க எழுதிக்கொண்டிருந்தான். தபால் மூலம் தான் எழுதியது டெல்லி செல்ல மூன்று நாட்களாயிடுமென ஓர் ஆளைப் பிடித்து அவர் கையில் தான் எழுதிய ஆர்டிகலையும் கொஞ்சம் பணத்தையும் கொடுத்து வழியனுப்பினான் ஷரண். திருத்தங்களும் பாராட்டுகளும் தொலைப்பேசி மூலம் வர முதல் முதலாய் இரு முழு பக்களுக்கு படங்களுடன் இவனின் கட்டுரை பிரசுரத்துக்கு ஆயுத்தமானது. இன்னும் நாலு நாட்களில் சார்லஸ் - டயானாவின் திருமணம் இங்கிலாத்தில் நிகழ அதற்கு முந்தைய நாளில் ஷரண் எழுதியது அச்சிடப்படும் என எடிட்டர் வாக்குறுதியளித்தார்.

இவ்வாக்குறுதியைப் பெற்ற பின்பே ஷரண் தான் தங்கியிருந்த அறையிலிருந்து வெளியுலகத்துக்கு வந்தான். முதலில் ஹோட்டலில் வயிறு நிறைய சாப்பிட்டான். ஐந்து நாட்களின் பசி தீர சாப்பிட்டான். பின், தனது பேனா வாழ்க்கையின் திருப்புமுனை எழுதிய தருவைக் காண விரைந்தான்.

ஷரண் தனது வேலைக்காகவும்  தரு தன் காதலனை தனக்கு மீட்டெடுத்ததற்காகவும் அச்சிடப்படவுள்ள கட்டுரைக்காக மனதுக்குள் நன்றி சொல்லினர். அரண்மனையின் பல பாழடைந்த அறைகளில் ஒன்றின் தரையில் இவர்கள் அமர்ந்திருந்தனர்.  

"டெல்லில உள்ள என் ப்ரண்ட்ஸ் யாருமே ஒரு முழு பக்கம் எழுதினது இல்ல தெரியுமா? " ஷரண் நினைத்து நினைத்து அவனது வெற்றியில் லயித்தான்.

தருவின் ஒற்றை பிண்ணிய சடையில் அவனின் விரல்கள் படியிறங்கிக்கொண்டு இறுதியில் அவளின் இடுப்பில் வந்து முடிந்தன. பின் மலை ஏறும் பக்தனைப் போல் மீண்டும் ஷரணின் விரல்கள் தருவின் பிண்ணலில் ஏறி அவள் மார்பில் வந்து நின்றன.

"டெல்லில உள்ளவனுங்க வெறும்  இளவரசி பத்தி ஆர்டிக்கல் தான் எழுதியிருப்பானுங்க. ஆனா நான், இளவரசியவே தொட்டுட்டேன், முத்தமிட்டுட்டேன். " ஷரணின் மனமும் உடலும் துள்ளியது.  அவனின் விரல்கள் தருவின் மார்பை பிசைந்தன. தருவின் உடல் முழுதும் ஒரு தீ பரவியது.

"அவனுங்க கனவு கூட கண்டிருக்க மாட்டானுங்க. வாழ்க்கைல ஒரு இளவரசிக் கூட இப்படி நெருக்கமா இருக்கிற வாய்ப்பு அவனுங்களுக்கு கிடைக்கவே கிடைக்காது  ஆனா எனக்கு கிடைச்சிருக்கு," வெற்றியில் மிதந்தவனின் வார்த்தைகள் சல்லடை செய்யா தண்ணீர் போல் கொட்டின.

உடலின் தீ அவனின் வார்த்தைகளின் தீயை அணைக்க முற்பட்டாலும் அவை தருவின் மனதில் பொரியை தட்டிவிட்டன. என்னவென்று சொல்ல தெரியவில்லை ஆனால் அவனின் வார்த்தைகள் கசப்பை விழுங்கியது போல் இருந்தது. ஷரண் அவளைத் தொடர்ந்து தொட தருவுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை, எது செய்யவும் நேரமில்லை என்றும் தோன்றியது. தருவின் மேல் இருந்த ஷரணின் கைகள் விலகி இப்போது தன் சட்டையின் பொத்தானைக் கழட்ட முற்படும்  நொடியைப் பயன்படுத்திக் கொண்டு உடனே தரு எழுந்தாள். 

"ஹே, என்ன பண்ற?"

தரு ஓட ஷரண் இவளின் நிழலைத் துரத்தினான். தான் வாழ்ந்த கோட்டை அல்லவா, தரு மறைந்தாள்.

"தரு, இப்போ எதுக்கு இப்படி சின்ன புள்ள தனமா இருக்க? அன்னைக்கு நீதான சொன்ன, இதுலாம் அனுபவிக்க ஆர்வமா இருக்கு. இது தப்பா தெரியல நு. வெளிய வா பேசலாம்."

ஷரணின் கெஞ்சல்கள் அவள் காதில் ஒலித்தாலும் தரு தன் வாயைப் பொத்திக்கொண்டாள். பல நிமிடங்கள் ஷரண் கோட்டையை சுற்றி வந்தாலும் தருவைக் கண்டுபிடிக்க முடியாமல் துவண்டு போய் வீட்டிற்கு சென்றான். அவன் கேட் வழியே செல்வதைக் கண்ட பின் தரு கண்காணித்துக்கொண்டிருந்த இடத்திலிருந்து வெளி வந்தாள்.

ஆம், இவள் தான் இதற்கு சம்மதம் தெரிவித்தாள். உடலின் ஆசைகள் தவறல்ல என இவளுக்கு தோன்றியது இப்போதும் தோன்றியது. ஆயினும் என்னவோ இவளைத் தடுத்தது.

அடுத்த நாள் ஷரண் அரண்மனைக்கு வருகை அளித்தான் ஆயினும் அவனின் கண்களில் தரு படவில்லை. அதற்கு அடுத்த நாள் ஷரண் டெல்லிக்குக் கிளம்பினான். "நாளைன்னைக்கு கட்டுரை பேப்பர்ல வரும். எல்லோரும் படிங்க," என ஊர் மக்களிடம் விடைப்பெற்றுக்கொண்டான் ஷரண். தருவுக்கு இவனின் பயணம் தெரிந்திருக்கும் என அவன் அறிந்தான் ஆயினும் அவளிடமிருந்து எந்த ஒரு செய்தியும் வராதது அவனுக்கு சோகத்தை அளித்தது. எல்லைகளைக் கடந்துவிட்டோமோ என அவனின் மனம் குழம்பியது. அதற்காக மன்னிப்புக் கேட்கும் வாய்ப்பு  அளிக்கப்படாதது குற்றவாளியின் குற்றவுணர்வை மேலும் குத்தியது.

ஊரே அவனின் கட்டுரைக்காக, இல்லை, மகேந்திரனின் போட்டோவுக்காகக் காத்திருந்தது. ஆங்கிலப் பத்திரிக்கையில் இடம்பெற்றுள்ளோம் என்ற கௌரவம் மட்டும் இருந்தது ஆனால் அதில் என்ன எழுதியிருக்கிறது என யாருக்கும் தெரியவில்லை.

தரு அறிந்திருந்தாள். படிக்காமலேயே அறிந்திருந்தாள் அவன் என்ன எழுதியிருப்பானென. ஆதலால் ஊர் முழுக்க கை மாறிய நியூஸ்பேப்பரை இவள் வாங்கவில்லை.

சாயங்காலம் மணி 7. சூரியன் தன்னை முழுமையாய் சுருட்டிகொண்டு இங்கிலாந்துக்கு சென்றுவிட்டான். எப்படியோ யாரிடமோ வேலைசெய்யும் ரேடியோவை கடன் வாங்கி மொட்டை மாடியில் உட்கார்ந்திருந்தாள் தரு. ஆங்கில மொழி ரேடியோ சேனல்கள் மட்டுமல்ல எல்லா மானில ரேடியோக்களும் இங்கிலாந்து இளவரசனின் திருமணத்தை நொடிக்கு நொடி விவரித்தன. ஒரு முறை சார்லஸின் பெயர் உச்சரிக்கப்பட்டால் நூறு முறை டயானாவின் பெயர் சொல்லப்பட்டது. டயானாவின் கண் அசைவுக்கும் நிரூபர்கள் அர்த்தம் கூறினர்.

ஏதோ ஒரு நாட்டில் நடக்கும் கூத்தை தரு ஒலியலையில் கேட்டுக்கொண்டிருந்தாள். என்ன தான் சார்லஸ் அடுத்த அரசன் என்றாலும் ஒவ்வொருவரின் மனதையும் டயானா தான் ஆட்கொண்டிருந்தாள்.  அதைப்போலவே நேற்றைய செய்தித்தாளின் மூலம் இளவரசி தருலியோனா ஹாரிஷ்டவால் இந்தியாவை ஆட்கொண்டிருந்தாள் என தருவுக்கு தெரியும். ஆம், பழமை, முன்னேற்ற உலகுக்கு உபயோகமற்றது என மக்கள் நினைத்திருந்தாலும் அரியவற்றின் மேல் ஆர்வம் காட்டுவது,ஏன் அடைய நினைப்பதும் தொடரும். ஷரண் பெண்ணை அடைய நினைக்கவில்லை, காதலியை தொட ஆசைப்படவில்லை, ஓர் இளவரசியை கைப்பற்ற ஆசைப்பட்டான். காதலாய் அணுகியிருந்தால் அனுமதித்துருப்பாள், மகிழ்ந்திருப்பாள். யாருக்கும் கிட்டா பொருள் பொக்கிஷமே.

ராஜகுமாரி தருலியோனா ரேடியோவை அணைக்கும்போது பசி வயிற்றைக் கிள்ளியது. நாளை பெரிய சிட்டிகளிலிருந்து ஆட்கள் வர நேரும், இரும்புப் பொட்டியிலிருந்து நகைகளை அணிய வேண்டும் அதோடு அப்பாவுக்காக செய்யப்பட்ட மரகத கிரீடமும் இருக்கிறது, ராஜகுமாரி கணக்குப்போட்டாள்.  அந்த செய்தித்தாள் கட்டுரையை வைத்து பிடுங்கப்பட்ட சொத்தை மீட்க ஆயுத்தமானாள் தரு. 

[Charles-Diana wedding happened on 29 July 1981 Britain time 11.20am, Indian time 4.50pm. எதுக்கு இந்த சிறுகதை? என்ன சொல்ல வர்ரீங்க மைனா? என்ன இது fantasy? அப்டின்னு கேட்டா எனக்கு பதில் தெரியல. எனக்கு எழுதனும்னு ஆசையா இருந்துச்சு, எழுதிட்டேன்! உங்களையும் படிக்க வச்சிட்டேன் ஹிஹிஹி! கொஞ்சம் சொற்களில் கூர்மையாய் தீட்டுவது சிறுகதை. நிறைய சொற்களில் ஆசைத் தீர எழுதுவது என் கதை!

உங்களுக்கு இந்த கதைப் பத்தி எதாவது தோனுச்சுன்னா கமெண்ட் பண்ணுங்க! நன்றி:)]

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top