புது தகப்பன்

கூட்டத்துடன் சண்டைபோட தெம்பின்றி முக்கால் வாசி பயணிகள் வெளியேறிய பின் தன் handbag ஐ எடுத்துக்கொண்டு ஸ்ரீயும் விமானத்திலிருந்து சாவகாசமாக இறங்கினாள். 6 மணி நேர பயணத்தின் சோர்வு அவளின் கீழ்நோக்கிய பார்வையில் தென்பட்டது. இவ்வளவு நேரம் உட்கார்ந்து வந்ததில் மீண்டும் நடப்பது இமயமலையை ஏறுவது போல் தோன்றியது அதுவும் அவளின் நிறைமாத வயிறு அன்றாட வேலைகளையும் கடினமாக்கியது. ஒரு வழியாய் transit loungeஇல் இடம் பிடித்து கால்களை நீட்டி அமர்ந்ததும் ஸ்ரீ தனது போனில் ஏர்போர்ட் wifiகு connect செய்து ஷ்ரவனுக்கு மெசேஜ் அனுப்பினாள்."Landed at Dubai, at transit for the next few hours." என விரல்கள் துரிதமாய் டைப் செய்ய துபாயில் இரவு 9 மணி என்றால் லண்டனில் நடுசாமம் 3 மணி என அவள் கணக்குபோட்டாள். இரு grey tick ஷ்ரவனின் இன்டர்நெட் வேலை செய்வதை மட்டும் காட்டியது ஆனால் அவன் படித்ததை அல்ல. வேலை அசதியில் தூங்கியிருப்பார் என தனக்கு தானே சாமாதானம் செய்துகொண்டு இருக்கையில் இன்னும் சற்று சாய்ந்துக்கொண்டாள். ஷ்ரவன் குழந்தை பிறந்ததும் வந்துவிடுவான் என்று அவளுக்கு தெரியும். அவனின் தற்போதைய வேலை பளுவும் விடுமுறை நாட்களும் அவள் அறிந்தாள். இருந்தும் உள்ளுக்குள் ஒரு சோகம்.

அமைதியான transit lounge இல் சற்று ஆரவராம் உதித்தது. அரை மணி நேரத்தில் சென்னை செல்லும் விமானத்துக்கான போர்டிங் நேரம் குறிப்பிடப்பட்டது. தற்போது தான் விமானம் பயணிகளுடன் சென்னையிலிருந்து துபாயில் தரையிறங்கியதால் fuel ஏற்றி சுத்தம் செய்து அது பறக்க தயாராக இன்னும் 3 மணி நேரம் இருந்தது. அம்மூன்று மணி நேறத்தை காபி ஷாப்பின் காபி வாசனையிலோ அல்லது duty free கடைகளின் perfume வாசனையோடோ கழிக்க வேண்டிய நிர்பந்தம். ஆனால் எதையும் பருகும் மனநிலையில் ஸ்ரீ இல்லை.

அப்போது அவளின் கடைக் கண் பார்வையில் இரு சிறு பாதங்கள் தென்பட்டன. பெரிய விழிகளும், கரு முடியும், கொஞ்சம் பூசியது போல் உடல்வாகும் பல்லில்லா சிரிப்புமாய் ஒரு குழந்தை அவளை நெருங்கியது. அவளை நெருங்கியது என்பதைவிட அவளின் அருகில் இருந்த socketஇன் சுவிட்ச்சை அமத்துவதற்காக நெருங்கியது. பயணிகளுக்கு இலவச மின்சாரம் கொடுக்க கூடாது என்ற சூட்சமத்தில் சுவற்றின் கிட்ட தட்ட அடியில் அந்த socket இருக்க அதை போட்டு பார்பதற்கு அக்குழந்தை தரையில் சம்மணம் போட்டு அமர்ந்துவிட்டது. இவ்வளவு நேரம் flight இல் உட்கார்ந்து வந்ததற்கு நம்மளும் தரைல உட்கார்ந்தால் நல்லா இருக்கும்ல என ஏக்கத்தோடு ஸ்ரீ நோக்கினாள். சுதந்திரம் என்பது சுற்றத்தை அறியாத இந்த பாலிய வயதில் மட்டுமே.

அக்குழந்தை பார்க்க தென்னிந்திய குழந்தை போன்று தான் இருந்தது. கரு முடியும் விழியும் என அழகாய் இருந்த அக்குழந்தையை வைத்த கண் நகராமல் பார்த்துக்கொண்டிருந்தாள் ஸ்ரீ. அக்குழந்தையை கூப்பிட வேண்டும் என உள்ளுக்குள் தோன்றினாலும் தமிழோ அல்லது மலையாளமோ என்ன மொழியில் பேசுவது? ஆங்கிலத்தில் ஹலோ, whats your name என்று கேட்டுவிடுவோம் என முடிவெடுத்தாள் ஸ்ரீ. ஹலோ என்று சொன்னபோதே "அர்ஜுன்" என ஒரு குரல் கூப்பிட்டது. பார்வையை நிமிர்த்திய ஸ்ரீ கு அங்கே 6 அடி உயரத்தில் ஓர் ஆண் அவளின் முன் கட்டடமாய் நின்றான். "அர்ஜுன்" என சற்று எச்சரிக்கையாய் ஒலித்த அக்குரலை கேட்டதும் குழந்தை சுவிட்ச் ஐ தட்டுவதை நிறுத்திவிட்டு ஏளனமாய் திரும்பி பார்த்துவிட்டு பின் மீண்டும் சுவிட்ச் ஐ குடைய ஆரம்பித்தது. இப்போது அந்த ஆண், குழந்தையின் தந்தை என்றே சொல்லிவிடலாமே, தரையில் அமர்ந்திருந்த குழந்தையை வலுக்கட்டாயமாக தூக்கிவிட்டு பின் திரும்பியதும் இவளை பார்த்து ஹலோ என்றார். இவர் தன்னிடம் பேச்சு கொடுப்பார் என்று சற்றும் எதிர்பார்க்காத ஸ்ரீ ஒரு வினாடி தடுமாறி பின் ஹலோ அர்ஜுன் என்றாள். குழந்தையின் தந்தை குழந்தையின் கரத்தை பற்றி இவளுக்கு கை அசைத்தார், " உனக்கு தான் ஹலோ சொல்றாங்க அர்ஜுன், எனக்கில்ல" என சிரித்தார்.

"sorry" என்று அசட்டு சிரிப்புடன் சமாளித்தாள் ஸ்ரீ.

"I'm Mithiran. We're headed to Manchester."

"I'm Sri. Waiting for the Chennai flight"

"நாங்க வந்து இறங்கிய flight ல நீங்க ஊருக்கு போறீங்க போல"

அவனின் தமிழை கேட்டதும் ஸ்ரீயின் புன்னகை பிரகாசமானது. "தமிழா?"

"முகத்துல பல்ப் பிரகாசமா எரியுது" என கிண்டல் செய்துவிட்டு,.. டெலிவரி கு தனியாவா போறேங்க, கூட யாரும் வரல?" என கேட்டான்.

"நானும் husbandஉம மட்டும் தான் லண்டன்ல இருக்கோம் சோ அவரால இப்போ லீவ் போட முடியலன்னு நான் மட்டும் தனியா போறேன். டெலிவரி ஆனதும் அவர் வந்துடுவார்." அறியாதவர்களிடம் சொல்லும்போதே குரல் தொய்வடைந்தது.

கர்ப்பிணி பெண் தனியாக 15 மணி நேரம் பயனிப்பதா என கேள்வி கேட்டு விடுவாரோ என பயந்து பேச்சை அவர் பக்கம் திசை திருப்பினாள் ஸ்ரீ. "நீங்க ஏன் UK போறீங்க?"

கையில் இருந்த குழந்தை நழுவ அவனை இறக்கிவிட்டுவிட்டு கையில் ஒரு பந்தையும் கொடுத்துவிட்டு மித்திரன் அவளருகில் உட்கார்ந்தான். குழந்தை பந்தை வாய்க்குள் திணிக்க முற்பட்டது.

"வேற என்ன, வேலை தான். கடல் தாண்டி திரவியம் தேடு என்பது நம்ம பழமொழி ஆச்சே." திடீரென குழந்தை அழ பந்தை அவனிடமிருந்து வாங்கி அவனை தூக்கி லாத்த தொடங்கினான் மித்திரன். தூக்கத்திலோ பந்தை சாப்பிட முடியவில்லை என துக்கத்திலோ குழந்தை விம்மத் துவங்கியது. அவள் முன்னாலேயே மித்திரன் குழந்தையை சமாதானப்படுத்த, அவளுக்குள் ஆயிரம் கனவுகள் தோன்றின. ஷ்ரவனும் இவ்வாறு தானே அழும் நமது குழந்தையையும் லாத்துவாரோ, தூங்கவைப்பாரோ? மனம் ஏங்கினாலும் மித்திரன் இடத்தில் ஷ்ரவனை கற்பனைப்படுத்தி பார்க்க முடியவில்லை மூளையால்.

மித்திரன் குழந்தையை லாத்திக்கொண்டிருந்தாலும் அவ்வப்போது இவளைப் பார்த்து புன்னகைத்தான், குழந்தையின் முதுகை தட்டிக்கொடுத்து கொண்டிருந்தான். இவனாக வந்து ஹாய் சொன்னது போல் ஷ்ரவன் யாரிடமும் போய் பேச மாட்டார், ஏன் பணத்தை இறைத்தாலும் கூட புன்னகையைக் அளவாய் செலவிடுவார். யோசித்து பார்த்தபோது ஷ்ரவன் குழந்தைகளுடன் உரையாடியதையோ விளையாடியதையோ ஸ்ரீ கண்டதில்லை. இவள் தன்னை மும்முரமாக ஏற்பாடுகளில் அர்பணித்துகொள்கையில் ஷ்ரவன் பெரிதாய் ஈடுபடவில்லை ஆனால் எதுவும் சொல்லாமல் கூட வந்தார். இப்போது டெலிவரிக்கு கூட இவ்வளவு தாமதமாய் வருவதும், துபாயில் இறங்கிவிட்டேன் என மெசேஜ் அனுப்பியதற்கு பதில் சொல்லாததும், இவள் துபாயில் இருப்பாள் என அறிந்தும் இவளின் பாதுகாப்பை பற்றி அதிகம் மெனக்கெடாமல் இவள் எப்படியும் சென்னை விமான நிலையத்துக்கு சென்றுவிடுவாள் என்ற எண்ணமும் அவனிடம் இருந்தது போல் தோன்றியது. பல முறை இவள் தனியாக சென்னை சென்றிருந்தாலும் இம்முறை சற்று முக்கியமானது என அவன் அறிந்திருப்பான். இருந்தும் அவனிடமிருந்து கிட்டாத அக்கறை இப்போது மித்திரன் தன் குழந்தை மேலும் தன் மேலும் பொழிவதைக் கண்டவுடன் ஷ்ரவனின் அலட்சியம் சற்று அதிகமாகவே தோன்றியது. இவளை தனியாக விடவேண்டாமென மித்திரன் இவள் முன்னாலேயே லாத்துவதும், பேச்சு கொடுப்பதுமாய் இவளுடனே குழந்தை தூங்கும்வரை நின்றார். பின் குழந்தை தூங்கியதும் ஒரு நிமிடம் என சிரித்துவிட்டு இவளிடமிருந்து நகர்ந்து சற்று தூரத்தில் அமர்ந்திருந்த ஒரு பெண்ணிடம் சென்று உரையாடிவிட்டு அவளிடமிருந்து ஒரு போர்வையை வாங்கினார். குழந்தையை அப்போர்வையில் சுற்றிய மித்திரன் குனிந்து அவளின் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு பின் திரும்பி ஸ்ரீ யை நோக்கி வந்தார். அப்பொழுதுதான் அவரின் மனைவியைப் பற்றி எதுவும் கேட்கவில்லையே என தோன்றியது.

போர்வையில் சுற்றியிருந்த அர்ஜூனுடன் இவளருகில் மித்திரன் அமர்ந்ததை ஸ்ரீ உணராமல் ஆச்சரியத்தில் ஸ்ரீ அவரின் மனைவியைப் பார்த்துக்கொண்டிருத்தாள். மித்திரன் முத்தமிட்டால் தூக்கம் வந்துவிடுமோ என்ன, அப்பெண் கன்னத்தை உள்ளங்கையில் கிடத்தி புன்னகையும் சாந்தமும் கலந்த எழிலாய் தோன்றினாள். இவளின் பார்வையை கண்ட மித்திரன், "தூங்குருவங்கள குறுகுறுன்னு பார்த்தா அவங்க முளிச்சிடுவாங்க" என இவள் பார்வையைத் திருப்பினான்.

"உங்க wife ஆ?"

"yea. ரெண்டு பேரும் flight ல தூங்கல, இந்த ஒருத்தன வச்சிட்டு நாங்க பட்ட பாடு எங்களுக்கு தான் தெரியும்." என சொல்லிவிட்டு அவனும் நாற்காலியில் சாய்ந்துக்கொண்டான். இவளிடம் அவன் பேச்சு கொடுத்துக் கொண்டிருந்தாலும் இவளுக்காக அவனின் சோர்வை வெளிக்காட்டிக் கொள்ளாதது இப்போது தான் புரிந்தது. தலை சாய்ந்த அவனை தொந்தரவு செய்ய விருப்பம் இன்றி ஸ்ரீ அமைதியானாள். வெளியில் அமைதியாக இருப்பினும் உள்ளுக்குள் மனம் இரைச்சலாக ஒலித்தது. போனை மீண்டும் நோட்டமிட்டாள். grey tick மட்டும் மங்கலாய் தெரிந்தது. குனித்து தன் நிறைமாத வயிற்றை நோக்கினாள். பார்வையோடு மனமும் தள்ளாடியது. பின் மனைவிக்கு பரிவாய் முத்தமிட்டு குழந்தையை தன்னோடு அணைத்துக் கொண்டு நாற்காலியில் சாய்ந்த மித்திரனை நோக்கினாள். எவ்வளவு பிடிவாதமாய் தன் மனதை கட்டாயப்படுத்தினாலும் இவளருகில் இருந்த மித்திரன் மட்டுமே தெரிந்தான் ஒழிய ஷ்ரவனின் முகம் தோன்றவில்லை. transit lounge இல் ஆங்காங்கே ஆட்கள் இருப்பினும், அருகிலேயே மித்திரன் இருப்பினும் தனித்து விடப்பட்டது போல் ஓர் உணர்வு. கூட வந்துர்கலாமே ஷ்ரவன்... இவள் வாய் விட்டு கேட்கவில்லை தான் இருந்தாலும் இவளின் உணர்வுகளைப் புரிந்துக்கொண்டு கூட வரவா என ஷ்ரவன் ஒரு முறை கேட்டிருக்கலாம்.  

இவளை கூர்ந்து கவனித்த மித்திரன் மௌனத்தை உடைத்தான், "ஆண்கள் வெளிக்காட்டிக்க மாட்டாங்க ஆனா அவங்க உள்ளயும் நிறைய எதிர்பார்ப்பும் சந்தோசமும் இருக்கு."

திடுக்க்கிட்டு ஶ்ரீ அவனைத் திரும்பி பார்த்தாள், "என்ன?"

"க்ளோஸ் பண்ணி ஓபன் பண்ணா மெசேஜ் ப்ளூ டிக் ஆகிடாதுன்னு சொன்னேன்."

"இல்ல வேற என்னமோ சொன்னீங்களே."

"எப்படி தெரியும்னுலாம் கேட்காதீங்க ஆனா ஊருக்கு போங்க அங்க கண்டிப்பா உங்க கணவர் கிட்ட இருந்து ஒரு சப்பிரைஸ் காத்திருக்கும். ஒரு hunch!" 

"அதுலாம் இருக்காது," என ஶ்ரீ சொன்னாலும் மனம் உற்சாகமடைந்தது. ஷ்ரவனின் மேல் இருந்த சின்ன கோபம் மென்மழையாய் பொழிந்து தீர்ந்தது. ஷ்ரவன் தனக்காக ஏதாவது ஏற்பாடு செய்திருப்பானா? இவர் சொல்வது போல் ஷ்ரவனுக்குள் நிறைய ஏக்கம் உண்டா? 


[என்ன இந்த chapter? புது கதையா? இல்ல, ரொம்ப வருஷம் முன்னாடி எழுதுனது. அழகியல் அப்டேட் பண்ணாததால சின்ன மன்னிப்பு கிப்ட் ஆ இது. புது மாப்பிள்ளை மாதிரி புது தகப்பன் ஹாஹா]

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top