இதுதான் காதல் என்பதா?!

என் உயிரே, ஆருயிரே!

அன்று பகன்றாய்::

நான் செல்லும் இடமெலாம் நிழலாய் எனைத்தொடர்வாய் என்று;
நான் அழகிய மலரென்றால் என் மணமாய் நீ இருப்பாய் என்று;
என் அதிகாலைப் பொழுதுகளில் குளிர் பனியாய் நீ சிலிர்ப்பாய் என்று;

இன்று புரிந்தேன்::

என் இருள் காலங்களில் நீ ஓடி ஒளிவாய் என்று;
நான் வாடி வதங்கியபின் நீ விட்டுச் செல்வாய் என்று;
சுட்டெரிக்கும் வெயில் வந்ததும் நீ ஆவியாய் மறைவாய் என்று;

நன்று தெளிந்தேன்::

நான் தஞ்சை கோபுரமாய் நிமிர்கின்றேன்,
என் நிழல் என் மீதே விழட்டும் என்று;
நான் காகிதப் பூவாய் சிரிக்கின்றேன்,
மணம் இல்லாவிடினும் வாடாமல் இருக்கின்றேன் என்று;
நான் சித்திரைக் காலையாய் மிளிர்கின்றேன்,
சிலிர்க்கும் பனி இல்லாவிடினும் புத்துணர்வோடு ஒளிர்கின்றேன் என்று;

சென்று வருகிறேன்,
என் உயிரே, ஆருயிரே!

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top