போட்டி 9 # 1 காதல் மாயம்

குழு அ (ஒரு பெண்ணின் கண்ணனோட்டத்தில்):

திருமணத்திற்கு முன்:

பிணக்கம்:

வட்ட நிலவு முகம்
வாழ்நாளெல்லாம் பார்த்திருப்பேன்!
உன் கொஞ்சு தமிழை
உயிருள்ளவரை கேட்டிருப்பேன்!
பூவிழியின் ஈர்ப்பில்
பூவுலகை மறந்திருப்பேன்!

கவி பாடி
காதலுரைத்த நீயோ - இன்று
என் கெஞ்சலைக் கூட
எடுத்துக் கொள்ளாததேனோ?
என்ன பிழை செய்துவிட்டேன்?
என்று நான் ஏங்குவதேனோ?

பூங்காவின் மரத்தடியில்
பூங்கொடி போல காத்திருக்கிறேன்...
காதல் என்றால்
கலகமா? கலக்கமா? நினைத்திருக்கிறேன்...
உருவம் கானல்நீராக
உன் வழியை எதிர்நோக்கிப் பார்த்திருக்கிறேன்...

வாடிவாசல் வழி வந்த காளை போல
வாகனத்தை உதறி வந்தாய்.
எள்ளும் கொள்ளும் முகத்தில் வெடிக்க,
என் குலைநடுங்கச்செய்தாய்.
துள்ளி எழுந்து மரத்தை
தூணாய்த் துணை கொள்ளச்செய்தாய்.

ஒவ்வொரு சொல்லும்
ஓங்கி அடித்தார் போல் உள்ளதடா!
அடித்ததால் கூட
ஆறுதலாய் இருக்குமடா!
காடுஞ்ச்சொற்கள் வீசியது நீ,
கரைத்துவிட்டது என்னவோ என் உயிர்தானடா!

துணையாய் பற்றிய மரமே
துடித்துவிட்டது போலும்...
சிலிர்த்துக்கொண்டிருந்தது
சிலையாய் சமைந்துவிட்டது.
நிலையை உணர்ந்தார் போல்
நிலைகுலைந்துவிட்டது!

புயலில் சிக்கிய
பூங்கொடியாய் நின்ற என்னைக் கண்டனன்.
கண்கள் ம்ரிதுவாக - என்
கைகளைப் பற்றினன்.
கவலை கொள்ளாதே... தத்தளித்தாலும்
கலங்கரை விளக்கை கண்டுகொள்வேன் என்றனன்.

சந்தோஷ சாயலிலே,
சாரலில் ஆடும் மயிலானோம்.
கைகோர்த்துக் கொண்டு மீண்டும்
காதலர்களாய் பிரதிபலித்தோம்.
காதலை நிலைநாட்டிய
கர்வத்தில் மகிழ்ச்சியில் திரும்பினோம், காதலர்களாக....

மற்றுமொரு பிணக்கத்தைத் தழுவும் வரை....

திருமணத்திற்குப் பின்:

ஆருயிரே!

மணப்பந்ததில், டேய் அடேய் என்றது
மாறிப் போனதே!
மரியாதையும் மதிப்புமாய்
மண்வாசனை வீசியதே!
கல் என்றாலும் கணவன் -
கல்நெஞ்சில் கூட ஊடுருவியதே!

மாமன் அத்தை என்ற
மரியாதை உறவுகள் சேர்ந்ததே...
நானாவித உறவுகள்
நன்னெறியில் வந்து குழுமியதே.
யார் வந்தாலும் சென்றாலும்
யாவரும் போற்றும் பந்தம் நமதே!

காதலில் ஏற்பட்ட
காயங்கள் கல்யாணத்தால் கலைந்ததே!
மறைந்துவிட்ட அந்த அன்பை
மெருகேற்றி வெளிக்கொணர்ந்ததே!
இதுதான் டீ உண்மையான காதலென
இன்பமாய் என் மனம் ஒலிக்கின்றதே!

போட்ட சண்டைகள் இடம்தெரியாமல்
பொடியாய் போன மாயமேனோ?
காதலென்றால் கலகம்,
கல்யாணமென்றால் வாழ்வு தானோ?
இனிதாய் இன்பமாய் ஆசையாய்
இல்லறம் - அவன் என் தவத்தின் பலன்தானோ?

_______________________________________________________

குழு க (ஒரு ஆணின் கண்ணனோட்டத்தில்):

தி௫மணத்திற்க்கு முன்:

என் கனவுக் காதலியே,
காற்றில் அலைபாயும் உந்தன் கூந்தல்,
விரல்கள் விளையாடும் பொன்னூஞ்சல்.
ஓவியத்தில் தீட்டிய வண்ணம்
-நெற்றியின் திலகு,
காவியத்தில் பாடிய கவிதை
-என்னவளின் அழகு.
என் காதல் அஞ்சலை நீ அன்பே!
உன் அழுகை கெஞ்சலைப் பார்த்து
இரத்த நாளங்கள் நெஞ்சில் அறுந்ததில்
செவி சாய்க்க மறந்தேனடி...

பூங்கா மத்தியில் பூக்கதம்பம் நீ அழகே!
ஆன்மாவுடன் விவாதம் நடத்திய நீ,
காதல் ஒரு காப்பியம்
என்பதை மறந்ததேனடி...

நரம்புகள் முறுக்கேறி உன்
மணிக்கட்டை பிடித்தேன்,
நொறுங்கியதென்னவோ உன்
வலையல்கள் தான்,
உடைந்ததோ என் ஜீவன் கண்ணே!..

என் உதடுகள் உதிர்த்த சொற்கள்
கண்ணில் உதிரத்தை தேக்கியது.
சுருங்கிய உன் ரோஜா முகத்தில்
குழப்ப ரேகைகள் படர்ந்தது.
கோரச் செயலால் மணதொடிந்து என்னை நானே வருத்திக்
கொண்டதை அறிவாயோ உயிரே!

ஆணவப்போட்டியில் தோற்றுப்போய்
குழந்தையாய் மடி சாய்ந்தேனடி..
உன்  கபடமற்ற பாசறையில்
என்னை அடைத்து சாய்த்தாயடி...

ஆசை ரீங்காரம் பாடிய வண்டுகளாய்
பூஞ்சோலையில் பறந்தோம்,
காதல் தேனை ருசிக்க
பூவுலகில் அலைவோமா?

இனி ஒரு பிணக்கம் தழுவாதபடி...

தி௫மணத்திற்க்குப் பின்:

என் காதல் கனவே,
பாதம் பற்றி மெட்டியிட்ட கணமே,
தாவி வந்து ஒட்டிக்கொண்டது மனமே,
எனை அறியாமல் விட்டுச்சென்றது சினமே.

"என்னங்க" என நீ சினுங்கும்
ஒற்றை வார்த்தை!
அதனுள் அடங்கும்
ஆயிரம் அர்த்தங்கள்
அறிந்தவன் நானே
உன் தாயுமானவன்...

நம் வீட்டுத் தூனிலும்
உன் பெண்மை வீசும்,
என் சட்டைத் துணியிலும்
கூட சேலை வாசம்,
அறைக் கட்டில் நுனியும்
நம் காதல் பேசும்.

தாய் வீட்டு விசேஷம்
சென்று வர வேண்டி
பாத்திரத்துடன் கூச்சலிட்டாய் ,
வேலைப்பழுவினால் தனியே
சென்று வா என்று
ஆத்திரத்துடன் கடிந்துகொண்டேன்.

உன் கொலுசின் ஓசை இல்லா
தடங்கள் தனிமை பேசியது,
உன் குறளின் இசை இல்லா
இடங்கள் வெறுமை பூசியது.

மறுநாளோ! உன் விரல் இடுக்கில்
என் விரல் கோர்க்க,
சாதித்தவனாய் வலம் வந்தேன்
உன் ஊர் தேர்த்திருவிழாவில்...

நீ என் உயிரோடு மட்டும்
கலக்கவில்லை பெண்ணே!
ஒவ்வொன்றிலும் நிறைந்து
பிண்ணியிருக்கிறாய்..

இராத்திரி சண்டைக்கு
விடியல் கொடுக்காத மாயம்,
கோபம் சாம்பலாகி
இடையில் தொலைந்தது காயம்.

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கபடுகிறது
சொர்க்கமே  என்னை நிச்சயித்துவிட்ட
நீ என்றும் என் பூலோகத்து மகாராணியே!


Bạn đang đọc truyện trên: AzTruyen.Top