போட்டி 7 # 1 - வீரமும் ஈரமும்

ஆயிரம் வீரர்கள் மத்தியிலே
கம்பீரமாய் நடந்து வந்தான் ஒரு மாவீரன்..

படையாக நின்ற போதும் 
அவன் ஒருவனின் முரட்டு தோற்றமே  மிரள செய்தது..

கூர்மையான தன் கண்களை சுழற்றி  
நேர் கொண்ட பார்வையால் சுற்றத்தை அளந்தான்..

நீண்டு வளர்ந்த அவனது கூரான கொம்புகளோ..
நான் கொம்பனடா..  
என்னிடம் வந்து உன் வீரத்தை காட்டடா..
என்று சவால் விட்டது..

 அடக்குகிறேன் உன் கொட்டத்தையென்று 
பாய்ந்தோடினான் ஒரு வீரன்..
ஒரே முட்டில் தூக்கியடித்தது அவனை..

அந்த கர்வத்துடன்..
அஞ்சா நெஞ்சர்களே..!
 அடக்குங்கள் என்னை.. என்று சீறி பாய்கிறான்..

பிடியுங்கள் அவனை.. என்று 
ஆயிரம் வீரர்களும் பலத்தை காட்டுகின்றனர்..

ஓடிய வேகத்தில்.. ஒவ்வொருவராய் மண்ணில் வீழீகின்றனர்..

கொம்பனுக்கும் கொம்பன்..
 இறங்குகிறான் களத்தில்..

நேருக்கு நேர் நின்று பார்க்கிறான் மாவீரனை..
தன்மேல் பாய்ந்ததும் அவனை விசிறியடிக்க..
திட்டம் தீட்டுகிறான் மாவீரன்..

ஒரே தாவில் மாவீரனின் முதுகை பிடித்தான்..
கொடாக்கண்டனை காட்டிலும் விடாக்கண்டனாய் பிடியை தளர்த்தாமல்
நீடிக்க துடிக்கிறான்..

அவனது வீரத்தை மெச்சி.. 
விட்டு கொடுக்கிறான் மாவீரன்..
வெற்றி வாகை சூடினான்,
கொம்பனுக்கு கொம்பன்..

அங்கே ஒன்றிணைந்தது தமிழனின் வீரமும்..
அவனை நேசிக்கும் மாவீரனின் 
நெஞ்சின் ஈரமும்..

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top