போட்டி 6 # 6 - மழை பொழிந்த மாலை நேரம்

இதமான மாலை நேரம். நில்லாமல் ஓடும் வாகனங்கள், பளிச்சிடும் பல மின்விளக்குகள் இரவிற்கு வண்ணம் சேர்த்தது, அந்த ஊரில். அங்கு நிலவிய அமைதியான சூழலை கலைக்கும் வண்ணம், மேகங்கள் கருத்தது. வானில் மேளங்கள் கொட்டின. காத்து பலமாய் வீச, சல்லி மரமெல்லாம் சல சலக்க, மழை பொழிய ஆரம்பித்தது.
அனைவரும் பாதுகாப்பான இடங்களை நோக்கி ஓடினார்கள். ஆனால், இந்த கூச்சலுக்கு இடையில் இரு ஜீவன்கள், மிகப்பெரிய ஒரு மண் கொப்பரையில் சிக்கி இருந்தன.
இருவரும் செய்வதறியாது, பாவமாய் அமர்ந்திருந்தன. யாரேனும் தங்களைக் காப்பாற்ற மாட்டார்களா என்ற எதிர்ப்பார்ப்பில் “காப்பாற்றுங்கள்!” என்று கூச்சலிட்டனர். பாவம்! எவரும் செவி சாய்க்கவில்லை அவர்களின் கூக்குரலுக்கு.
“இதிலிருந்து வெளியேற வழி ஏதும் இல்லையா?” வினவினாள் சிண்டு.
“இதற்கு வழி நாம் தான் கண்டுபிடிக்க வேண்டும். முடிந்தவரை விரைவாக இங்கிருந்து தப்பிக்க வேண்டும்,” என்றான் பப்பு.
பெய்யும் அடைமழை, அவர்கள் சிக்கியிருந்த கொப்பரையின் கூரையில் விழுந்து முரசுக் கொட்டும் சப்தம் போல் ஒலி எழுப்பியது. கூரையில் தேங்கி இருந்த மழைநீர் அதிலிருந்த சிறு துவாரத்தின் வழியே, சொட்டுச் சொட்டாய் கொப்பரையினுள் விழுந்தது.
அதைக் கண்ட சிண்டு, “அய்யோ கடவுளே! இந்த நேரத்தில் இப்படி ஒரு சோதனையா!,” என்று வருந்தினாள்.
“புலம்பாதே சிண்டு. நாம் இருவரும் சேர்ந்து இதை உடைக்க முயற்சிப்போம்,” என்றான் பப்பு.
தங்கள் சக்தி அனைத்தையும் கொண்டு அந்தக் கொப்பரையை மோதினார்கள். சோர்ந்து போகும் வரை அடித்துக் கொண்டே இருந்தார்கள். ஆனால், அவர்களால் ஒரு சிறு விரிசலைக் கூட உருவாக்க முடியவில்லை. அதற்குள் மழைநீர் அவர்களின் கால்கள் வரை சேர்ந்தது.
துவண்டு போன சிண்டு, “எனக்கு என்னவோ நாம் உயிர் பிழைப்போம் என்ற நம்பிக்கை இல்லை,” என்றாள்.
“நம்பிக்கையை என்றும் கைவிட்டு விடாதே. நாம் நிச்சயமாக இந்த இருண்ட கொப்பரையிலிருந்து வெளியேறி விடுவோம்,” என்று உறுதியுடன் கூறினான் பப்பு.
“எவ்வாறு அது சாத்தியமாகும்? மழை விடாமல் பொழிகிறது. அது மட்டுமில்லாமல், இந்த துவாரத்தின் வழியே மழைநீர் வேற விழுகிறது. ச்சே! நான் இனி மழையை என்றும் விரும்ப மாட்டேன்!” என்றாள் சிண்டு.
“வா இம்முறை இன்னும் வேகமாய் முயற்ச்சிப்போம்,” என்றான் பப்பு.
தமது பலம் அனைத்தும் ஒன்றிணைத்து மீண்டும் ஒரு முறை முயற்சித்தார்கள். பரிதாபம்! இம்முறையும் காற்று அவர்கள் பக்கம் வீசவில்லை. வெளியே, மழையின் வேகமோ, நேரம் கடக்க கடக்க அதிகரித்தது.
அவர்களை காப்பாற்றவும் ஒருவரும் அருகில் இல்லை. தன்னந்தனியாய் அந்த இருளில், வானளவு உயர்ந்த கட்டிடங்களின் நடைப்பாதை சுவரில், இருந்தது அந்தக் கொப்பரை மட்டுமே!  
இவ்வளவு நடந்த பின்னும் வழி ஏதும் கிடைக்காததால், பப்புவும் தன் பொறுமையை இழந்தான். சிண்டுவைக் கண்டு முறைத்தான்.
“எல்லாம் உன்னால் வந்த வினை. நான் அப்பொழுதே உன்னிடம் சொன்னேன் இதற்குள் செல்லவேண்டாமென்று. இங்கு உறங்கினால் யாரும் நம்மை தொந்தரவு செய்ய மாட்டார்கள், இங்கேயே ஓய்வெடுப்போம் என்று சொல் பேச்சு கேட்காமல் வந்தாய். பார் இப்போது எப்படி மாட்டிக் கொண்டோம்,” என்று கோபித்துக் கொண்டான் பப்பு.
“அந்த பெண் கொப்பரையை மூடுவாள் என்பது எனக்கு எப்படி தெரியும்? உனக்கு பிடிக்கவில்லை என்றால், உன்னை யார் என்னுடன் வர சொன்னார்கள்? நீ வேறு எங்கேயாவது சென்றிருக்க வேண்டும்,” அதே கோபத்துடன் பதிலளித்தால் சிண்டு.
“உயிர் காப்பான் தோழன் என்பதை மறந்து விட்டாயா? என் தோழியை விட்டு நான் எப்போது தனியாக சென்று இருக்கிறேன்?” என்றான் சிண்டு.
“இதைச் சொல்லி என்னை மயக்கிவிடு எப்பொழுதும்,” என்று முனுமுனுத்தாள் சிண்டு.
“இப்பொழுது என்ன செய்வது? தண்ணீர் பாதிவரை நிரம்பிவிட்டது,” கவலையுடன் கேட்டான் பப்பு.
“உயிர் காப்பான் தோழன் என்றாயே, இப்போ காப்பாத்து,” என்றாள் சிண்டு.
அவள் அதை சொன்ன மறுநொடி, காற்றின் வேகம் அதிகரித்து, மழையின் சீற்றமும் அதிகரித்தது. பாதி நிறைந்த கொப்பரை காற்றின் வேகத்தால், முன்னும் பின்னும் அசைந்தது.
மிரண்டுபோன சிண்டுவும் பப்புவும் ஒருவரை ஒருவர் கெட்டியமாக பிடித்துக் கொண்டனர். இன்று இதுவே இவர்களுக்கு இறுதி நொடி என்ற முடிவிற்கு வந்தார்கள்.
காற்றின் வேகத்தாலும், உள்ளிருந்த தண்ணீரின் அசைவாலும் அந்தக் கொப்பரை நிலைக்குலைந்து, கீழே விழுந்து நொறுங்கியது. இதுதான் தமக்கு கிடைத்த சந்தர்ப்பம் என்று அந்த இரு வெட்டிக்கிளிகளும் அங்கிருந்து குதித்து பறந்தோடினர்.
“நான் சொன்னேன் அல்லவா, நம்பிக்கையை இழக்காதே என்று,” என்றான் பப்பு.
“சரி. சரி. என்னை மன்னித்து விடுங்கள், சுவாமிகளே! இனி உங்கள் சொல்லை மீறமாட்டேன்! மழையே இனி உன்னை ஒரு நாளும் வெறுக்க மாட்டேன்,” என்று கேலியாய் கூறினாள் சிண்டு.
பின், இருவரும் சிரித்துக்கொண்டே தன் வீட்டிற்கு சென்றார்கள்.
     
                 *****சுபம்*****

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top