போட்டி#3. 8 - பேரழிவு

"கொஞ்சம் வழி விடுங்க!" என ஒரு குரலைக் கொடுத்த அவன் அந்த விஞ்ஞானிகள் கூடி இருந்த கூட்டத்தினிடையே புகுந்தபடி நடக்கலானான். அவன் நடக்கும் போது எழும் சத்தத்தை கேட்டதுமே அந்த விஞ்ஞானிகளின் கூட்டம் இது அவன் தான் என்பதை அறியாமல் இல்லை. விஞ்ஞானிகள் என இங்கு சொன்னது தற்காலத்தில் விஞ்ஞானிகளாக சாதனை புரிபவர்களை அல்ல.. கூடிய விரைவிலேயே தங்கள் சாதனைகளை உலகுக்கு முன் வைத்து எதிர்காலத்தில் விஞ்ஞானிகளாக பெயர் பதிக்க காத்திருப்பவர்கள். அவர்கள் ஒவ்வொருவரும் அவரவர் அறைகளினுள் தம் கண்டுபிடுப்புகளை நடாத்திப் பார்க்க அலை மோதிய நேரம் அது.

வெள்ளை நிற சுவர்கள் நான்கு புறமும் சூழ்ந்த ஓர் நீண்ட வழி நடுவே நடந்து சென்றான் அவன். அந்த கட்டடத்தில் இருந்த ஒரு ஜன்னல் வழியாக வந்த காற்று அவனுடைய கருமை பொருந்திய தலைமுடியை அசைத்தபடி கடந்து சென்றது. தன் அறையின் வாசலை அடைந்த அவன் இது அவனுடைய அறைதானா என ஒருமுறைக்கு இருமுறை சரிபார்த்துக் கொண்டான். கதவை மெல்லத் திறந்து உள்ளே சென்ற அவன் அறையின் கதவை மூடிக்கொண்டான்.

வெள்ளை நிற சுவர்களை கொண்டிருந்த அவனது அறை பெரியதாக இல்லை என்றாலும் மிக சிறியதும் அல்ல. விஞ்ஞானி ஒருவரின் அறையினுள் இருக்க வேண்டிய சகல பதார்த்தங்களும் இரசாயன சோதனைக் குழாய்களும் அழகாக சுவரோரமாக இருந்த இரும்பு மேசையில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. அவன் தானே உருவாக்கிய சில இரசாயன கலவைகளும் அங்கு ஒரு இடத்தைப் பெற்றிருந்தன. அவை அனைத்தையும் அவன் விட்டுட்டு அவன் தன் முன் இருந்த ஆய்வு மேசையில் இருந்த அதனையே பார்த்தான்.

அதனைப் பார்த்ததும் அவனுக்குத் தோன்றியதோ இது சரி தான் என்பதே. "ஆனால் சரியில்லை என்று என் மனம் கூறுகிறதே.. இது சரி தானா??" என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்டான். அவனுக்குள் அவனை ஆட்சி செய்து கொண்டு இருந்த ஆர்வம் அவனுக்கு தைரியம் ஊட்டினாலும் ஏதோ ஒரு மூலையில் அவனுக்குள் பயம் இருக்கத்தான் செய்தது.

அவன் தன்னுடைய நீல நிற கண்களை மெல்ல உயர்த்தி அவனுடைய கண்டுபிடிப்பை ஒரு சில நொடிகள் உற்றுனோக்கினான். அதனைப் பார்க்கும்போதெல்லாம் அதனை செயல்படுத்தியே ஆகவேண்டும் என அவன் மனம் உள்ளே குதித்தெழும். "இது சரிதான்!" அவன் இறுதியாக தன் முடிவு வழி புகுந்துகொண்டான்.

ஒவ்வொரு அடியாக எண்ணி எண்ணி எடுத்து வைத்தான். அவனுடைய இதயம் படபடத்தது. கால்கள் இரண்டும் நடுங்கின. இருந்தாலும் அவன் காத்திருந்த இந்த நொடியை எப்படி விட்டுக்கொடுப்பான்?

தன் மனதை திடப்படுத்திக் கொண்டவனாய் அவன் மெல்ல தனது கையை அதனை நோக்கிச் செலுத்தினான். காண்பவர்களை பயத்தில் நடுநடுங்கச் செய்யும் அவனது அந்த கண்டுபிடிப்பை பற்றி இதுவரை யாரும் அறிந்து இருக்க மாட்டார்கள். அதனை காட்டவேண்டிய முறையில் காட்டினால் தான் மற்றவர்கள் நம்புவார்கள். இல்லை என்றால் அனைவரும் வழக்கம் போல விஞ்ஞானிகளே பொய்யர்கள் என்பார்கள்.

அவன் இதனால் ஏற்படப் போகும் விபரீதத்தை விட இதனால் என்ன நன்மை கிடைக்கும் என்பதை அறியவே ஆர்வம் கொண்டான். அதற்காக இதனால் ஏற்பட உள்ள பிரச்சனைகள் பற்றி அவன் சிந்திக்கவும் இல்லை; அதற்காக செயல்படவும் இல்லை!

இதற்கு மேலும் அது என்னவென்பதை அறியாமல் கதையைத் தொடர முடியாது..

அது பார்ப்பதற்கு வேண்டுமானால் ஒரு சிறிய சாதாரண பூச்சியைப் போல தோன்றலாம். சாதாரணமானவர்கள் அதனை அப்படியே எண்ணுவார்கள். ஆனால் அது ஒரு வேற்றுக்கிரக இனத்தைச் சேர்ந்தது என்பது அவன் மட்டுமே அறிந்த உண்மை. தனது கடந்த கண்டுபிடிப்பு தோற்றுப்போன வேதனையில் மனம் துவண்டு போய் வீதி ஓரமாக நடந்து சென்ற வேளையிலேயே அவன் இந்த அசாதாரண பொருளைக் கண்டெடுத்தான். இருந்தாலும் இது வேற்றுக்கிரக இனத்தைச் சேர்ந்தது என்பதை எப்படி உறுதிப்படுத்த முடியும் என கேட்கும் மனங்களுக்கு ஒரே ஒரு பதில்! அது அவன் கண்ட திகில்! இதுவரையில் வெறும் வாய்ப்பேச்சாக இருந்த ஒன்று தான் வேற்றுக்கிரக பறக்கும் தட்டுக்கள். அந்த வெறும் வாய்ப்பேச்சை தனது கண்களால் கண்ட நொடிகள் அவை! அவன் கண்டெடுத்த அந்த பொருள் அதிலிருந்துதான் விழுந்தது என்பதை அவன் நன்கு அறிவான்.

அது பார்ப்பதற்கு சாதாரண சிலந்தி போன்றிருக்கும். ஆனால் அது சிலந்தி அல்ல. அதன் உடலில் பதிந்திருந்த ஒருவகையான அடையாளம் அவனுக்கு அது மேலும் எங்கிருந்து வந்தது என்பதை நிச்சயிக்க உதவியது. வீதியோரமாக கிடந்த அதை கண்டெடுத்த போது உடைந்து கிடந்த அதனை சரி செய்ய அவன் பெரும் பாடுபட்டான். அதன் ஒவ்வொரு நுணுக்கமான பாகத்தையும் பொருத்த பெரிதும் கஷ்டப்பட்டான். மனம் தளராது அதனை இயலுமான வரை ஒன்று சேர்த்து விட்ட அவன் அதனை செயல்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தை மனதில் நிர்ணயித்திருந்தான். இன்று அதற்கான நேரம் வந்துவிட்டது.

அந்த சிறிய சிலந்தியை நோக்கி அவன் தனது வலது கரத்தை மெது மெதுவாக நோக்கினான். அந்த பூச்சியின் ஒரு பக்கத்தில் அவன் சரி செய்து இருந்த சிறிய சிவப்பு நிற அழுத்தியை தனது ஆட்காட்டி விரலைக் கொண்டு தொட்டான். அவ்வளவு தான்!

"க்க்ர்ர்ர்........" என்ற இறைச்சலுடன் கூடிய சப்தத்தை அது பிறப்பிக்க ஆரம்பித்தது. ஆரம்பத்தில் இரைச்சல் போல் கேட்ட ஒலி பின்னர் ஒரு பாஷை போன்ற வடிவைப் பெற்றது. ஆனால் இவனுக்கு அது என்ன சொல்கிறது என புரியவில்லை என்பது உண்மையே! அவனுக்கு இதனை தடுப்பதா இல்லையா என்று தெரியாமல் விழித்துக் கொண்டு அசையாது நின்றான்.

"எதுவானாலும் சரி! இதனை உலகுக்கு அறிமுகப்படுத்தி விஞ்ஞான பட்டம் வாங்காமல் நான் விடப்போவதில்லை." என தனக்குத் தானே கூறிக் கொண்டு அதன் மாற்றத்தை கவனமாக அவதானித்தான்.

சின்னஞ்சிறியதாய் இருந்த அந்த சிலந்தி உருவம் சற்று வளர்ந்திருந்ததனை அவன் அப்போது தான் அவதானித்தான். அது வெட்டுக்கிளி ஒன்றின் அளவுக்கு இப்போது வளர்ந்திருந்தது. அதனுடன் நிற்காமல் அதன் வளர்ச்சி படிப்படியாக வளர்ந்தது. இதனைக் கண்டு அதிர்ந்து போனான் அவன். அதன் வளர்ச்சியோ அசாதாரண நிலையை அடைந்து கொண்டு போவதனை அவன் அவதானிக்காமல் இல்லை.

அடுத்து என்ன செய்வது என்று எதுவும் அவனுக்கு புரியவில்லை. அவன் எதிர்பார்த்ததை விட மிக மோசமான நிலையை அது அடைந்தது. கிட்டத்தட்ட ஒரு பசு மாட்டை விட பெரியதாக மாறி விட்டது.

இந்த பூச்சி படிப்படியாக வளர ஆரம்பித்ததால் அதன் கால்களுக்கே நாலாப்புறமாக இருந்த சுவர்களுக்கும் அப்பால் இடமும் தேவைப்படுமோ என்ற அச்சம் அவனுக்குள் பீறிட்டு எழுந்தது. ஆனால் கூடிய சீக்கிரமாகவே அது தணிந்து போனது. அதன் வளர்ச்சி முற்றுப் பெற்றதைக் கண்ட அவன் பெருமூச்சு விட்டபடி அதனை ஒரு தடவை நிமிர்ந்து பார்த்தான். அதன் காலடியில் அவன் யானைக்கு அருகில் எறும்பு நின்றதைப் போல காணப்பட்டான்.

அது அந்த இடத்தை விட்டு வெளியேறுவதற்காக சுற்றும் முற்றும் திரும்பிப் பார்த்தது. ஆனால் அதற்கு வாசலைக் கண்டுகொள்ள முடியவில்லை. எனவே அது தனது எண்ணிக்கையில் அடங்காத கால்களை கொண்டு வெளியே செல்ல முயற்சித்த வேளை அது பிரயோசனமற்றது என்பதை அறிந்து திடீரென அதற்கு முளைத்த இறக்கைகளை விரித்து அடிக்க ஆரம்பித்தது.

திடீரென அந்த கட்டடத்தின் கூரைகள் ஆங்காங்கே பறக்க அவனுக்காக கூரைக்கு மேலே காத்திருந்த அதிசயம் கூரையை உடைத்துக் கொண்டு உள்ளே வருகையில் அவனுக்கு மேலும் தலையை உயர்த்தி என்ன நடக்கிறது என பார்க்க முடியாத சந்தர்ப்பம் அது. நடப்பவற்றை தடுக்க முடியாத அவன் அங்கிருந்த ஒரு இரும்பு மேசையின் கீழ் பயந்து போய் அமர்ந்துகொண்டான்.

அப்போது தான் ஏதோ விழுந்து உடைந்ததை போல சத்தம் கேட்டது. உடனே என்னவென்ற பதற்றம் பொங்க ஒருமுறை அவன் தன் அறையை கண்களால் சுற்றி நோட்டமிட்டான். சகல இரசாயன பதார்த்தங்கள் அடங்கிய அனைத்து சோதனைக் குழாய்களும் நொருங்க ஏதோ ஒரு வெளிச்சம் அந்த பூச்சி நின்று கொண்டு இருந்த இடத்தில் தென்பட்டதனைக் கண்டு மிகவும் பதறிப்போனான்.

அதனைத்தொடர்ந்து அந்த அறை சிவப்பு நிறமாக மாறியது, பின் மஞ்சள் நிறமானது!

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top