போட்டி#3. 3 - முதல் இருவர்



சிவந்த நீரோட்டம், கருத்து விரிந்த வானம். எங்கு பார்த்தாலும் மஞ்சளும் நீலமுமாய் காணப்பட்ட வயல் வெலிகள். வெள்ளை நிற மணலில் அழகிய சிவப்பு பெருங்கடலை ரசித்தவண்ணம் அமர்ந்திருந்தாள் ஹீரா. ஆழ்ந்த சிந்தனையில் இருந்தவளை உலுக்கினான் ஜூனோ.


"என்ன யோசனையில் உள்ளாய்?" எனக் கேட்டான் ஜூனோ.


"என்னால் இயலாது என்று ஏன் அனைவரும் நினைக்கிறார்கள்? ஏன் என் மீது நம்பிக்கை கொள்ளாமல் பேசுகிறார்கள்? நான் அவ்வளவு வலிமையற்றவளா? இல்லை நான் அறிவிலியா?" என்று தன் மனதில் எழுந்த கேள்விகளை உதிர்த்தாள் ஹீரா.


"உன்னை நீ தாழ்வாக எண்ணாதே. உன்னால் எதை வேண்டுமானாலும் செய்து முடிக்க இயலும். மனதில் உறுதிக் கொள்," என நம்பிக்கை ஊட்டினான் ஜூனோ.


"நான் சொல்வதில் உனக்கு நம்பிக்கை உள்ளதா? இது நடக்கும் என்று நீ நம்புகிறாயா?" என்று வினவினாள்.


"நிச்சயமாக. அதை நீ வெற்றிகரமாக செய்து முடிப்பாய் என்ற நம்பிக்கையும் எனக்கு உள்ளது. உனக்கு தேவையான அனைத்து உதவிகளையும் நான் செய்கிறேன். வா என்னுடன்," எனக் கூறி அவளை பின் தொடர சொன்னான்.


"ஆனால்..." என்று பேசத் தொடங்கியவளின் வாயை அடைத்து இழுத்துச் சென்றான் ஜூனோ.


அது ஒரு தனிமைப்படுத்தப் பட்ட இடம். அவளின் ஆராய்ச்சிக்கு தகுந்த இடமாக இது இருக்கும் என்று அவள் மனம் கூறியது. ஜூனோ அந்த அறையின் கதவை திறந்தான்.


அந்த அறையில் நுழைந்ததும் அவனுக்குத் தோன்றியதோ இது சரி தான் என்பதே. "ஆனால், இது சரி இல்லை என்று என் மனம் கூறுகிறதே? இது சரி தானா?" என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டான்.


தோன்றிய சந்தேகங்களை அகற்றி எல்லாம் சரி தான். நன்மையிலே முடியும் என்று நினைத்துக் கொண்டு அறையின் விளக்குகளை ஏற்றினான். அந்த அறையின் சகல வசதிகளும், நவீன இயந்திரங்களும் இருப்பதைக் கண்டு ஹீராவின் இதயம் ஆனந்தத்தில் துள்ளிக்குதித்தது.


"இவை அனைத்தும் உனக்கு உதவும். இந்த அறையில் நீ உன்னுடைய ஆராச்சியை துவங்கலாம். எந்த இடையூறும் வராது. வெளியில் யாருக்கும் இது தெரியவும் தெரியாது," என்றான் ஜூனோ.


ஹீராவின் மனதிலோ பல கேள்விகள். இவ்விடம் இருப்பது ஏன் இவ்வளவு நாட்கள் ஜூனோ அவளிடம் சொல்லவில்லை? இந்த இயந்திரங்கள் எல்லாம் எப்படி இவனுக்கு கிடைத்தது? ஏன் இவ்விடம் யாருக்கும் தெரியாமல் இரகசியமாய் வைத்துள்ளார்கள்?


அவள் கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தான் ஜூனோ. "உன் மனதில் உள்ள கேள்விகளுக்கு நான் பிறகு விடை அளிக்கிறேன். முதலில் கால தாமதம் செய்யாமல், துவங்கு உன் ஆராச்சியை.


ஹீரா முதலில் தான் எழுதிய அனைத்து குறிப்புகளையும் எடுத்து வந்தாள். தேவையான அமிலங்கள், கருவிகள் அனைத்தையும் தயார் செய்தாள். சிசு வளர தக்க சூழ்நிலைகளை இரு கண்ணாடி உருளையினுள் ஏற்பாடு செய்தாள்.


சிசு ஒன்று உருவாவதற்கு தேவையான உடலுக்குரிய செல்லை தன் உடலிலிருந்தும், ஜூனோ உடலிலிருந்தும் எடுத்து, அன்னையின் கருப்பை போன்ற சூழலை உருவாக்கி, அதனுள் செழுத்தினாள். அந்த சிசு வளரும் இயக்கங்களை கணினித் திரையில் கண்காணித்து வந்தாள்.


அவ்வப்போது தேவையான போஷாக்குகளை அளித்து வந்தாள். ஜூனோ ஹீராவை அவள் போக்கில் விட்டான். அவளின் பாதுகாப்பை கண்காணித்துக் கொண்டிருந்தான். பல மாதங்கள் சென்றன. மாதங்கள் வருடங்களாயின. அவளின் அராச்சியும் வெற்றிகரமாக முடியும் நாள் வந்தது.


சிசுக்கள் இரண்டும் ஆரோக்கியமான மனிதர்களாய் உருவெடுத்தன. இருவரும் நண்பர்களான ஜூனோ, ஹீராவைப் போலவே இருந்தார்கள்.


"இவர்களை இங்கே நம்முடனே வைத்திருக்க இயலாது. இவர்களுக்கு இங்கே பாதுகாப்பு இல்லை," என்று ஜூனோ பெரும் அதிர்ச்சியை ஹீராவிற்கு கொடுத்தான்.


அவள் ஏதும் கூறும் நிலையில் இல்லை என்பதை அறிந்து தானே தொடர்ந்தான், "நான் ஒரு கிரகம் கண்டு பிடித்துள்ளேன். அதில் இவர்கள் வளர ஏற்ற சூழல் இருக்கிறது. அங்கு இவர்களை நாம் விட்டு விடலாம். என்று நம் ஆட்கள் உன்னை புரிந்துக் கொண்டு, உன் ஆராய்ச்சியை நல்ல முறையில் உபயோகிக்கிறார்களோ, அன்று இவர்களை நாம் மீண்டும் சந்திப்போம்."


ஹீராவின் கண்ணில் கண்ணீர் புரண்டோடியது. நண்பர்களான இருவரும் விண்தட்டில் ஏறி அந்த கிரகத்தை நோக்கி பயணித்தார்கள். அது தரை இறங்கியது ஒரு அற்புதமான இடத்தில்.


வானம் எங்கும் நீல நிறம். அதை பிரதிபலிதுக் காட்டும் வகையில் பூமியில் அமைந்து இருந்தது நீல பெருங்கடல். திரும்பும் திசையெங்கும் பச்சை பசேலென்ற காடுகள். பல வண்ணப் பூக்களும், பல வகை கனிகளும் இருந்தன.


கண்டதும் காதலில் விழுந்தாள் ஹீரா. தான் உருவாக்கிய குளோன்கள் இருவரும் இப்பூமியில் சந்தோசமாய் இருப்பார்கள் என்று நம்பினாள். சிறிய அறை ஒன்றை உருவாக்கி, இருவரையும் விட்டுச் சென்றார்கள்.


பூமியின் முதல் மனிதர்களான இரு குளோன்களை விட்டு, விண்தட்டு மேலே பறக்க தயாரானது. விண்தட்டு மேலே செல்ல, அதலிருந்து வெளிப்பட்ட ஒளியில், அந்த அறை சிவப்பு நிறமாக மாறியது. பின் மஞ்சள் நிறமானது.

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top