போட்டி #10 - 4. பூங்காற்று புயலானது
நள்ளிரவு. தொடர் வண்டியில் முதல் வகுப்பு பெட்டியில், குளிருக்காக இழுத்து மூடி உறங்கும் மனிதர்களூடே தனிமையில் பயணிப்பதே கிலியை ஏற்படுத்தும் போது, நள்ளிரவில் கழிவறைக்குச் செல்லவேண்டும் என்றால்? சொல்லவா வேண்டும்? கனமான அந்த கதவைத் திறந்து வெளியே சென்றால், அந்த நேரத்தில் ஒரு ஈ, காக்கா கூட உலாவாதே என்ற அச்சமும் சேர்ந்து கொண்டது.
வேறு வழியும் இல்லை. போயே தீர வேண்டும் என்ற நிலைமை. மனதை தைரியப்படுத்திக் கொண்டு, மெல்லமாக உறங்கிக் கொண்டிருப்பவர்களைத் தாண்டிச் சென்றேன். கதவைத் திறந்ததும் ஒரு விதமான சத்தம் கேட்க, பயத்தில் அப்படியே உறைந்துவிட்டேன்.
நிதானித்து கவனித்த போதே அந்த சொற்கள் காதில் விழுந்தது, “முஜே சொசைட்டி மே அக்ஸப்ட் கர்ணா இத்னா முஷ்கில் க்யூ ஹை? மே இன்ஸான் நி ஹு க்யா?”
அலைபாய்ந்து என் கண்கள் அவள் மீது விழுந்தது. வெளிப்புற கதவருகே நனைந்த உடையுடன், துப்பட்டாவை தலை வழியே போர்த்திய வண்ணம் குளிரில் நடுங்கிக் கொண்டு, காடுஞ்ச்சொற்களை வீசிக் கொண்டிருந்தாள்.
“ஹலோ....” கூப்பிட்ட நொடி திகிலில் மூழ்கிவிட்டேன். ஒருவேளை ஆங்கில திரைப்படங்களில் வருவது போல என் பக்கம் திரும்பியவுடன் பேயாக மாறிவிட்டால்? என்ன செய்வது? என்ற பயம்.
அந்தப் பெண் என்னைத் திரும்பிப் பார்க்கும் வரை இருந்த பீதி, அவள் திரும்பியவுடன் வேறு புறமாக வந்தது. அவளோ சரேலென முகத்தை தனது துப்பட்டாவால் மறைத்துக் கொண்டு திரும்பிவிட்டாள்.
நினைத்தது போல பேயோ பிசாசாகவோ இல்லாமல் மானிடனாக இருந்ததே பெரும் நிம்மதிப் பெருமூச்சைப் பெறத் தகுந்தது. எனினும் என்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு, வந்த வேலையை முடித்துவிட்டு திரும்பினேன். அப்போதும் அவள் அதே இடத்தில் நடுங்கிக் கொண்டிருந்தாள்.
என் பெற்றோர்கள், சிறுவயதிலிருந்தே ஊட்டி உரமேற்றி பசுமரத்தாணி போல பதியவைத்துவிட்ட மனிதநேயமும், மனிதாபிமானமும் என்னை அவ்விடத்தை விட்டு நகரொட்டாமல் செய்தது. பார்க்கப் பரிதாப நிலை. கலங்கியதோ என் மனம்…
விடுவிடுவென என்னுடைய ஆசனத்திற்குச் சென்று, கையில் ஒரு துண்டுடனும், ஒரு சுடிதாருடனும் திரும்பி வந்தேன். அந்த பெண்ணிற்கு என்னை விட அதிக வயது இருக்காது என்ற கணிப்புடன், என் ஆடைகள் அவளுக்கு கொஞ்சம் சிரியதாக இருக்கும் என்ற கணக்கும் போட்டுவிட்டதால், எனக்குத் தளர்வாக இருக்கும் உடையையே எடுத்து வந்தேன்.
“இதோ இந்த ஆடையை எடுத்துக்கோங்க. குளிருல இப்படி நடுங்கிகிட்டு இருந்தா ஜன்னி வந்துடும்.” மெதுவாகக் கூறினேன். தயங்கியபடி மறைந்து மறைந்து என்னைப் பார்த்த பார்வையில், கண்ணடிக்கும் நட்சத்திரம் தன்னைப் படர்ந்துள்ள இருளை விலக்க அயராது முயற்சித்து பிரகாசிப்பது போன்று, அவள் கண்கள் எதையோ வெல்வதற்காக பளிச்சிட்டதாகத் தோன்றியது.
ஹிந்தியில் பேசினாலே… ஒரு வேலை நாம் பேசுவது தான் புரியவில்லையோ என்று யோசித்தேன். அதை உறுதி செய்துகொள்ள, “முஜே தமிழ் மாலும்?” என்று எனக்குத் தெரிந்த அரைகுறை ஹிந்தியில் கேட்க, அவள் தலையை ‘ஆம்’ என அசைத்தாள்.
‘நல்ல வேலை… நம்ம ஹிந்தில பேசுனா ஹிந்தி பாவம்’ எப்பொழுதும் என்னை நானே சிரிக்க வைக்க முயலும் பழக்கம் இங்கும் தொற்றிக் கொண்டு வந்தது. ‘இனி என்ன நானே சிரிக்க வச்சுக்கணும்னு அவசியம் இல்ல. நான் போற இடத்துல என்ன பாத்துக்க ஆள் இருகாங்க. அதனால.... ச்ச எங்க உக்காந்துகிட்டு கனவு கண்டுக்கிட்டு இருக்க வர்ணா நீ?’ புயலென எழுந்த என் எண்ணங்களை அடக்கிக் கொண்டு, ஒரு அடி அந்தப் பெண்ணை நோக்கி எடுத்து வைக்க… அவள் துரிதமாக அவ்விடத்தை விட்டு அகன்றாள்.
மனக்கோடியில், பயம் என்ற உணர்வு அடிக்கடி எட்டிப்பார்த்தாலும், அதை பின்னுக்குத் தள்ளிவிட்டு, செய்ய வேண்டியவையை செய்ய முற்பட்டேன் - தனிமையின் அவஸ்த்தை புரிந்திருந்ததால்.
“ம்ம்ம்… நான் உங்கள ஏதும் செய்யமாட்டேன்.” உளறுகின்றேன் என்பது தெரிந்தது. ஆனால் சரியாக என்ன சொல்ல வேண்டும் என்பது தெரியவில்லை.
“தள்ளிப்போ…” கரகரத்த குரலில் அவள் எரிந்து விழ, ஒரு நடுக்கம் ஏற்பட்டது. அவள் குரலைக் கேட்டதும் எனக்கு இருந்த கொஞ்சம் சந்தேகமும் தவிடு பொடியாகிவிடவே, பயம் அதிகரித்திருக்க வேண்டும்.
ஆனால் அவளது மறுப்பு என்னைக் காயப்படுத்தியது. அன்று அந்த தொடர் வண்டியில் ஏறுவதற்கு முன்னர் நடந்த பலதரப்பட்ட விஷயங்களின் வெளிப்பாடாக, என் கண்களில் நீர் சுரந்தது. முத்துக்கள் உதிர்வதைப் போல இரு துளிகள் கன்னங்களில் சறுக்க, வெகுவாக அவற்றை பின்னங்கையால் அப்புறப்படுத்திவிட்டு, உடையையும், துண்டையும், நடுங்கிக் கொண்டும் என்னைப் பார்த்து முரைத்துக் கொண்டும் நின்றவளின் காலருகே வைத்துவிட்டு சிறுபுன்னைகை வீசினேன்.
“பாய் (bye)” முனங்கிவிட்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்தேன்.
“சாரி… என்னை மன்னித்துவிடு!” இந்த முறை அவள் சொற்களில் மென்மை தென்ப்பட்டது.
திரும்பிய நான், அவள் கைகளில் என் உடை நனைந்து கொண்டிருப்பதைக் கண்டேன். “விரட்டப்பட்டே பழக்கப் பட்டதால, உன்னையும் தப்பா நினச்சுட்டேன்.” தேம்பளினூடே கூறினாள். என் மனம் இளகிய தேன்பாகாய் உருகிவிட்டது.
“பரவால… எனக்கும் அது பழகீருச்சு…” ஒரு கண்ணீர்த் துளி சொட்டியது.
என் கண்ணீரைத் துடைக்க நினைத்தாளோ என்னவோ… “இந்த டிரஸ் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. சிவப்பு நிறம்னா எனக்கு ரொம்ப பிடிக்கும்.” பேச்சை லாவகமாக மாற்றினாள்.
அவள் சிறுபிள்ளைபோல அந்த ஆடையை ரசிப்பதைக் கண்டு நானும் சிரித்துவிட்டேன், “அது உனக்கு தான். நீயே வச்சுக்கோ,” நான் கூற, அவள் முகத்தில் அளவளாவிய சந்தோஷம். எனக்கும் தான்.
துரிதமாக உடையை மாற்றிக்கொண்டு வந்து, எனது ஆசனப் படுக்கையில் என்னுடன் அமர்ந்திருந்தவள், சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டு, கைகளை ஒன்றோடொன்று தேய்க்க, நான் என் போர்வையை அவளிடம் கொடுத்தேன். என்ன பேசுவது என்று திணறிக்கொண்டிருந்தேன். சாதாரண பெண் என்றாலே என்ன பேசுவது என்று எனக்குத் தெரியாமலிருக்க.... அவளிடம்…
“என்ன பாத்தா உனக்கு பயம் இல்லையா?” என் எண்ணங்களுக்கு அணை கட்டினாள்.
அவள் கேள்வியில் இருந்த உண்மையை நான் உணர்ந்தே இருந்தேன். அவளது கேள்வியால் வெட்கித் தலைகுனியவே நேர்ந்தது. ஆம் சிறுவயதில் இருந்தே அவளைப் போன்று உள்ளவர்களை பார்த்தாலே, அவர்கள் அருகில் செல்லகூடாதென்றும், அவர்களிடம் அருகில் வந்துவிட்டால் பாதுகாப்பதாகக் கருதி, முதுகுபுறத்தில் குழந்தைகளை மறைத்துக் கொண்டும் வாழ்கின்ற பெற்றோர்கள், தன் குழந்தைகளின் இளம்பிஞ்சு மனதிற்குள் தேவையற்ற பயத்தை ஊன்றுகின்றோம் என்பதை உணர மறந்துவிட்டனர்.
“இல்லை…” பொய் சொல்லவில்லை. இதுவரை அவளைப் போன்ற மூன்றாம் பாலினத்தைச் சார்ந்தவரிடம் நான் உரையாடியதில்லை என்பதே உண்மை.
அவள் முரட்டுக் குரலில் மெல்லமாக சிரித்தாள். “ஓ அச்சா… உன்ன போல இருக்க பொண்ணுங்கல்லாம் எங்களை பக்கத்துலே வரவிட மாட்டாங்க. ஒன்னு பயந்து ஓடுவாங்க, இல்ல அருவருப்பா பாப்பாங்க. அதுனால தான் நான் நீ பேச ஆரமிச்சதும் டர் ஹோ கயா.”
இதற்கு நான் என்ன பதில் சொல்வது? எனக்கே ஒன்றும் விளங்கவில்லை. அமைதியாகவே அமர்ந்திருந்தேன்.
“இந்த பூங்காற்று இருக்கே?” சம்மந்தமில்லாமல் எதையோ பேசுகின்றாளே என கேள்விக்குறியோடு நிமிர்ந்து பாத்தேன். அவளே தொடர்ந்தாள், “புறப்படும் போது அமைதியான தென்றலாகத் தான் ஆரம்பமாகும். தனிமையின் வாட்டமோ, இல்லை அதனுடன் சம்மந்தப்பட்டவர்களின் கேலியினாலோ, வேறு தூண்டுகோளினாலோ, ஆக்ரோஷம் அடைந்துவிட்டால்…. அழிவு நிச்சயம்.” அவள் கண்கள் கனவுலகத்தில் சஞ்சரிக்கின்றதென புரிய நேரம் பிடிக்கவில்லை.
ஒரு வேலை இதை தனக்குத் தானே சொல்லிக் கொள்கின்றாளோ? என்ற சந்தேகமும் எழுந்தது.
அவளையே கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டு, மனதினுள் எழுந்த எண்ணங்களை புரட்டிக்கொண்டிருக்க, அவள் என் ஆன்மாவிற்குள் நுழைந்துவிட்டது போன்று என் கண்ணை உற்று நோக்கினாள்.
“ஆனால், அந்த வாயுமகளிற்கு அவளுடைய இரும்பு வலிமை தெரியவில்லை. தனிமை படுத்தப் பட்டாலும்… அவமதிக்கப்பட்டாலும்… அவளுடைய தரம் இறங்குவதில்லை. அது அவளுக்கு புரிவதில்லை. ஊரே சேர்ந்து அவளை மாசுப்படச் செய்தாலும், அவளது துணிவும், அழுத்தமும் மறையப்போவதில்லை.”
எனக்காகவே அவள் கூறுவது போலத் தோன்றினாலும் அதை வெளிக்கு காட்டாமல், கைகளை பிசைந்து கொண்டிருந்தேன்.
“உனக்கும் உன் ஸ்ட்ரென்த் தெரியல…” மெதுவாகச் சொல்லி முடித்தாள். அது ஏனோ எனக்கு வியப்பாக இல்லை.
அவள் சொல்வதனைத்தும் சரியே… என் தற்போதைய வாழ்க்கை பாதை என் கண்முன்னே விரிந்தது. கல்லூரியில் சேர்ந்த நாள் தொட்டு, சக மாணவர்களால் எவ்வளவோ கொடுமைகளை அனுபவித்திருக்கிறேன். தனிமை படுத்தப் பட்டிருக்கிறேன். தலைக்கனம் கொண்ட ஆசிரியரிடம் துணிச்சலைக் காமித்தது குற்றமென என்னை வசைபாடியவர் பலர்.
படிப்பில் முன்னோடியாக இருந்தும் எனக்கென ஒரு தோழமை இல்லாமல் போய்விட்டது. அதை கூட சமாளித்துக் கொள்ளலாமென நினைத்தால், கிண்டலும் கேலியும் என்னால் சகித்துக் கொள்ளவே முடியவில்லை. மொழி தெரியாத ஊரில், ஆங்கிலமும் சரியாக தெரியாமல் இருந்தது என் குற்றம். நூலகமே கதி என கிடப்பதும் என் குற்றம்…. இது போல் ஆயிரம் குற்றங்கள்.
ஒன்றரை வருடம் எப்படியோ கடந்துவிட்ட எனக்கு அதற்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாது என முடிவு செய்து, மூட்டை முடிச்சை கட்டிக் கொண்டு ஊருக்குச் செல்லும் வழியிலே தான் அவளைக் காண நேர்ந்தது.
“நீ சொல்றதெல்லாம் சரி தான்…” திகைத்தேன். “ஆனா…”
“அர்ரே…. எத்தனை இன்னல்கள் வந்தாலும், காற்று அதோட தன்மையை விட்டுக்கொடுக்காது. குறுக்கே யார் வந்தாலும் அதன் பாதையை மாற்றிக்கொள்வது… உனக்கு என ப்ராப்லம்னு எனக்குத் தெரியாது. ஆனா நீ எதுல இருந்தோ ஓடுறானு மட்டும் எனக்குத் தெரியுது.”
அதிகாலை 4.40…. வண்டி, தொடர்வண்டி நிலையத்தை அடைந்தது. நைனா - அவளுடைய பெயரைப் போலவே என் வாழ்க்கையில் விளக்கேற்றிய தெய்வம், வண்டியில் இருந்து இறங்கினாள். அவள் செல்வதை பார்த்தவண்ணம், அவளை முதன்முதலில் பார்த்த கதவருகே நின்றிருந்தேன்.
இரண்டடி எடுத்துவைத்தவள் திரும்பிப் பார்த்தாள், “நீ வரல?”
“என் பயணம் இனிதே இங்கே தொடங்குகின்றது நைனா, என் உயிர் தோழியே…” மீண்டும் என் பயணம் தொடர்ந்தது, என் கல்லூரி வாசலுக்கு.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top