போட்டி #8 - 3. உதிரத்தின் சாயம்

காரிருள் சூழ்ந்திருந்தாலும், வெண்மதி தனது கொடுக்கும் தன்மையை மறவாது, கொடைக்கையை அவர்கள் மீது நீட்டிக் கொண்டிருந்தாள். வருணனுக்கு அங்கிருப்பவர்களை கேலி செய்து பார்க்க ஆசை வந்தது போலும்… சில்லென்று சுவாசத்தை வெளியே விட, தென்றல் அங்கே குழும்மிக் கிடந்த மனிதர்களை வருடிச் சென்றது.

குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தவர்கள், போத்திக் கொள்ள போர்வைகள் கூட இல்லாமல் கைகளையே அரனாகக் கொண்டு, குளிரை ஜெய்ப்பதற்க்கு போராடிக் கொண்டிருந்தனர்.

அந்த கூட்டத்தின் நடுவே, கால்களை கட்டிக் கொண்டு, பற்கள் படபடக்க,நடுங்கிக் கொண்டிருந்தாள் பூவிழி. பெயரை ஒத்தார் போல மலர் போன்ற கண்கள் தான். ஆனால் அந்தக் கண்களில் வெறுமையே மண்டிக் கிடந்தது.

ஒரு குழந்தையின் அழுகுரல் அவளை திடுக்கிட்டுத் திரும்பச் செய்தது. அவள் விழிகள் அந்தக் குழந்தையை அடையும் வரை அலை பாய்ந்து கொண்டிருந்தது. குளிரில் நடுங்கிக் கொண்டிருந்த ஒரு தாய், தனது மேற்சீலையையும், அக்குழந்தையின் தந்தை போட்டிருந்த சட்டையையும் கழற்றி குழந்தையைக் குளிரில் இருந்து காத்தனர்.

அதைக் கண்ட பூவிழியின் வெறுமை கண்களில், ஒரு மாற்றம் ஏற்பட, சில நொடிகளில் அதில் நீர் சுரந்தது. அடுத்த நொடி கானல் நீரைப் போல அந்த கண்ணீர் பிம்பத்தைக் காட்டி, உண்மையைக் கூறாமலே சென்று விட்டது. சாய்ந்து அமர்ந்திருந்த கட்டையில் அவள் தலையை சாய்த்துக் கொண்டு, இருள் கவ்விய வானத்தை நோக்கினாள். அவள் முகத்தில் நீர் தெரித்ததைக் கூட பொருட்படுத்தாமல் இருந்தாள்.

பதினெட்டு வயது கூட நிராம்பாத பெண்… தன்னை சுற்றி நடந்த கதைகளையே, ஓலங்களையோ பொருட்படுத்தாது கல்லாய் அமர்ந்திருந்தவள், அந்த குழந்தையின் அழுகுரலுக்கு இறங்க என்ன தான் காரணமாக இருக்கும்? அவள் பெற்றோரை துளைத்து அனாதையாய் எங்கோ செல்வதாலா? நினைவுகளில் அவள் கதை பின்னோக்கிச் சென்றது.

****

இரண்டு வருடங்களுக்கு முன்…

ரெத்த வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்த பூவிழியை கட்டி அனைத்து கதறிக் கொண்டிருந்தாள் அவளுடைய அன்னை. அவளுடைய கதறல் சத்தம் ஊரெங்கும் எதிரொலித்திருக்க வேண்டும். எங்கும் ஓலச்சத்தம் கேட்கும் போது, ஒருவளது அழுகை மட்டும் தனியாக கேட்குமா என்ன?

வேறொரு சத்தமும் அந்த ஊரில் ஒலித்தது.கேலியும், கிண்டலும், சிரிப்பும்… பூட்ஸ் சத்தமும். ராணுவம் கடந்து சென்றதன் விளைவே - இரத்தமும், சடலங்களும். ஆண்களை சுட்டு வீழ்த்தும் ராணுவ வீரன் என்ற போர்வையில் ஒளிந்திருக்கும் மிருகம், பெண் என்றால், கற்பை சூறையாடி சாக விட்டுச் செல்வான்.

பதினைத்து வயது பூவிழி, நான்கு மிருகங்களுக்கு பலியான பரிதாப நிலையைக் கண்டு, தன் ஒரே மகளை மடியில் கிடத்தி, வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டிருந்தாள் அவளது அன்னை. கண்ணைத் திறந்து என்னை ஒரு முறை பாரு டி என் செல்லம் என்று தேம்பித் தேம்பி நெஞ்சே வெடித்து விடுமளவு கதறினாள்.

அன்று பூவிழி அந்த வெறியர்கள் கொடுமையின்று உயிர் பிழைத்தது தெய்வாதீனச் செயல் என்றே அவள் அன்னை நம்பினாள். அன்று தந்தையை இழந்த பூவிழிக்கு, புதிய உறவு ஒன்று கிடைத்தது… இல்லை அவளுக்குள் உருவானது.

****

இரண்டு நாட்களுக்கு முன்…

மீண்டும் ஒரு போர்… அமைதியாய் இருந்த காலைப் பொழுதை கொடூரமானதாக்க ஒலித்தது குண்டு வெடிக்கும் சத்தம். அந்த சத்தத்தைத் தொடர்ந்து பூமி அதிர்ந்தது போல ஒரு உணர்வு தோன்றியது. அதிர்ந்தது நிலம் மட்டும் அல்ல, அந்த ஊர் மக்களும் தன. ஒரு வயது குழந்தை வீறிட்டு அழுகும் சத்தம் கேட்க… வெளியே சத்தம் வந்த திக்கைப் பார்த்துக் கொண்டு நின்ற பூவிழி, வேகமாக உள்ளே சென்று குழந்தையை அனைத்துக் கொண்டு சமாதானம் செய்தாள்.

“என்ன நடக்குதுனே தெரியலையே… எனக்கு ரொம்ப பயமா இருக்குது. இந்த முறை என்ன செய்ய போறானுங்களோ,” பூவிழியின் அம்மா பதற்றத்துடன், கைகளை பிசைந்து கொண்டு கூறினாள்.

“ஒன்னும் நடக்காது மா. கவலை படாத. நமது படை பக்கத்துல தான் இருக்காங்க. அவங்க நம்ம காப்பாத்துவாங்க. நம்பிக்கையோட இரு,” சிறுவயதிலே அவள் முதிர்ச்சி அடைய நேர்ந்ததை எண்ணி பெருமூச்சு விட்டுவிட்டு, அவளது அன்னை மகளையும் பெயரனையும் பார்த்துக் கொண்டு நின்றாள்.

சிறிது நேரத்திற்கெல்லாம் வெளியே கூச்சலும் குழப்பமுமாக காட்சி அளிக்க, என்ன செய்வதென தெரியாமல் பூவிழியும் அவள் அன்னையையும் குழந்தையையும் அழைத்துக் கொண்டு, மக்கள் ஓடிக்கொண்டிருந்த திசையில் ஓடினாள். பின்னால் ராணுவம் துரத்திக் கொண்டு வருவதாகவும், அரணாக நின்ற தமிழர் படை வீழ்த்தப் பட்டு, ராணுவம் முன்னேறுகிறதென்றும் செய்தி  பரவ, முடிந்தவரை விரைவாக ஓடினர்.

“பேசாம இந்த நாட்டை விட்டு போய்டலாம் பூவிழி.” அன்று இரவு ஓய்வுக்காக அமர்ந்த இடத்தில் அவளது அம்மா கூறினாள்.

“என்னமா சொல்ற? இது நம்ம மண்ணு. இதை விட்டு எங்க போறது? யார் நம்மள ஏத்துப்பா? பூவிழியின் விழிகள் அவள் அம்மாவின் முகத்தை ஆராய்ந்தது.

“நம்ம காக்க நம்ம இனம் இருக்கு டி. அங்க போய்ட்டா நம்ம நிம்மதியா வாழலாம்.ராணுவம்னு சொல்லிக்கிட்டு நம்மள அங்க யாரும் துரத்த முடியாது.” யோசித்தபடியே கூறினாள்.

“அம்மா யோசிச்சு தான் சொல்றியா?”

“ஆமா… நம்ம நேரா கடலை நோக்கி தான் போறோம். அங்க இருந்து அப்படியே ஒரு படகை பிடிச்சு போய்டலாம். இங்க தினமும் செத்து செத்து வாழுறதுக்கு, அகதியா வாழ்ந்திரலாம்.” பூவிழிக்கும் அது தான் சரி என்று பட்டது. பிறந்த மண்ணின் பாசம் விடவில்லை என்றாலும், தன் குழந்தைக்காகவாவது நாட்டை விட்டுச் செல்வதென முடிவெடுத்தாள்.

அந்த பச்சிளம் முகத்தை ஒரு முறை பார்த்துவிட்டு, சரி என தலையை அசைத்தாள். மார்போடு அனைத்துக் கொள்ள, இதமான அணைப்பில் உறங்கும் குழந்தையை பார்த்தபடி தரையில் அமர்ந்தாள். அப்படியே கண்ணயர்ந்து போனாள்.

அடுத்த நாள் விடியற்காலை… பயங்கரமான சத்தம் ஒன்று கேட்க, துடித்து துள்ளி எழுந்தாள். கையில் குழந்தை இல்லாததைக் கண்ட அவள் இதயம் நின்றே போய்விட்டது. என்ன செய்வதென அறியாது தியாகைத்தாள், ஒரு வினாடி.

மறுவினாடி சிதறி ஓடிய கூட்டம் அவளையும் அலையென அடித்துச் சென்றது. அம்மா அம்மா என கூச்சலிட்டாள். எங்கு தேடியும் அம்மாவையும் காணவில்லை, குழந்தையையும் காணவில்லை. என்ன செய்வதென தெரியவில்லை. அலைகள் அடிக்கும் திசையில் தடுமாறி நடந்தாள்.

குண்டு வெடிக்கும் சத்தம் காதுகளில் ஒழித்துக் கொண்டே இருந்தது. என்ன செய்து விட்டோம் நாங்கள்? எதற்காக துரத்தப் படுகின்றோம்? என்ன குற்றம் செய்ததற்காக இப்படி உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு, உற்றார் உறவினர், பெற்றவர்கள், பெற்ற குழந்தையைக் கூட துளைத்துவிட்டு, பிறந்த மண்ணை மாற்றானுக்கு தியாகம் செய்து, ஓடிக்கொண்டிருக்கிறோம்?

பலவித எண்ணங்கள் அவள் நெஞ்சினில் புயலென தாக்க, கால்கள் கூட்டிச் சென்ற பாதையில் அவளும் செல்ல, கண்கள் மட்டும் சுற்றிலும் நோட்டம் விட்டுக் கொண்டே வந்தது. மனது பதைபதைக்க ஓடிக்கொண்டே இருந்தாள்.

சாயும்காலம் இருக்கும். கடலுக்கு மிக அருகில் வந்து சேர்ந்தனர். குண்டு வெடிக்கும் சத்தம் மிக அருகில் கேட்க, கடல் அலைகளை நோக்கி, மனிதக் கடல் ஓடியது. பூவிழியும் ஓடினாள். கிடைத்த படகுகளில் அனைவரும் ஏறினர். முடிந்த அளவு குறுகி அமர்ந்து கொண்டு மற்றவர்களுக்கும் வழிவிட்டனர்.

பூவிழிக்கு நாட்டை விட்டுச் செல்ல இஷ்டம் இல்லை, ஆனாலும் துளைந்துவிட்ட தன் தாயும், பிள்ளையும் கண்டிப்பாக ஏதோ ஒரு படகில் நாட்டை விட்டு நீந்திக் கொண்டிருப்பர் என்ற நம்பிக்கையில் கடலில் அவள் பயணம் தொடர்ந்தது.

படகில் ஒரு முறை தான் பிறந்த மன்னைத் திரும்பிப் பார்த்தாள். “என் உயிரில் அணுவாய் கலந்துவிட்ட தாய்திருநாடே… என் உடம்பில் குருதி காயும் வரை உன்னை மறவேன். காத்திரு… உன்னை உயிர்ப்பிக்க மீண்டும் வருவேன்” சத்தியம் செய்து கொண்டாள்.

இழக்க இனி எதுவும் இல்லை என்ற உணர்ச்சி, அவளை உணர்வில்லா ஜடமாக்கியது. ஏதோ ஒரு விடியலைத் தேடி அவள் உள்ளமும் அவளுடன் பயணித்தது.

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top