போட்டி#3. 12 - உனக்குள் ஒருவன்


உனக்குள் ஒருவன்


12-05-2012, ISI தலைமையகம், இஸ்லாமாபாத்



"வெல்டன் கரீம், ஆணவம் பிடித்த அமெரிக்கன் CIA கண்களிலேயே மண்ணை தூவிட்டு இந்த மிஷன அருமையா முடிச்சிருக்கீங்க."



"தாங்க் யூ சார்."



"ரியலி கிரேட். ஆனா, உங்களுக்கு தெரியாதது இல்ல. திஸ் இஸ் எ கிளாண்டெஸ்டின் ஆபரேஷன். இந்த மிஷன் பத்தின விவரங்கள நீங்க இப்பவே மறந்துடனும். 10 வருஷம் ISIஇல திறமையான உளவாளியா இருக்க உங்ககிட்ட இத சொல்ல அவசியம் இல்ல. ஆனா, என் கடமை. நினைவுபடுத்துறேன்."



"கண்டிப்பா சார்."



"மிஸ்டர் நவாப் இன்டெலிஜன்ஸ் பியூரோ சார்பா ஒரு சீக்ரட் மிஷன்க்கு நீங்க தேவைப்படுறதா கேட்டார். நீங்க அவர சந்திங்க."



கரீம் தன் அறையை விட்டு அகன்றதும் ஷெரீப் முக்தார் தன் மேசையின் கீழ் அறையை இழுத்து, அதில் அடுக்கப்பட்டிருந்த அழைபேசிகளில் ஒன்றை எடுத்தார்.



"டாக்டர்.. நமக்கு தேவையானது கிடைச்சிருச்சு." எதிர்முனையில் வந்த பதிலைக் கேட்டு ஷெரீப் மெல்ல புன்னகைத்தார். "உண்மை தான் டாக்டர். என்னாலயும் கூட நம்ப முடியல. ஆனா அந்த ஏஜென்ட் ரொம்ப பொறுமையா, நேர்த்தியா இந்த தகவலை கொண்டு வந்திருக்கான். முடியாததை முடிச்சிருக்கான். இனி உங்களுக்கு தூக்கம் கிடையாது டாக்டர்."




16-10-2016, ஒரு ரகசிய ஆய்வுக்கூடம், இஸ்லாமாபாத்



"டாக்டர், இதுல எதுவும் பிரச்சனை வராதே?"



"என்னுடைய ஆராய்ச்சியின் முடிவுகள் உங்களுக்கு திருப்திகரமா இல்லையா?" டாக்டர் அப்துல் கான் அமைதியாக கேட்டார்.



"அப்படி இல்ல டாக்டர். இப்ப நம்ம திரும்பி போக முடியாத தொலைவுக்கு வந்துட்டோம். இந்திய பிரதமர் தங்கி இருந்து மாளிகை ல இருந்து அவர ரொம்ப ரகசியமா கடத்திக்கிட்டு வந்திருக்கோம். அவரு தன்னோட விருந்தினர் மாளிகையில இருக்கிறதா தான் நம்ம அதிபரும் நம்பிக்கிட்டு இருக்கார். இப்படி ஒரு திட்டம் நாம போட்டு செயல்படுத்துறது உங்களையும் என்னையும் சேர்த்து மொத்தம் 10 பேருக்கு தான் தெரியும். அதுல 4 பேர் பிரதமரை கடத்திட்டு வந்த ஏஜெண்டுகள். 2 பேர் உங்க துணை மருத்துவர்கள்." நாளை காரியம் முடிந்ததும், ஏன் செய்கிறோம் என்று தெரியாமலேயே ஒருவன் அந்த ஆறு பேரையும் கொல்லப்போகிறான். அவன் கொல்லும் ஏழாவது ஆள் இந்த டாக்டராக கூட இருக்கலாம். "இப்போ பிரதமர் உங்க ஆபரேஷன் தியேட்டர் ல மயக்கமா இருக்கார். நாளை இரவு வரை எப்படியாவது நான் சமாளிக்கிறேன். ஆனா அதுக்கு மேல பிரதமர மறைச்சு வைக்க முடியாது. 2 நாடுகளுக்கும் போர் மூட்டுறது நம்ம எண்ணம் இல்ல."



அப்துல் கான் ஷெரீப்பை சில நொடிகள் ஊன்றிப் பார்த்தார். அவர் முகபாவம் சலனமின்றி இருந்தாலும் அந்த கண்களில் ஒரு ஏளனம் ஷெரீப்புக்கு தெரிந்தது. "நான் ஏற்கனவே பலமுறை சொன்னது தான் ஜெனரல். எனக்கு இந்த ஆபரேஷன் செய்ய 24 - 25 மணி நேரங்கள் தேவைப்படும். அதற்குமேல் கண்டிப்பாக நேர விரயம் ஆகாது. நான் இந்த ஆராய்ச்சியை விலங்குகள் மேல செய்த போதும் சரி, மனிதர்கள் மேல செய்து பார்த்த போதும் சரி, நீங்க அதை கண்கூடாக பார்த்திருக்கீங்க. 95 விழுக்காடு நமக்கு சாதகமா தான் முடிவுகள் வந்திருக்கு, நான் சொன்ன கால அளவை தாண்டாம.."



"நல்லா புரியுது டாக்டர். என் பயம் எல்லாம் அந்த 5 விழுக்காட்டு தோல்வியான நாளா இன்னைக்கு அமைய கூடாதுனு தான். அப்படி ஆனா அது உங்க தோல்வி மட்டும் இல்ல. இந்த தேசத்தோட தோல்வி. இந்த பிரதமர் அணு அளவு காஷ்மீர் கூட பாகிஸ்தானுக்கு இல்ல னு பகிரங்கமா பல இடங்கள்ல அறிக்கை விட்டிருக்கவர்; உங்களுக்கே தெரியும். அவரை நம்ம அரசாங்கம் தான் அமைதி பேச்சு வார்த்தைக்கு வலிய அழைச்சிருக்கு. இத நமக்கு கிடைச்ச வாய்ப்பா நாம பயன்படுத்துறோம், சரி தான். ஆனா பாகிஸ்தான் ல இவர் காணாம போனாலோ, கொலை செய்யப்பட்டாலோ, ஒன்னும் அறியாத நம்ம அதிபருக்கும், மக்களுக்கும் தான் அவமானம். அதுலயும் இன்னைக்கு காலையில நடந்த பேச்சு வார்த்தை தோல்வியில முடிஞ்சிருக்கு. உங்க திறமை தெரியும், ஆனா கொஞ்சம் அதிக கவனம் இருக்கட்டும் னு தான் சொல்றேன்."



ஒரு சிறு புன்னகையை உதிர்த்து தலையாட்டினார் கான்.




தனக்கென ஒதுக்கப்பட்ட தனி அறையில் நின்று, ஷெரீப் தன் முன்னால் இருந்த திரையை பார்த்துக்கொண்டு இருந்தார். கான் தன் துணையாளர்கள், பல கோடி மதிப்பில் வடிவமைக்கப்பட்ட சூப்பர் கணினி, இன்னும் பல கோடி அரசாங்க செலவில் அவரே வடிவமைத்த தானியங்கி இயந்திரம் என இவற்றின் கூட்டு முயற்சியுடன், அந்த அதிசயத்தை செய்து கொண்டிருந்தார்.



ஒரு பக்கம் மயக்கத்தில் இந்திய பிரதமர். அவரது உச்சந்தலைப்பகுதி வெட்டி எடுக்கப்பட்டு, ஒரு சிகப்பு குல்லா அணிந்த இஸ்லாமியன் போல் தெரிந்தார். இன்னொரு பக்கம், முகமத். ஒரு வாரம் முன்னால் இறக்க வேண்டிய பாகிஸ்தானிய உளவாளி. இந்த ஒரே காரணத்துக்காக அவன் உயிர் பாதுகாத்து வைக்கப்பட்டு இருந்தது.



தானியங்கி இயந்திரம் மிக லாவகமாக, ஆனால் துரிதமாக, முகமதின் மூளையை அவன் உடம்பில் இருந்து பிரித்துக்கொண்டு இருந்தது. "பல லட்சம் கோடி நரம்புகள் மூளையை உடம்புடன் இணைத்திருக்கின்றன. அவற்றை நுணுக்கமாக, சேதாரமின்றி வெட்ட மனிதனால் முடியாது. அதற்குத்தான் இந்த இயந்திரம்." கான் சொன்ன வார்த்தைகள் ஷெரீப் காதுகளில் இப்போது ஒலித்தன.



6 வருடங்களுக்கு முன்பு, மூளை மாற்று என்ற கருத்தை டாக்டர் கான் விவரித்த பொழுதே ஷெரீப்புக்கு அதன் வீரியம் புரிந்தது. ஒரு மனிதனின் மூளையை இன்னொரு மனிதனின் உடம்புக்குள் புகுத்துவதன் மூலம் அவனை வேறொருவனாக மாற்றிவிட முடியும் என்றார் கான். அதன் விளைவுகளை எண்ணி ஷெரீப் பூரித்திருந்த போதே ஒரு குண்டையும் போட்டார். மூளையின் கோடானுகோடி நரம்புகளை வெட்ட ஒரு கருவி வேண்டும். அவற்றை அடுத்த மனிதனின் உடலில் உள்ள நரம்புகளில் சரியான வரிசையில் பொருத்த பல கோடி எண்களை நினைவில் கொள்ளும் ஒரு ராட்சத சூப்பர் கணினி வேண்டும். இவற்றை விட பெரிய தடங்கல்கள்: புதிய மூளை, உடல் நரம்புகளுடன் ஒட்டப்பட்டாலும் அந்த வெட்டு முனைகள் முழுமையாக ஆறாது. அதனால் உடலில் நரம்புகள் செயல்படாது. அது மட்டும் அல்லாது, புதிய மூளையை உடலின் எதிர்ப்பு சக்தி எதிர்க்கவும் வாய்ப்புள்ளது.



அமெரிக்காவில் உள்ள DARPAவில் இந்த பிரச்சனைக்கு தீர்வு தரக்கூடிய ஆவணங்கள் இருப்பதாக சில மாதங்களில் ISI கண்டறிந்தது. அவற்றை அரும்பாடுபட்டு ஒரு வருட கடின உழைப்புக்கு பின் கரீம் கொணர்ந்ததும் தான் ஷெரீப்புக்கு ஆர்வம் பீறிட ஆரம்பித்தது. ரகசியமாக பல சூட்சுமங்கள் செய்து கானுக்குத் தேவையான சூப்பர் கணினியை ஏற்பாடு செய்தார் ஷெரீப். தனக்கு தேவையான தானியங்கி கருவியை ஒரு வருட இடைவெளியில் கான் ஏற்பாடு செய்ய, ஆராய்ச்சி துரிதகதியில் முன்னேறியது. முதலில் குரங்குகளில் சோதனை செய்து எண்ணிலா தோல்விகளைக் கண்ட கான், DARPA ஆவணங்களின் உதவியுடன் 2015ன் தொடக்கத்தில், மூளை நரம்பு ஒட்டுக்களை முழுமையாக குணப்படுத்தி, உடலின் எதிர்ப்பு சக்தியை முடக்கக்கூடிய ஒரு அரிய கரைசலைக் கண்டுபிடித்தார். அதனை தானியங்கி இயந்திரத்தின் உதவியுடன் நரம்பு ஒட்டுக்களில் செலுத்த, சோதனைகள் வெற்றியடைய தொடங்கின. அதன்பின் உருப்பெற்றது தான் இந்த திட்டம்.



தன் எண்ண ஓட்டங்களில் இருந்து மீண்ட ஷெரீப், திரையில் கவனத்தை செலுத்தினார்.



முகமதின் மூளை பிரதமரின் தலைக்குள் பொருத்தப்பட்டு இருந்தது. தானியங்கி இயந்திரம் தன் நுணக்கமான கைகளால் மின்னல் வேகத்தில் நரம்புகளை பின்னிக்கொண்டு இருந்தது. கடிகாரத்தில் இப்பொழுது ஆறு மணி நேரங்கள் கடந்திருந்தன. ஆர்வத்துடன் திரையை உற்று நோக்கிக் கொண்டிருந்தார் ஷெரீப்.




18-10-2016, ஏர் இந்தியா ஒன், புதுதில்லி


பிரதமரின் விமானத்தில், யாருமற்ற தனி அறையில் தனக்கு கொடுக்கப்பட்ட ரகசிய கோப்பை பிரதமராதிய முகமத் படித்துக்கொண்டு இருந்தான்.



"பிரதமருக்கு சோடியம் பென்டதால் கொடுக்கப்பட்டு பெறப்பட்ட அவரது ரகசிய கடைச்சொற்கள், மற்ற விவரங்கள் பின்வருகின்றன. ISI மூலம் வேவு பார்க்கப்பட்டு சேகரித்த தகவல்களும் இவற்றில் அடங்கும்."



அனைத்து தகவல்களையும் படித்து மனதில் உடனே பதிய வைத்தான் முகமத். தொடர்ந்து தனக்கான ஆணைகளைப் படித்தான்.



"காஷ்மீர் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த மறுநாள் 'ட்ரான்' செய்யப்பட்டது. எனவே, பிரதமரின் உடனடி மனமாற்றம் சந்தேகம் தோற்றுவிக்கும். முதல் சில மாதங்கள் இந்திய ராணுவ ரகசியங்களை கைப்பற்றவும், போர் காலத்தில் முதலில் தாக்கப்பட வேண்டிய ராணுவ தளவாடங்களை தெரிந்து கொள்ளவும், ஏவுகணைகளை ஏவுதற்கான வழிமுறைகளை கண்டறியவும், இந்தியாவை தோற்கடிக்கும் இதர வழிகளை அறிந்து கொள்ளவும் செலவழிக்கபட வேண்டும். போர் மூண்டால் இந்தியாவை வெல்லும் நம்பிக்கை ஏற்பட்ட பின், பிரதமர், காஷ்மீர் பாகிஸ்தானுக்கு என்று அறிக்கை விட வேண்டும். அவசரமாக இந்த அறிப்பை வெளியிட்டால், பிரதமர் உயிருக்கு இந்தியாவிலேயே ஆபத்து வர வாய்ப்புண்டு. எனவே பொறுமை அவசியம். தகுந்த நேரத்தில் இந்த அறிவிப்பு வெளியானால் அதனை சாதகமாகக்கொண்டு யார் எதிர்த்தாலும் பாகிஸ்தான் காஷ்மீரில் ஊடுருவலாம். வெல்லலாம்."



தனக்கு கொடுக்கப்பட்ட அனைத்து வழிமுறைகளையும் படித்தபின் முகமத் அந்த கோப்பை எரித்தான்.



அடுத்து, பிரதமர் காஷ்மீரை பாகிஸ்தானுக்கு தந்துவிடுமாறு வெளியிட வேண்டிய அறிக்கையை பிரித்தான். அது அவனுக்கு இப்பொழுது தேவைப்படாது. ஆனால், தேவைப்படும் நேரம் வரும் வரை அவன் அதை ரகசியமாக பாதுகாக்க வேண்டும்.





அந்த அறையில் நுழைந்ததும் அவனுக்குத் தோன்றியதோ இது சரி தான் என்பதே. "ஆனால் சரி இல்லை என்று என் மனம் கூறுகிறதே? இது சரி தானா என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்டான். "நாட்டுக்காக எது செய்தாலும் சரி தான் என்று எண்ணியவன், முன்னால் கையில் ஏதோ காகிதத்துடன் அதிர்ச்சியாக தன்னை பார்த்த பிரதமரை வெறித்தான். பின், ராணுவ வீரனாக இந்தியாவுக்குள் நுழைந்து, 4 வருடங்கள் சிறிது சிறிதாக முன்னேறி, இப்பொழுது பிரதமரின் கமாண்டோவாக இருந்த, பாகிஸ்தானிய உளவாளி கரீம், தனக்கு கிடைத்த ஆணைக்கு இணங்க, பேச்சு வார்த்தையை தோல்வி அடைந்ததால் பிரதமரை சரமாரியாக சுட்டு வீழ்த்தினான். இரத்த வெள்ளத்தில் மிதந்த பிரதமர் இறந்தார் என்று உறுதி செய்தவன், தன் கைத்துப்பாக்கியால் தயங்காமல் தன் நெற்றியில் சுட்டான். தளர்ந்த அவன் தேகம் சாய்ந்தது. முதலில் அந்த அறை சிவப்பு நிறமாக மாறியது, பின் மஞ்சள் நிறமானது.

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top