கதையாம்..
"ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாராம்" என ஆரம்பித்தாள் கீரைக் கிழவி. பகலில் தெருவெல்லாம் அலைந்து 'அரைக்கீரை, முளைக்கீரை, சிறுகீரை' என்று கூவிக்கூவி விற்பதால் வந்த காரணப்பெயர் அது. அவளது இயற்பெயர் அறிந்தவர் யாரும் இன்று உயிரோடில்லை. காலனுக்குச் சவால்விடும் தொண்ணூற்றெட்டு அகவையில் நிற்கிறாள் கிழவி. கணவன் இறந்து பதினைந்து ஆண்டுகளுக்குமேல் ஆகிறது.
அந்தத் தெருமுனையில் இருக்கும் தகரக் குடிசை அவளது. முற்றம்போல இருக்கும் காரைத் தரையில் கால்நீட்டி அமர்ந்து, சாப்பிட அடம்பிடித்து அம்மாவிடம் நச்சரித்துப் பாட்டியைப் பார்க்க வந்த குழந்தைகளுக்குக் கதைகளும் கனவுகளும் புகட்டி, கொஞ்சம் சோறும் புகட்டிவிடுவாள் கிழவி. அவளது சொற்களால் உயிர்வந்த ராஜாக்களும், ராணிகளும், வீரத்தளபதிகளும், மதிமந்திரிகளும், குதிரைப்படை வீரர்களும், குளத்தங்கரை அழகிகளும், இன்னும் குழந்தைகளில் கனவுலகில் தினம்தினம் பவனி வருவர்.
மாலைக் கருக்கலில் ஒற்றைச் சிம்னி விளக்கோடு அவள் வாசலில் அமர, கதைகேட்கத் தயாராக வந்தமர்ந்தனர் நண்டான் சிண்டான்கள். சிறுசாக இருந்த உச்சிக்குடுமி ஒன்று, "ராஜா கதை சொல்லு பாட்டி" என்க, கிழவியும் தோல்சுருங்கிய கையால் அவள் முகத்தைத் தடவிக்கொடுத்து, "சொல்லுறேன்டி மயிலு" என ஆரம்பித்தாள்.
"ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாராம்.."
"என்ன பாட்டி.. ஊருக்கு எப்படி ராஜா இருப்பாரு? ஒரு நாட்டுக்கு தான ராஜா இருப்பாங்க?"
அரைடவுசர் அணிந்த பரட்டைத் தலை ஒன்று கேட்டது. மூன்றாம் வகுப்புப் பள்ளிக்கூடம் செல்வதைப் பெருமையாக எல்லோரிடமும் சொல்லிக்கொள்ளும் அந்த அரைடவுசர்.
கிழவி சற்றே யோசித்தாள்.
"சரிய்யா.. ஒரு நாட்டுக்கு ஒரு ராஜா இருந்தாரா..? ஒரு நாள் அவரு வேட்டைக்காக காட்டுக்குப் போனாராம்.."
"ம்ம்.."
"காட்டுல, மான், காட்டெருமை, பன்னின்னு, நிறைய மிருகத்தை வேட்டையாடினாராம்..."
"ஓஓஓ..."
"வேட்டையாடி முடிச்சதும், ராஜாவுக்குத் தாகம் எடுத்துதாம்.."
"ம்ம்.."
"தண்ணி எங்கயாச்சும் கிடைக்குமான்னு தேடிப் போனாராம் ராஜா.."
"அங்கெல்லாம் பைப்பு இருக்காதா தண்ணிக்கு?"
ஒரு ரெட்டைக் குடுமி கேட்க, பரட்டைத் தலை கிழவிக்கு முந்தி பதில்சொன்னான்.
"ஏய், காட்டுக்குள்ள அதெல்லாம் இருக்காது. குளமும், ஓடையும் மட்டுந்தான்."
கிழவி தலையாட்டிவிட்டுத் தொடர்ந்தாள்.
"தண்ணிக்காக தேடிட்டு இருந்தப்போ, ஒரு சின்ன ஆறு தெரிஞ்சுதாம் ராஜாவுக்கு. ஆனா..."
"என்ன பாட்டி?"
"ஆத்துக்குள்ள முதலை இருக்குமோன்னு சந்தேகமா இருந்துச்சாம் ராஜாவுக்கு."
"எதுக்கு ஆத்துக்குள்ள இறங்கணும்? ஒரு டம்ளர்ல மோண்டு குடிக்கவேண்டிது தான?"
சிவப்பு ரிப்பன் ஒன்று கேட்டது. கிழவி க்ளுக்கென சிரித்தாள்.
"அங்க டம்பளர் எல்லாம் கெடையாதுடி மயிலு.. கையால தான் மோண்டு குடிக்கணும்."
"ஓ..."
"முதலை இருக்கற பயத்தால, ராஜாவால போக முடியலையாம். கூட வந்த சிப்பாய் ஒருத்தனைப் போய் பாக்க சொன்னாராம்.."
"ஏன் பாட்டி.., மான், எருமைக்கெல்லாம் பயக்காத ராஜா, முதலைக்கு ஏன் பயந்தாரு?"
"மான், எருமையால எல்லாம் மனுசனைக் கொல்ல முடியாது பாப்பா.. முதலை கொல்லும் இல்ல..?"
"அப்படியா பாட்டி.. சரி, சிப்பாய் என்ன பண்ணினான்?"
"சிப்பாய்க்கும் பயமா இருந்துச்சாம்.. நடுங்கிட்டே ஆத்துக்கிட்ட போனானாம்.. ஆத்துல உண்மையாவே முதலை இருந்துச்சாம்... கிட்டத்துல போன சிப்பாயோட காலைக் கவ்விப் பிடிச்சுக்கிச்சாம்.."
ஆளாளுக்குத் திகைப்பாக மூச்சிழுக்கும் சத்தம் கேட்டது.
"அப்பறம்?"
"ராஜாவும் மத்தவங்களும், தூரத்துல இருந்து அம்பு விட்டுப் பாத்தாங்களாம்... ஆனா, முதலையோட தோல் ரொம்ப தடிமனா இருந்ததால, அம்பெல்லாம் அதுமேல குத்தவே இல்லையாம்..."
"அச்சச்சோ... அப்ப அந்த சிப்பாயி?"
"அவனும் தன்னோட பலத்தை எல்லாம் பிரயோகிச்சு, முதலைக்கிட்ட இருந்து தப்பிக்கப் பாத்தானாம்... ஆனா முதலைப் பிடி இரும்புப் பிடியா இருந்துச்சாம்..."
"ம்ம்.."
"ராஜா வந்து முதலைகிட்ட கெஞ்சிப் பாத்தாராம்... என்னை வேணா புடிச்சிக்க, அவனை விட்டுருன்னு. முதலை அதைக் கேட்டதும், ராஜாவோட நல்ல மனசைப் புரிஞ்சுகிட்டு, அந்த சிப்பாயை விட்டுருச்சாம்..அதனால, நல்ல மனச--"
கிழவி முடிப்பதற்குள் உச்சிக்குடுமி இடையிட்டது.
"ஓ.. ராஜாவை அதுக்கு பதிலா புடிச்சிகிச்சா?"
"இல்லைம்மா.. யாரையுமே புடிக்கலை அது. சிப்பாயையும் விட்டுருச்சு, ராஜாவையும் விட்டுருச்சு.."
"ஏன் பாட்டி, அப்ப அந்த முதலை சாப்பாட்டுக்கு என்ன பண்ணும்?"
"அ... அது.. வேற எதாவது மிருகத்தை புடிச்சிக்கும்.."
"எப்படி புடிக்க முடியும்? ராஜா தான் எல்லாத்தையும் வேட்டையாடி கொன்னுட்டாரே?"
"ஆமால்ல பாட்டி, எதுக்கு வேற மிருகத்தைத் தேடணும் முதலை? அதான் ராஜா அவரை புடிச்சிக்க சொன்னாருல்ல?"
"ஆமா பாட்டி, அதுக்கு முன்னால பேசாம ராஜாவே போயி தண்ணிய குடிக்கலாம்ல? அவருக்கு தான தண்ணி வேணும்? எதுக்கு சிப்பாயை அனுப்பிட்டு அப்பறம் போயி காப்பாத்தணும்?"
"ஆமா பாட்டி, எதுக்கு சிப்பாய் போகணும், உங்களுக்கு வேணும்னா நீங்களே போய் குடிங்கணு சொல்லிருக்க வேண்டிது தான?"
ஆளாளுக்குக் கேள்விகள் கேட்க, கிழவி சொல்வந்த நீதி பாதியில் நின்றது. அவளும் யோசிக்கத் தொடங்கினாள்.
"ஆமா புள்ளைகளா.. இந்த ஒலகமே இப்படி பொய்யான மனுசங்களால தான் நிறைஞ்சிருக்கு. கண்ணுக்குப் பின்னால அக்கிரம, அநியாயங்களை பண்ணிட்டு, கண்ணுக்கு எதிர்ல நல்லவங்களா காட்டிக்கறாங்க.. அந்த ராஜாவ மாதிரி... அவனை நம்பிப் போயி நிறையப் பேர் கஷ்டத்துல மாட்டிக்கறாங்க.. அந்த சிப்பாயை மாதிரி.. நம்ம வாழ்க்கைலயும் இந்த மாதிரி ரெண்டுவேஷம் போடற மனுசங்க வருவானுக புள்ளைகளா... நீங்கதான் கவனமா இருக்கணும்.. என்கிட்ட கேள்வி கேட்ட மாதிரி, எல்லார்கிட்டவும் தைரியமா எதிர்த்துக் கேள்வி கேட்கணும். உண்மையைத் தெரிஞ்சிக்கணும். பெத்தவங்க, பெரியவங்க சொல்லுறதாவே இருந்தாலும், தப்புனு தோணுச்சுனா செய்யக் கூடாது.. புரிஞ்சுதா?"
"ம்ம்.. புரிஞ்சுது பாட்டி..!"
"இப்ப எல்லாரும் பத்திரமா வீட்டுக்குப் போங்க.. பாட்டிக்குத் தூக்கம் வந்துருச்சு.."
உச்சிக்குடுமி, பரட்டைத்தலை, சிவப்பு ரிப்பன் எல்லோரும் ஓட, கதையில் இன்று தனக்குப் புதிதாக நீதி கற்றுத்தந்த பிள்ளைகளை நினைத்தபடி குடிசைக்குள் போனாள் கிழவி.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top