12 மாற்றம்
12 மாற்றம்
தன் மேஜையின் மீது இருந்த பேப்பர் வெயிட்டை உருட்டியபடி, இந்த வழக்கில் ஓவியன் எந்த விததில் சம்பந்தப் பட்டிருக்க கூடும் என்று யோசித்துக் கொண்டிருந்தான் முருகன். ஓவியனின் அக்கா, அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப் பட்டிருப்பாதாக ஜிஎம் மருத்துவமனையின் வரவேற்பளார் பெண் கூறினாள். ஆனால் ஓவியனோ தன் நண்பனை பார்க்க வந்ததாய் பொய் கூறினான். தன் அக்காவை பற்றி அவன் மறைக்க வேண்டிய காரணம் என்ன? மறைக்கும் அளவிற்கு அதில் என்ன இருக்கிறது? முருகனுக்கு ஓவியனின் அக்காவை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் மிகுந்தது. ஓவியனின் அக்காவை பற்றி தான் விசாரிப்பது ஓவியனுக்கு தெரிய வந்தால், அது நிச்சயம் ஓவியனுக்கு கோபத்தை உண்டாக்கும். ஆனால் விசாரிக்காமல் எப்படி தெரிந்து கொள்வது? ஓவியனை சந்தேகப்படுவது நல்லதா? அவன் அந்த விஷயத்தை மறைக்கிறான் என்றால், நிச்சயம் அதற்கு ஒரு நியாயமான காரணம் இருக்கும். முருகனுக்கு தெரிந்தவரையில், தனது பதவி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யக்கூடியவன் அல்ல ஓவியன். அது அவன் சொந்த விஷயமாக இருக்கும் வரையில், அதை மறைத்து வைக்க அவனுக்கு எல்லா உரிமையும் இருக்கிறது. ஆனால், அது வழக்கு சம்பந்தப்பட்டது என்று வந்தபின், அதை ஏன் அவன் மறைத்து வைக்க வேண்டும்? அனைத்துப் புள்ளிகளையும் அவன் இணைத்து பார்க்கலாமே...? அல்லது அவன் ஏற்கனவே நினைத்து பார்த்து விட்டானோ? இந்த வழக்கிற்குள் ஒரு ஹேக்கரை அழைத்து வந்தது ஓவியன் தான்... அதுவும் அவனது சொந்த விருப்பத்தின் பெயரில்... ஹேக்கரின் உதவியுடன் இந்த வழக்கு சம்பந்தப்பட்டமான ஏதோ ஒரு விஷயத்தை அவன் நிச்சய படுத்திக் கொள்ள விரும்புகிறான் போல் தெரிகிறது. கொலை செய்யப்பட்ட அனைத்து பெண்களும், திருமணமான ஒரு ஆணுடன் கள்ளத்தொடர்பில் இருந்தவர்கள். இது சம்பந்தமான விஷயத்தைப் பற்றி பேசும்போதெல்லாம், கோபம் கொண்டு, ஓவியன் தனது சுயக்கட்டுப்பாட்டை இழப்பதை அவனும் கவனித்திருக்கிறான். ஆஸ்பயர் பிரமோட்டர்ஸ் மேனேஜர், அகோரமூர்த்தியின் மீது அவன் கோபமாய் பாய்ந்தானே... அது ஒரு காவல் அதிகாரி செய்ய வேண்டிய வேலை இல்லையே... தான் சேகரித்த விபரங்களை இன்னும் ஓவியன் ஆய்வாளரிடம் சமர்ப்பிக்காமல் வைத்திருக்கிறான். ஓவியனின் மனதில் என்ன தான் இருக்கிறது? ஓவியன் இப்படி அமைதியாய் இருந்தால், கொலைகாரன் தனது பணியை தொடர்ந்து செய்து கொண்டு தானே இருப்பான், என்று எண்ணினான் முருகன்.
.....
யாரிடமோ ஃபோனில் எரிச்சலுடன் பேசிக் கொண்டிருந்தான் பிரின்ஸ்.
"சரிங்க சார்..."
*என்ன?* என்பது போல் அவனிடம் சைகையால் கேட்டான் ஓவியன்.
"சரிங்க சார். நான் வரேன்" என்று அழைப்பை துண்டித்தான்.
"என் பாஸுக்கு நான் அவசரமா வேணுமாம்..."
"நீ வேணுமா? எதுக்கு?"
"வேற எதுக்கு? எவன் கிட்ட இருந்தாவது டேட்டாசை திருடத்தான்"
"சரி, நீ போய்ட்டு வா. ஏதாவது தேவைனா நான் உனக்கு கால் பண்றேன்"
"ரொம்ப த்ரில்லிங்கான ஒரு கதையோட ரெண்டாவது பாகத்தை நான் மிஸ் பண்ணப் போறேன்..." என்றான் பிரின்ஸ்.
"கவலையே படாத. இன்னும் கொஞ்ச நாள்ல முழு கதையையும் நீ நியூஸ் பேப்பர்ல படிச்சு தெரிஞ்சிக்குவ"
"நெஜமா தான் சொல்றியா?"
"நெஜமா தான்..."
"என்கிட்ட மொத்த கேஸ் டீடைல்சும் இருக்கு. ஏதாவது வேணும்னா எனக்கு ஃபோன் பண்ண தயங்காதே. நிச்சயம் நான் ஹெல்ப் பண்றேன்"
"தேங்க் யூ..."
"முக்கியமா, உன்னோட ப்ரொபோசல் ரிசல்ட் என்ன ஆச்சுன்னு சொல்ல மறந்துடாத"
"ஷ்யூர்" என்று ஓவியன் கூற, இருவரும் தங்களது முஷ்டிகளை இடித்துக் கொண்டார்கள்.
மறுநாள் காலை
ஆழ்ந்த யோசனையுடன் வழக்கமான பூஜை வேலைகளை செய்து கொண்டிருந்தாள் தூரிகை. கைபேசி மணி அடிக்கும் பொழுதெல்லாம் அது கொலைகாரனின் அழைப்பாக இருக்குமோ என்ற பீதி எழுந்தது அவளுக்கு. 'என்னை திருமணம் செய்து கொள்' என்று ஓவியன் கேட்ட பிறகு அவள் தன் தூக்கத்தை இழந்திருந்தாள். ஆனால் அதன் பிறகு அவளுக்கு கொலையாளியிடம் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை. அவன் அவளை ட்ராக் செய்வதை நிறுத்தி விட்டானா? அல்லது, ஓவியன் அவளிடம் கேட்டது குறித்து அவனுக்கு தெரியாதா? யார் அந்த கொலைகாரன்? அவன் ஏன் பெண்களை குறி வைத்துக் கொல்கிறான்? அவன் கல்பனாவையும் கொன்றிருக்கிறான். அவளுக்கு தெரியும், கல்பனா எப்படிப்பட்ட பெண் என்பது. ஒருவேளை அவன் கொன்ற அத்தனை பெண்களும் *அப்படிப்பட்டவர்கள்* தானோ? அவன் ஒழுக்கம் கெட்ட பெண்களை வெறுப்பவனாக இருப்பானோ? அவன் நேரடியாக பாதிக்கப்பட்டவனாக இருக்க வேண்டும். அதனால் தான் அப்படிப்பட்ட பெண்களை கொன்றிருக்க வேண்டும். அப்படி என்றால், அவளுக்கும், அந்த கொலைகாரனுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.
விளக்கை ஏற்றிவிட்டு மேகாவை அழைத்தாள் தூரிகை.
"மேகா... வா சாமி கும்பிடலாம்"
மாட்டேன் என்று தலையசைத்தாள் மேகா.
"ஏன்?"
"நான் சாமி கும்பிட மாட்டேன்"
"எனக்கு பிடிச்சவங்க எல்லாரையும் அவங்க என்கிட்டயிருந்து எடுத்துக்கிறாங்க. அம்மா, அப்பா... இப்போ அவங்க உன்னையும் எடுத்துக்க பிளான் பண்றாங்க" என்றாள் கோபமாக.
தன் கண்களில் திரண்ட கண்ணீரை விழுங்கினாள் தூரிகை.
"எனக்கு ஓவியன் அங்கிளை ரொம்ப பிடிக்கும். என்னை அவர்கிட்ட பேச விடாம பண்ணாங்க. எனக்கு அவங்கள பிடிக்கல. நான் அவங்களை கும்பிட மாட்டேன்" என்றாள் உரத்த குரலில்.
அப்பொழுது தான் தூரிகைக்குப் புரிந்தது. அந்த சின்ன இதயத்தில் அவள் ஏற்படுத்தியிருந்த மாற்றம் எவ்வளவு பெரியது என்பது. தன்னுடைய பிரச்சனையிலிருந்து தப்பிக்க வேண்டும் என்பதற்காக, மேகாவின் எண்ணத்தை விஷமாக்கி, மிகப்பெரிய தவறு செய்து விட்டிருந்தாள் அவள்.
"நான் அங்கிள் கிட்ட பேசினா அவங்க ஏன் உன்னை சாகடிப்பாங்க?" என்ற மேகாவை அள்ளி அணைத்துக் கொண்டாள் தூரிகை.
"இல்ல... அவங்க என்னை சாகடிக்க மாட்டாங்க. நான் தான் அவங்களை தப்பா புரிஞ்சுகிட்டேன்..."
"நெஜமாவா?"
"ஆமாம்... பேசாம இருக்கக் கூடாதுன்னு சொன்னதை, பேச கூடாதுன்னு நான் தப்பா புரிஞ்சுகிட்டேன்"
"அப்படின்னா நான் அங்கிள் கிட்ட பேசலாமா?" என்று துள்ளி குதித்தாள் மேகா.
"பேசலாம்"
"ஐ லவ் யூ சாமி... தேங்க்யூ சோ மச்"
"ஆனா, நீ எதுக்காக அவர் கிட்ட பேசணும்னு நினைக்கிற?"
"ஏன்னா, அவர் அப்பா மாதிரி இல்ல. நான் பேசினா கேக்குறார்"
மென்று விழுங்கினாள் தூரிகை. அவள் கூறுவது உண்மை தான். அவள் பேசியதை எப்பொழுதும் கார்மேகம் காது கொடுத்து கேட்டதே இல்லை. தனது கைபேசியே உலகம் என்று வாழ்ந்தவன் அவன். சில நாட்கள், நடுராத்திரி வரை கூட கைபேசியில் மூழ்கி இருப்பது அவன் பழக்கம். அவளது அண்ணி கொண்டல், எப்பொழுதும் அதை பற்றி குறை கூறிக்கொண்டே இருந்தாள். ஆனால், அவன் திருமணமான ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருப்பான் என்பது அவர்கள் எதிர்பாராதது.
"ஜாலி... நான் அங்கிள் கிட்ட பேசுவேன்" என்றாள் மேகா.
அப்பொழுது யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்டது. *மேஜிக் ஹோலின்* வழியாக வெளியே பார்த்த தூரிகைக்கு அங்கு ஓவியன் நின்று கொண்டிருப்பதை பார்த்து ஒருவித பதட்டம் ஏற்பட்டது. அதற்கு காரணம் பயமல்ல. திருமணத்தை பற்றி பேசிய பிறகு, இப்பொழுது தானே அவள் அவனை பார்க்கிறாள். நீண்ட மூச்சை இழுத்து விட்டு, கதவை அகல திறந்தாள். அவன் எதுவும் கூறுவதற்கு முன்,
"அங்கிள்ள்ள்ள்..." என்று ஓடிச்சென்று அவன் காலை கட்டிக் கொண்டாள் மேகா.
அவளை ஆச்சரியமாய் பார்த்த ஓவியன், தூரிகையை நோக்கி நம்ப முடியாத பார்வையை வீசினான். இந்த மாற்றத்தை எப்படி எடுத்துக் கொள்வது என்று அவனுக்கு புரியவில்லை. மேகாவின் முன் மண்டியிட்டு அமர்ந்தான்.
"என்கிட்ட பேசுவியா?" என்றான்.
"ஆமாம், உங்க கிட்ட பேச சொல்லி சாமி சொல்லிட்டாங்க"
அவனது பார்வை மேகவிடமிருந்து, வேறு எங்கோ பார்த்துக் கொண்டு நின்ற தூரிகைக்கு தாவியது. மேகா தன்னிடம் பேசியது, என்னை திருமணம் செய்து கொள் என்று தான் தூரிகையிடம் கூறியதற்கான பதில் இல்லை என்று அவனுக்கு புரிந்தது. மேகாவை தூக்கிக் கொண்டு எழுந்து நின்ற ஓவியன்,
"தேங்க்யூ தாயே..." என்றான் தூரிகையை பார்த்தபடி.
"மேகு, உனக்கு ஸ்கூலுக்கு டைம் ஆகுது. போய் கிளம்பு" என்றாள் தூரிகை.
"நீ போ. நம்ம ஈவினிங் பேசலாம். ஓகே?" என்றான் ஓவியன்.
"ஒக்க்க்கி"
அவன் கையில் இருந்து இறங்கி, உள்ளே ஓடிப் போனாள் மேகா.
"இதுக்கு என்ன அர்த்தம்?" என்றான் ஓவியன்.
"மேகா கடவுளை வெறுக்க வேண்டாம்னு தான்..."
"அந்த சின்ன குழந்தை மனசை எவ்ளோ கஷ்டப்படுத்தி இருக்கீங்கன்னு இப்பவாவது புரிஞ்சுகிட்டீங்களே... நீங்க எதார்த்தத்தை புரிஞ்சிக்குவீங்கன்னு நம்புறேன்"
"நான் உங்க கிட்ட பேசணும்"
ஆச்சரியத்தில் புருவம் உயர்த்தினான் ஓவியன். அவள் பேச நினைப்பது கொலைகாரனை பற்றியா? அல்லது திருமணத்தைப் பற்றியா? எதுவாக இருந்தாலும் அவனுக்கு சம்மதமே.
"காத்திருக்கேன்" என்றான்.
"மேகாவை ஸ்கூலுக்கு அனுப்பிட்டு வரேன்"
"சரி "
ஓவியனை பற்றி யாரிடமும் எதுவும் கூறக்கூடாது என்று மேகாவை எச்சரித்து அவளை பள்ளிக்கு அனுப்பி விட்டு வந்தாள் தூரிகை. அதற்கு ஒப்புக்கொண்ட மேகா, சந்தோஷமாய் பள்ளிக்குச் சென்றாள்.
தூரிகை லிஃப்ட்டில் இருந்து வெளியே வந்த போது, தனது வீட்டின் சுவற்றின் மீது சாய்ந்த படி அவளுக்காக காத்திருந்தான் ஓவியன். அவன் முன் வந்து நின்றாள் தூரிகை.
"நீங்க என்கிட்ட பேசணும்னு சொன்னீங்க."
ஆமாம் என்று தலையசைத்தாள்.
தன் வீட்டை நோக்கி கையை நீட்டினான் ஓவியன். உள்ளே வந்த பின் அவளை அமரச் சொல்லிவிட்டு, சமையலறைக்குச் சென்று இரண்டு குவளை தேநீருடன் வந்தான். அதில் ஒன்றை அவளிடம் கொடுத்துவிட்டு,
"சொல்லுங்க" என்றான்.
"நான் உங்ககிட்ட பேசணும்னு சொன்னது கில்லரை பத்தி"
தேநீர் பருகுவதை நிறுத்திவிட்டு அவளை நோக்கி ஒரு பார்வை வீசினான்.
"நீங்க அவருக்கு தண்டனை வாங்கி கொடுக்காதீங்க" என்ற தூரிகையை நம்ப முடியாமல் பார்த்த ஓவியன்,
"எக்ஸ்கியூஸ் மீ... என்ன சொன்னீங்க?" என்றான்.
"அவன் நடத்தை கெட்டவங்களை தானே கொலை செய்றான்? அதுல என்ன தப்பு இருக்கு? அப்படிப்பட்ட பொம்பளைங்களை கொல்லனும் தான்..."
"ஓ..."
"எனக்கே அவளை கொல்லணும்னு..." என்று கோபத்துடன் கூறியவள் அதை முடிக்காமல் பாதியில் நிறுத்தினாள். அவளது பலவீனத்தை அமைதியாய் பார்த்துக் கொண்டிருந்தான் ஓவியன்.
"அவன் உங்களை கொல்ல முயற்சி பண்ணதை மறந்துட்டீங்களா?"
"அவன் என்னை வார்ன் பண்ணான். அவ்வளவு தான்... அவன் நினைச்சிருந்தா, தடையமே இல்லாம என்னை அழிச்சிருக்க முடியும். ஆனா அவன் அப்படி செய்யல"
"உங்களுக்கே இதெல்லாம் கொஞ்சம் ஓவரா தெரியலையா?"
"இல்ல... ஏன்னா, என்னை மாதிரி நல்ல பெண்ணை அவன் கொல்ல மாட்டான்னு எனக்கு நம்பிக்கை இருக்கு"
அதைக் கேட்டு புன்னகைத்த ஓவியன்,
"அவனுக்கு தண்டனை வாங்கி கொடுக்குறதை பத்தி அப்புறம் யோசிக்கலாம். என்ன நடந்துச்சுன்னு முதல்ல சொல்லுங்க"
அப்பொழுது ஓவியனுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. காலதாமதம் செய்யாமல் அந்த அழைப்பை ஏற்றான். ஏனென்றால், அது மருத்துவமனையில் இருந்து வந்தது.
"சொல்லுங்க டாக்டர்"
"நிலைமை கொஞ்சம் சீரியஸ். நீங்க உடனே வரணும்"
"ஓகே டாக்டர்" என்று அழைப்பை துண்டித்த ஓவியன்,
"நான் உடனே கிளம்பியாகனும்" என்று எழுந்து நின்றான்.
"உங்களுக்கு அப்ஜக்ஷன் இல்லனா நானும் உங்க கூட வரலாமா?" என்றாள் தூரிகை.
சரி என்று தலையசைத்தான் ஓவியன். இருவரும் மருத்துவமனைக்கு கிளம்பிச் சென்றார்கள்.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top