11 ஓவியன் யார்?
11 ஓவியன் யார்?
ஓவியனின் முகத்தில் தவழ்ந்த புன்னகையை பார்த்த பிரின்ஸ், விழி விரித்தான்.
"எங்கடா மச்சான் போன? திடீர்னு ஆள் காணாம போயிட்ட?"
"நீ ஒரு பொண்ண பத்தி கேட்ட இல்ல?"
"ஆமாம்ம்ம்ம்ம்" என்றான் ஆர்வத்துடன்.
"அவங்ககிட்ட ப்ரொபோஸ் பண்ண போயிருந்தேன்" என்றான் ஓவியன்.
"என்ன்னனது? ப்ரொபோஸ் பண்ண போனியா? அதனால தான் நான் அவங்களைப் பத்தி கேட்டப்போ ஒண்ணுமே சொல்லலையா நீ?"
தன் உதடு மடித்து, ஆமாம் என்று தலையசைத்தான்.
"நீ அவங்களை லவ் பண்றேன்னா என்கிட்ட சொல்ல வேண்டியது தானே?" என்று அவன் முதுகில் குத்தினான் பிரின்ஸ்.
புன்னகைத்தான் ஓவியன்.
"ஒத்துக்கிட்டாங்களா?" என்றான் பிரின்ஸ் ஆர்வத்துடன்.
"ஒத்துக்குவாங்க"
"உனக்கு எப்படி தெரியும்? அவங்களும் உன்னை காதலிக்கிறாங்களா?"
"இல்ல"
"அப்படின்னா என்ன செய்யப் போற?"
தெரியவில்லை என்பது போல் தலையசைத்தான்.
"அவங்க பின்னாடி சுத்த போறியா? அப்படி செய்யறதா இருந்தா, என்கிட்ட ஏகப்பட்ட ஐடியாஸ் இருக்கு"
"உன்னோட ரோமியோ ஐடியாஸை உன்கிட்டயே வச்சுக்கோ. அவங்க அப்படிப்பட்ட பொண்ணு இல்ல"
"காதல்னு வந்துட்டா எல்லா பொண்ணுங்களும் ஒரே டைப் தான் மச்சான். பொண்ணுங்களுக்கு ஜென்டில்மேனை விட ரோமியோவை தான் பிடிக்கும்"
"எனக்கு உன்னோட ஹெல்ப் தேவைப்பட்டா நிச்சயம் கேட்கறேன். இப்போ என்னோட வேலையில என்னை கான்சன்ட்ரேட் பண்ண விடு"
"நடத்து"
"அந்த கில்லரை உன்னால ட்ராக் பண்ண முடிஞ்சுதா?"
"அது ரொம்ப பெரிய சேலஞ்சா இருக்கு மச்சான்... என்னால அவன் லொகேஷனை டிராக் பண்ணவே முடியல. அவன் சாட்டிலைட் ஃபோன் யூஸ் பண்றானோன்னு எனக்கு சந்தேகமா இருக்கு"
"சாட்டிலைட் ஃபோனா? அது ரொம்ப காஸ்ட்லி ஆச்சே?"
"காசு கொடுத்து வாங்குனா காஸ்ட்லி தான். ஆனா அசெம்பிள் பண்ணா காஸ்ட்லி கிடையாது"
"அதை அசெம்பிள் பண்ண முடியுமா?"
"அட நீ வேற... இப்பல்லாம் ஸ்கூல் பசங்களே, சயின்ஸ் ப்ராஜெக்ட்டுக்கு தீப்பெட்டி சைஸ்ல ராக்கெட் செஞ்சிடுறாங்க..."
"ஆச்சரியமா இருக்கு"
"நம்ம நாட்டுல திறமைசாலிகளுக்கு பஞ்சமில்லை. ஆனா அந்த திறமை எல்லாம் தப்பான வழியில் பயன்படுறது தான் வேதனை"
"அவனை நம்ம டிராக் பண்ண வழியே இல்லையா?"
"ஒரே ஒரு வழி தான் இருக்கு... ஹை ஃப்ரீக்குவன்சி ட்ராக்கிங் டிவைஸ் இருந்தா பண்ணலாம்"
யோசனையுடன் தலையசைத்தான் ஓவியன்.
.....
தூரிகையின் மனம் பெரும் சுழலில் சுழன்று கொண்டிருந்தது. எவ்வளவு சுலபமாய் என்னை திருமணம் செய்து கொள்கிறாயா என்று கேட்டுவிட்டார் ஓவியன்? அவருக்கு என்ன பைத்தியமா? திருமணம் என்பது அவ்வளவு சாதாரண விஷயமா? திருமணம் என்பது வாழ்நாள் பாதுகாப்பிற்கான எழுதப்படாத ஒப்பந்தம் என்பது உண்மைதான். ஆனால், ஒரு வழக்கு அதற்கு அளவுகோலாக இருக்க முடியாது. அவளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதற்காக தான் அவளை அவர் திருமணம் செய்து கொள்ள நினைக்கிறாரா? அல்லது அது வெறும் சாக்கா? அவர் எத்தனையோ வழக்குகளை கையாளுகிறார். அது சம்பந்தப்பட்ட எத்தனையோ பேருக்கு பாதுகாப்பு இல்லாமல் இருக்கலாம். அத்தனை பேருக்கும் அவர் இந்த விதத்தில் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று நினைப்பது சாத்தியமில்லாத ஒன்று. அப்படி இருக்கும் போது, எதற்காக அதை அவளுக்காக அவர் செய்ய நினைக்கிறார்? ஒருவிதத்தில் அவர் கூறியது உண்மை. மேகாவுக்கு அவர் ஒரு நல்ல மாமாவாக இருப்பார். இந்த பாதுகாப்பற்ற உலகில் யாரையும் நம்ப முடியாது. இங்கு அனைவரும் சுயநலவாதிகள் தான். அவள் வேறு யாரையாவது திருமணம் செய்து கொண்டால், அவளது கணவன், ஓவியனைப் போல் மேகாவை நடத்துவான் என்று சொல்வதற்கில்லை. என்ன குழப்பம் இது? பதட்டத்துடன் நகம் கடித்தாள் தூரிகை.
அவள் சமைத்த உணவை, முகத்தை சுளித்தபடி சாப்பிட்டுக் கொண்டிருந்த மேகாவின் மீது அவள் பார்வை சென்றது.
"அத்தை, எனக்கு நாளைக்கு நூடுல்ஸ்சே போதும்" என்றாள் அவள்.
ஐயோ என்றானது தூரிகைக்கு. சமைப்பது தான் உலகிலேயே கடினமான விஷயம். எவ்வளவு சுலபமாய் அவள் தனது அண்ணியை கிண்டல் செய்திருக்கிறாள்...! அவரிடமிருந்து அவள் சமையல் கற்றுக் கொண்டிருந்திருக்க வேண்டும். ஆனால் அவர் எப்பொழுதுமே அவளை சமையலறையில் வேலை வாங்கியதே இல்லை. எவ்வளவு இனிமையானவள் அவளது அண்ணி...! தூரிகையை தன் உடன் பிறந்த சகோதரியை போல் நடத்தியவள். இந்த காலகட்டத்தில் அவ்வளவு சிநேகமான அண்ணி கிடைப்பது அரிதானது. அந்த விதத்தில் அவள் கொடுத்து வைத்தவள். ஆனால் அவள் அண்ணன் கார்மேகத்திற்கு அவளது மதிப்பு தெரியவில்லை. எவ்வளவு ஆழமாய் அவளது அண்ணி கார்மேகத்தை நேசித்தாள்...! அவர்கள் எவ்வளவு சந்தோஷமாய் இருந்தார்கள்...! கார்மேகத்தின் மனதில் தோன்றிய காமத்தால் அந்த குடும்பம் அழிந்து போனது.
தான் ஒரு குடும்பத்தை சீரழித்துக் கொண்டிருக்கிறோம் என்று கல்பனா போன்ற பெண்கள் ஏன் புரிந்து கொள்வதில்லை? தன்னை நேசிக்கக்கூடிய கணவன் கிடைக்கவில்லை என்பதற்காக, அடுத்தவளின் கணவனை பறிப்பது எந்த விதத்தில் நியாயம்? எதிர்பாராத விதமாய், கல்பனாவுக்கு தகுந்த தண்டனை கிடைத்து விட்டது. ஆனால் இந்த கொலைகளை எல்லாம் செய்வது யார்? எதற்காக அவன் இதையெல்லாம் செய்கிறான்? அவனுக்கு என்ன வேண்டும்? இதையெல்லாம் செய்வதால் அவனுக்கு கிடைப்பது என்ன? ஓவியன் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கேட்டது குறித்து அவனுக்கு தெரிந்தால் என்ன ஆகும்? மறுபடி அவளை கொல்ல முயற்சிப்பானோ? ஓவியன் அவளை அந்த கொலைகாரனிடமிருந்து காப்பாற்றுவானா?
அப்பொழுது அவளது துப்பட்டாவை பிடித்து இழுத்தாள் மேகா.
"என்னை பார்க்குக்கு கூட்டிக்கிட்டு போ அத்தை"
"நாளைக்கு போகலாம்"
"இப்பவே போலாம் அத்தை"
"சரி வா"
மேகாவை அழைத்துக் கொண்டு பூங்காவிற்கு வந்தாள் தூரிகை. ஓடி சென்று ஊஞ்சலில் ஆட துவங்கினாள் மேகா. அங்கிருந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்து கொண்டாள் தூரிகை. மாலை நேர பூங்காற்று அவள் மனதிற்கு இதம் அளித்தது.
அப்பொழுது தன்னை எங்காவது அழைத்துச் செல்லும்படி தொல்லை செய்த பிரின்ஸுடன் அங்கு வந்தான் ஓவியன். பூங்காவில் அமர்ந்திருந்த தூரிகையை பார்த்ததும் அவனது கால்கள் வேகம் இழந்தன. அவனுக்கு முதுகை காட்டிக் கொண்டு எதிர் புறமாய் அமர்ந்திருந்தாள் தூரிகை. ஓவியனிடம் பேசியபடி வந்த பிரின்ஸ், அவனுக்கு பதில் கிடைக்காததால் அவனை நோக்கி திரும்பினான். அவன் பூங்காவில் அமர்ந்திருந்த பெண்ணை பார்த்தபடி நின்றிருந்ததை கண்டு அவன் தோளைத் தட்டினான்.
"ஹாங்...?"
"நீ செய்யறது கொஞ்சம் கூட சரியில்ல மச்சான்"
"என்ன செஞ்சேன்?"
"ஒரு பொண்ணு கிட்ட ப்ரொபோஸ் பண்ணிட்டு, வேற ஏதோ ஒரு பொண்ணை உத்து பார்த்துகிட்டு இருக்க..."
"அவங்க தான் அது?"
"ஓ சிஸ்டரா?"
தூரிகையை சிஸ்டர் என்று அழைத்த பிரின்சின் நாகரீகம் ஓவியனுக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆமாம் என்று தலையசைத்தான்.
"ஒரு கேம் பிளே பண்ணலாம்..."
"அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்"
"சும்மா இரு... நான் உன் பேரை சொல்லி கூப்பிடுறேன்... அவங்க மட்டும் திரும்பி பாத்துட்டா, நிச்சயம் உன்னோட ப்ரொபோசலை ஏத்துக்குவாங்க... என்ன சொல்ற?"
"இந்த குழந்தைத்தனமான விளையாட்டில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்ல"
"எனக்கு இருக்கு. நீ போய் பைக்கை ஸ்டார்ட் பண்ணு" அவனைப் பிடித்து தள்ளினான் பிரின்ஸ்.
தனது இருசக்கர வாகனத்தை நோக்கி நடந்தான் ஓவியன். அவனுக்கு அதில் எல்லாம் நம்பிக்கை இல்லாவிட்டாலும் கூட அவனது இதயம் எதிர்பார்ப்புடன் வேகமாய் துடித்தது.
"ஓவியன்...." என்று அவனுக்கு பின்னால் இருந்து கத்தினான் பிரின்ஸ்.
அனிச்சையாய் அவனை நோக்கி திரும்பினாள் தூரிகை. ஓவியனின் இதழ்கள், அழகிய புன்னகையை தாங்கி விரிந்தன.
ஓவியினை நோக்கி ஓடிச் சென்ற பிரின்ஸ், அவன் வண்டியில் ஏறிக் கொண்டு,
"அவங்க உன்னை பாத்துட்டாங்க மச்சான்..." என்றான்.
வண்டியை ஸ்டார்ட் செய்த ஓவியன், அவளைப் பார்த்து புன்னகைத்தபடி அங்கிருந்து சென்றான்.
......
தன் கடமையை உள்ளார்ந்து செய்யக் கூடிய நேர்மையான அதிகாரி முருகன். தனது கடமையை தரமாய் செய்பவன். மேலதிகாரியின் கட்டளைக்காக காத்திருக்காதவன். தன்னால் முடிந்த அளவிற்கு சிறப்பாய் செயல்பட நினைப்பவன். இப்பொழுது அவர்கள் கையாண்டு கொண்டிருக்கும் வழக்கை பொறுத்தவரை, ஓவியனின் பாரத்தை தன்னால் முடிந்த அளவிற்கு குறைக்க நினைத்தான். அவர்களுக்கு தேவையான சில குறிப்புகளை பிரின்ஸ் கொடுத்த பிறகு, அந்த வழக்கு சார்ந்த முடிச்சுகளை அவிழ்க்கும் ஆர்வம் அவனுக்கு அதிகரித்தது. அவனது மூளையை கசக்கத் தொடங்கினான். அந்த வழக்கிற்கு சம்பந்தப்பட்ட அனைத்து நபர்களை பற்றிய விவரங்களையும் ஆராய துவங்கினான்.
முதலில் கொலையானவள், சுபாஷினி.
அவளது கணவன் அகிலன்.
அவளுடன் தொடர்பில் இருந்தவன் மனோகரன். அவன் ஒரு வக்கீல்.
அவனது மனைவி சாதனா.
முதல் வழக்கு சம்பந்தமான அனைத்து தொலைபேசி பேச்சுக்களையும் ஆராந்தான். அதுவும் நான்சியின் வழக்கில் இருந்தது போன்ற அதே வகை பேச்சுக்கள் தான். தாராளமாய் *A* சான்றிதழ் வழங்கலாம். அலுப்பாய் இருந்தது முருகனுக்கு. *இப்படிப்பட்ட* விஷயங்களை எல்லாம், தன் கணவன் அல்லாத ஒரு ஆணிடம், எப்படி ஒரு பெண்ணால் இவ்வளவு வெளிப்படையாய் பேச முடிகிறது?
மனோகர் ஒரு வக்கீல் என்பதால் அவனது கைபேசியில் ஏகப்பட்ட எண்கள் இருந்தன. அவனுக்கு வேறு ஒரு பெண்ணிடம் இருந்தும் தொடர்ச்சியாய் நிறைய குறுஞ்செய்திகள் வந்திருந்தது. அது அவனது மனைவி சாதனா. அவையெல்லாம் சோகமான, இதயத்தை பிழியும் குறுஞ்செய்திகள். மனோகருக்கு சுபாஷினியுடன் இருந்த கள்ள உறவு பற்றி அவன் மனைவிக்கு தெரிந்திருக்கிறது. பாவம் அந்த பெண்மணி. அவள் மீது முருகனுக்கு பரிதாபம் ஏற்பட்டது.
அப்பொழுது அவனது கவனத்தை ஒரு விஷயம் கவர்ந்தது. அந்த பெண்மணி இரண்டு எண்களை மட்டும் *ஃபேவரைட்* பட்டியலில் சேகரித்து வைத்திருந்தார். அந்த எண்களை ஆராய்ந்தான் முருகன். அவனது விழிகள் அதிர்ச்சியில் விரிந்தன. அதில் *தம்பி* என்ற பெயரில் ஓவியனின் கைபேசி எண் சேகரிக்கப்பட்டிருந்தது.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top