31
தித்திக்குதே
கார் அவளை ஏற்றிக்கொண்டு லண்டன் விமான நிலையத்திலிருந்து நகருக்குள் சென்றுகொண்டிருந்தது.
மஹிமா தூங்கிவிட்டதால் பல அற்புதமான காட்சிகளை அவள் காணவில்லை. தேம்ஸ் நதிப் பாலத்தில் கார் சென்றபோது, இருபுறமும் கடல் போல விரிந்திருந்த நதியில் மிதந்த படகுகள் , 'வெஸ்ட்மினிஸ்டர் அபே'யில் நடந்துகொண்டு இருந்த நாட்டிய விழா, என அனைத்தையும் தவற விட்டிருந்தாள்.
அவளது பயணக் களைப்பும், அசதியும், அந்நாளின் அதிர்ச்சிகளும் அவளை அடித்துப் போட்டாற்போல உறங்கச் செய்தன.
நாராயணன் பேசிக்கொண்டே வந்து, ஒருகட்டத்தில் அவளிடம் பதில் வராமல் போகவும் சந்தேகமாகத் திரும்பிப் பார்த்து, சிரிப்புடன் தலையில் தட்டிக்கொண்டான். அவளை எழுப்பாமல் குறைவான சத்தத்தில் மெல்லிசை ஒன்றைத் தவழவிட்டு, லண்டனின் சீதோஷ்ணத்தை ரசித்தபடி காரைச் செலுத்தினான்.
கார் லண்டனின் மையப்பகுதியில் Coniston roadல் திரும்பி, அங்கிருந்த பழமையான ஒரு வீட்டின்முன் நின்றது. வண்டி சட்டென்று நின்றதும் மஹிமா திடுக்கிட்டு விழித்துக்கொண்டாள். கண்களைத் துடைத்துக் கொண்டு சுற்றுமுற்றும் பார்த்தாள்.
"அதுக்குள்ள வந்துட்டோமா நாராயணன்?"
"அ.. மேடம்.. நாராயணன் வேணாம்.. Everyone here calls me Nary"
அவன் சொன்னதைப் புரிந்துகொண்டு, அவள் மறுபடியும் கேட்டாள்.
"Ok. அதுக்குள்ள வந்துட்டோமா Nary?"
அதைக் கேட்கையில் அவளுக்கே சிரிப்பாக இருந்தது.
நேரியாம்... நரி மாதிரி அல்லவா இருக்கிறது!
"ஆமா மேடம். உங்க அப்பா பார்க்கச் சொன்னபடி சேஃப் ஆன 'இல்லு'. ஒன்லி ஃபேமிலிஸ் மாத்ரமே உந்தி. உங்க வீடு சென்டர்கா இருக்கு. வாங்க, வீட்டை பாக்கலாம்."
அவளது பைகளை காரிலிருந்து இறக்கி வைத்தவாறே அவன் பேசினான்.
பின் அவளை உள்ளே அழைத்துச் சென்று, அந்த வீட்டில் நடுவில் இருந்த போர்ஷனைத் திறந்து அவளுக்கு வீட்டைச் சுற்றிக் காட்டினான். அழகாக, ரம்மியமாக இருந்தது வீடு. ஐந்து அறைகள் கொண்டு, அவளது தேவைக்கு அதிகமாகவே இருந்தது.
வீடு முழுக்க ரசனையுடன் அலங்கரிக்கப் பட்டிருந்தது. கிட்ச்சனில் சின்னச் சின்ன தொட்டிகளில் செடிகள் வைத்திருந்தனர். ஜன்னல் வழியே வந்த சூரிய வெளிச்சம், அந்தச் செடிகளில் தங்க முலாம் பூசியது. வரவேற்பறையில் கூட இடுப்புயரத்தில் பூந்தொட்டிகள் இருந்தன. வீட்டில் பின்னால் பால்கனியிலும் க்ரோட்டன்ஸ் குடும்பமாக இருந்தன.
அவள் மெய்மறந்து வீட்டின் ஒவ்வொரு பகுதியையும் ரசித்தாள். இதழ்களில் தானாக புன்னகை அரும்பியது. அவளது சிந்தனைகளைக் கலைக்குமாறு, "ஏன்ட்டி மேடம்.. வீட்டு எப்படி? நச்சிந்தா(பிடிச்சிருக்கா)?" என்றவாறு வந்தான் நேரி.
"ரொம்ப ரொம்ப அழகா இருக்கு நேரி! எனக்கு இந்த வீடே பிடிச்சிருக்கு. நான் இங்கயே இருந்துக்கறேன். ரெண்டல் டாக்குமெண்ட்ஸ் எல்லாம் ரெடி பண்றீங்களா?"
"பண்ணிடலாம் மேடம். அரை மணி நேரத்துல வர்றேன். இங்கயே வெய்ட் பண்ணுங்க."
சொன்னதுபோல அரைமணி நேரத்தில் வாடகை ஒப்பந்தப் பத்திரங்களுடன் வந்தான் அவன். உடன் வீட்டின் உரிமையாளரான இந்திய வம்சாவளி ஆங்கிலேயர்.
சான்றிதழ்களை எல்லாம் சரிபார்த்து, வீட்டைப் பற்றிய அறிவரைகளும் சொல்லி, ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கிக்கொண்டு கிளம்பினார் ஓனர்.
நேரி போகாமல் நின்றான்.
"மேடம் டைம் ஆகுத்துந்தே... மீக்கு லஞ்ச்?"
அ
ப்போதுதான் அவளுக்குமே பசி தெரிந்தது.
"உங்களுக்கு இங்க நல்ல ஹோட்டல் எதாச்சும் தெரியுமா நேரி?"
"ம்... ஒரு ஹோட்டல் உந்தி.." என்றவன் ஏதோ யோசிப்பதுபோல் தெரிந்தது.
"என்ன அதுக்கு?"
"அதி நான்வெஜ் மேடம். மீக்கு ஓகேவா?"
"ஓ! என்னைப் பார்த்தா வெஜிடேரியன் மாதிரி இருக்கா?"
"அப்போ ஓகே. வெள்தாம் மேடம்"
அவர்கள் பொடிநடையாக நடந்து அவன் சொன்ன உணவகத்தை அடைந்தனர்.
"Dorchie restaurant. One of the best places for continental cuisine" என விளக்கமளித்தவாறு அவளை உள்ளே அழைத்துச் சென்றான்.
மஹிமாவுக்கும் அந்த உணவகம் பிடித்திருந்தது. உள்ளே படர்ந்த மெல்லிய வெளிச்சமும் மெல்லிசையும் மேலைநாட்டு உணவின் வாசனையும் அவளுக்குப் பசியூட்டின. இருவரும் சென்று ஒரு ஓரமான இடத்தில் அமர்ந்தனர்.
மஹிமா அவளுக்குத் தோன்றியதை எல்லாம் ஆர்டர் செய்தாள். நேரி பேரரின் காதில் ஏதோ சொல்லிவிட்டு அமர்ந்திருந்தான். அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. அவனிடம் கேட்டபோது அவன் 'பொறு' என்பதுபோல் கைகாட்டினான்.
அவள் கேட்டதை எல்லாம் கொண்டு வந்த பேரர் கூடவே ஒரு தட்டில் பெரிய சாக்லைட் உருண்டை ஒன்றையும் எடுத்து வந்தார். அவள்முன் அதை வைத்து, அதன்மேல் கொதிக்கும் சாக்லேட்டை ஊற்ற, அந்த சாக்லேட் கோளம் உருகி உள்ளே இருந்த கேக்கும், ஐஸ்கிரீமும் தெரிந்தன.
மஹிமா அதிசயித்துப் போனாள். நேரி புன்னகையுடன்,
"Welcome to the city of Royals. Hope you like this suprise" என்றான்.
"I do. I'm grateful for the warm welcome."
உணவருந்திவிட்டு, வீட்டில் அவளைச் சேர்த்துவிட்டு, நேரி அவளிடம் விடைபெற்று கிளம்பிப் போய்விட்டான். மஹிமா தன் துணிமணிகள், புத்தகங்கள் முதலியவற்றை அடுக்கி வைத்தாள். பின்னர் மற்ற போர்ஷன்களுக்குச் சென்று, அங்கிருந்தவர்களுடன் அறிமுகமானாள்.
அந்த வீட்டில் மூன்று பகுதிகள். ஒரு வீட்டில் வயதான ஜப்பானியத் தம்பதியர் வசித்தனர். மற்றொன்றில் ஒரு இளம் அமெரிக்கத் தம்பதியர் தங்கள் இரு குழந்தைகளுடன். ஜானி,ஜூலி என்ற அந்த இரு வாண்டுகளும் மஹிமாவைக் கண்டவுடனே ஒட்டிக் கொண்டன. அவர்களை வழிகாட்டியாக அழைத்துக் கொண்டு, அடுத்த வீதியில் இருந்த பல்பொருள் அங்காடியில் தனக்குத் தேவையானவற்றை வாங்கி வந்தாள். ஏற்கனவே விமான நிலையத்தில் தன் பணத்தை லண்டன் பவுண்ட்களாக மாற்றிக்கொண்டது வசதியாக இருந்தது.
மாலை அந்த ஜப்பானிய தாத்தா பாட்டி அவளையும், அமெரிக்கக் குடும்பத்தையும் விருந்துக்கு அழைத்திருந்தனர். அவர்களது கலாச்சாரப்படி புதிதாக அறிமுகமான நண்பர்கள் ஒன்றாக உணவருந்தினால் நட்பு பலப்படுமாம்.
உணவு எளிமையாக, இயற்கை முறை சமையல்படி இருந்தது. வயிற்றுக்கு இதமாக இருந்தது அவர்கள் தந்த மூங்கில் சூப். மஹிமாவுக்கு தனிமையைக் கொடுக்காமல் அவளையும் அவர்களது உரையாடலில் சேர்த்தனர். அதுவே அவளுக்கு நிம்மதியாகவும், ஆனந்தமாகவும் இருந்தது.
இரவு நெடுநேரம் பேசிக்கொண்டு இருந்துவிட்டு, களைப்பாக உறங்கிப் போனாள் அவள். அவளது படுக்கையறை ஹீட்டிங் வசதி கொண்டிருந்தது. லண்டனின் ராத்திரிக் காத்து அவளைத் துன்புறுத்தாமல் அது காக்க, அசந்து உறங்கினாள் மஹிமா.
மறுநாள், நேரி சொன்னதுபோல டாக்சி பிடித்து, அவளது கல்லூரிக்குச் சென்றாள்.
London School of Commerce மிகப் பிரம்மாண்டமாய் அவளை வரவேற்றது. அதன் சுவர்கள் யாவும் கற்களால் கட்டப்பட்டு, அந்தக் கல்லூரியே பழைய கோட்டைபோல் தெரிந்தது. மஹிமாவுக்கு
'ஹேரி பாட்டர்' கதையில் வரும் 'ஹாக்வர்ட்ஸ்' கோட்டை நினைவு வந்தது.
அவள் கண்ணை விரித்து வியப்போடு பார்த்துக்கொண்டே நடந்தாள். வெளியே கோட்டைபோல் தெரிந்தாலும், உள்ளே சகல வசதிகளையும் உள்ளடக்கி, நவீனமயமாக்கப்பட்டிருந்தது அக்கல்லூரி.
அவள் வரவேற்பு மேடை அருகே சென்று, தன் பெயரைக் கூறி, கொண்டுவந்த ஆவனங்களை சமர்ப்பித்தாள்.
அவளை 'அட்மின்' அறைக்குச் செல்லுமாறு அனுப்பி வைத்தனர். அங்கே சென்று காத்திருந்து, பேராசிரியரை சந்தித்து தனது சான்றிதழ்களைக் காட்டினாள். அவர்களும் அவற்றைச் சரிபார்த்துவிட்டு அவளைக் கல்லூரிக்கு வரவேற்பதில் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
அவள் தனது சேர்க்கையை உறுதிசெய்துவிட்டு, கல்லூரியைச் சுற்றிப் பார்க்க நடந்தாள். தன் வகுப்பறையைக் கண்டுகொண்டபின் அங்கிருந்த தோட்டத்தை வேடிக்கை பார்த்து நின்றிருந்தாள். அப்போது திடீரென்று ஒருவன் அவள்முன் வந்து கத்தினான்.
"Go back! You are not welcome here."
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top