1

நான்--நீ

ஒரு அக்டோபர் நாள்...

சூரியன் துயில்விழித்து 'திங்கள் கிழமையா இன்னிக்கு' என சற்றே சலிப்புடன் தன் வேலையைத் தொடங்கியது. அதன் கிரணங்கள் மெல்ல தத்தித் தத்தி நகர்ந்து தன் அறையில் தனியாக உறங்கிக் கொண்டிருந்த மஹிமாவின் முகத்தை தொட்டது. பொன்னிற ஒளி முகத்தில் பட்டதும் சன்னமான முனகலுடன் திரும்பிப் படுக்க எத்தனித்தவளை, காபியுடன் அவளறைக்குள் வந்த பங்கஜம் அம்மாள் அதட்டினார்.

"ஏய் மஹிமா! என்ன இது மணி எட்டு ஆகுது இன்னும் தூக்கமா? ஒன்பது மணிக்கு க்ளாஸ்...எழுந்து ரெடியாகு!"

பதினைந்து வருடமாக அவர்கள் வீட்டில் வேலை பார்ப்பதால் வந்த சரளமான அதிகாரம் அது. சிறுவயதில் இருந்தே மஹிமாவைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பில் இருப்பவர் என்பதால், அவர்களுக்கு மஹிமா பற்றித் தெரியாத விஷயம் கிடையாது. அவள் காலை பல்துலக்கும் பற்பசை ஃப்ளேவரில் தொடங்கி, வருடாவருடம் அவள் தாயின் நினைவு நாளன்று அணியும் தங்க வளையல்கள் வரை.

ஆம். மஹிமாவுக்கு நான்கு வயதிருக்கும் போது அவள் அன்னை(அந்நாள் மத்திய அமைச்சர்) ஒரு ஹெலிகாப்டர் விபத்தில் காலமானார். அவர்களுக்கு சுப்புலட்சுமி நினைவாகக் கிடைத்தது அவர் அன்று அணிந்திருந்த வளையல்கள் மட்டுமே. மஹிமா அவளது அம்மாவை நினைவுதெரிந்து பார்த்ததே இல்லை. அன்னை என அவருடன் நேரம் செலவிட்டதும் இல்லை. அவளுக்கு எல்லாமே அப்பா தான்.

"இன்னும் அஞ்சு நிமிஷம்... ஃப்ளீஸ்..." இழுத்து போர்த்திக் கொண்ட அவளைப் பார்த்த பங்கஜத்திற்கு சிரிப்பு தான் வருகின்றது. இருப்பினும் அவளை நேரத்தில் கிளம்பச் செய்வது அவரது கடமையாச்சே! எப்படியோ அவளை அதட்டி உருட்டி மிரட்டி எழுப்பி அவசர அவசரமாக கிளப்பி குளியலறைக்குள் விரட்டினார்.

அவள் சீருடையுடன் தயாராகி வரும்போதே தாமதமாகிவிட்டாலும், விடாமல் சாப்பிட வைத்து அனுப்பிய பின்னர்தான் அவர் ஓய்ந்தார்.

அப்பா ராஜகோபால் வேலையாக மும்பை சென்று ஒரு வாரம் ஆகிறது. Mahi exports and imports நிறுவனர் அவர். மனைவி இறந்த பின்னர் மகள் மட்டுமே உறவு அவருக்கு. ஆனால், தற்போதெல்லாம் மகளிடம் கூட நேரம் செலவிட முடியாத அளவிற்கு வேலை.

என்றாலும், எந்த வேலையில் இருந்தாலும் அவர் மனம் மஹிமாவை நினைக்கத் தவறாது.

---------------

ங்கே.

கேளம்பாக்கத்தில் ஒரு தெருவில், வாசலில் "சர்வா-விஷ்வா" என்ற அழகிய பெயர்ப்பலகை மாட்டியிருந்த சற்றே பழைமையான வீட்டில் விளக்குகள் எப்போதிருந்தோ எரிந்துகொண்டிருந்தன.

சர்வேஸ்வரன் தன் அறையில் அவரது சொந்த அலுவல்களைப் பார்த்துக்கொண்டிருந்தார். சற்றே நிமிர்ந்து சோம்பல் முறித்துவிட்டு நிமிர்கையில் காலை ஏழு மணி ஆனதைக் கடிகாரம் காட்ட, இன்னும் தன் தம்பியின் அறையில் எழுந்துவிட்ட சத்தம் கேட்காததால் வந்து கதவைத் தட்டினார்.

சர்வேஸ்வரன் ஒரு ரியல் எஸ்டேட் டீலர். சென்னைக்குள் அவரை அறியாத வியாபாரப் புள்ளிகள் கிடையாது. மாஃபியா என்று சொல்ல முடியாவிட்டாலும், அவரளவில் கொஞ்சம் கருமை படர்ந்த கைகளே. அவருக்குக் கீழ் ஐந்து அடியாட்கள். தன் அடித்தர வேலையை அவர்களை விட்டுச் செய்வார். எப்போதும் வீட்டைச் சுற்றி ஒரு நாலைந்து பேர்; இரண்டு ஸ்கார்ப்பியோ கார்; அவ்வப்போது வந்து போகும் பெரும்புள்ளிகள்.

பெரிய வசதிகள் இருந்தாலும் தங்கள் பூர்வீக வீட்டிலேயே அவரும் தம்பியும், பெற்றோருடன். 

தந்தை தன் அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றவர். மகனின் தொழில் முறைகள் சிறிது வருத்தம் தந்தாலும், வயோதிகமும் இயலாமையும் அவரை வாயடைக்கச் செய்தது.

அன்னை அன்னபூரணி அன்பின் உருவம். அவருக்குக் கணவனும் மகன்களும் மட்டுமே உலகம். அவருக்கு அவர் மகன் என்ன செய்தாலும் அது சரிதான். தாங்கள் இவ்வளவு செல்வாக்கோடும் பெருமையோடும் வாழ்வது தன் மகனின் உழைப்பாலேதான் என்பது அவரது மாறாத மனநிலை.

தன் கணவன் அரசு வேலையில் இருந்தபோது வராத நல்வாழ்வு, தன் மகன் தலையெடுத்த பின்னர் கிடைத்தபோது, அவருக்கு மகன் நாயகனாகத் தெரிந்தது நியாயம்தானே..

சர்வேஸ்வரனுக்குத் தான் செய்வது சரியா தவறா என்ற விவாதங்களுக்கு விடை தேட நேரமில்லை. தன் தந்தையால் தனக்குத் தரமுடியாத வாழ்க்கையை, தான் தன் தம்பிக்குத் தர நினைத்தார். பாவபுண்ணியங்களில் நம்பிக்கை இல்லாததால் வாழ்க்கை அவருக்குக் கசக்கவில்லை. முப்பதைத் தொட்டுவிட இன்னும் சில மாதங்களே இருந்தாலும், திருமணம் குடும்பம் போன்றவை சர்வேஸ்வரனுக்கு ஆர்வமூட்டவில்லை. பள்ளியில் படிக்கும் தம்பிதான் அவருக்கு உலகம்.

தற்போது அவர் வந்து கதவைத் தட்ட, "வரேண்ணா..." என்கிற தூக்கம் தழுவிய அவனது குரல் அவரை எட்டியது. அதே நேரத்தில் மகனுக்குக் காபி எடுத்து வந்த அன்னபூரணி, "ஆமா...நீயும் இப்படியே கூப்டுக்கிட்டு இரு..அவனும் வரேன்,வரேன்னு சொல்லிட்டுத் தூங்கிட்டே இருக்கட்டும்" என்றவாறு காபியை அவரிடம் தந்துவிட்டு கதவின் கைப்பிடியைத் திருப்ப, அதற்குள் விஷ்வாவே கதவைத் திறக்க, சர்வேஸ்வரன் லேசான புன்னகையுடன் தலையசைத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தார்.

கலைந்த கேசம், தூக்கம் ததும்பும் கண்கள், ஒட்டி ஒட்டித் திறக்கும் இமைகள். கொட்டாவி விட்டவாறே 'குட்மார்னிங்' சொன்ன இளையவனை கோபப் பார்வை பார்த்தார் அன்னபூரணி.

"டேய் விஷ்வா... வாழ்க்கைல ஒரு நாளாச்சு சூரிய உதயத்தை பார்த்திருக்கயா? கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா உனக்கு? +2 படிக்கறடா நீ! இந்த வருஷங்கூட சீக்கிரம் எழுந்து படிக்கத் தெரியாது?" என்று பொரிந்து தள்ளினார். அதைப் பொருட்படுத்தாமல் உள்ளே சென்று கிளம்பத் தொடங்கினான் விஷ்வா.

பள்ளிச் சீருடையில் கூட அழகனாய்த் தெரிந்தான் விஷ்வா. கண்ணாடியில் முகத்தைப் பார்த்துத் தானாக சிரித்துக் கொண்டான். அவன் அம்மா சாயல்தான் அவனுக்கு! எப்படியோ பத்து நிமிடத்தில் கிளம்பி பள்ளிப் பேருந்தில் ஏறும்வரை அம்மாவின் அர்ச்சனை தொடர்ந்தது.

--------------------

நேரம் ஒன்பது மணி.

புனித சேவியர் பள்ளியின் மைதானத்தில் காலை பிரார்த்தனை. நீலவண்ணக் கிரேயானால் கிழித்த கோடுகள்போல் வரிசையாகச் சீருடையுடன் நின்று, காது ஹெட்மாஸ்டரின் உரையைக் கேட்டாலும், மனம் வேறு ஏதேதோ நினைத்துக்கொண்டிருக்க, 'எப்போடா விடுவாங்க' என்று மண்டைகாய்ந்து மருகிக் கொண்டிருந்தனர் மாணவமணிகள். ஒருவழியாக தேசிய கீதம் பாடிக் கூட்டம் கலைய, நிம்மதிப் பெருமூச்சுடன் வகுப்பிற்கு வந்தனர் அனைவரும்.

காலை வருகைப்பதிவு முடிந்து வகுப்பு தொடங்கியது. பதினோரு மணியளவில் ஒரு இடைவேளை. நண்பர்கள் அனைவரும் கதை பேசிக் கொண்டிருக்க, மஹிமா மட்டும் ஏதோ யோசனையில். மஹிமா ஓரளவு நன்றாகவே படிப்பாள். என்றாலும் வெளியில் காட்டிக்கொள்வதே இல்லை.

விஷ்வா தன் நோட்டில் எதையோ கிறுக்கிக் கொண்டிருந்தான். சுமாராகப் படித்தாலும், விளையாட்டுகளில் திறம்பட விளங்கினான் அவன். மேலும் கவிதைகள், ஓவியம் என்று கலைகளிலும் முதலிடமே.

திடீரென விஷ்வா கையில் வைத்து சுழற்றிய பென்சில் முன்னால் பெஞ்சில் வேணியின் பின்னந்தலையில் பட, அவள் "இடியட்" என்று கத்தினாள்.

சத்தத்தில் யோசனை கலைந்த மஹிமா, கண்களால் என்னவென்று வினவினாள். பென்சிலை எடுத்துக் காட்டிய வேணி அதை தனக்குப் பின்னால் இருக்கும் விஷ்வாவைக் குறிவைத்து எறிய, அதை அசிரத்தையாக ஒரு கையில் பிடித்துவிட்டு சிரித்தான் அவன்.

"என்ன மஹி, காலைலயே சிந்தனை? அடுத்தது எந்தக் கம்பெனியை உங்கப்பாக்கிட்ட கேட்கலாம்னு யோசனையா?"

விஷ்வாவின் கிண்டலை கேட்டு சிரித்தாள் மஹி.
"நான் ஏன் கேட்கணும்? கண்ணைக் காட்டுனாலே வாங்கித் தருவார் எங்க டாடி.."

"ஓ.. அப்ப அதுதான் யோசனையா?"

"அதெல்லாம் இல்ல. இன்னும் அஞ்சு மாசத்தில பப்ளிக் எக்ஸாம். அதுக்கப்புறம் நம்ம எல்லாரும் எங்கே இருப்போமோ...எப்டி இருப்போமோ.."

"ம்ம்ம்...அதெல்லாம் எதுக்கு இப்போ...இன்னிக்கு என்ன நடக்கும்னு யோசி. ஹோம்வர்க் பண்ணிட்டயா ?"

மஹிமா எப்போதும் சின்சியர். வீட்டுப்பாடங்கள் செய்ய அவள் தவறுவதே இல்லை. அவளது நோட்டைப் பார்த்து தான் அவள் நண்பர்கள் அனைவரும் எழுதுவர்.

"அச்சோடா...நான் எப்போ எழுதாம வந்திருக்கேன்?"

"அப்பாடா! உன் நோட்ட குடு. என்னால அந்த மிஸ்ஸியம்மா கிட்ட திட்டு வாங்க முடியாது " என்றபடி இயல்பாக அவளது புத்தகப்பையை இழுத்தான் விஷ்வா.

அப்போதுதான் கேண்ட்டீன் சென்று வந்த ஜோஷி, "எந்தாடா கடலை இவிட" என்றபடி வந்தமர்ந்தான். அதற்குள்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top