Part 40

பாகம்  40

குடியரசுத் தலைவரின் கரங்களால், தேசிய நல்லாசிரியர் விருதை பெற்றுவிட்டாள்  இனியா. இனியாவைவிட, பாரியும் இதயாவுமே அதிக சந்தோஷமாக காணப்பட்டார்கள். தனது நண்பர்களிடம், தனது அம்மாவின் பெருமையை, வாய் ஓயாமல் பாடிக் கொண்டிருந்தாள் இதயா. மறுபுறம் இனியா புகழ் மழையில் நனைந்து கொண்டிருந்தாள். தன் மனைவி, புகழ் வார்த்தைகளை தர்மசங்கடத்துடன் எதிர்கொள்வதை, புன்னகையுடன் ரசித்துக்கொண்டிருந்தான் பாரி.

பள்ளியில் இருந்து வீடு திரும்பிய இனியா, தனது வீடு, அலங்கார விளக்குகளால் ஜோலித்துக் கொண்டு இருப்பதை பார்த்து வாயடைத்து போனாள். மேலும், தனது அம்மாவும், அப்பாவும், பாரியின் சித்தப்பா குடும்பத்தினரும் அங்கு இருப்பதை பார்த்த பொழுது, அவள் மேலும் திக்குமுக்காடிப் போனாள்.

அவள் கையில் ஒரு காகித பையியை திணித்து விட்டு, சீக்கிரம் தயாராகி வருமாறு பணித்தான் பாரி. இளம் சிவப்பு நிற டிசைனர் புடவையில் வானத்திலிருந்து இறங்கி வந்த தேவதை போல் காணப்பட்டாள் இனியா.

அவளுடைய அண்ணன் சத்யா, தனது மனைவி அஞ்சலி, மற்றும் மகள் ஷாலினியுடன், பெரிய சைஸ் கேக்குடன் வந்து சேர்ந்தான். அவனைத் தொடர்ந்து குமாரும் தனது குடும்பத்தோடு வந்தான்.

தனக்கு தெரியாமல் மிகப்பெரிய ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதை பார்த்து பிரமித்துப் போனாள்  இனியா.

கேக்கை வெட்டி, தனது கணவனுக்கும் மகளுக்கும் ஊட்டிவிட்டாள் இனியா. ஆதிகேசவனும் சீதாவும் வானத்தில் மிதந்து கொண்டிருந்தார்கள். அவர்களது மகள், இவ்வாறு சிகரத்தை தொடுவாள் என்று அவர்கள் எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை தானே?

தனது அம்மா, அப்பாவிடம் இருந்தும், பாரியின் சித்தி, சித்தப்பாவிடம் இருந்தும் ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டாள் இனியா.  உணர்ச்சி ததும்ப தனது மகளை அணைத்துக் கொண்டாள் சீதா, ஏதோ, அவரே சாதித்து விட்டதைப் போல... இருக்காதா பின்னே...? அவர் இனியாவின் அம்மாவாயிற்றே...

" பாரி, ரோட்டரி கிளப்ல இனியாவுக்கு பார்டி  கொடுக்கணும்னு நினைக்கிறாங்க... நீங்க என்ன சொல்றீங்க? " என்றான் சத்யா.

"ஆமாம், குமார் கூட இத பத்தி என்கிட்ட சொன்னான். எனக்கு அதுல ரொம்ப சந்தோஷம் தான். ஏன்னா, இனியா அதற்கு தகுதியானவ. ஆனா அவகிட்டயும் ஒரு வார்த்தை கேட்கணும்."

"சரி நானே கேக்கிறேன்" என்றான் சத்யா.

"தாராளமா கேளுங்க."

இனியா, அவள் அண்ணி அஞ்சலியுடன் பேசிக்கொண்டிருந்தாள். தங்கள் அருகில் வருமாறு அவளை சைகை செய்து  அழைத்தான் பாரி.

"என்னங்க பாரி?"

"சத்யா உன்கிட்ட ஏதோ கேட்கணுமாம்..."

இனியா, *சொல்லுங்கள்* என்பதைப் போல சத்யாவின் பக்கம் திரும்பினாள்.

"ரோட்டரி கிளப்பில் உன்னை ஹானர் பண்ணனும்னு நினைக்கிறாங்க. உனக்கு மரியாதை செய்கிற விதத்தில் ஒரு பார்ட்டியும் அரேஞ்ச் பண்ண நினைக்கிறாங்க..."

" அதெல்லாம் வேண்டாம் அண்ணா. நான் செஞ்சது என்னுடைய கடமையை தானே... இதுக்கு எதுக்கு பார்ட்டி? "

" ஆனா அவங்க கொடுக்கிற பார்ட்டில கலந்துக்குறதுல என்ன தப்பு? அதுலயும் அவங்க தகுதியான ஆளுக்கு தான் இந்த மாதிரி பார்ட்டி எல்லாம் கொடுப்பாங்க... "

"சத்யா சொல்றது சரிதான். உங்களுக்கு விருப்பம் இல்லனாலும், உங்களைப் பார்க்கும்போது, மத்தவங்களுக்கு  ஒரு இன்ஸ்பிரேஷனா இருக்கும் இல்லையா?" என்றான் குமார்.

"குமார் சொல்றது சரிதான். இந்த பார்ட்டி, சிலபேருக்கு நல்ல ஒரு பாசிட்டிவான எண்ணத்தை கொடுத்ததுன்னா,  நல்ல விஷயம் தானே?" அவர்களை ஆமோதித்தான் பாரி.

" நீங்க அப்படியா நினைக்கிறீங்க?" என்றாள் இனியா.

ஆமாம் என்று தலையசைத்தான் பாரி.

"அப்படின்னா சரி" என்றாள்  இனியா.

"அப்போ நான் அவங்களுக்கு சரின்னு சொல்லிடலாமா?" என்றான் சத்தியா.

"சொல்லிடுங்க" என்றான் பாரி.

இதயா, மற்ற பிள்ளைகளுடன் சேர்ந்து அமர்ந்து கொண்டு, அவள் அம்மாவின் புகழ் பாடிக் கொண்டிருப்பதை பார்த்தான் பாரி. அவள், இனியா குடியரசுத் தலைவரிடம் பரிசு வாங்கும் புகைப்படத்தை காட்டி கொண்டிருந்தாள். பாரியை அழைப்பதற்காக அங்கு வந்த இனியா, அவன் தனியாக நின்று சிரித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து முகம் சுளித்தாள். இனியவை பார்த்தவுடன் வாயின் மீது விரலை வைத்து அமைதியாக இருக்கும்படி சைகை செய்தான் பாரி. அப்படி அவன் என்னதான் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்று அவன் அருகில் சென்று, அவன் பார்த்துக் கொண்டிருக்கும் திசையைப் பார்த்தாள்  இனியா.

" பாத்தீங்களா, எங்க அம்மா யார்கிட்ட இருந்து அவார்ட்  வாங்குறாங்கன்னு... எங்க அம்மா பெரிய புத்திசாலி தெரியுமா... "

மற்ற பிள்ளைகள், வாயை பிளந்தபடி அந்த புகைப்படத்தை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

"உங்களுக்கு எல்லாம் யாரு கணக்கு சொல்லிக் கொடுப்பா?"

"யாருமே இல்ல. எங்க அப்பாவுக்கு கணக்கே தெரியாது. எங்க அம்மா, உங்க அம்மா மாதிரி ரொம்ப எஃபீஷியன்ட் இல்ல..." என்றாள் சத்யாவின் மகள் ஷாலினி.

" எங்கம்மா, எவ்வளவு கஷ்டமான கணக்கையும் ஒரு நொடியில் போட்டுடுவாங்க தெரியுமா... "

"நீ ரொம்ப அதிர்ஷ்டசாலி" என்றாள்  குமாரின் மகள் ஸ்வேதா.

" உங்களுக்கு கணக்கு கத்துக்கணும்ன்னா எங்க அம்மா கிட்ட வாங்க. அவங்க உங்க எல்லாருக்கும் ஹெல்ப் பண்ணுவாங்க... "

"பாத்தியா, உன் பொண்ணோட அலட்டலை..." என்றான் பாரி.

" அவ உங்க பொண்ணாச்சே, உங்களை மாதிரிதான் இருப்பா" என்று அவன் காலை வாரிவிட்டு களுக்கென்று சிரித்தாள் இனியா.

"நான் சொல்லல அவ உன் மேல ரொம்ப பிரியமா இருப்பான்னு...?"

"அவ என் பொண்ணாச்சே.."

" நல்லா இருக்கும்மா உன் நியாயம்... அவள் ஏதாவது நல்லது பண்ணா, அவ உன் பொண்ணு. அவள் ஏதாவது குறும்பு பண்ணா அவ என் பொண்ணா...? "

" அவ என்னை பத்தி இப்படியெல்லாம் பெருமையா பேசணும்னா, நான் இந்த அளவுக்கு பெருமையா எதையாவது சாதிக்க வேண்டி இருக்கு. ஆனா, உங்களுக்கு அதெல்லாம் தேவையே இல்ல அவ எப்பவுமே உங்க பக்கம்தான். "

"ஏன்னா, அவளுக்கு தெரியும். அவ என் பக்கம் இல்லன்னா, அவளுக்கு சாக்லேட், பீட்சா, பர்கர் எல்லாம் கிடைக்காதுன்னு ..." என்று பெருமை பேசுகிறேன் என்று, வாயை கொடுத்து மாட்டிக் கொண்டான் பாரி.

" என்னது....? அவளுக்கு நீங்க தினமும் ஜங் ஃபுட் எல்லாம் வாங்கி கொடுக்கிறீர்களா? எத்தனை நாளா நடக்குது இதெல்லாம்? "

தான் செய்த தவறை உணர்ந்து நாக்கைக் கடித்துக் கொண்டான்பாரி. இன்று, அவனும், இதயாவும் வசமாக மாட்டிக் கொண்டு விட்டார்கள். இன்று முழுவதும் காது புளித்துப் போகும் அளவிற்கு, ஜங் ஃபுட் பற்றியும், அதனுடைய தீமைகள் பற்றியும் மிகப்பெரிய சொற்பொழிவு காத்திருக்கிறது அவர்களுக்கு.

குமார் தன்னை நோக்கி வருவதை பார்த்து,

" இதோ வந்துட்டேன்... " என்று இனியாவிடமிருந்து தப்பித்து ஓடிச் சென்றான் பாரி.

ரோட்டரி சங்கம்

மிகப்பெரிய கூடத்தில், விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இனியா மேடைக்கு அழைக்கப்பட்டாள். ரோட்டரி சங்கத்தின் தலைவர், இனியவை பேச சொல்லி கேட்டுக் கொண்டார். இனியா அதை ஏற்றுக் கொண்டாள்.

" அனைவருக்கும் வணக்கம். இங்கு வந்து, உங்கள் மரியாதையை நான் ஏற்றுக்கொள்ள  காரணம் ஒன்று இருக்கிறது. அது, என் வெற்றிக்கு பின்னால் இருக்கும் ஒருவரைப் பற்றி கூற வேண்டும் என்று நான் நினைக்கிறேன். நான் இன்று நானாக இருப்பதற்கும் அவர்தான் காரணம்... நான் இன்று நானாக இல்லாமல் இருப்பதற்கும் அவர் தான் காரணம். ஒருவேளை அவர் என் வாழ்வில் வராமல் இருந்திருந்தால், நான் இன்று உங்கள் முன் நின்றிருக்க முடியாது. என்னுடைய கணவர்... *மேன் பிஹைண்ட் மை சக்சஸ்*. எனக்கு கிடைத்திருக்கும் இந்த மரியாதையை நான் அவருக்காக அர்ப்பணிக்கிறேன். என் வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் அவர் என்னுடன் இருக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். அதுபோல, இப்போதும் அவர் என்னுடன் இருக்க, அவரை நான் மேடைக்கு அழைக்கிறேன்." என்று அழகாய் தன் உரையை முடித்தாள் இனியா.

அங்கிருந்த அனைவரின் கண்களும் பாரியின் பக்கம் திரும்பின. எதிர்பாராத இந்த அதீத மரியாதையில் திணறிப் போனான் பாரி. மேடைக்கு வர தயங்கியபடி அவன் இனியாவை பார்த்து, *வேண்டாம்* என்று தலையசைக்க, பின்னாலிருந்து, அவனை மேடையை நோக்கி தள்ளிவிட்டாள் இதயா.

" அப்பா ப்ளீஸ் போங்கப்பா... " என்று கெஞ்சினாள் இதயா.

அமைதியாய் சென்று, இனியாவின் அருகில் நின்றான் பாரி. ஏதாவது பேசுங்கள் என்று கூட்டத்திலிருந்து ஏதோ ஒரு குரல் எழுந்தது. மைக்கை அவன் முன் சிரித்தபடி நீட்டினாள் இனியா. தயக்கத்துடன் அதை வாங்கியவன்,

" இனியா ரொம்ப டேலண்டெட் டீச்சர். அவங்க எது செஞ்சாலும், அதை முழு மனசோடயும் அர்ப்பணிப்போடும் செய்வாங்க. அதனாலதான் அவங்க இந்த அளவுக்கு உயர்ந்து இருக்காங்க. அவங்களுடைய கணவன் நான், அப்படின்னு  சொல்வதில்  நான் ரொம்ப பெருமை படுறேன். நன்றி. "

அவனுடைய மேல் கையை சுற்றிவளைத்த படி, மேடையிலிருந்து கீழே இறங்கினாள் இனியா. இதயாவிற்கோ, பெருமை தாங்கவில்லை.  அவள் ஏதோ, தான்  வேற்று கிரகத்தில் இருப்பதை போல உணர்ந்தாள். அனைவரும் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டிருந்தார்கள்.

அப்பொழுது இனியா, தன்னை யாரோ பெயர் சொல்லி அழைப்பதை கேட்டு திரும்பிப் பார்க்க, அங்கு சுபாஷ் நின்று கொண்டிருந்தாள்.

" வாழ்த்துக்கள், இனியா" என்றான்.

மெதுவாய் தலையசைத்தாள் இனியா.

" உங்களுடைய பொசிஷனை பார்க்கும் போது, எனக்கு ரொம்ப  சந்தோஷமா இருக்கு. "

"தேங்க்ஸ்" என்று கூறியபடி அங்கிருந்து நகர முற்பட்டாள் இனியா.

"நான் சந்திரனுடைய தங்கச்சியை கல்யாணம் பண்ணிக்கிட்டேன். உங்களுக்கு அது தெரிந்திருக்கும்ன்னு  நினைக்கிறேன்."

தெரியும் என்று தலையசைத்தாள் இனியா.

" ஏன் தெரியுமா? " என்றான்.

அவனுக்கு பதில் அளிக்காமல் அவனை பார்த்தாள் இனியா.

" ஏன்னா, ரிஜக்ஷனோட வலி எப்படி இருக்கும்னு எனக்கு தெரியும். " என்றான் சோகமாக.

இனியாவோ என்ன சொல்வது என்று தெரியாமல் இருதலைக் கொள்ளி எறும்பாய் தவித்துக் கொண்டிருந்தாள்.

"என்னோட ஒய்ஃபும் வேலைக்கு போயிட்டு இருக்காங்க. அவங்களுடைய திறமைக்கு நான் முட்டுக்கட்டையாக இருக்க விரும்பல. அவர்களுடைய உணர்வுகளை நான் மதிக்கணும் நினைக்கிறேன்."

மென்மையாய் புன்னகைத்தபடி தலையசைத்தாள் இனியா. ஆனால், அவளுடைய புன்னகை, வேறு ஒருவருக்கு வயிற்றில் அமிலத்தை வார்த்துக்கொண்டிருந்தது.  முஷ்டியை இறுக்கியபடி பல்லை நறநறவென்று கடித்தான் பாரி. தனது அப்பாவின் திடீர் முகமாற்றம், இதயாவை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. பாரியின் கோபப் பார்வை விழும் இடத்தை நோக்கி தனது பார்வையைத் திருப்பினார் இதயா.

" நான் உங்களுக்கு ரொம்ப தப்பு பண்ணிட்டேன். அதுக்காக நான் மனசார மன்னிப்பு கேட்டுக்குறேன். நான் ரொம்ப தாமதமா தான் மன்னிப்பு கேட்கிறேன்னு எனக்கு தெரியும். ஆனா கேட்காமலே போறதுக்கு, தாமதமா மன்னிப்பு கேட்கிறது பரவாயில்லை தானே? "

"நான் அதெல்லாம் மறந்து ரொம்ப நாள் ஆயிடுச்சு. என்னுடைய மனசுல, இப்ப அத பத்தி எந்த எண்ணமும் இல்லை."

"அப்படின்னா நீங்க என்ன மன்னிச்சிட்டிங்களா?"

ஆமாம் என்று தலையசைத்த இனியா, பாரியின் பார்வை தன் மீது வேர்விட்டு ஊன்றி இருப்பதைப் பார்த்த பொழுது கலங்கிப் போனாள். பாரி அவர்களை நோக்கி வந்தான். அவன் முகம் உணர்ச்சியற்று இருந்ததை பார்த்த பொழுது இனியாவுக்கு வயிற்றைக் கலக்கியது. அவள் தோளைச் சுற்றி வளைத்து படி,

" போலாமா? " என்றான்.

வராத புன்னகையை, இழுத்து முகத்தில் போட்டுக் கொண்டு, சரி என்று தலையசைத்தாள் இனியா.  சுபாஷ் பக்கம் தனது முகத்தை திருப்பாமல், அங்கிருந்து இனியாவை கிளப்பிக் கொண்டு சென்றான் பாரி.

இனியாவின் பதட்டம் எல்லையைக் கடந்தது, பாரி, அவள் பக்கம் திரும்பி கூட பார்க்காமல் வேறு யாருடனோ மிகவும் சுவாரஸ்யமாக பேசிக் கொண்டிருந்த பொழுது. அவனை விட்டு அகலாமல், அவன் முகத்தில் கண்  வைத்தபடியே, பதற்றத்துடன் அவன் அருகிலேயே நின்றிருந்தாள் இனியா. பாரி மிகவும் அமைதியாக இருந்தது, அவளை மேலும் பதட்டத்திற்கு ஆளாக்கியது. பரிவுடன் பேசிக்கொண்டிருந்த நபர் அவனிடமிருந்து விடை பெற்று சென்றார்.

" சுபாஷ், என்னை விஷ் தான் பண்ணினான். " என்றாள்  அவன் கையைப் பற்றிக்கொண்டு.

"நான் உன்கிட்ட எதுவுமே கேட்கலையே." என்றான் வேறு எங்கோ பார்த்தபடி.

" அதுதான் எனக்கு பதட்டமா இருக்கு... "

"நான் நல்லாத்தான் இருக்கேன்."

"உண்மையாதான் சொல்றீங்களா?"

"ஏன் அப்படி கேட்கிற?"

"ஒரு தடவை, நான் சுபாஷ் கிட்ட பேசினப்போ, நீங்க உங்க கையை வெட்டிகிட்டதை நான் இன்னும் மறக்கல..."

"நீ என்ன சொல்ல வர?"

"நீங்க என் மேல கோவமா இருக்கீங்களா?"

"நம்ம இத பத்தி அப்புறமா பேசலாம். நம்முடைய பிரச்சினையை  பேசுவதற்கான இடம் இது இல்லை."

அய்யய்யோ... அப்படி என்றால், பேசுவதற்கு ஏதோ இருக்கிறது. அந்த எண்ணமே இனியாவின் வயிற்றை மத்தால் கடைந்து.

ஆனால் அவர்கள் இருவரும், ஒரு ஜோடி சிறிய கண்கள் அவர்களையே ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்ததைக் கவனிக்கவில்லை. அவளுடைய அப்பாவின் சாகசத்தை கேட்டு வாயடைத்து போனாள் இதயா. இது அவளுடைய அப்பாவின் அறியாத பக்கம். அவள் அப்பா கத்தியால் கையை வெட்டிக் கொண்டாரா? அவளுடைய அம்மாவின் மீது அவ்வளவு  பொஸ்ஸசிவ்வானவரா?

அவள் வழக்கமாக இனியாவிடம் தான் வம்புக்கு போவது வழக்கம். இதுவரை அவள் இனியா தான் பாரியை  விட்டுக்கொடுக்காமல் இருந்ததை பார்த்திருக்கிறாள். ஆனால் உண்மை அதுவல்ல போலிருக்கிறது. இனியா, என்னமோ உண்மையிலேயே, பொறாமைபடுவது போல் அல்லவா சண்டையிட்டு இருக்கிறார். பாரி அவள் மீது கொண்டிருந்த அளவற்ற காதலை பற்றி தெரிந்த பிறகும் கூட சின்ன பிள்ளை போல தன்னிடம் சண்டையிட்டுக் கொண்டிருந்த தனது அம்மாவை பற்றி அவளுக்கு பெருமையாக இருந்தது.

வீடு வந்து சேரும் வரை, பாரி ஒரு வார்த்தை கூட பேசாமல் அமைதியாக இருந்ததை கவனித்துக் கொண்டிருந்தாள் இதயா. இனியாவோ அவனை சமாதானப் படுத்தும் விதத்தில், ஏதேதோ பேசிக் கொண்டே வருகிறாள். இது புதிதாகவல்லவா இருக்கிறது. அவள் அப்பாவை இது போல் பார்த்ததே இல்லை. அப்பா இவ்வளவு பொறாமை காரரா? அப்படி என்றால் மிகச்சிறந்த பொழுதுபோக்கு அவளுக்கு காத்திருக்கிறது. இனியாவை விட்டுவிட்டு, இனி பாரியிடம் விளையாட துவங்க வேண்டியது தான். அது மிகவும் சுவாரசியமாக இருக்கப்போகிறது.

இதயா தனது மனதுக்குள் திட்டமிட்டுக் கொண்டே வந்தாள், அவளுடைய அப்பாவின் உண்மை ஸ்வரூபத்தை பற்றி அறியாமல்.

தொடரும்... 

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top