Part 23
பாகம் 23
பாரி மற்றும் இனியாவிற்கு இடையில், கேலி கிண்டல் பேச்சுக்கள் சகஜமாகி போனது. அது அவர்களுக்குள் இருந்த இடைவெளியை குறைத்து கொண்டிருந்தது. எதை வேண்டுமானாலும் சகஜமாகப் பகிர்ந்து கொள்ளும் மனநிலை அவர்களுக்குள் ஏற்பட்டது. தம்பதிகள் என்ற வட்டத்திற்குள் அவர்கள் இன்னும் நுழையவில்லை என்றாலும், நண்பர்கள் என்ற வட்டத்தை விட்டு வெளியே வர இந்த கால அவகாசம் அவர்களுக்கு உதவியது.
*இரண்டு நாட்களுக்கு பிறகு*
இனியா இன்னும் உறங்கிக் கொண்டிருந்தாள். முதல் நாள் இரவு, வெகு நேரம் பாரியுடன் பேசிக் கொண்டிருந்ததால், வழக்கமான நேரத்தில் அவளால் கண்விழிக்க முடியவில்லை. அவள் கண் விழித்தபோது, வழக்கம்போல் அங்கு பாரி இருக்கவில்லை. மேலும் யோசித்துக் கொண்டு இருக்காமல் குளியலறைக்கு சென்று குளியலை முடித்துக்கொண்டு வெளியே வந்தாள். வழக்கத்திற்கு மாறாக, அன்று அவள் மிகவும் அமைதியாக உணர்ந்தாள். பாரியை தேடிக்கொண்டு தோட்டத்திற்கு வந்தாள், அவன் அங்கும் காணப்படவில்லை. அப்பொழுது வெளிப்பக்கத்தில் இருந்து, குதூகலமான சத்தம் கேட்டது. அப்போதுதான் அவளுக்கு நினைவுக்கு வந்தது அன்று ஹோலி என்பது. ஹோலி, தமிழர்களின் பண்டிகையாக இல்லாவிட்டாலும், இப்பொழுதெல்லாம் வண்ணத்தைப் பூசி சந்தோஷமாக கொண்டாடுவது வழக்கமாகிப் போய்விட்டது. வெளியில் இருந்து வந்த சத்தம் அவளுக்கும் குதூகலத்தை ஏற்படுத்தியது. என்ன நடக்கிறது என்று பார்க்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது.
அவள் வெளியே செல்ல எத்தனித்த போது, பின்னாலிருந்து, அவள் முகத்தில் யாரோ வண்ணப் பொடிகளை பூச, அப்படியே விக்கித்து நின்றாள் இனியா. தன் தலையைச் சிலுப்பிவிட்டு கண்களைத் திறந்த போது, பாரி விழுந்து விழுந்து சிரித்தான். அதோடு நிறுத்தாமல்,
" கால் முளைச்ச ரங்கோலியா நீ நடந்து வாரே புள்ள..." என்று கத்தி படத்தில் வரும் பாடல் வரியை பாடி அவளை வெறுப்பேற்றினான்.
அதைக்கேட்டு பொறுக்கமாட்டாமல், இங்கும் அங்கும் தன் பார்வையை ஓட்டினாள் இனியா. அங்கு வைக்கப்பட்டிருந்த வண்ண பொடிகளின் மீது அவள் பார்வை விழுந்தது. அவள் என்ன செய்யப்போகிறாள் என்று தெரிந்துகொண்டு பாரி அங்கிருந்து ஓடினான். இரண்டு கைகளிலும் வண்ணப் பொடிகளை அள்ளிக்கொண்டு, அவனை துரத்தினாள் இனியா.
தானாக பிடிபடும் வரை, பாரியை பிடிப்பது சுலபம் அல்ல. அதுவும், இனியா தன்னை துரத்தி வருவதை அவன் ரசிக்கும் போது, அவ்வளவு எளிதில் அவன் பிடிபட்டு விடுவானா என்ன?
குதுகலமாய் ஓடிக் கொண்டிருந்தவனை எதிர்பாராதவிதமாக, தேனீர் மேஜையை தாவி குதித்து, அவனை புத்திசாலித்தனமாக நெருங்கிவிட்டாள் இனியா. அவள் அவனுடைய முகத்தில் வண்ணப் பொடியை பூசுவதற்கு முன், அவளுடைய இரண்டு கரங்களையும், கெட்டியாக பிடித்துக்கொண்டு, அவளை பூச விடாமல் தடுத்தான் பாரி. தன் கைகளை விடுவித்துக் கொள்ள, இனியா எடுத்த எந்த முயற்சியும் பலனளிக்கவில்லை. பின்வாங்கவும் அவள் தயாராக இல்லை. அவள் மனதில் ஒரு உபாயம் உதித்தது. அவனை சுவற்றில் பிடித்து தள்ளினாள். அவர்கள் ஆடிக்கொண்டிருந்த ஆட்டத்தில் இனியா வெற்றி பெற்றாள். பாரி, ஆட்டத்தை மட்டுமல்ல, தன்னையும் சேர்த்து இழந்தான்.
தன் முகத்தை, பாரியின் முகத்தில் தடவி, அவள் முகத்தில் இருந்த வண்ண பொடிகளை அவன் முகத்திற்கு குடிபெயர செய்தாள் இனியா. ஆயிரம் மின்னல்கள் தன்னுடலில் பாய்வது போல உணர்ந்தான் பாரி. அவள் கைகளைப் பற்றியிருந்த, அவனது பிடி தளர்ந்தது. குத்துக்கல்லைப் போல் அசையாமல் நின்றான் பாரி. அவன் அவளுடைய கைகளை விட்ட பிறகும் கூட, அவள் தன் கைகளில் இருக்கும் வண்ணப் பொடியை, அவன் முகத்தில் பூசாமல் அவன் சட்டையின் காலரை இறுகப்பற்றிக்கொண்டு, அவள் முன் செய்த பணியைத் தொடர்ந்தாள், தன் கணவனின் நிலையை உணராமல். தன் நிலையை மறந்து, அவன் அசையாமல் நின்றிருப்பதை பார்த்து, அவளுக்கு குழப்பம் ஏற்பட்டது.
தான் செய்த செயலை, நினைத்து பார்த்தபொழுது, அவள் மென்று முழுங்கினாள். அவனை பார்க்க முடியாமல் தலை தாழ்த்தினாள். இருவருமே, ஒருவரையொருவர் பார்க்காமல், எங்கோ பார்த்துக் கொண்டு நின்றிருந்தார்கள். குளியல் அறையை நோக்கி, வேகநடைபோட்டு சென்றாள் இனியா. கதவருகில் சென்று நின்று திரும்பி, ஏக்கம் நிறைந்த கண்களால், தன்னை பார்த்துக்கொண்டிருந்த பாரியை நோக்கினாள்.
" நான் உங்ககிட்ட சாரி கேட்பேன்னு நினைக்காதீங்க. தப்பு செஞ்சா தான் சாரி கேக்கணும். "
என்று கூறிவிட்டு குளியல் அறையில் நுழைந்தாள். பாரியின் விழிகள் வியப்பால் விரிந்தது என்று கூறத் தேவையில்லை. அவன் முகத்தில் பூத்த புன்முறுவலை, அவன் முகத்தை ஆக்கிரமித்திருந்த வண்ணங்களால் கூட மறைக்க இயலவில்லை.
குளியலறையிலிருந்து வெளியே வந்த இனியா, சுவற்றில் சாய்ந்தபடி நின்றிருந்த பாரியை பார்த்து திடுக்கிட்டாள். தலை சாய்த்து அவளைப் பார்த்து சிரித்தான் பாரி. அங்கிருந்து செல்ல நினைத்த இனியவை, கரம் பிடித்து தடுத்து நிறுத்தி, சுவற்றிற்கும் தனக்கும் இடையில் சிறைப்படுத்தினான்.
" என்ன சொன்ன?"
தன்னை சமாளித்துக் கொண்டாள் இனியா.
" எந்த தப்பும் செய்யலை என்று சொன்னேன்."
" அப்படின்னா என்ன அர்த்தம்? "
" அப்படி செய்ய எனக்கு எல்லா உரிமையும் இருக்குன்னு அர்த்தம்." என்றாள் பயமின்றி.
" நிஜமாகவா? " என்றான் அவளை நெருங்கியவாறு.
அவளுடைய பதிலுக்கு காத்திருக்காமல், தன் கன்னத்தை அவள் கன்னத்தோடு உரசி, அவள் செய்ததையே தானும் செய்து, அவளுக்கும் மயிர்க்கூச்செறிய செய்தான். அவன் சட்டையை இறுக பற்றி, தன் கண்களை மூடிய இனியாவை பார்த்து,
" நானும் சாரி சொல்ல மாட்டேன். ஏன்னு உனக்கே தெரியும்."
கூறிவிட்டு குளியலறைகுள் சென்றான் பாரி. தன்னுடைய வலையில் தானே சிக்கிக்கொண்டதை எண்ணினாள் இனியா. இப்படி ஒரு வேலையை செய்து விட்டு தான் செய்தது சரி என்றும் வாதாடினால் அல்லவா? அவள் வண்ணப் பொடியை அவன் முகத்தில் பூசியபொழுது, அவனுக்கும் இப்படித்தானே இருந்திருக்கும்? மேலும் அங்கு நிற்காமல், தோட்டத்தை நோக்கி சென்றாள் தன் முகத்தை அலம்ப.
சமைக்கத் துவங்கலாம் என்று, சமையலறைக்கு சென்றபோது, அங்கு ஏற்கனவே பாரி நின்றிருந்தான்.
" நீங்க போங்க பாரி" என்றாள் தனது கைகளை கட்டிக்கொண்டு.
" ஏன், என்னுடைய சமையல் உனக்கு அலுத்து போச்சா?"
" அப்படியெல்லாம் எதுவுமில்லை. என்னுடைய சமையலை, உங்களுக்கு அலுக்க, வைக்கலாம்னு முயற்சி பண்றேன்." கூறியபடி வெங்காயத்தை நறுக்கத் தொடங்கினாள்.
" நீ சம்பந்தப்பட்ட எதுவும் எனக்கு அலுக்காது"
வெங்காயத்தை நெருக்கிக் கொண்டிருந்த அவள் கரம், நின்றது. அது பாரியாலும் கவனிக்கப்பட்டது.
" நான் உனக்கு ஹெல்ப் பண்றேன்"
" வேண்டாம்... நானே சமைக்கிறேன்" என்றாள் அவனைப் பார்க்காமல்.
எதுவும் சொல்லாமல் சமையல் அறையை விட்டு வெளியேறினான் பாரி, அவளிடம் வாதாடிக் கொண்டிருக்காமல். சமையலை முடித்துவிட்டு, அவற்றை உணவு மேஜைக்கு எடுத்து வந்தாள் இனியா. அவள் சமைத்து வைத்திருந்த உணவின் வாசம், அவளுடைய கைப்பக்குவத்திற்கு சான்று கூறியது. தனது அறையில் இருந்த பாரியை, அது உணவு மேஜைக்கு இழுத்து வந்தது. ஃப்ரைடு ரைஸ்ஸும், பன்னீர் கிரேவியும் கமகமத்தது.
" இப்படி சமைச்சா, நான் ஒரே மாசத்துல குண்டாயிடுவேன்" என்றான் அவற்றைக் சுவைத்தபடி பாரி.
" ஒரு மாசமா? அப்ப வாழ்நாள் முழுக்க என்னுடைய சமையலை சாப்பிட்டு என்ன செய்ய போறீங்க?" என்றாள்.
*வாழ்நாள் முழுக்க* என்ற வார்த்தைகள், தாங்கள் செய்துகொண்டிருந்த வேலையை நிறுத்திவிட்டு, ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளச் செய்தது. அவன் பக்கத்தில் அமர்ந்து, முதல் படி சாதத்தை சுவைத்தாள் இனியா. பன்னீர் கிரேவி, காரமாகவும் ஃப்ரைடு ரைஸ், சிறிது உப்பு குறைவாகவும் இருந்தது. ஆனால் பாரியோ, அதை சுவைத்து சாப்பிட்டு கொண்டு இருந்தான்.
" இந்த சாப்பாட்டையா நீங்க அப்படி புகழ்ந்திங்க?"
" எனக்காக சமைத்துக் கொடுக்க, ஒருதர் கிடைத்திருக்கிறதே ரொம்ப பெரிசு.... "
" சாரிங்க"
" அட... உண்மையிலேயே இது ரொம்ப நல்லா இருக்கு. "
பன்னீர் கிரேவியில் சிறிது எலுமிச்சம் பழத்தை பிழிந்து விட்டு, ப்ரைட் ரைஸ்ஸில் லேசாக உப்பு தூவினான்.
" இப்போ சாப்பிட்டு பார்"
" இப்போ பரவாயில்லை"
" அவ்வளவு தான்... பிரச்சனை முடிஞ்சிருச்சு. இதுக்கு போயி ஏன் வருத்தப்படற?"
என்று கூறி விட்டு, தன் வேலையை தொடர்ந்தான் பாரி.
இனியாவிற்கு சாப்பிடவே தோன்றவில்லை. அவள் மனம் நிறைந்திருந்தது. சாப்பிடாமல் பாரியையே பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் தன்னையே பார்த்துக் கொண்டிருக்கிறாள் என்பதை உணர்ந்து, தன் இமைகளை மெல்ல அவளை நோக்கி உயர்த்தினான் பாரி. அப்பொழுது கூட அவளுக்கு பார்வையைத் தாழ்த்த வேண்டும் என்ற உணர்வே தோன்றவில்லை. அவள் மெய் மறந்து போயிருந்தாள். அசைவில்லாமல், அவள் அப்படியே அவனைப் பார்த்துக் கொண்டிருந்த பொழுது, அழகாய் செதுக்கப்பட்ட சிலை போலிருந்தாள். அவளைப் பார்த்து, பாரி சிரித்த பின்பும் கூட அவளிடம் எந்த மாற்றமும் தென்படவில்லை. எத்தனையோ பெண்கள் அவனை கண்கொட்டாமல் பார்த்திருக்கிறார்கள் தான். ஆனால் இப்படி ஒரு ரசனை மிக்க பார்வையை அது இதுவரை பார்த்ததில்லை. அவசர அவசரமாய் சாப்பிட்டுவிட்டு அங்கிருந்து சென்றான்.
ஒரு முக்கியமான முகவர் வந்திருப்பதாக, பாலாவிடம் இருந்து அழைப்பு வந்ததால், இனியாவிடம் கூறிவிட்டு, கடைக்கு கிளம்பி சென்றான் பாரி.
கடையில் இருந்து அவன் திரும்பி வந்தபோது, இனியா ஏதோ சயின்ஸ் ஃபிக்ஷன் பார்த்துக் கொண்டிருந்தாள். சாப்பிட்டுவிட்டு வழக்கமான நேரத்திற்கு முன்னதாகவே படுக்கைக்கு சென்றான் பாரி. அவன் சீக்கிரமாகவே தூங்கி விட்டதை பார்த்தபோது இனியாவுக்கு ஆச்சரியமாக இருந்தது. மெதுவாய் சென்று அவன் அருகில் அமர்ந்தாள். அவனது நெற்றியில் பிரண்டு கொண்டிருந்த முடியை ஒதுக்கிவிட்டு, குனிந்து அவன் நெற்றியில் முத்தமிட்டாள். அந்நேரம் பாரியின் இதழ்கள் புன்னகை பூத்தன. அதைப்பார்த்து அதிர்ந்து, கட்டிலில் இருந்து எழுந்திருக்க இனியா முயன்ற பொழுது, அவள் கையை பற்றி பாரி இழுக்க, அவன் நெஞ்சின் மீது விழுந்தாள் இனியா.
" என்னுடைய முத்த உறுப்புக்கள் எல்லாம், என் நெற்றியின் மேல். பயங்கர பொறாமை படுத்துங்க. ஏன்னா, முத்தமிட சரியான இடம், நெற்றி இல்லை." என்றான்.
என்ன கூறுவது என்று தெரியாமல், அவன் கன்னங்களில் தனது கண்களை ஓட்டினாள் இனியா.
" கண்ணங்கள் குழந்தைகளுக்கானது, நம்மகானது இல்லை" என்றான் அவள் இதழ்களை பார்த்தபடி.
"நான் உங்கள ரொம்ப நல்ல பிள்ளைன்னு நினைச்சேன்.... "
"என்னுள் இருக்கும் கெட்டவன் வெளிப்பட நீதான் காரணம். ஆனால், என்னுடைய கெட்ட பக்கத்தை பார்க்கும் உரிமை உனக்கு மட்டுமே சொந்தமானது. அதை மறக்காதே."
வாயடைத்துப் போனாள் இனியா. ஆம் அவனுடைய கெட்ட பக்கத்தை பார்க்கும் உரிமை, அவளுக்கு மட்டுமே உரியது.
" என்னை நீ நம்பலாம். என்னுடைய நல்ல பக்கத்தை விட கெட்ட பக்கம் ரொம்ப சுவாரஸ்யமா இருக்கும்."
சற்றே நிறுத்தியவன்,
" அதுசரி... நான் நல்லவனாவே இருந்தா எப்படி அப்பாவாகிறது? "
"நீங்க பேசறத கேட்டு, என்னுடைய இரத்த செல்கள் எல்லாம் அதிர்வடையுது"
" அதை எப்படி சமநிலைப்படுத்தனும்னு எனக்கு தெரியும்."
இனியாவின் முகம், அதைக்கேட்டு ரத்த சிவப்பானது.
" ஒரு சந்தர்ப்பம் கொடுக்க மாட்டியா? "
கரங்களால் முகத்தை மறைத்துக் கொண்டாள் இனியா, இந்த வகையான பேச்சை பொறுக்கமாட்டாமல்.
" இவ்வளவு சுலபமா எனக்கு சந்தர்ப்பத்தை கொடுத்திடாதே, இனியா... நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு நான் ரொம்ப கெட்ட பையன். "
கலக்கத்துடன் அவனை பார்த்தவள், சில நொடிகள் எடுத்துக் கொண்டு தன்னை சுதாகரித்துக் கொண்டாள். தனது விரலால் மெல்ல அவன் கன்னம் வருடினாள். கண்ணை மூடி அவள் கையில் முத்தமிட்டான்.
ஒருவர் மற்றொருவரின் அருகாமையால், அலை கடலில், துடுப்பின்றி அலைக்கழிக்கப்படும் படகை போல, அலைமோதிக் கொண்டிருந்தார்கள். இது ஒரு வித்தியாசமான கடல். இதிலிருந்து நீந்தி கரையேற, எந்த கலங்கரை விளக்கமும் கிடையாது. அதிலிருந்து வெளியேற வேண்டும் என்றால், அதில் மூழ்கியாக வேண்டும். அப்படி ஒருவேளை, அவர்கள் அதில் மூழ்கி விட்டால், ஒருவரிடமிருந்து ஒருவர் விலகுவது என்பது இயலாது. இங்கும் அப்படித்தான், ஏற்கனவே மூழ்க ஆரம்பித்துவிட்டவர்களை தடுத்து நிறுத்த, இனி எந்த சக்தியாலும் இயலாது.
முன்பு எப்போதும் கண்டிராத ஒரு உலகத்தில் அவர்கள் சஞ்சரித்தார்கள். இனியாவின் மென்மையான காது மடல்களும், பாரியின் வலிமையான தோள்களும் முன்பு எப்போதும் பார்த்திராதவை. இனியாவின் கழுத்து வளைவில் கச்சிதமாய் தன் முகத்தைப் பொருத்தி, மென்மையான முத்தத்தை பரிசளித்தான் பாரி. முதல் ஸ்பரிசத்தின் மின்சார பாய்ச்சலில், பரிதவித்துப் போனாள் இனியா. தன் உடலின் எடை பாதியாய் குறைவது போல் தோன்றியது அவளுக்கு. காணாததைக் கண்டு விட்ட பாரியும் அரைமயக்கத்தில், அவள் மெல்லிய இதழ்களை தன் வசமாக்கிக் கொண்டான்.
ஏற்கனவே அவர்கள் முத்தமிட்டிருக்கிறார்கள் என்றாலும், எந்த பதற்றமும் அற்ற சாவகாசமான, முதல் முத்தம்... நட்பு வட்டத்தில் இருந்து, அவர்களை முழுமையாய் வெளிக்கொண்டு வந்துவிட்ட முதல் முத்தம்...இது. இன்று அவர்களுடைய திருமணம் முழுமை பெற்றது.
தன்னுடைய கெட்ட பக்கத்தை வெளிப்படுத்தினாலும், தான் கெட்டவன் அல்ல என்று நிரூபித்தான் பாரி. நாகரிகத்தைவிட்டே செய்யப்படும் இந்த செயலிலும், அவனிடம் நாகரீகம் மேலோங்கியிருந்தது. தான் விரும்பிய பெண் தன் கைக்கு கிடைத்த போதும், காய்ந்த மாடு கம்பங்கொல்லையில் புகுந்தது போல் நடந்து கொள்ளாமல், ஒரு பண்பாளனாய் உயர்ந்து நின்றான் பாரி.
தொடரும்....
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top