Part 2

பாகம் 2


அந்த வண்ணப்பெண் வந்து சென்ற மூன்றாவது நாள், பாரியின் கையில், அவள் கேட்ட புத்தகம் வந்து சேர்ந்தது. அதை மேலோட்டமாக பிரட்ட ஆரம்பித்தான் பாரி. கல்லூரியில் படிக்கும் காலத்தில், கணிதம் அவனுக்கு இரண்டாவது முக்கிய பாடம். கணிதம் அவனுடைய விருப்பப்பாடமாக இல்லாவிட்டாலும், அதிலும் எப்போதுமே நல்ல மதிப்பெண்கள் தான் அவன் பெற்றிருந்தான். அந்தப் புத்தகம், அவனுக்கு, அவன் கல்லூரி நாட்களை நினைவு படுத்தியது. அந்த மறக்க முடியாத நாட்களை எண்ணி அவன் புன்னகைத்தான்.

அப்பொழுது, அதே பெண், அவன் கடையின் முன், அவளுடைய இரு சக்கர வாகனத்தை நிறுத்துவதை அவன் பார்த்தான். இன்று அவள் புடவை உடுத்தியிருந்தாள்... வெளிர் நீல நிற புடவைக்கு, கருநீல நிற ரவிக்கை அணிந்திருந்தாள். அந்த கரு நீல நிற ரவிக்கை, அவளுடைய வெண்மையான நிறத்தை, அடிக் கோடிட்டு காட்டியே தீருவேன், என்று அடம் பிடித்தது. அவளுடைய பட்டுக் கூந்தலை, தளர்வான கொண்டையாக கட்டியிருந்தாள். இளம் ஆரஞ்சு நிற, பட்டன் ரோஜாவை, கொண்டையின் ஓரத்தில் வைத்திருந்தாள். முன் நெற்றியை, வருடிக் கொண்டிருந்த, ஒரு குழல் கற்றை, அவளுக்கு ஒய்யாரமான ஒரு தோற்றத்தை அளித்தது. புடவை கடையின், கண்ணாடி பெட்டிக்குள், அலங்காரமாய் நிற்கும், பொம்மை போல் இருந்தாள் அந்த பெண்.

அவளைப் பார்த்த மாத்திரத்திலேயே, அவன் கையிலிருந்த புத்தகத்தை, தனது மேஜையின் கீழ் அறையில் வைத்து பூட்டிவிட்டு, கணிப்பேடையில், ஏதோ கணக்கு பார்ப்பவன் போல, பாவனை செய்தான் பாரி.

" ஹாய்" என்றாள் அவள் அவசரமாக.

வழக்கம்போல, அவசரப்படாமல்,

"ய்யா" என்றான்.

" நான் ஒரு புக் கேட்டிருந்தேனே, உங்களுக்கு ஞாபகம் இருக்கா?" என்றாள்.

ஞாபகம் இருக்காவாவது, இவன்தான் மறக்கவே இல்லையே..

" ஞாபகம் இருக்கு, ஆனா, இன்னும் அந்த புக் வரல" என்று பொய் உரைத்தான்.

" ஓ அப்படியா... தேங்க்யூ..."

என்று கூறிவிட்டு, அவள் கையில் கச்சிதமாய் பொருந்தி இருந்த, கருப்பு நிற பட்டையுடன் கூடிய கை கடிகாரத்தில் மணியைப் பார்த்துவிட்டு, தனது இருசக்கர வாகனத்தை நோக்கி விரைந்து சென்றவள், அதற்கு உயிரூட்டி, அடுத்த நிமிடம், அவன் கண்களிலிருந்து மறைந்தாள்.

தான் நடந்து கொண்ட விதம் பற்றி, பாரிக்கே வியப்பாக இருந்தது. அவன் அந்தப் புத்தகத்தை ஏன் மறைத்தான் என்று அவனுக்கே புரியவில்லை.

ஆனால் அதை புரிந்து கொள்வது நமக்கு அவ்வளவு ஒன்றும் கடினமான விஷயம் அல்ல. அந்த பெண்ணை அவனுக்கு மறுபடி பார்க்க வேண்டும். அதற்கு, இதை விட்டால் வேறு வழி இருப்பதாக அவனுக்குத் தோன்றவில்லை. ஆனால், அவன் ஏன் அந்த பெண்ணை மறுபடியும் பார்க்க வேண்டும்? அது அவனுக்கே புரியவில்லை.

இன்று, அவளின் தோற்றம், முற்றிலும் வித்தியாசமாக இருந்தது. புடவையில் இருந்த போதிலும், அவள் நவநாகரீகமான பெண்ணாக தான் தோன்றினாள். அவளின் இன்றைய தோற்றத்தைப் பார்த்தால், அவள் மாணவியாக இருக்க வாய்ப்பு இருப்பதாக தோன்றவில்லை. அந்தப் பெண்ணைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் மிகுந்த போதிலும், அவன் வழக்கம் போல் அதை ஒதுக்கிவிட்டு தன் வேலையை தொடர்ந்தான்.

அவன் எதிர்பார்த்தபடி அந்தப்பெண், அடுத்தநாள் அவனுடைய புத்தகக் கடைக்கு வரவில்லை. அவளுக்கு வேறு ஏதாவது முக்கியமான வேலை இருந்திருக்கும். தனக்குத் தானே சமாதானம் கூறிக் கொண்டான் பாரி.

அடுத்த நாள்

அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், சென்னையின் புறநகரில் வசித்து வரும், தனது சித்தப்பா ராஜுவின் வீட்டிற்கு கிளம்பி கொண்டிருந்தான் பாரி. ராஜுவின் மனைவி சுதா, மற்றும் அவரிகளின் ஒரே மகன் பாலா, இவர்கள்தான், பாரிக்கு இருக்கும் சொந்தங்கள். பாரியின் பெற்றோர் ஒரு கார் விபத்தில் இறந்த பிறகு, ராஜுவும் சுதாவும் தான் பாரியை ஆதரித்தவர்கள். தனக்கு கிடைக்கும் நேரத்தை, பாரியும் அவர்களுடன் செலவு செய்யவே விரும்பினான்.

அவன் வீட்டின் லேண்ட்லைன் ஃபோன் அலறியது. தனது சட்டையை *இன்* செய்தபடியே அதை எடுத்து பேசினான் பாரி. ஒரு பெண்ணின் குரலைக் கேட்டு, அவன் ஒரு நிமிடம் அப்படியே புரியாமல் நின்றான். அந்தப் பெண் யார் என்பதை அவன் கணித்து விட்டிருந்தான். ஒருவேளை, அவன் கடையின் வருகையாளர்- முகவரி சீட்டில் இருந்து, அவன் வீட்டின் தொலைபேசி எண் அவளுக்கு கிடைத்திருக்குமோ?

" ஹாய்"

" யார் பேசுறீங்க?" என்றான் அவள் பெயரை சொல்வாள் என்று எதிர்பார்த்து.

" இண்டெகரேஷன் இன் மேத்தமேட்டிக்கல் எஜூக்கேஷன் புக் ஆர்டர் கொடுத்து இருந்தேனே. நீங்க, நேத்து வந்து வாங்கிக்க சொன்னீங்க, என்னால வர முடியல..."

" பரவாயில்லை... நாளைக்கு வாங்கிக்கங்க"

" இன்னிக்கி கடை லீவா? எனக்கு, அந்த பக்கம் வர வேண்டிய வேலை இருக்கு. சரி பரவாயில்லை... நான் நாளைக்கு சாயங்காலம் வந்து வாங்கிக்கிறேன்" என்று அவள் பெயரை கூறாமலேயே போனை துண்டித்தாள்.

இன்று கடைக்கு செல்ல முடியாததை நினைத்து, வருத்தமாக இருந்தது பாரிக்கு. அதனாலென்ன, நாளை மாலைதான், அவள் வரப்போகிறாளே. நினைத்துக் கொண்டு தனது சித்தப்பா வீட்டை நோக்கி பயணப்பட்டான் பாரி.

வழக்கம் போலவே, தனது விலைமதிக்க முடியாத நேரத்தை, சித்தப்பாவின் வீட்டில் செலவழித்தான் பாரி. அவனுடைய சித்தி சுதா, அவனுக்கு பிடித்தமான உணவு வகைகளை சமைத்து வைத்திருந்தாள். சொல்லப்போனால், சுதா சமைக்கும் அனைத்துமே அவனுக்கு பிடித்தமானவை தான். அவன் பெற்றோரின் இறப்பிற்குப்பின், வீட்டு சாப்பாடு என்பது அவனுக்கு அரிதாகிப்போனது. அதனால், சுதா சமைக்கும் அனைத்தையுமே அவன் விரும்பி சாப்பிட்டான்.

ராஜுவின் வீட்டிற்கு வரும் நாட்களில் எல்லாம், அவன் இருட்டுவதற்கு முன், அங்கிருந்து கிளம்பி விடுவது வழக்கம். இன்றும் அப்படித்தான் கிளம்ப நினைத்தான். ஆனால் பாலாவின் நண்பன், அவனுடைய இருசக்கர வாகனத்தை, தன் தங்கையை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல, இரவலாக பெற்றுக்கொண்டு சென்றிருந்தான். பாலாவின் இருசக்கர வாகனம் பஞ்சர் ஆகி இருந்ததால், பாரியால் இல்லை என்று மறுக்க முடியவில்லை.

ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, அவனுடைய இரு சக்கர வாகனம் வந்து சேர்ந்தது. தனது சித்தப்பா குடும்பத்திடமிருந்து விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டான் பாரி.

மாலை நேரத்தின் குளிர்ந்த காற்றில், இருசக்கர வாகனத்தில், நெடுஞ்சாலையில் பயணிப்பது என்பது அலாதியானது. அதை ரசித்தபடியே பயணப்பட்டுக் கொண்டிருந்தான் பாரி. அவனுடைய வாகனம், சட்டென்று முறுக்கிவிட்டு, நின்றுபோனது. அப்பொழுது, தனது வண்டியில் எரிபொருள் கொஞ்சம் கூட இல்லாமல் இருந்ததை பார்த்து வெறுப்படைந்தான் பாரி. மருத்துவமனைக்கு செல்லும் அவசரத்தில், பாலாவின் நண்பன், அதை கவனிக்கவில்லை போலும்.

அடுத்த இரண்டு கிலோ மீட்டருக்கு, எந்த பெட்ரோல் பங்கும் இல்லை என்பது அவனுக்கு தெரியும். தன்னைத் தானே நொந்து கொண்டு, தனது வண்டியை உருட்ட ஆரம்பித்தான். ஐந்து நிமிடம் அப்படி உருட்டிக் கொண்டு வந்திருப்பான். திடீரென, பின்னால் இருந்து வந்த ஒரு இருசக்கர வாகனம், அவன் முன் வந்து, அவன் வழியை மறித்துக் கொண்டு நின்றது. தன் கண்களை, தன்னாலேயே நம்பமுடியவில்லை பாரியால். அதே பெண், அதே புன்னகையுடன், தனது தலைக்கவசத்தை அவன் முன் நின்று கிழட்டினாள்.

"ஹாய்"

"ஹாய்"

"பெட்ரோல் காலியா?"

*ஆமாம்* என்று அவன் தலையசைக்க, அவள் தனது ஸ்கூட்டி டிக்கியில் இருந்து, பெட்ரோல் பாட்டிலை எடுத்து அவனிடம் நீட்டினாள்.

" அடுத்த பெட்ரோல் பங்க் வர்ற வரைக்கும், இது உங்களுக்கு போதும்னு நினைக்கிறேன். நீங்க அடுத்த பங்கில் பெட்ரோல் ஃபில் பண்ணிக்கலாம்"

" தேங்க்யூ"

என்று கூறியபடி அதை அவனுடைய வண்டியில் ஊற்றிக்கொண்டான்.

தனது மணி பர்சை எடுத்து, அதிலிருந்து ஒரு நூறு ரூபாய் நோட்டை எடுத்து, அதை அவளை நோக்கி நீட்டினான் பாரி. இடுப்பில் கையை வைத்துக் கொண்டு, கண்களை சுருக்கி. பல்லை கடித்தாள், அவள். அவள் அப்படி செய்யும்போது மிக அழகாக இருந்தாள்.

" என்னோட பெட்ரோலை திருப்பி கொடுத்துட்டு, நீங்க வேற யார்கிட்டயாவது வாங்கிக்கோங்க. பெட்ரோல் விக்கிறது ஒன்னும் என் வேலை இல்லை" என்றாள்.

அதை கேட்டு பாரி சிரித்தவுடன், அவளும் சிரித்தாள். தனது கரத்தை, அவனை நோக்கி நீட்டியபடி, "இனியா" என்றாள்.

அவள் பெயரைக் கேட்டு, ஒரு கணம் அப்படியே ஸ்தம்பித்து நின்றான் பாரி. அவள் பெயரைக் கேட்டு அவன் மனம் இனித்தது. அவன் தனது நீட்டிய தரத்தை பற்றாமல் நிற்பதைப் பார்த்து, அவள் புருவத்தை உயர்த்த, அவள் கரத்தை, மென்மையாகப் பற்றினான் பாரி.

" உங்களுக்கு தெரியுமா, யாராவது தன்னோட பேரை சொல்லி, தன்னை அறிமுகப்படுத்திக்கிட்டா, நீங்களும், உங்க பேர சொல்லணும்" என்றாள் சிரித்தபடியே.

" பாரி"

" நைஸ்"

அவரவர் வண்டிகளை, உயிரூட்டி, மெதுவாய் நகர்ந்து கொண்டே பேச ஆரம்பித்தார்கள்.

" எங்க போயிட்டு வர்றீங்க?" என்றான் பாரி.

" என் ஃபிரண்டை பார்க்க போயிருந்தேன். ஞாயிற்றுக்கிழமை என்னுடைய நாள். அன்னைக்கு மட்டும், நான் விரும்பியதை எல்லாம் செய்வேன்" என்றாள்.

அவன் "ஏன்?" என்று கேட்கவில்லை. அவளே மீண்டும் தொடர்ந்தாள்.

" ஏன்னா, வாரம் முழுக்க நான் ரொம்ப பிஸியா இருக்கிறேன் இல்லையா, அதனால... "

இப்பொழுது, அவனுக்கு கேட்க வேண்டும் என்று தோன்றியது, நீ என்ன செய்கிறாய் என்று.

"சண்டே ஒரு நாள் தான் எனக்கு கிடைக்குது."

சற்று நிறுத்திவிட்டு,

"நான் என்ன செய்றேன்னு கேட்க மாட்டீங்களா?"

அவளைப் பார்த்து மென்மையாய் சிரித்தான் பாரி.

" நான் லட்சுமி நாராயண் ஸ்கூல்ல டீச்சரா இருக்கேன்"

அவள் கூறியதை பாரியால் நம்பவே முடியவில்லை. ஏனென்றால், லக்ஷ்மிநாராயணன் பள்ளி, சென்னையின்மிகவும் பிரசித்தி பெற்ற பள்ளிகளுள் ஒன்று. அவளின் தோற்றத்தைப் பார்த்து, அவள் படித்துக் கொண்டு இருப்பதாக, இவன் தவறாக கணித்து விட்டான். அந்தப் பள்ளியில் அவள் பணிபுரிகிறாள் என்றால், அவள் மிகச் சிறந்த அறிவாளியாக தான் இருக்கவேண்டும். அதன் பிறகு, அவன் மௌனம் காக்க விரும்பவில்லை.

" நீங்க டீச்சரா? " அதே ஆச்சரியத்துடன் கேட்டான்.

" ஆமாம்"

" மேத்ஸ் டீச்சரா?"

" குட் கெஸ்"

" ட்வல்த் ஸ்டாண்டர்ட்டா?"

" வாவ் உங்களுக்கு எப்படி தெரியும்?"

" இண்டெகரேஷன் இன் மேத்தமேட்டிக்கல் எஜுகேஷன்"

" நீங்க கெஸ் பண்ணது ரொம்ப சரி"

இதற்குள்ளாக அவர்கள் இருவரும் அடுத்த பெட்ரோல் பங்கை நெருங்கி விட்டிருந்தார்கள். பெட்ரோல் பங்க்கின் நுழைவுவாயிலிலேயே இனியா நின்றுகொண்டாள். பெட்ரோல் நிரப்ப உள்ளே சென்றான் பாரி. அவனுடைய, இரு சக்கர வாகனத்தின் ரியர் வியூ மிர்ரரை திருப்பி, இனியா, அங்கு தான் இருக்கிறாளா என்பதை நிச்சயப்படுத்திக் கொண்டான். அவள், அவனுக்காகக் காத்துக் கொண்டிருந்தாள். ஒரு திருப்திகரமான புன்னகை அவன் முகத்தில் இழையோடியது. மறுபடியும், அவர்கள் இருவருமாக இணைந்து, பயணத்தை தொடர்ந்தார்கள்.

" நான் கொஞ்சம் பேசர டைப்"

"கொஞ்சமா?" என்றான்.

" நிறைய பேசறேனா?" என்றாள் கவலையாக.

ஆமாம் என்று சிரித்தபடி தலையசைத்தான்.

" இப்படி முன்ன பின்ன தெரியாத ஒரு அந்நியன் கிட்ட, யாராவது எல்லாத்தையும் ஒப்பிப்பாங்களா?"

" தனியா ரொம்ப தூரம் போகணுமேன்னு நினைச்சேன்" என்று தனது செயலுக்கு சப்பைக்கட்டு கட்டினாள் அவள்.

" இந்த "ரூட்" பாதுகாப்பானது இல்லன்னு உங்களுக்கு தெரியாதா?"

" அதனால தான், இருட்டுறதுக்கு முன்னாடி வீட்டுக்குப் போகணும்னு சீக்கிரம் கிளம்பி வந்தேன்"

" இன்னைக்கு ஞாயிற்றுக்கிழமை, நிச்சயமாக இது சேஃப்ட்டியான ரூட் கிடையாது, அதுவும் தனியா வரவே வராதீங்க"

" நான் என் பிரெண்ட் ஐ பார்த்து ரொம்ப நாள் ஆயிடுச்சு, அதனால தான் இன்னைக்கு வந்தேன்"

" அடுத்த தடவை, கூட யாரையாவது கூட்டிட்டு வாங்க"

" எங்க அப்பாவும் அண்ணனும் எப்பவும் பிசி தான். நான் வேற என்னதான் செய்யறது? அது சரி நீங்க எங்க போயிட்டு வர்றீங்க?"

" நான் எங்க சித்தப்பா வீட்டுக்கு போயிட்டு வரேன்"

" அடுத்த தடவை, நீங்க உங்க சித்தப்பா வீட்டுக்குப் போகும்போது, எனக்கும் சொல்லுங்க. நானும் உங்க கூட சேர்ந்து வந்து, என் பிரெண்டு வீட்டுக்கு போய்கிறேன்"

" முன்ன பின்ன தெரியாதவங்கள நம்புறது நல்லதில்லை"

" அப்போ உங்கள கூட நம்ப கூடாது என்று சொல்கிறீர்களா?"

" ஆமாம்" என்று தலையசைத்தான்.

" நல்ல அறிவுரை மிஸ்டர் பாரி. நான் இதை எப்பவும் ஞாபகம் வைச்சுக்கிறேன்"

அதற்குள், அவர்கள் சென்னையின் பிரதான சாலையை அடைந்திருந்தார்கள்.

" ஓகே பாரி. நாளைக்கு சாயங்காலம் உங்க புக் ஷாப்ல பார்க்கலாம். பை "

"பை"

தனது இரு சக்கர வாகனத்தை, இடது பக்கம் திருப்பி, ஆக்சிலேட்டரை முறுக்கினாள் இனியா. அவள் உருவம், தன் கண்ணிலிருந்து மறையும் வரை, அங்கேயே நின்றிருந்தான் பாரி.

தொடரும்...

ReplyForward

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top