Part 1


பாகம் 1


*நூல்* புத்தகக் கடை சென்னை

சென்னையின் மிகப் பிரபலமான புத்தகக் கடை அது. குழந்தைகளுக்கான கதை புத்தகத்திலிருந்து, முனைவர் பட்டம் பெற தேவையான புத்தகம் வரை, அனைத்தும் அந்த புத்தக கடையில் கிடைத்ததால், அது மிகவும் பிரசித்தி பெற்றிருந்தது. எப்பொழுதும் கூட்டமாகவும், பரபரப்புடனும், காணப்படும் ஒரு கடை அது. அந்தக் கடை அமைந்திருந்த இடமும், அதனுடைய பிரசித்திக்கு ஒரு காரணம். அதனைச் சூழ்ந்திருந்த பல்பொருள் அங்காடியும், உயர்நிலை பள்ளியும், புகழ் பெற்ற அம்மன் கோவிலும், அதனுடைய வளர்ச்சிக்கு காரணங்கள். புத்தகக்கடையின் நேரெதிரில் அமைந்திருந்த கோவிலை, புத்தகக் கடையின், கண்ணாடி சுவர்களின் மூலம் சுலபமாக பார்க்க முடியும்.

பாரி ... அந்த புத்தகக் கடையின் இளம் முதலாளி..
அந்த கடையின் மற்றுமோர் ஈர்ப்பு சக்தி. *பாரி* என்ற கடலைக் குறிக்கும் அவனுடைய பெயர், அவனுக்கு மிக பொருத்தம். அவனுடைய இதயம் கடலை போன்று மிகவும் ஆழமானது. யார் ஒருவராலும் அவன் இதயத்தில் என்ன இருக்கிறது என்பதை அவ்வளவு எளிதில் தெரிந்து கொண்டுவிட முடியாது. அதே நேரம், அவனுடைய இதயம், அதன் அடி ஆழத்தில், ஆழ்கடலைப் போன்று, அழகும், வண்ணமும் நிறைந்தது, அவன் வெளி மனிதர்களிடம் காட்டிக் கொள்வதற்கு நேர் எதிரானது. அந்த அழகை ரசிக்க கூடிய ஒருத்திக்காக தான் அவனும் காத்திருக்கிறான். படகில் பயணம் செல்லும் சாதாரண பெண்ணால் அது நிச்சயம் முடியாது. துணிந்து அந்த கடலில் குதிக்கும் ஒரு பெண்ணால் தான் அது சாத்தியப்படும்.

அவன் ஒரு மிகச்சிறந்த புத்தக காதலன். புத்தகம் படிப்பது என்பது அவனுக்கு மூச்சு விடுவது போன்றது. அவனால், புத்தகங்களை விற்பதோடு மட்டும் நின்றுவிட முடியாது. பெரும்பாலும், அவன் கடையில் இருக்கும் அனைத்து புத்தகங்களைப் பற்றியும் அவன் அறிந்து வைத்திருந்தான். வாடிக்கையாளர்கள், புத்தகங்களைப் பற்றி கேட்கும் கேள்விகளுக்கு. *எனக்கு தெரியாது* என்று பதில் கூறுவதை அவன் அவமானமாகக் கருதினான்.

அவனுடைய கடையில், ஒரு சிசிடிவி கேமரா கூட இல்லை. புத்தகங்களை திருடுபவர்களை, அவன் தடுக்க விரும்பவில்லை. அப்படியாவது அவர்கள் படிக்கட்டுமே. அவர்கள் படிக்கிறார்கள் என்பதே பெரிய விஷயம் தானே. அவனுக்கு, படிப்பின் மீது அப்படி ஒரு அலாதியான ஆர்வம்.

அவனுக்கு, மிகப்பெரிய பெண் ரசிகைகள் வட்டாரம் இருந்தது... அவனுக்கு தெரியாமலேயே. பெண்களின் எந்த செய்கையையும், அவன் கண்டுகொண்டதே இல்லை. அவனைப் பார்ப்பதற்கென்றே, அவன் கடைக்கு வருகை தரும் பெண் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை மிக அதிகம். புத்தகங்களின் பின்னால் தங்களை மறைத்துக் கொண்டு, அவனை நோட்டம் விடுவது, அந்த கடையில் சகஜமாக நடக்கும் ஒன்று. அந்த புத்தக கடையில், அவனுக்கு பிடிக்காத, எரிச்சலை ஏற்படுத்தும் ஒரு விஷயம், இது ஒன்றுதான். ஆனால், அந்தப் பெண்கள் அவனை நெருங்க, என்றுமே துணிந்ததில்லை. அவன் பார்க்கும் பார்வை அவ்வளவு சூடானது. அது, அனைவரையும் இரண்டடி பின்னால் நகர்ந்து நிற்கச் செய்யும். அப்படிப்பட்ட கோபப்பார்வை அது.

ஆனால், அதுவே, புத்தகம் சம்பந்தப்பட்டது என்றால், அவனைப் போல, தன்மையாக பேசக்கூடியவன் இருக்க முடியாது. அவனுடைய கைப்பேசி எண் கூட, பலருக்கும் தெரியாது. அவன், தொந்தரவுகளை விரும்புவதில்லை. அவன் அப்படித்தான். இது தான் அவன். இதை வைத்து, அவன் தனியாக இருக்க விரும்பும் ஒருவன், என்று நாம் தவறாக கணித்து விட வேண்டியதில்லை. இதுவரை, அவனுடைய ஆன்மாவை தொடக்கூடிய ஒரு நபரை, அவன் சந்தித்திருக்கவில்லை என்பதே உண்மை. அவனுக்கு சில பெண் தோழிகளும் இருந்தார்கள். அவர்கள் அவனுக்கு வெறும் *தோழிகள்* மட்டும்தான். அந்த கோட்டை அவன் என்றும் கடந்ததில்லை.

ஒரு பெண், தன் கடையின் முன், அவளுடைய இரு சக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு, அவளுடைய தலைக்கவசத்தை, கிழட்டுவதை, தன் கடையின் கண்ணாடி சுவரின் வழியாக பார்த்தான் பாரி. அவள் அவன் கடைக்குத்தான் வருகிறாள். இதற்கு முன்பு கூட, இந்த பெண்ணை அவன் கடையில் பார்த்திருக்கிறான். சென்றமுறை, அவள் கணிதம் தொடர்பான புத்தகத்தை வாங்கினாள். எப்படி, அவளை பற்றி அவனுக்கு இவ்வளவு துல்லியமாக நினைவிருக்கிறது என்றால், அவள் மற்ற பெண்கள், அவனை பார்ப்பதுபோல, அவனை பார்க்கவில்லை. நம்மை நிராகரிக்கும் ஒன்றின்பின் அலைவது தானே மனிதனின் இயல்பு... பாரிக்கும் அப்படித்தான் போலிருக்கிறது. இந்த முறை, அவள், அவனை பார்பாளா?

இந்த முறையும் அவள் கணிதம் தொடர்பான புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பகுதிக்கு சென்று ஏதோ ஒரு புத்தகத்தை தேடினாள்.

அந்தப்பெண், நவநாகரீக மங்கையாகவும், மிக இளமையாகவும், அழகாகவும், நல்ல சிவந்த நிறத்துடனும் இருந்தாள். அவளுடைய, விரித்து விடப்பட்டிருந்த, இடுப்பு உயர, பட்டுப்போன்ற கூந்தல், அவளுக்கு மேலும் மெருகூட்டியது. அவளுடைய பேசும் கண்கள், எப்போதும் ஒரு புன்னகையை சுமந்து கொண்டே இருந்தது. கருநிற கூந்தல், வெண்மையான முகம், பழுப்பு நிற கண்கள், சிவந்த இதழ்கள், இப்படி ஒரு வண்ண கலவையான பெண்ணை அவன் பார்த்ததே இல்லை. பார்த்த உடனேயே, மனதிற்கு மிகவும் நெருக்கமாக தோன்றினாள் அந்த பெண். அவள் இதழ்களில் சதா தவழ்ந்து கொண்டிருந்த புன்னகை, அவள் சுற்றத்திற்கு ஒரு புத்துணர்ச்சியை தந்தது. அவருடைய பெயர் என்னவாக இருக்கும்?

இளம் சிவப்பு, அவளுக்கு மிகவும் பிடித்த நிறமாக இருக்கவேண்டும். அவளுடைய இரு சக்கர வாகனமும், இளம்சிவப்பு. அவளுடைய தலை கவசம் இளம் சிவப்பு. அவள் அணிந்திருந்த உடையின் நிறம் இளம் சிவப்பு.

சட்டென்று சுய நினைவை அடைந்தான் பாரி. அவன் அந்த பெண்ணை அலசி ஆராய்ந்து கொண்டிருந்த விதம், அவனுக்கு அதிர்ச்சியை அளித்தது. இதுதான் முதல்முறை, ஒரு பெண்ணை இவ்வளவு ஆழமாக அவன் உற்று நோக்கி கொண்டிருப்பது. தனக்குத்தானே ஒரு எச்சரிக்கை செய்து கொண்டு, தனது வேலையை தொடர்ந்தான் பாரி.
*கண்கள்* மனதின் கண்ணாடி. பாவம், அவன் மனதின் கண்ணாடியால், அந்த பெண் இருக்கும் திசையை நோக்கி திரும்பாமல் இருக்க முடியவில்லை. சிறிது தயக்கத்துடன் அவன் இமைகள் மெல்ல உயர்ந்தது.

அந்தப் பெண் தேடி வந்த புத்தகம், அங்கு இல்லை என்பதை, அவளுடைய முக பாவம் காட்டியது. அழகாய் உதட்டைப் பிதுக்கி, முகத்தை சுருக்கினாள் அந்தப் பெண். அந்த நேரம், ஒரு சிறுவன், பாரியை அழைக்க, அது அவள் கவனத்தைக் கவர்ந்தது.

" அண்ணா, ஹாரி பாட்டர், பார்ட் சிக்ஸ், எங்கண்ணா இருக்கு?" என்றான்.

" லெஃப்ட் சைடு, ஃபிஃப்த் ஷெல்ஃப், தேர்ட் ரேக்" என்று அமர்ந்த இடத்திலேயே துல்லியமாய் சொன்னான் பாரி.

அவனுடைய பதிலில் அந்தப் பெண் ஈர்க்கப்பட்டாள் என்பது, அவள் முகத்தில் தெரிந்தது. அவள் பாரியை நோக்கி வந்தாள். அவளை பார்க்காதது போல, தன் கையில் இருந்த புத்தகதின் பக்கத்தை திருப்பினான் பாரி.

"எக்ஸ்கியூஸ் மீ"

அவசரப் படாமல், மெதுவாக தன் தலையை உயர்த்தி,

"யெஸ்" என்றான்.

" இண்டெகரேஷன் இன் மேத்தமேட்டிக்கல் எஜுகேஷன் புக் எங்க இருக்கு?" என்றாள்.

மறுபடியும், கணிதம் சம்பந்தப்பட்ட புத்தகம்... அவள், கணிதம் சம்பந்தப்பட்ட, பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருக்கும், மாணவியாக இருக்க வேண்டும். தன் மனதில் நினைத்துக்கொண்டான் பாரி.

" அந்த புக், ஸ்டாக் இல்ல"

" என்னது... இல்லையா? இந்த கடையிலேயே இல்லனா, அதை நான் வேற எங்க போய் தேடுறது?"

என்று கூறிவிட்டு மீண்டும் முகத்தை சுருக்கி, உதட்டைப் பிதுக்கினாள். அது மிக இயற்கையாக இருந்தது. வைத்த கண் வாங்காமல், அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் பாரி.

" என்னோட ஆர்டரை எடுத்துக்க மாட்டீங்களா?" என்றாள்.

"ஷ்யூர்...." என்று அளவாக பேசினான் பாரி.

" அந்த புக் எனக்கு நிச்சயம் வேணும்" என்றாள்.

" ஓகே"

என்று கூறிவிட்டு ரிசீவரை எடுத்து, எண்களை அழுத்தி, புத்தகத்தின் பெயரை கூறினான்.

ரிசிவரின் முனையை மூடிக்கொண்டு,

" எனி ஸ்பெஸிஃபிக் ஆத்தர்?" என்றான்.

" இல்ல, எந்த ஆத்தர் புக்கா இருந்தாலும் ஓகே" என்றாள்.

அதையே போனில் சொல்லிவிட்டு, போனை துண்டித்தான் பாரி.

" உங்க ஆடர நான் போஸ்ட் பண்ணிட்டேன். மூணு, இல்லன்னா நாலு நாள் கழிச்சு வந்து, செக் பண்ணிக்கோங்க" என்றான்.

" தேங்க்யூ.... தேங்க்யூ சோ மச்..."
அவள் மனதார நன்றி கூறினாள்.

" வெல்கம்"

" அப்போ நான் நாலு நாள் கழிச்சு வந்து வாங்கிக்கிறேன்"

தன் முகத்தை திடமாக வைத்துக் கொண்டு, சரி என்று தலை அசைத்தான் பாரி. அவள் தனது இரு சக்கர வாகனத்தில் அமர்ந்து, தலைக்கவசத்தை அணிந்து கொண்டு, அங்கிருந்து கிளம்பும் வரை, அவள் மீதே அவனது பார்வை இருந்தது.

சிரிக்காமல் இருக்க, அவன் தன் உதடுகளை தடுத்து விட்டான் தான்... ஆனால், அவனுடைய சிரிக்கும் கண்களை மூடி மறைக்க, அவன் இமைகளும் மறந்து போயின. அந்த பெண்ணின் சிரித்த முகத்தை பார்த்து, அவன் கண்களும் சிரித்தன.

நான்கு நாட்களுக்குப் பிறகு நடக்கப் போகும் அந்த ஒரு நிகழ்வுக்காக, பெயரிட முடியாத ஒரு எதிர்பார்ப்பு, அவன் மனதில் உருவானது. *நான்கு நாட்களுக்கு பிறகு அவள் மீண்டும் வருவாள்*

தொடரும்....

இந்த கதைக்காக, தனது புகைப்படத்தை, எனக்கு கொடுத்து உதவிய, என் தங்கை மகள் பூஜாவிற்கு, என் மனமார்ந்த நன்றிகளும், அன்பு முத்தங்களும்...

ReplyForward

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top