36 தருணின் எண்ணம்

36 தருணின் எண்ணம்

அஸ்வினுடைய வேண்டுதலை பற்றி அபிநயா மட்டுமல்ல, அஸ்வினும் கூட சங்கடப்பட தான் செய்தான். அவள் அறையில் நுழைந்த பொழுது, அவன் அமைதியாய் அமர்ந்திருந்தான் என்பதற்காக, அவன் அவளைப் பார்க்காமல் இருந்தான் என்று சொல்வதற்கில்லை. அவள் அவனைப் பார்க்காத பொழுது திருட்டுத்தனமாய் அவளை அவன் பார்க்கத் தான் செய்தான். அவளும் சங்கடத்துடன் இருந்தது, அவனுக்கு புரிந்தது. ஏன் இருக்காது? அவன் பேசிது அவனுக்கே சங்கடமாக இருக்கும் பொழுது அபிநயாவை பற்றி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை அல்லவா...?

கண்ணாடியின் முன் நின்று தனது வளையல்களை கழற்றி வைத்தாள். கண்ணாடியில் தெரிந்த தன் உருவத்தை பார்த்த பொழுது அஸ்வினின் குரல் அவள் காதுகளில் எதிரொலித்தது.

"எனக்கு என் பொண்டாட்டி வேணும்... முழுசா... எல்லா விதத்திலும் "

அவள் மெல்ல அஸ்வினின் மீது கண்களை ஓட்டிய போது, அவன் கணினி திரையை பார்த்தபடி புன்னகைத்துக் கொண்டிருந்தான். பெருமூச்செறிந்து விட்டு கட்டிலில் சென்று படுத்துக் கொண்டாள்.

தனது மடிக் கணினியை அணைத்துவிட்டு, அஸ்வினும் கட்டிலுக்கு வந்தான். இருவரும் போதுமான இடைவெளி விட்டு, கட்டிலின் இரு ஓரங்களில் படுத்துகொண்டார்கள்.

அபிநயா மெல்ல திரும்பி அவனை பார்க்க, அவள் எதிர்பாராத வண்ணம், அவனும் அவளை நோக்கி திரும்பினான். தன் கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டாள் அபிநயா. தன் தொண்டையில் இருந்து வெளியே வர துடித்த சிரிப்பை விழுங்கினான் அஸ்வின்.

அஸ்வினின் வேண்டுதலை முழுமையாகவும், நிதானமாகவும் யோசித்த பொழுது, அவள் உடல் நடுங்கியது. அவள் கரங்கள் போர்வையை கெட்டியாகப் பற்றிக் கொண்டன.

தன் வார்த்தைகள் அவளிடம் ஏற்படுத்தி இருந்த மிகப் பெரிய பாதிப்பை நினைத்து ஆச்சரியப்பட்டான் அஸ்வின். மெல்ல அவள் அருகில் நகர்ந்து வந்து, அவள் கன்னத்தை தட்டினான். திடுக்கிட்டு கண் விழித்தாள் அபிநயா. தனக்கு வெகு அருகில் அவன் இருப்பதை பார்த்து, மிரண்டாள் அவள்.

"உனக்கு என்ன ஆச்சு?" என்றான் அஸ்வின்.

"அது.... வந்து... கெட்ட கனவு..." என்று உளறிக் கொட்டினாள்.

"கெட்ட கனவா?"

ஆமாம் என்று தலையை அசைத்தாள்.

"தூங்கும் போது தான் கெட்ட கனவு வரும்... ஆனா, நீ தான் முழிச்சுக்கிட்டு இருக்கியே...?" என்றான் சிரித்தபடி.

மலங்க மலங்க விழித்தாள் அபிநயா.

"ஆர் யூ ஆல்ரைட்?" என்றபடி அவள் நெற்றியை தொட்டுப் பார்த்தான்.

*ஆம்* என்று அவசர அவசரமாய் தலையசைத்தாள்.

"ஏன் டென்ஷனா இருக்க?"

"எனக்கு.... எனக்கு தூக்கம் வருது"

"சரி தூங்கு"

அபிநயாவை பார்த்தபடி, தன் கைகளை கட்டிக் கொண்டு, தன் தலையணையில் படுத்துக் கொண்டான். அவனுக்கு எதிர் திசையில், அவனுக்கு முதுகைக் காட்டிக்கொண்டு திரும்பிப் படுத்துக்கொண்டாள் அபிநயா. உண்மையிலேயே, அவள், அவன் வார்த்தைகளால் பாதிக்கப்பட்டு தான் இருக்கிறாள். ஆனால், அவள் அவனிடமிருந்து விலகி செல்ல முயற்சிக்கவில்லை என்பதை அவன் கவனித்தான். அவள் முன்பு போல் இல்லை. ஆனால், இன்னும் அவள் தயக்கம் போகவில்லை. கூடிய விரைவில், அவள் அவனை நிச்சயம் கணவனாக ஏற்றுக் கொள்ளத் தான் போகிறாள்.

"அபி..." என்று மெல்ல அழைத்தான் அஸ்வின்.

தன் கழுத்தில் இருந்த தாலியை கெட்டியாகப் பற்றிக் கொண்டு, அவனுக்கு எந்த பதிலும் அளிக்காமல் படுத்திருந்தாள் அபிநயா. அஸ்வினுக்கு தெரியும், அவள் இன்னும் தூங்கவில்லை என்று. புன்முறுவல் பூத்தபடி மறுபடியும் அவளை அழைத்தான்.

"அபி..."

பதில் இல்லை.

"தூங்கிட்டா போல இருக்கே" என்றான் உண்மையிலேயே அவன் நம்பி விட்டதைப் போல.

அபிநயா தன் கழுத்தில் அவனுடைய சூடான மூச்சுக் காற்றை உணர்ந்தாள்.

"ஐ லவ் யூ" என்று ரகசியமாகக் கூறினான்.

கண்களை மூடியிருந்த போதிலும், அபிநயாவின் முகத்தில் அதிர்ச்சி தெரிந்ததை, அவன் கவனிக்கத் தவறவில்லை. முரசை போல் ஒலிக்கும் தனது இதயத்துடிப்பை, அஸ்வின் கேட்டு விடக்கூடாது என்று கடவுளை வேண்டிக் கொண்டாள் அபிநயா. மென்மையாய் அவள் கண்ணத்தில் முத்தமிட்டு, மீண்டும் தன் இடத்தில் சென்று படுத்துக் கொண்டான் அஸ்வின்.

அவனைப் பார்க்காமல் இருக்க படாதபாடுபட்டாள் அபிநயா. தூக்கம், அவள் கண்ணை விட்டு வெகு தூரம் ஓடி சென்றது. வெகு நேரம் கழித்து, அஸ்வினை நோக்கி திரும்பி படுத்துக்கொண்டு, அவனை கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள், தெறித்து ஓடும் தனது இதயத்துடிப்புடன். தன் கணவனை பார்த்து ரசித்துக் கொண்டிருக்க அவளுக்கு திகட்டவேயில்லை.

"அபி, எனக்கு என்னமோ உன்னால இவர் முன்னாடி உறுதியா இருக்க முடியும்னு தோணல. உன்னை பார்த்து ஐ லவ் யூ னு கூட சொல்லிட்டாரு... ஆனா, அதை அவர் ஏன் நான் முழிச்சிகிட்டிருக்கும் போது சொல்லல? ஏன், எப்ப பாத்தாலும் இவர் என்னை குழப்பிகிட்டே இருக்காரு...? அவர் வாயாலேயே எல்லா உண்மையையும் அவரை சொல்ல வைக்க என்ன வழின்னு பாரு." என்று தனக்குத்தானே பேசிக் கொண்டாள்.

சட்டென்று அவள் முகம் பிரகாசம் அடைந்தது.

"அடுத்த வாரம் என்னோட பிறந்த நாள் வருது. எனக்கு என்ன வேணும்னு அவர் நிச்சயம் கேப்பார். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, அவருடைய காதலியை பத்தி கேட்டுட வேண்டியது தான். ஆமாம்... அது நல்ல ஐடியா. அவரால என்னுடைய கேள்விக்கு பதில் சொல்லாம தப்பிக்கவே முடியாது. அப்படியே அவர் தப்பிக்க நினைச்சாலும், யார் அவரை விட போறது?" தன் மனதிற்குள்ளேயே செய்ய வேண்டியதை திட்டமிட்டு கொண்டாள்.

அவள் மனம் லேசானது போல் உணர்ந்ததால் சீக்கிரமே தூங்கிப் போனாள்.

மறுநாள்

தருணின் கைப்பேசி சப்தமிட்டது. அந்த அழைப்பு கண்ணனிடம் இருந்து வந்தது.

"எப்படி இருக்க தருண்?" என்றான் கண்ணன்.

"நீ எப்படி இருக்கே?" என்றான்.

"நான் நல்லா இருக்கேன். நீ ஏன் எனக்கு ஃபோனே செய்யறதில்ல?"

"நான் வேற ஒரு இடத்தில மாட்டிக்கிட்டேன்"

"ரீனா உன்னை பத்தி கேட்டுக்கிட்டே இருக்கா"

"ஓ..."

"என்ன இன்ட்ரெஸ்ட் இல்லாம இருக்க?"

"உண்மையிலேயே எனக்கு இன்ட்ரஸ்ட் இல்ல"

"என்ன ஆச்சு? உனக்கு உடம்பு சரி இல்லயா?"

"என்னை மறுபடியும் கடத்திட்டாங்க. நரகம் எப்படி இருக்கும்ன்னு நான் தெரிஞ்சிகிட்டேன். அதுக்கு அப்புறமும் நான் மாறலன்னா, நான் மனுஷனே இல்ல"

"இதெல்லாம் நீ தான் பேசுறியா?"

"எந்த ஒரு குறிக்கோளும் இல்லாமல் சுத்திகிட்டு இருந்த அந்த பழைய தருண் இல்ல. அந்த மாதிரி இதயம் இல்லாதவனா இருக்க நான் விரும்பல"

"நான் காண்றது கனவில்லையே"

"இல்ல... அதை நீ சீக்கிரமே தெரிஞ்சுக்க போற"

"உன்னை இப்படி பார்க்க எல்லாரும் சந்தோஷப்படுவாங்க"

"நீ எதுக்காக எனக்கு கால் பண்ண?"

"நீ இர்ஃபான் பர்த்டே பார்ட்டிக்கு வர தானே?"

"இன்னைக்கு சாயங்காலம் தானே?"

"ஆமாம்"

"கண்டிப்பா வரேன். பார்ட்டி எங்க நடக்குது?"

"ஹோட்டல் ப்ளூ லோட்டஸ்"

"கண்டிப்பா வரேன்."

"ஈவினிங் மீட் பண்ணலாம்" என்று கூறிவிட்டு அழைப்பை துண்டித்தான் கண்ணன்.

அவன் உடனடியாக அஸ்வினுக்கு ஃபோன் செய்தான் என்று கூற வேண்டியதில்லை.

"அண்ணா, எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல. இதையெல்லாம் நம்புறதா வேண்டாமான்னு எனக்கு குழப்பமா இருக்கு."

"ம்ம்ம்"

"அவனை சந்தேகப்பட்டுறதனால யாருக்கும் எந்த பிரச்சனையும் வராது. ஆனா, அவனை நம்பினா, வரும்னு எனக்கு தோணுது"

"நான் பாத்துக்குறேன்"

"சரிங்க அண்ணா"

"தேங்க்யூ"

கண்ணன் தருணை பற்றிக் கூறியவற்றை யோசித்துக் கொண்டே அந்த அழைப்பை துண்டித்தான் அஸ்வின். தருணுக்கு வரும் அனைத்து அழைப்புகளையும் கண்காணிக்க முடிவெடுத்தான் அவன். அது சம்பந்தப்பட்ட ஏற்பாடுகளையும் உடனடியாக செய்தான். அவனுக்கு வரும் அழைப்புகளின் மூலம் சந்தேகப்படும்படியான எந்த ஒரு ஆதாரமும் அஸ்வினுக்கு கிடைக்கவில்லை. அதனால், அஸ்வினுடைய சந்தேகம் பல மடங்கு உயர்ந்தது. ஏனென்றால், தான் திருந்தி விட்டதாக தருண் மறுபடி மறுபடி கூறிக் கொண்டே இருந்தான். ஒருவேளை அவன் ஒட்டு கேட்பது தருணுக்கு தெரிந்து விட்டதோ? அஸ்வினுக்கு சந்தேகம் வந்தது.

ஆம்... தருணுக்கு அந்த சந்தேகம் வலுவாக இருந்தது. அஸ்வினும், அவனுடைய ஆட்களும், எவ்வளவு ஆபத்தானவர்கள் என்று தெரியாதவனா என்ன தருண்? அவன் யாரையும் நம்ப தயாராக இல்லை. ஏனென்றால், இப்பொழுது அவன் வகுத்திருக்கும் திட்டம், யாராலும் எளிதாக கணிக்க முடியாத ஒன்று.

யாருமற்ற ஒரு பகுதியில் தன் காரை நிறுத்திவிட்டு, தன் சட்டைப் பையில் இருந்து வேறு ஒரு கைபேசியை வெளியில் எடுத்தான் தருண். அதன் மூலம் யாரையோ அழைத்துவிட்டு காத்திருந்தான். அவனுடைய அழைப்பு மறுமுனையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

"ஸ்டீஃபன்..."

"எப்படி இருக்க தருண்?"

"நான் நல்லா இருக்கேன். எனக்கு உன்னால ஒரு காரியம் ஆகணும்"

"எதுவா இருந்தாலும் செய்ய தயாரா இருக்கேன்"

"கொலை செய்யணும்னா கூடவா?"

"எத்தனை கொலை செய்யணும்?" என்றான் சர்வ சகஜமாக.

"ஒன்னு போதும்" என்றான் சிரித்தபடி தருண்.

"எப்போ?"

"எப்போன்னு சீக்கிரம் சொல்றேன்"

"எப்போன்னு கொஞ்சம் முன்னாடியே சொல்லிடு. நான் என்னை ஃப்ரீ பண்ணிக்குவேன்"

"ஓகே"

"நான் யாரை கொல்லணும்?"

"நீ கொலை செய்யப் போற முதல் நாள், உனக்கு நான் அவளுடைய போட்டோவை அனுப்புறேன்"

"எங்க வச்சு கொல்லணும்?"

"பாடி, குறுங்காலீஸ்வரர் கோவில்"

"கோவிலயா?"

"அவ வேற எங்கேயும் போகமாட்டா"

"அப்போ, அவளை அவங்க வீட்டிலேயே வெச்சி முடிச்சிட்டுறேன்"

"அவ இருக்கிற வீட்டுக்குள்ள உன்னால் நுழைய கூட முடியாது"

"அப்படியா, யாரவ?"

"என்னோட அண்ணன் பொண்டாட்டி"

"என்னது... உன்னோட அண்ணியா? ஆனா, அவங்களை ஏன் கொல்லணும்?"

"அவ எங்க அண்ணனுக்கு பெரிய தலைவலியா இருக்கா. அதனால தான் எங்க அண்ணனை அவகிட்ட இருந்து காப்பாத்தணும்னு நினைக்கிறேன்"

"அப்ப சரி, முடிச்சிடலாம்"

"இது தான் என்னுடைய புது நம்பர். எனக்கு நீ ஃபோன் பண்ணாத. மெசேஜ் மட்டும் அனுப்பு. நான் உனக்கு ஃபோன் செய்றேன்" என்றான் தருண்.

"ஓகே" ஸ்டீஃபன் அழைப்பை துண்டித்தான்.

"ஒரு கொலை... மூணு பேரையும் பழிவாங்கி, ஜென்மத்துக்கும் அவங்களை கண்ணீர் சிந்த வைக்க போகுது. அபிநயா சாகணும்... அவளுக்காக தானே என்னை படாத பாடு படுத்தினாங்க. ஒரு சாதாரண பொண்ணுக்காக, மாட்டை அடிக்கிற மாதிரி என்னை அடிச்சாங்க. அவனுங்களை நான் நிம்மதியா இருக்க விட மாட்டேன். நான் பட்ட சித்திரவதையை அவங்களும் அனுபவிக்கணும்... சாகுற வரைக்கும்." என்று உள்ளுக்குள் கர்ஜித்தான் தருண்.

தொடரும்....













Bạn đang đọc truyện trên: AzTruyen.Top