2 அதே பெண்
2 அதே பெண்
அஸ்வின் இல்லம்
நல்ல தோற்றமும், சராசரி உயரமும், கட்டுமஸ்தான உடலும், கோதுமை நிறமும் கொண்ட ஒருவனை, அருண் கடுமையாக குறுக்கு விசாரணை செய்து கொண்டிருந்தான். அவன் விசாரிக்கப்பட்டு கொண்டிருக்கும் விஷயத்தை பார்க்கும் பொழுது, அவன் தான் தருணாக இருக்க வேண்டும்.
"ஸ்வேதாவுக்கு என்ன ஆச்சு?" என்றான் அருண்.
தன் முகத்தை மூடிகொண்டு அழத்தொடங்கினான் தருண்.
"போதும், உன் நடிப்பை நிறுத்து" என்றான் அருண் காட்டமாக.
"நடிப்பா? நானா? நான் எந்த அளவுக்கு மனசுடைஞ்சு போய் இருக்கேன்னு உனக்கு தெரியாது...! அந்த பொண்ணு செத்துட்டாங்கிறத, என்னால நம்பவே முடியல தெரியுமா?" என்றான் அழுத விழிகளோடு.
"வாய மூடு... எதுக்காக, உனக்கு பிறந்தநாள் இல்லாத ஒரு நாளில், அந்த பெண்ணை, பிறந்தநாள்னு சொல்லி வரவழைச்ச?"
அதை கேட்ட தருணின் முகத்தில் அதிர்ச்சி தெரிந்தது. அந்த விஷயம் அருணுக்கு எப்படி தெரிந்தது? தருண் தன்னை சுதாகரித்துக் கொண்டான்.
"அய்யய்யோ... இல்ல அருண்... நான் அவளை வரவழைக்கல... அன்னைக்கு அவளுடைய பர்த்டே... அவ தான் என்னை இன்வைட் பண்ணி இருந்தா. உனக்கு யாரோ தப்பபா சொல்லி இருக்காங்க."
"அவளுடைய பிறந்த நாள் அடுத்த மாசம். அதை நான் எஃப்.ஐ.ஆர். காப்பியில பார்த்தேன்... "
"அப்படியா? ஆனா, அது எனக்கு எப்படி தெரியும்? அவ என்னை எதுக்கு கூப்பிட்டான்னு எனக்கு தெரியலயே"
"இங்க பாரு, நான் சொல்றத கவனமா கேளு. நமக்கு மோசமான ஒரு கடந்த காலம் இருந்தது. நம்ம அம்மாவால தான், ருக்மணி அம்மா தற்கொலை பண்ணி இறந்து போயிட்டாங்க. அப்படி இருந்தும், அஸ்வின் நமக்கு ஒரு நல்ல லைஃப் கொடுத்திருக்கான். அதுக்கு நம்ம நன்றியுள்ளவங்களா இருக்கணும்."
"என்னை நம்பு அருண். நான் எந்த தப்பும் செய்யல. உனக்கு என்னைப் பத்திதெரியாதா?"
"எனக்கு உன்ன பத்தி நல்லாவே தெரியும். அதனால தான் எனக்கு பயமா இருக்கு. நான் உன்னை எச்சரிக்கிறேன். இந்த வாழ்க்கை நம்ம கனவில் கூட நினைச்சி பார்க்காத ஒன்னு. அஸ்வின், நம்ம மேல வச்சிருக்குற நம்பிக்கையை தயவுசெய்து கெடுத்துடாத. நான் அதை நடக்கவும் விடமாட்டேன். ஒருவேளை, அஸ்வினுடைய கௌரவத்துக்கு பங்கம் வரா மாதிரி, நீ ஒரு அடி எடுத்து வச்சா கூட, மோசமான ஒரு அருணை நீ எதிர்கொள்ள வேண்டி இருக்கும். நான் அஸ்வினுடைய மரியாதையை காப்பாத்த எது வேணாலும் செய்வேன். அதை நீ மறந்துடாத."
அவர்களுடைய உரையாடலைக் கேட்டுக் கொண்டு, அங்கு வந்தார் சுபத்ரா. அவரைப் பார்த்தவுடனேயே, அருணின் கோபம் உச்சத்தை தொட்டது. ஏனென்றால், அவனுக்கு தெரியும், அடுத்து நடக்கப் போவது என்ன என்பது.
"அருண், இது தான் உன்னுடைய தம்பிகிட்ட பேசுற முறையா? நீ எப்படி அவனை இவ்வளவு கீழ்த்தரமா சந்தேகப்பட முடியும்? அதுவும் ஒரு பொண்ணோட இழப்புக்கு எப்படி அவன் காரணமா இருப்பான்?"
"அந்தப் பொண்ணு ஸ்வேதா, தற்கொலை பண்ணிக்கிட்டா."
"எந்த ஸ்வேதா?"
"இவன் கீழ்த்தரமான நடந்துக்கிட்டான்னு, இவன் மேல, போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுத்தாளே, அந்த பொண்ணு தான்."
"சரி... அந்த பொண்ணு இறந்துட்டா... ஆனா, அதுக்காக இவன் மேல நீ எதுக்காக குத்தம் சொல்ற?"
"ரெண்டு நாளைக்கு முன்னாடி இவன் பர்த்டே பார்ட்டின்னு, அந்த பெண்ணை கூப்பிட்டருக்கான். ஆனா, அன்னைக்கு இவனோட பர்த்டேவே இல்ல. அதுக்கப்புறம், அந்த பொண்ணு, வீட்டை விட்டு வெளியே வரவே இல்ல. அவ இறந்த செய்தி மட்டும் தான் வந்திருக்கு. அவங்க அப்பா, போலீஸ்ல கேஸ் கொடுத்திருக்காரு. ஏன்னா, அவரும் இவன் மேல தான் சந்தேகப்படுறார். இப்ப நீங்க அதுக்கு என்ன பண்ண போறீங்க?"
"அதை நான் பாத்துக்கிறேன்"
"எப்பேர்ப்பட்ட விஷயமா இருந்தாலும் நீங்க அத பாத்துக்குவீங்க... ஆனா, நான் மட்டும் அவனை விசாரிக்க கூடாது... ஏன் இப்படி பண்றீங்க?"
"நான் அவனை முழுசா நம்புறேன். என்னுடைய பேரன், இப்படி பட்ட கீழ்த்தரமான விஷயங்களை எல்லாம் செய்யவே மாட்டான்"
"உங்களுடைய இந்த நம்பிக்கை காப்பாத்தப்பட்டா, நான் ரொம்ப சந்தோஷப்படுவேன். அவன் உங்களை ஏமாத்தாம இருந்தா, நான் ரொம்ப சந்தோஷப்படுவேன். ஆனா, அது நிச்சயம் நடக்கப் போறதில்ல. ஒரு நாள், இதுக்காக நீங்க ரொம்ப வருத்தப்படுவீங்க."
அவன் அருண் பக்கம் திரும்பினான்.
"நீ என்னனென்ன செய்றேன்னு, எனக்கு தெரியாதுன்னு நெனச்சிகிட்டு இருக்காத. ஒருவேளை, நான் உன்னை கையும் களவுமா பிடிசேன்னா, நீ ரொம்ப மோசமான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்." என்று எச்சரித்துவிட்டு சென்ற அருணை பார்த்து, மென்று விழுங்கினான் தருண்.
சுபத்ராவின் முன், முழங்காலிட்டு, அவள் பாதங்களை தொட்டான் தருண்.
"நீங்க என்னை நம்புறதுக்கு நன்றி, பாட்டி." என்ற, அவனின் தோளை தொட்டு தூக்கினார் சுபத்ரா.
"எதுக்காக, மத்தவங்க உன்னை சந்தேக படுறதுக்கு, நீ ஒரு சந்தர்ப்பத்தை கொடுக்கிற? கவனமா இரு. நீ, உன்னுடைய அண்ணன்களின் கண்காணிப்பில் தான் இருக்க, அப்படிங்கறத மறந்துடாத."
"நான் எந்த தப்பும் செய்யாத போது, நான் எதுக்காக கவனமா இருக்கணும், பாட்டி?" என்ற தருணை, பெருமையுடன் தட்டிக் கொடுத்தார் சுபத்ரா.
இது தான், அஸ்வின் இல்லத்தில் அடிக்கடி நிகழும் கூத்து. தருணுக்கு சுபத்திரா வழங்கும் அதிகப்படியான ஆதரவு, அவனை ஒரு கவசம் போல் காத்துக்கொண்டிருந்தது. அது மற்ற இருவரையும் அதிகமாக எரிச்சலடைய செய்தது. தருணோ, அவன் பாட்டி, தனக்கு வழங்கும் அதீத ஆதரவை, தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள தவறவில்லை. உண்மையாக நடந்து கொள்ளும், தனது இரண்டு அண்ணன்களாளும் முடியாத, சுபத்திராவை எவ்வாறு கையாள்வது என்ற சூட்சுமத்தை, அவன் மிக நன்றாகவே அறிந்து வைத்திருந்தான்.
......
அஸ்வின், மனோஜூடன் வேலை நடந்து கொண்டிருக்கும் ஸைட்டை பார்ப்பதற்காக காரில் பயணித்து கொண்டிருந்தான். அருண் ஏற்கனவே அங்கு சென்று விட்டிருந்தான்.
"நீ தருணை ஏதாவது கேட்டியா?" என்றான் மனோஜ்.
"இல்ல" என்றான் சாலையில் தன் கண்களை வைத்தபடி அஸ்வின்.
"ஏன்?"
"அதனால என்ன பிரயோஜனம் இருக்க போகுது? எப்படி இருந்தாலும், அவன் பொய் தான் சொல்ல போறான். அப்பறம் கேட்டு என்ன ஆகப்போகுது?"
"அதுக்காக நீ அமைதியா இருக்க போறியா?"
"இல்ல... நேத்து, அருண் அவன வார்ன் பண்ணான்"
"அதுக்கு தருண் என்ன சொன்னான்?"
"அவனுடைய, வழக்கமான டிராமாவை ஆரம்பிச்சான்..."
"அவன் அந்த பொண்ணுகிட்ட மன்னிப்பு கேட்டபோதே, எனக்கு குழப்பமா இருந்தது. ஏன்னா, அவன் அந்த மாதிரி ஆள் கிடையாது..."
"ம்ம்ம்."
"அந்த பொண்ணுக்கு, என்ன நடந்திருக்க முடியும்னு, உனக்கு ஏதாவது ஐடியா இருக்கா?" என்றான் மனோஜ்.
"என்னால எதையுமே கெஸ் பண்ண முடியல. ஐயம் பிளான்க்."
"நான் தருணை பத்தி விசாரிச்சதுல, அவனுக்கு, ட்ரக் டீலர்ஸ் கூட தொடர்பு இருக்கிறதா தெரிஞ்சது."
அதைக் கேட்டு, அதிர்ச்சியான அஸ்வின்.
"என்ன? ட்ரக் டீலர்ஸ் கூடடவா? வாய்ப்பே இல்ல..."
"ஆமாம் அஸ்வின். அவன் ட்ரக் டீலர்ஸ் கூட தான் டீலிங் வச்சுக்கிட்டு இருக்கான். அது ரொம்ப ஆபத்தானது."
"ஆனா, அவன் டிரக்ஸ் கன்ஸியூம் பண்ணி, நான் பார்த்ததே இல்லயே... எப்பயுமே அவன் ஸ்டடியா தானே இருக்கான்? அப்புறம் இது எப்படி பாஸிபிளா இருக்க முடியும்?"
"ஒருவேளை, அவன் அந்த டிரக்சை, வேற ஏதாவது ஒரு விதத்தில் பயன்படுத்தலாம் இல்லயா?"
"நீ என்ன சொல்ற?"
"எனக்கு என்னமோ, ஸ்வேதாவுடைய தற்கொலைக்கும், இந்த ட்ரக்ஸுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமோன்னு தோணுது..."
"டேம்மிட்... திஸ் தருண்..." என்று பல்லைக் கடித்தான் அஸ்வின்.
"ஒருவேளை, அவன் போலீஸ்ல சிக்கிகிட்டா, நம்மளுடைய பவர் எல்லாம் அங்க வேலை செய்யாது. ஏன்னா, இது டிரக்ஸ் கேஸ். நம்மளுடைய பிஸினஸும் ரொம்ப பாதிக்கப்படும்."
"அவனை எப்படி ஹேண்டில் பண்றதுன்னு எனக்கு ஒன்னுமே புரியல" என்று சலித்துக் கொண்டான் அஸ்வின்.
"அருண் தான் இதுக்கு ஒரே சொல்யூஷன்"
"அவனுக்கு இதைப் பத்தி தெரியுமா?"
"அவனுக்கும் ஒரு ஹின்ட் கொடுத்திருக்கேன்..."
"நெஜமாவே அவன்கிட்ட சொல்லிட்டியா?"
"ஆமாம். அதைக் கேட்டு அவன் ரொம்ப கோவபட்டான்."
"அதனால தான், அவன், நேத்து தருண்கிட்ட அவ்வளவு கோவமா பேசினானா? அவனுடைய குரல்லயே, நான் ஒரு வித்தியாசத்தை கவனிச்சேன்."
"அப்புறம் என்ன நடந்தது?"
"அப்புறமென்ன... வழக்கம் போல பாட்டி வந்து, என்ட்ரி கொடுத்து, எல்லாத்தையும் கெடுத்துட்டாங்க"
"அவனை தப்பா வழி நடத்துறதை, ஏன் அவங்க புரிஞ்சிக்கவே மாட்டேங்கிறாங்க?"
"சில பேர் அப்படித் தான். எல்லாமே கைநழுவிப் போனதுக்கு அப்புறமா தான் அவங்களுக்கு புரியும்."
"ஆனா, அதனால என்ன கிடைக்க போகுது?"
"ஏமாற்றம் தான்..."
"இரட்டைப் பிள்ளைகள், இப்படி எதிர் எதிர் துருவமாக இருப்பாங்கன்னு என்னால நம்பவே முடியல."
"நானும் அதை நினைச்சு பல தடவை ஆச்சரியப்பட்டிருக்கேன். நன்றி விசுவாசத்தில், ஒருத்தன் மலை உச்சின்னா, ஒருத்தன் அதல பாதாளம்..."
"உண்மை தான்" என்றான் மனோஜ்.
சிகப்பு விளக்கு ஒளிரும் முன், அந்த சிக்னலை, எப்படியாவது கடந்து விடவேண்டும், என்ற அஸ்வினின் முயற்சி பலனளிக்கவில்லை. ஏனென்றால், அது சென்னை மாநகரத்தின் மிக நெருக்கமான, அதே நேரம் மிக அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் ஒரு சிக்னல். அங்கே மாட்டிக்கொண்டால், 90 விநாடிகள் காத்திருக்க வேண்டி வரும். அவனால் அந்த சிக்னலை கடக்க முடியவில்லை. அவனுக்கு மிகப் பிடித்தமான, சிவப்பு நிறத்தை, அவன் வெறுக்கும் இடம், சிக்னல் ஒன்று தான். வெறுப்பில், ஸ்டீயரிங் வீலை, ஒரு குத்து குத்தினான் அஸ்வின். மனோஜும் நீண்ட பெருமூச்சு விட்டான்.
"என்னை கடுப்பேத்தூற விஷயமே, இந்த சிக்னல் தான்" என்றான் அஸ்வின்.
"என்னமோ, நான் ரொம்ப சந்தோஷமா இருக்கிற மாதிரி..." என்று அவன் காலை வாரினான் மனோ.
ஒன்றரை நிமிடம் அவர்கள் அங்கே நின்றாக வேண்டும். அப்பொழுது, அங்கே சில பெண்கள், காரிலும், இருசக்கர வாகனத்திலும், அமர்ந்து கொண்டிருந்த மக்களிடம் நன்கொடை வசூலித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் வைத்திருந்த உண்டியலில், ப்ளூகிராஸ் சின்னத்தை பார்த்தவுடன் அஸ்வினின் முகம் ஒளிர்ந்தது. நேற்று மாலை பார்த்த, அந்த ப்ளூகிராஸ் பெண் அவன் நினைவுக்கு வந்தாள்.
ஆர்வத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல், அவனுக்கு தெரிந்த, ப்ளூ க்ராஸ்ஸை சேர்ந்த, அந்த ஒரு நபரைத் தேடி, அவன் கண்கள் இங்கும் அங்கும் அலைந்தன. ஆனாலும், அவனுடைய மிகச்சிறந்த நண்பனான மனோஜ் அதை கவனித்துவிட்டான். அவனும், அமைதியாக, இங்கும் அங்கும் பார்க்க தொடங்கினான்.
அப்பொழுது, பின்புறமாக இருந்து வந்த ஒரு பெண், மனோஜ் அமர்ந்திருந்த பக்கத்தின், ஜன்னலின் கண்ணாடியை தட்டினாள்.
அந்த பெண்ணை பார்த்தவுடன், அஸ்வினின் மூச்சு சில நொடி நின்றது. அவன் காரில் அடி பட இருந்த நாய் குட்டியை காப்பாற்றிய அதே பெண், உண்டியலை கையில் ஏந்தியபடி நன்கொடை கேட்டு, மயக்கும் சிரிப்புடன் நின்றிருந்தாள்.
மெல்ல தன் கண்களை அஸ்வின் பக்கமாக திருப்பினான் மனோஜ். அவன் எதிர்பார்த்தபடியே, அஸ்வின் தன்னிலை மறந்து அந்த பெண்ணை பார்த்தபடி இருந்தான். தன் பக்கம் இருந்த ஜன்னலின் கண்ணாடியை கீழே இறக்கிவிட்டு தன் சட்டைப் பையில் பணத்தை தேடுவது போல பாசாங்கு செய்தான் மனோஜ். முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு, அந்தப் பெண்ணைப் பார்த்து தன்னிடம் பணம் இல்லை என்றும், அஸ்வினிடமிருந்து பெற்றுக் கொள்ளும் மாறும் சைகை செய்தான். அந்தப் பெண்ணும், சரி என்று தலையசைத்துவிட்டு அஸ்வினை நோக்கி சென்றாள். அவனை நோக்கி வந்த அந்த பெண்ணுடன், அஸ்வினின் கண்களும் பயணித்தன. தன் பக்க கண்ணாடி கதவை இறக்கிவிட்டு, தனது சட்டைப்பையிலிருந்து நான்கு ஐநூறு ரூபாய் நோட்டுகளை எடுத்து அவளிடம் நீட்டினான். பூ போன்ற அவளது முகம் மலர்ந்தது. தனது கைப்பையிலிருந்து ப்ளூகிராஸ் ஸ்டிக்கரை எடுத்து, அதை ஒரு குண்டூசியின் துணை கொண்டு, அவனது கோட்டில் குத்திவிட்டாள் அவள்.
ரசிக்கத்தக்க ஒரு புன்னகையுடன் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான் அஸ்வின். அந்த காட்சியை, வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான் மனோஜ். அஸ்வினுடைய பார்வை, அந்த பெண்ணின் கழுத்தில் இருந்த, அடையாள அட்டையில் இருந்த அபிநயா ராமநாதன் என்ற அவள் பெயரின் மீது விழுந்தது.
"தேங்க்யூ சார்" என்றாள் அபிநயா.
"சரி" என்று கவர்ந்திழுக்கும் புன்னகையுடன் தலையசைத்தான் அஸ்வின். அவள் அடுத்த காரை நோக்கி புன்னகையுடன் சென்றாள். சொல்லத் தேவையே இல்லை, அவனின் கண்கள் அவளை தான் தொடர்ந்தது. அஸ்வின், இந்த பூமியிலேயே இல்லை என்று தோன்றியது, மனோஜுக்கு.
"அந்த பொண்ணு அழகா இருக்கா இல்ல?" என்றான்.
"அவ கண்ணு ரொம்ப கவர்ச்சியா இருக்கு" என்றான் தன்னை மறந்தவனாய்.
"கவர்ச்சியா? அடக்கடவுளே என்ன தான் நடக்குது இங்க?" என்று எண்ணினான் மனோஜ்.
"நீ அவ கண்களால கவரப்பட்டுட்ட போல இருக்கு?"
"ம்ம்ம்"
"அவ பேரை கேட்டிருக்கணும்..."
"அபிநயா ராமநாதன்..."
"உனக்கு எப்படி தெரியும்?" என்றான் மனோ அதிர்ச்சியாக.
"அவளோட ஐடென்டி கார்ட்ல பார்த்தேன்."
"அதானே... நீ யாரு? அஸ்வின் ஆச்சே..." என்றான் கிண்டலாக.
சிக்னல் விளக்கு, சிவப்பில் இருந்து பச்சையாக மாறியதை கவனித்தான் மனோஜ். ஆனால், அஸ்வின் அதை கவனிக்கவில்லை. அவன் பார்வை, சாலையை கடந்து சென்ற, அபிநயாவின் மீது இருந்தது. மனோஜ் அவன் தோளை மெதுவாய் தொட்டு, சிக்னலை கவனிக்கும் படி சைகை செய்தான். அப்பொழுது தான், அஸ்வின் தன் சுய நினைவுக்கு வந்தான். அவனைப் பார்த்து, மனோஜ் நக்கலாக சிரித்தான்.
"என்ன?" என்றான் அஸ்வின் கண்டிப்பு குரலில்.
"ஒன்னும் இல்லயே..." என்றான் சிரித்தபடி மனோ.
காரின் என்ஜினை உயிரூட்டி, அங்கிருந்து கிளம்பினான் அஸ்வின். ஆனால், கிளம்புவதற்கு முன், ஒரு முறை அபிநயாவை பார்க்க அவன் தவறவில்லை. அதையும் கவனித்தான், மனோஜ்.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top