53 திட்டத்தின் ஒரு பகுதி
53 திட்டத்தின் ஒரு பகுதி
மணிமாறனுடான அழைப்பை துண்டித்த மலரவன், ஸ்டீவுக்கு ஃபோன் செய்தான். அந்த அழைப்பை ஏற்ற ஸ்டீவ்,
"ஹலோ மலழ், நான் மணிமாறன் சாரை ஹோட்டல்ல செட்டில் பண்ணிட்டேன்" என்றான்.
" நான் சொல்றதை கவனமா கேளு, ஸ்டீவ்"
"சொல்லுங்க"
"அப்பா லண்டன்ல இருக்கிற வரைக்கும், அவரை பாதுகாக்க எனக்கு சில பேர் வேணும். அது அப்பாவுக்கு தெரியக்கூடாது"
"சரி"
"அது மட்டுமில்ல, இப்போ அவர் கூட இருக்கிறானே, அவனையும் கண்காணிக்கணும்"
"வில்லியமையா சொல்றீங்க?"
"ஆமாம். உனக்கு அவனை தெரியுமா?"
"தெரியாது. மணி சார் தான் அவரை கிரீட் பண்ணாரு"
"சரி. அவனை ஃபாலோ பண்ண சில பேரை அப்பாயிண்ட் பண்ணு. அவன் நம்ம கண்காணிப்பிலேயே இருக்கணும்"
"சரி"
"அதை பத்தி எனக்கு அப்பப்போ அப்டேட் பண்ணிக்கிட்டே இரு"
"ஷூயூர்"
அழைப்பை துண்டித்தான் மலரவன்.
ரஞ்சித் இல்லம்
குமரேசனின் உதவியாளர் ரஞ்சித்தின் மனைவி காவேரி, நிம்மதி இழந்து இங்கும் அங்கும் உலவி கொண்டிருந்தார். அப்பொழுது சோர்வே வடிவாய் உள்ளே நுழைந்தார் ரஞ்சித். அவர் சோர்வாய் இருந்ததற்கு காரணம், கைலாசம் கைது செய்யப்பட்ட செய்தி தான். அந்த செய்தி அவரின் மனதில் மிகப்பெரிய பயத்தை உண்டாக்கியிருந்தது. கைலாசத்தையும் வங்கியாளரையும் அவ்வளவு சுலபமாய் மலரவனாய் பிடித்து விட முடிந்தது என்றால், குமரேசனை அவன் என்ன செய்வான்? கண்ணிமைக்கும் நேரத்தில் அவன் குமரேசனின் கதையை முடித்து விடுவானே...! எதற்க்குத்தான் தேவை இல்லாமல் குமரேசன் சிங்கத்தின் வாயில் தலையை வைக்கிறாரோ...! தன் மாமனாருடன் விளையாடிய ஒருவனையே இப்படி வலைவீசி மலரவன் பிடிக்கிறான் என்றால், தன் குடும்பத்தையே வேரறுக்க நினைக்கும் குமரேசனை சும்மா விட்டு விடுவானா? அவருக்கு பதற்றம் அதிகரித்துக் கொண்டே சென்றது.
அவர் முகம், கை, கால் கழுவ குளியலறை சென்றார். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, அவரது மனைவி காவிரி, மகிழன் கேட்டுக்கொண்டதை போலவே, அவரது கைபேசியின் செட்டிங்ஸை ஆட்டோ ரெக்கார்டிங்குக்கு மாற்றினார்
"ஏன் ரொம்ப டென்ஷனா இருக்கீங்க?" என்றார் காவேரி.
ஒன்றுமில்லை என்று தலையசைத்த ரஞ்சித்,
"நீயும் கூட டென்ஷனா தான் தெரியற" என்றார்.
"இன்னைக்கு நம்ம ஜோசியரை போய் பார்த்துட்டு வந்தேன். உங்களுக்கு சுத்தமா நேரமே சரியில்லைன்னு அவர் சொன்னாரு"
"நீ என்ன சொல்ற?" திகிலடைந்தார் ஜோசியத்தில் அதீத நம்பிக்கை உள்ள ரஞ்சித்.
"யாரோ செஞ்ச தப்புக்காக உங்களுக்கு தண்டனை கிடைக்கும்னு சொன்னாரு... நீங்க யாரை அளவுக்கு அதிகமாக நம்புனீங்களோ அவங்களாலேயே நீங்க சிக்குவீங்களாம்"
"உண்மையிலேயே அவர் அப்படி சொன்னாரா?"
"ஆமாங்க. தயவு செய்து ஜாக்கிரதையா இருங்க. நம்ம ரெண்டு பேரும், கொஞ்ச நாள், நம்ம கிராமத்துல போய் இருந்துட்டு வந்தா நல்லா இருக்கும்னு நினைக்கிறேன்"
"கிராமத்துக்கு போனா மட்டும் இந்த பிரச்சனை என்னை பாதிக்காதா?"
"நீங்க ரொம்ப நம்பின ஒருத்தரால தானே உங்களுக்கு பிரச்சனை வரும்னு அவர் சொன்னாரு? நமக்கு தான் நம்ம கிராமத்திலே நெருக்கமானவங்கன்னு யாருமே இல்லையே. அதனால தான் கொஞ்ச நாளைக்கு கிராமத்துக்கு போகலாம்னு சொல்றேன்"
யோசனையில் ஆழ்ந்தார் ரஞ்சித்.
"நீங்க குமரேசன் சாரையும் அவங்க குடும்பத்தையும் தான் ரொம்ப நம்பிக்கிட்டு இருக்கீங்க. அவங்க எதுவும் ஏடாகூடமா செஞ்சு, அதனால உங்களை எந்த பிரச்சனையிலயும் மாட்டிவிட்டுட மாட்டாங்கன்னு நம்புறேன்"
தன் மனைவியின் முகத்தை பார்க்கவில்லை ரஞ்சித்.
"அவங்களைப் பத்தி நான் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்ல. ஏன்னா, நீங்க எப்பவும் அவங்க கூடவே தானே இருக்கீங்க? அவங்க என்னென்ன செய்றாங்கன்னு உங்களுக்கு தான் நல்லா தெரியுமே...! அப்படியே அவங்க ஏதாவது தப்பு செஞ்சாலும், நீங்க என்ன சும்மாவா இருந்துட போறீங்க? தடுத்து நிறுத்திட மாட்டீங்களா...?" என்றார் காவேரி அவரது முக பாவத்தை கவனித்தபடி.
அமைதி காத்தார் ரஞ்சித்.
"குமரேசன் சார் கிட்ட ஒரு வாரம் லீவு கேளுங்களேன்"
"அவர் எனக்கு லீவு கொடுக்க மாட்டாரு"
"விஷயம் என்னன்னு அவருக்கு பொறுமையாக எடுத்து சொல்லுங்க. அவர் புரிஞ்சிக்குவாரு".
"இல்ல, அவர் புரிஞ்சிக்க மாட்டாரு. அவர்கிட்ட கேட்காமலேயே நம்ம கிராமத்துக்கு நம்ம போகலாம்"
"என்ன சொல்றீங்க? நீங்க உண்மையா தான் சொல்றீங்களா?"
"ஆமாம். நாளைக்கு விடிய காலையில நம்ம இங்கிருந்து கிளம்பிடலாம்"
அவர்கள் கிராமத்திற்கு கிளம்ப போகும் விஷயத்தை மகிழனுக்கு குறுந்தகவல் அனுப்பினார் காவேரி.
அன்பு இல்லம்
மலரவன் பதட்டத்துடன் இருப்பதை பார்த்த பூங்குழலியும் பதட்டமானாள்.
"என்ன ஆச்சு உங்களுக்கு?" என்றாள் அவள் கவலையுடன்.
ஒன்றும் இல்லை என்று பொய்யான புன்னகையை பூட்டிக்கொண்டு தலையசைத்தான் மலரவன்.
"பொய் சொல்லாதீங்க"
"நான் பொய் சொல்லல"
"மறுபடியும் நீங்க பொய் தான் சொல்றீங்க. நீங்க சும்மா பேச்சுக்கு சிரிக்கிறீங்களே தவிர அந்த சிரிப்பு உண்மை இல்ல"
"ஒன்னும் இல்ல. அப்பா ஃபோன் பண்ணி இருந்தாரு, லண்டன்ல பயங்கரமான மழையாம். அதனால நம்ம பிளான் பண்ணபடி ப்ரோக்ராம் நடக்கிறது சந்தேகம்ன்னு சொல்றாரு"
"அய்யய்யோ அப்படியா?"
ஆம் என்று தலையசைத்தான் மலரவன்.
"அப்படியே இருந்தாலும் நீங்க கவலைப்பட்டு மட்டும் என்ன ஆக போகுது? ப்ரோக்ராம் நடக்கணும்னு இருந்தா நிச்சயம் நடக்கும்"
"ம்ம்ம்"
"நானும் அம்மாவும் கோவிலுக்கு போகலாம்னு இருக்கோம்..."
"என்ன்னனது.??? வேண்டாம்..." என்று அவன் கத்த, திகில் அடைந்தாள் பூங்குழலி.
"நாங்க கோவிலுக்கு போனா என்ன தப்பு? எதுக்காக இப்படி கத்துறீங்க?"
"நீ எங்கேயும் போக கூடாது. அவ்வளவு தான்"
"ஆனா ஏன்?"
"நான் சொல்றேன்ல... அதோட விடு"
"மலர்..."
"பூங்குழலி, நான் ஒரு தடவை வேண்டாம்ன்னு சொல்லிட்டா, என்னை எந்த கேள்வியும் கேட்காத" என்றுவிட்டு அங்கிருந்து விடுவிடுவென நடந்தான் மலரவன்.
.......
மலரவனை செய்தியில் கண்ட குமரேசன், முகம் சுருக்கினார். மலரவன் லண்டனுக்கு செல்லவில்லையா? அப்படி என்றால் தான் கொடுத்த வேலையை வில்லியம் எப்படி முடிப்பான்? அவர் பதட்டமானார். இப்பொழுது என்ன நடக்கப் போகிறது? மலரவன் சென்னையில் இருக்கும் வரை அவரால் ஒன்றும் செய்ய முடியாதே...! அவன் லண்டன் செல்லும் நேரத்தில் இங்கு சில காரியங்களை முடிக்க தானே அவர் திட்டமிட்டு இருந்தார்...! அவருக்கு தெரியும், மலரவன் எவ்வளவு ஆபத்தானவன் என்று. அவன் எப்படியும் அவரது திட்டத்தை மோப்பம் பிடித்து விடுவான்.
அதே நேரம், அவரது கைபேசி ஒலித்தது. அந்த அழைப்பு வில்லியம் இடமிருந்து வந்தது. அதை அவசரமாய் ஏற்றார் குமரேசன். அவர் எதுவும் கூறுவதற்கு முன்,
"அந்த பொண்ணு லண்டனுக்கு தனியா வந்திருக்கா" என்றான் வில்லியம்.
"பொண்ணா? எந்த பொண்ணை பத்தி நீ பேசுற?" என்றார் பூங்குழலி தனியாக லண்டன் செல்வாள் என்பதை நம்ப முடியாத குமரேசன்.
"பூங்குழலி மலரவன்"
"என்ன்னனது, பூங்குழலி அங்க வந்திருக்காளா?"
"ஆமாம். தனியா வந்திருக்கா... ஸ்டீவ்னு ஒருத்தன் தான் அவளை கைடு பண்ணிக்கிட்டு இருக்கான்"
அதை கேட்ட குமரேசன் வியப்பில் ஆழ்ந்தார். ஸ்டீவ் யார் என்று அவருக்கு தெரியும். அந்த நிகழ்ச்சியை நடத்துவதற்காக பூங்குழலி தனியாகவா லண்டனுக்கு சென்றாள்? அவளுக்கு அவ்வளவு தைரியமா? மலரவன் தான் அவளுக்கு தைரியம் அளித்து அனுப்பி வைத்திருக்க வேண்டும். ஒருவேளை அவனும் ஓரிரு நாட்களில் செல்வதாக திட்டமிட்டு இருக்கலாம். எப்படியோ, அவள் லண்டனுக்கு தனியாகவாவது சென்று விட்டாள். அவளை முடிக்க, வில்லியமுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது. குமரேசன் மகிழ்ச்சியும் நிம்மதியும் அடைந்தார்.
"எப்படியாவது அவளை முடிக்க பாரு" என்றார் குமரேசன்.
"இங்க பயங்கரமா மழை பெய்யுது. அவங்க பிளான் பண்ண ப்ரோக்ராம் நடக்குமான்னு தெரியல. மழை நிக்கிற வரைக்கும் அந்த பொண்ணு ஹோட்டல் ரூமை விட்டு வெளியே வருவான்னு எனக்கு தோணல. ஹோட்டல் ரூம்ல வெச்சி அவளை முடிக்கிறது புத்திசாலித்தனம் இல்ல. என்னை பிரச்சனையில சிக்க வைக்கும். நான் மாட்டிக்குவேன். அதனால, அவ ஹோட்டலில் இருக்கிற வரைக்கும் நான் அவளை கொல்றதை பத்தி யோசிக்க முடியாது"
"அப்படின்னா உன்னோட பிளான் என்ன?"
"ப்ரோக்ராம் நடக்கிற வரைக்கும் நான் காத்திருந்து தான் ஆகணும். இல்லன்னா, அவ ஏர்போர்ட்டுக்கு போற வழியில அவளை முடிக்க பாக்கறேன்"
"இது ரொம்ப நல்ல பிளான்"
"அது சரி, எதுக்காக ஒரு சின்ன பொண்ணை நீங்க கொல்ல நினைக்கிறீங்க?"
"அவளா சின்ன பொண்ணு? அவளைப் பத்தி உனக்கு தெரியாது. பூங்குழலி மலரவன் அவ்வளவு லேசுப்பட்டவ இல்ல"
"மணிமாறன் சார் பையனோட பேரு கூட மலரவன் தானே? இந்த பொண்ணு அவருக்கு சொந்தமா?"
சில நொடி திகைத்து நின்றார் குமரேசன், மலரவனின் பெயரை வெளியிட்டு தான் செய்த மிகப்பெரிய தவறை உணர்ந்து.
"சேச்சே... நான் எதுக்கு மாறனோட சொந்தக்காரப் பெண்ணை கொல்லனும்?"
"இல்ல... பேர் ஒரே மாதிரி இருக்கேன்னு கேட்டேன்"
"அந்த பேர் எங்க ஊர்ல நிறைய பேருக்கு இருக்கு"
"அப்படித்தான் இருக்கணும்னு நானும் நினைச்சேன்"
"நீ இன்னமும் மாறன் கூட டச்ல தான் இருக்கியா?"
"இல்ல, நான் அவர்கிட்ட பேசியே ரொம்ப நாளாச்சு. ஆனா இப்போ இந்த பேரை கேட்டதுக்கு பிறகு, அவர்கிட்ட பேசணும்னு தோணுது"
"இல்ல... வேண்டாம்... அப்படி செய்யாத" பதறினார் அவர்.
"ஆனா ஏன்?"
"உனக்கு தான் மாறனை பத்தி நல்லா தெரியுமே... இந்த மாதிரியான வேலையெல்லாம் நம்ம செய்றோம்னு தெரிஞ்சா, அவருக்கு பிடிக்காது. உன்னோட பிரண்ட்ஷிப்பையே அவர் கட் பண்ணிடுவாரு... என்னோட பிரண்ட்ஷிப்பையும் சேர்த்து..."
"நீங்க சொல்றதும் சரி தான். அவர் நிச்சயம் அப்படி செய்வாரு. பூங்குழலி மலரவனை நீங்க கொல்ல சொன்ன விஷயத்தை பத்தி நான் நிச்சயம் அவர் கிட்ட சொல்ல மாட்டேன்"
"ப்ளீஸ், கொஞ்சம் ஜாக்கிரதையா இரு. மணிமாறனுக்கு நிச்சயம் இந்த விஷயம் தெரிய கூடாது"
"ஏன் இவ்வளவு பயப்படுறீங்க? அந்த பொண்ணு உங்களுக்கு எதிரியா இருந்தா, மணிமாறன் சாரே கூட, அந்த பொண்ணை உங்க வழியிலிருந்து விளக்கணும்னு தானே நினைப்பாரு?"
"இல்ல. அவர் அப்படி நினைக்க மாட்டாரு. இது என்னோட பர்சனல் விஷயம். அவரை இதுல சேர்த்து பார்க்க வேண்டாம்"
"சரி விடுங்க. நீங்க சொன்ன விஷயத்தை முடிச்சிட்டு, உங்களுக்கு ஃபோன் பண்றேன்"
"ஓகே தேங்க் யூ"
தன் அருகில் அமர்ந்து அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த மணிமாறனை பார்த்தபடி அந்த அழைப்பை துண்டித்தான் வில்லியம்.
"இப்போ நீ ரெக்கார்ட் பண்ணதை, எனக்கும் மலரவனுக்கும் அனுப்பு" என்றார் மணிமாறன்.
அவர் கூறியபடியே செய்தான் வில்லியம்.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top