30 அமைதியான மனைவி

30 அமைதியான மனைவி

ராகேஷை பற்றியே யோசித்துக் கொண்டிருந்தான் மகிழன். அவன் போதை மருந்து பழக்கம் உடையவன் என்பதை மகிழனால் நம்ப முடியவில்லை. அப்படி ஒரு பழக்கம் அவனுக்கு இருந்திருந்தால், அது எப்படி தனக்கு தெரியாமல் போனது? அதோடு மட்டுமல்லாமல் அவனுக்கு இருபத்தைந்து லட்சம் எங்கிருந்து கிடைத்தது? அவனுக்கு சொந்த வீடு கூட கிடையாதே... வாடகை வீட்டில் தானே வசித்துக் கொண்டிருக்கிறான், அதுவும் நடுத்தர மக்கள் வசிக்கும் மிக சாதாரணமான பகுதியில்...! அப்படி இருக்கும் பொழுது, அவனுக்கு அந்த பணத்தை கொடுத்தது யார்? தன்னைத் தவிர, இருபத்தைந்து லட்சம் கொடுத்து உதவக்கூடிய அளவிற்கு அவனுக்கு வசதியான நண்பர்கள் கூட யாரும் கிடையாதே! தனக்கு தெரியாமல் அவனுக்கு அப்படிப்பட்ட நண்பர்கள் யாரேனும் இருக்க கூடுமோ? அது பற்றி இவ்வளவு நாள் தனக்கு தெரியாமல் போனதே...!  அவன் காவல்துறையினரிடம் என்ன கூறுகிறான் என்று பார்க்கலாம், என்று எண்ணினான் மகிழன்.

மறுபுறம், ராகேஷின் வீட்டிலிருந்து எடுக்கப்பட்ட இருபத்தைந்து லட்சம் அவனுக்கு எப்படி கிடைத்தது என்று துருவி துருவி அவனை கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார்கள் காவல்துறையினர். ராகேஷுக்கு ஒரு விஷயம் புரிந்து போனது, தன்னுடைய உதவிக்காக யாரும் வரப் போவதில்லை. மகிழனுடன் இருந்த நட்பை அவன் எடுத்துக் கொண்டு விட்டான். அவன் மகிழனை பற்றி என்ன கூறினான் என்பது மகிழுனுக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம். ஆனால் மலரவனுக்கு அனைத்தும் தெரியுமே. அவன் நிச்சயம் மகிழனை இந்த விஷயத்தில் தலையிட விட மாட்டான். ஏனென்றால், இது போதை மருந்து தடுப்பு பிரிவின் கீழ் உள்ள  வழக்கு. ஒருவேளை மகிழன் அவனுக்கு உதவ முன்வந்தால் கூட, இந்த இருபத்தைந்து லட்சம் அவனுக்கு எப்படி கிடைத்தது என்று கேள்வி எழுப்புவான். அவனுக்கு ராகேஷ் என்ன பதில் கூற முடியும்? ராகேஷின் நண்பர்கள் யார் என்று மகிழனுக்கு நன்றாகவே தெரியும் அவனிடம் ராகேஷால்  பொய் கூற முடியாது. பொய் கூறினாலும் நிச்சயம் மகிழன் கண்டுபிடித்து விடுவான். இந்த விஷயத்தில் இருந்து ராகேஷ் எப்படி வெளிவரப் போகிறான்? அந்த இருபத்தைந்து லட்சம் தனக்கு எப்படி கிடைத்தது என்று கூறாத வரை, அவன் இந்த வழக்கில் இருந்து வெளிவர முடியாது. குமரேசனின் பெயரை கூறி விடுவது தான் அவனுக்கு உத்தமம். குமரேசனால் மட்டும் தான் அவனை இந்த வழக்கில் இருந்து விடுவிக்க முடியும். ஒருவேளை அவர் விடுவிக்க தவறினால், அவரைப் பற்றிய உண்மையை மகிழனிடம் கூறி விடுவது என்று முடிவு செய்தான் ராகேஷ்.

"சொல்லுங்க மிஸ்டர் ராகேஷ், உங்களுக்கு இந்த பணம் எப்படி வந்தது?"  என்றார் ஒரு மூத்த அதிகாரி.

"நான் இதை குமரேசன் சார் கிட்ட இருந்து வாங்கினேன்" என்று குட்டை உடைத்தான் ராகேஷ்.

"குமரேசனா? அவரு யாரு?"

"எங்க கம்பெனியோட ஒரு டீலர்"

"அவர் எதுக்கு உங்களுக்கு காசு கொடுத்தார்?"

"பிசினஸ் தொடங்க"

"என்ன பிசினஸ்?"

"நானும் டீலர் ஆகணும்னு ஆசைப்பட்டேன். அதுக்கு எனக்கு பணம் தேவைப்பட்டுச்சி. எனக்கு தெரிஞ்ச எல்லார்கிட்டயும் கேட்டுப் பார்த்தேன். கிடைக்கல. குமரேசன் சார் தான் குடுத்தாரு"

"உங்க பாஸ் கிட்ட நீங்க பணம் கேட்கலையா?"

"எங்க பாஸ் கிட்ட எப்படி சார் நான் பணம் கேட்க முடியும்?"

"உங்க கம்பெனியோட ஒரு போர்ட் ஆஃப் டைரக்டரும் நீங்களும் ரொம்ப க்ளோஸ் ஃப்ரண்ட்ஸ்னு கேள்விப்பட்டோமே"

"ஆமாம். அதனால என்ன? என்னுடைய லிமிட் என்னன்னு எனக்கு தெரியும். நான் என்னோட ஃப்ரெண்ட்ஷிப்பை அட்வான்டேஜா எடுத்துக்க விரும்பல"

உதவி ஆய்வாளரை நோக்கி திரும்பிய அந்த மூத்த அதிகாரி,

"குமரேசனை இண்வெஸ்டிகேஷனுக்கு கூட்டிகிட்டு வாங்க. ஒருவேளை அவர் கோவாபரேட் பண்ணலேன்னா, அரெஸ்ட் பண்ணி கொண்டு வாங்க" என்றார்.

"எஸ் சார்" என்று கூறிவிட்டு அந்த ஆய்வாளர் அங்கிருந்து சென்றார்.

.............

பூங்குழலிக்காக தங்களது அறையில் காத்திருந்தான் மலரவன். அந்த பாயசத்தை அவள் அவனுக்காக செய்யவில்லை என்று அவனிடம் பொய் கூறியிருக்கிறாள். வரட்டும் பார்த்துக் கொள்ளலாம். தனது கைபேசியை சைலன்ட் மோடுக்கு மாற்றி, அதை தயாராய் வைத்துக் கொண்டான் மலரவன். பூங்குழலி அவர்களது அறையை நோக்கி வருவது தெரிந்த போது, தன் கைபேசியில் பேச துவங்கினான்.

"சொல்லுங்க ஆன்ட்டி, பூங்குழலி இங்கே இல்லையே" என்றான் அவன் சிவகாமியிடம் பேசுவது போல பாசாங்கு செய்து.

பூங்குழலியை பார்த்து புன்னகைத்த அவன்,

"ஆன்ட்டி, பூங்குழலி வந்துட்டா" என்றான் தன் காதில் இருந்து கைப்பேசி எடுக்காமல்.

அவனிடமிருந்து கைபேசியை வாங்க தன் கையை நீட்டினாள் பூங்குழலி. அவளிடம் அதை கொடுக்காமல்,

"ஆமா ஆன்ட்டி, நான் பாயசம் சாப்பிட்டேன். ரொம்ப நல்லா இருந்தது" அவன் சிவகாமியிடம் பேசிய போது  கூறிய அதே டயலாக்கை திரும்பக் கூறினான்.

அவனிடமிருந்து கைபேசியை பிடுங்க முயன்றாள் பூங்குழலி.

"நான் பாயாசம் சாப்பிட்ட விஷயம் உங்களுக்கு எப்படி ஆன்ட்டி தெரியும்?" என்றான் முகத்தை சுருக்கி.

"ஃபோனை என்கிட்ட குடுங்க" என்றாள் பூங்குழலி.

"இரு பூங்குழலி. நான் ஆன்ட்டி கிட்ட  எவ்வளவு முக்கியமான விஷயத்தை பேசிகிட்டு இருக்கேன்...!" என்றான் உண்மையிலேயே அந்தப் பக்கம் பேசிக் கொண்டிருப்பது சிவகாமி என்பதைப் போல.

"நெஜமாவா? பூங்குழலி இங்க வந்து சமைக்கிறதுக்காகவே பாயசம் எப்படி வைக்கிறதுனு உங்ககிட்ட கத்துக்கிட்டாளா?"

"மலர், ஃபோனை என்கிட்ட குடுங்க" என்று மீண்டும் அவனிடமிருந்து அதை பறிக்க முயன்றாள்.

"எனக்கு பச்சை பருப்பு பாயாசம் பிடிக்கும்னு தெரிஞ்சி தான் அவ அதை கத்துக்கிட்டாளா?"

கண்களை மூடி நெற்றியை தேய்த்தாள் பூங்குழலி.

"எனக்கு அது பிடிக்கும்னு அவளுக்கு எப்படி தெரியும்?"

பூங்குழலியை பார்த்து கிண்டலாய் சிரித்தான்.

"ஓ, எஸ்... நாங்க ஃபர்ஸ்ட் டைம் மீட் பண்ண போதே, தில்லை அங்கிள் உங்க கிட்ட எங்களை பத்தி எல்லாத்தையும் சொல்லுவாருன்னு அவ என்கிட்ட சொன்னா. அப்படித்தான் எனக்கு இது பிடிக்கும்னு அவ தெரிஞ்சுகிட்டாளா?"

அந்த அறையை விட்டு செல்ல பூங்குழலி முயன்ற போது, அவளுக்கு முன்னால் ஓடி சென்று, கதவை சாத்தி, அதன் மீது சாய்ந்து நின்றான் மலரவன்.

"அதை நீ எனக்காக தான் செஞ்சேன்னு சொன்னா என்ன குறைஞ்சிட போகுது?"

"நான் போகணும்"

"உனக்கு என்னை சந்தோஷப்படுத்தி பாக்கணும்... ஆனா அதை வெளிப்படையா சொல்ல மனசு வரல, அப்படித்தானே?"

"அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல"

"வேற எப்படி? எதுக்காக என்னை பிடிக்காத மாதிரி நடிக்கிற?"

"சின்ன விஷயத்தை பெரிய சீன் ஆக்காதீங்க"

"அதை செய்றது நானா?" என்று சிரித்தான்.

அவனைப் பார்த்து முறைத்தாள் பூங்குழலி.

"இதை எனக்காகத் தான் செஞ்சேன்னு நீ சொல்லி இருந்தா, அப்பவே அது முடிஞ்சு போயிருக்கும். இப்போ பாரு எவ்வளவு பெரிய சீன் ஆயிடுச்சுன்னு..."

"ஆமாம். உங்களுக்காக தான் செஞ்சேன்... உங்களுக்கு பிடிக்கும்னு தான் செஞ்சேன்... சந்தோஷமா?"

கைகளை கட்டிக்கொண்டு புன்னகைத்தான் மலரவன்.

"நீங்க எனக்காக எவ்வளவோ செய்யறீங்க. அதனால, நான்..."

அவள் மேலும் எதுவும் கூறுவதற்கு முன் தன் ஆள்காட்டி விரலை அவள் உதட்டின் மீது வைத்தான்.

"நான் உன்கிட்ட காரணம் கேட்டேனா?"

அவளது இமைகள் படபடத்தன.

"காரணம் என்னவா வேணும்னாலும் இருந்துட்டு போகட்டும். *ஏன்* நடந்ததுன்னு  நான் தெரிஞ்சுக்க விரும்பல. *நடந்துடுச்சி* அப்படிங்கிறது மட்டும் எனக்கு போதும்"

அவன் கையை எடுத்து விட்ட அவள்,

"ஏன்னு நீங்க தெரிஞ்சுக்கணும். அப்போ தான், இல்லாத ஒன்னை நினைச்சு எக்ஸைட் ஆக மாட்டீங்க"

"அதையே தான் நானும் சொல்றேன். இல்லாத ஒரு காரணம் எனக்கு வேண்டாம். ஏன்னா, இருக்குறது என்னன்னு எனக்கு ஏற்கனவே தெரியும்"

தன் கைகளை கட்டிக்கொண்டு அவனது கண்களை ஏறிட்டாள் பூங்குழலி. அவனும் அவனது கைகளை கட்டிக்கொண்டு அவளது கண்களை ஏறிட்டான். அவர்களுக்கிடையில் இருந்த ஒரே வித்தியாசம், மலரவன் அதை சிரித்தபடி செய்தான். பூங்குழலி சிரிக்கவில்லை. ஆனால் அவளால் வெகு நேரம் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. அவள் சிரித்ததை பார்த்த மலரவனின் சிரிப்பும் பிரகாசமடைந்தது.

"நீங்க இவ்வளவு பொறுப்பில்லாதவரா இருப்பீங்கன்னு நான் நினைக்கல" என்றாள்.

"எந்த விஷயத்துல பொறுப்பில்லாதவனா இருக்கேன்? புருஷன் செய்ய வேண்டிய ஏதாவது *முக்கியமான* விஷயத்தை செய்யாம விட்டுட்டேனா?" என்றான் கிண்டலாய்.

"நம்ம லண்டன் ப்ரோக்ராமை பத்தி நீங்க நினைக்கிறதயே மறந்துட்டீங்க"

"நான் அதை மறக்கல. ஸ்டீவ் வேண்டிய வேலையை செஞ்சுகிட்டு தான் இருக்கான்"

"நம்ம அதுக்கான வேலையை செய்ய வேண்டாமா?"

"நம்ம ஏற்கனவே செஞ்சதே போதும். நான் கம்ப்ளீட் ரிப்போர்ட் ஃபைலை ஸ்டீவுக்கு அனுப்பி வச்சிட்டேன். அவன் அதை ஸ்டேஜ்ல கொண்டு வந்துடுவான்"

"ஓ..."

"ம்ம்ம்"

கதவை திறப்பதற்காக அவள் கதவின் கைப்பிடியை பற்ற, அவளது கையைப் பிடித்து அப்படி செய்யாமல் தடுத்தான். அவள் கேள்விக்குறியுடன் அவனைப் பார்க்க,

"நீ சொன்னதை திரும்ப வாங்கிக்கோ"

"எதை?"

"என்னை பொறுப்பில்லாதவன்னு சொன்ன. ஆனா நான் அப்படி இல்ல. அதனால நீ சொன்ன வார்த்தையை நீ வாபஸ் வாங்கணும்"

"நீங்க சின்ன பிள்ளை மாதிரி நடந்துக்கிறதா உங்களுக்கு தோணலையா?"

"நீ இதையும் வாபஸ் வாங்கணும்"

"போற போக்கை பார்த்தா, நான் உங்க முன்னாடி வாயை திறந்து பேசவே கூடாது போல இருக்கே..."

"வாய்ப்பே இல்ல... இந்த உலகத்துல எந்த பொண்டாட்டியும் புருஷன் முன்னாடி வாயை திறக்காம இருக்கவே மாட்டா. ஒரு நாள் கூட இருக்க முடியாது"

"ஓ, அப்படியா..? ட்ரை பண்ணி பாக்கலாமா?"

"என்ன ட்ரை பண்ண போற?"

"அடுத்த 24 மணி நேரத்துக்கு உங்க கிட்ட நான் வாயை திறந்து பேசவே மாட்டேன்"

"சும்மா விளையாடாத பூங்குழலி"

உதடு மடித்து புருவம் உயர்த்தினாள் பூங்குழலி, ஒன்றும் பேசாமல்.

"இது விளையாட்டு இல்ல பூங்குழலி" என்றான் சீரியஸாக.

கடிகாரத்தை பார்க்கச் சொல்லி அவனுக்கு சைகை செய்தாள் பூங்குழலி.

"உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு?"

ஆமாம் என்று தலையசைத்து விட்டு அங்கிருந்து அகன்றாள் பூங்குழலி.

"பூங்குழலி நில்லு... பேசு பூங்குழலி" பின்னால் இருந்து கத்தினான்.

திரும்பி பார்க்காமல், *மாட்டேன்* என்பது போல் தன் கையை அசைத்து விட்டு அங்கிருந்து சென்றாள் பூங்குழலி.

அவன் அவளை பின்தொடர்ந்து செல்ல நினைக்க, மித்திரனிடமிருந்து வந்த கைபேசி அழைப்பு அவனை தடுத்து நிறுத்தியது. அந்த அழைப்பை ஏற்ற மலரவன்,

"சொல்லு மித்ரா" என்றான்.

"குமரேசனை என்கொயரிக்காக கூட்டிக்கிட்டு போயிருக்காங்க"

"தட்ஸ் கிரேட். ராகேஷ் குமரேசனை பத்தி என்ன ஸ்டேட்மெண்ட் கொடுத்தான்?"

"டீலர்ஷிப் ஆரம்பிக்கிறதுக்காக குமரேசன் அவனுக்கு பணம் கொடுத்ததா சொன்னான்"

"எந்த அஸ்ஸுரன்சும் இல்லாம குமரேசன் அவனுக்கு 25 லட்சம் கொடுத்தாராமாம்?"

"ஆமாம், குமரேசன் அவங்க கேட்கிற கேள்விக்கு பதில் சொல்லி ஆகணும்"

"அவர் சொல்ல மாட்டாரு"

"என்ன சொல்ற நீ?"

"அவரு ராகேஷுக்கு பணம் கொடுக்கலைன்னு சொல்லுவாரு"

"நீ அப்படியா நினைக்கிற?"

"ஆமாம், இந்த பிரச்சனையில அவர் தலையை கொடுக்க விரும்ப மாட்டார். இதிலிருந்து தப்பிக்க தான் பார்ப்பார்"

"ஒருவேளை அவர் அப்படி செஞ்சா, ராகேஷ், மகிழன் கிட்ட உண்மையை சொல்லிடுவானே"

"அப்படி தான் நடக்கும்"

"அப்போ மகிழனோட ரியாக்ஷன் என்னவா இருக்கும்?"

"எனக்கு தெரியல. அவன் நிச்சயம் சொல்ல முடியாத அளவுக்கு கோபப்படுவான். இப்போதைக்கு என்னால் அவ்வளவு தான் சொல்ல முடியும்"

"ம்ம்ம்"

"கேஸ் எப்படி போகுதுன்னு கவனிச்சுக்கிட்டே இரு"

"நான் பார்த்துக்கிறேன். அந்த இன்வெஸ்டிகேஷன் குரூப்ல என்னோட ஃப்ரண்ட் இருக்கான்"

"தட்ஸ் குட்"

"கீர்த்தி மேடம் என்ன செஞ்சுகிட்டு இருக்காங்க?"

"உன்கிட்ட இருந்து ஃபோன் வந்த பிறகு நான் இன்னும் அந்த அம்மாவை பாக்கல" என்று சிரித்தான் மலரவன்.

"உங்க வாழ்க்கையில் இருந்து அவள் ஒரேடியா காணாம போற நாள் சீக்கிரம் வரும்"

"ஹோப்ஃபுல்லி..."

அழைப்பை துண்டித்து விட்டு, பூங்குழலியை தேடி சமையலறைக்கு வந்தான் மலரவன். அவள் மின்னல்கொடிக்கு சமையலில் உதவி கொண்டிருந்தாள். அவனைப் பார்த்து வழக்கமாய் புன்னகைத்து விட்டு தன் வேலையை தொடர்ந்தாள்.

"மல்லு, உனக்கு என்ன வேணும்?" என்றார் மின்னல்கொடி

"பூங்குழலி என்கிட்ட பேச மாட்டேங்கறா மா" என்றான் சின்னப்பிள்ளை வாத்தியாரிடம் கூறுவது போல.

"ஏன் குழலி பேச மாட்டேங்குற?"

"அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல ஆன்ட்டி"

"அவ பொய் சொல்றா"

"எந்த பொண்டாட்டியாலயும் பேசாம இருக்கவே முடியாதுன்னு அவர் என்கிட்ட சேலஞ்ச் பண்ணாரு. அதனால தான் ஆன்ட்டி பேசாம இருக்கேன்"

"ஓ, இது சேலஞ்சா? அப்போ இதுல நான் தலையிட முடியாது" மின்னல்கொடி.

மலரவனை பார்த்து தன் புருவங்களை உயர்த்தி சிரித்தாள் பூங்குழலி. *அப்படியா விஷயம்?* என்பது போல் அங்கிருந்து சிரித்தபடி நகர்ந்தான் மலரவன், அவளை தன்னிடம் எப்படி பேச வைப்பது என்ற யுத்தியை யோசித்தபடி.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top