நான் கண்ணதாசனின் தாசன்


கலைமகள் தமிழுக்கு தந்த வீணையான கண்ணதாசனின் 91வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் பல இடங்களில் அவரது விழாக்கள் கொண்டாடப்படுவதாக சுவர் விளம்பரங்களும், போஸ்டர்களும், பிளக்ஸ்களும் அறிவிக்கின்றன.

கடந்த 25 ஆண்டுகளாக அவரது புகழ் பரப்புவதையும், பாடுவதையும், மீட்டுவதையும் தன் பிறவிக்கடமையாக செய்துவருபவர் ஒருவர் இருக்கிறார் இதோ 26வது வருடமாக அவரது 91வது பிறந்த நாளை கொண்டாட தயராகிவருகிறார்.

அவர்தான் காவிரிமைந்தன்.

இத்தனைக்கும் இவர் கண்ணதாசனை அவர் வாழும் காலத்தில் ஒரு முறைகூட பார்த்தவர் இல்லை. பள்ளிப்பருவத்தில் இவருக்கு தமிழாசிரியராக வந்த விவேகானந்தன் எளிய முறையில் இலக்கணத்தை போதிக்க நிறைய கண்ணதாசன் பாடல்களை கையாண்டிருக்கிறார். அந்த பாடல் வரிகளின் வசீகரம் காரணமாக ஈர்க்கப்பட்ட காவிரிமைந்தன் கண்ணதாசனுக்குள் நுழைய பின் அவரையே உலகமாகக் கொண்டுவிட்டார்.

கண்ணதாசனை படிக்க படிக்க, அவரது பாடல்களைப் பாடப்பாட இவருக்குள்ளும் தமிழ் உணர்வு பொங்க கவிஞனாக கட்டுரையாளனாக பேச்சாளனாக புத்தக ஆசிரியனாக மாறினார்.

கவியரசு கண்ணதாசன் தமிழ்ச் சங்கம் அமைத்தவர் சென்னை பம்மலில் கடந்த 91ம் ஆண்டு முதல் கண்ணதாசனை மையப்பொருளாக வைத்து கவியரங்கம் பட்டிமன்றம் நடத்திட மக்கள் மத்தியில் அமோக வரேவேற்பு. தொடர்ந்து கடந்த 25 ஆண்டுகளாக பல்வேறு ஆளுமைகளைக் கொண்டு கண்ணதாசனுக்கு விழா நடத்திவருகிறார் இவரது குழு முயற்சிதான் தற்போது வாணிமகால் அருகே கம்பீரமாகக் காணப்படும் கண்ணதாசன் சிலை. பிழைப்பு தேடி வளைகுடா நாட்டிற்கு சென்ற போதும் விழா நடத்த சென்னை வந்துவிடுவார்.

பாலைவன நாட்டில் இருந்த போதும் பைந்தமிழ் வளர்க்க இவர் தவறவில்லை பல்வேறு அமைப்புகள் வாயிலாகவும் ஊடகங்கள் வாயிலாகவும் தமிழையும் கண்ணதாசனையும் உயர்த்திப் பிடித்துக்கொண்டே இருக்கிறார். இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக 'என் பார்வையில் கண்ணதாசன்' என்ற நுாலினை எழுதியுள்ளார். கண்ணதாசனைப் பற்றி நுாறு பேர் எழுதிய கட்டுரைகளும் இந்த கட்டுரைகளுக்கு இவர் பின்னுாட்டம் போட்டுள்ளதும் தான் இந்த புத்தகத்தின் சிறப்பு.

கண்ணதாசனைப் பற்றி நான் என்ன சொல்ல என்று ஆரம்பித்து கட்டுரையாளர்கள் ஒவ்வொருவரும் ஒரு புதிய செய்தியை சொல்லி இருக்கின்றனர் இவர்களுக்கான காவிரிமைந்தனின் கவித்துமான தமிழில் பின்னுாட்டம் தந்திருக்கிறார். இது புதுமையாகவும் அற்புதமாக வெளிப்பட்டு இருக்கிறது.

சென்னை அடையாறு இந்திரா நகர் இளைஞர் விடுதியில் 01/7/2017 சனிக்கிழமை மாலை 6 மணியளவில் நடைபெறும் கவியரசு கண்ணதாசன் விழாவில் இந்த புத்தகம் வெளியிடப்படுகிறது.அரங்கில் சலுகை விலையில் புத்தகம் விற்கவும் செய்யப்படுகிறது.கண்ணதாசன் புகழின் உச்சம் தொட்டது காதல் கடலிலா? தத்துவ மலையிலா? என்ற தலைப்பில் சுவராசியமான பட்டிமன்றமும் நடைபெற உள்ளது.

தமிழருவி மணியன் புத்தகத்தின் வாழ்த்துரையில் கூறியுள்ளது போல கவியரசரின் கவிதைகளைப் பற்றி எண்ணுவதே ஒரு இனிய சுகானுபவந்தான்.எளிமையான சொற்களைக் கொண்டு தமிழில் மயக்கம்தரும் கவிதைகளைத் தந்தவர் அவர். உணர்வுகளை உசுப்பிவிடும் போராட்டக்களம் அமையாத சூழலில் ஒரு கவிஞன் பாடிய பாடல்கள் காலத்தை வென்று வாழ முடியுமென்றால் அவன் உண்மையில் ஒரு மகா கவிஞனாகத்தான் இருந்திருக்கமுடியும்.

அந்தக் கவிஞரை தன் இளமை முதல் இன்று வரை விடாமல் காவிரிமைந்தன் சுவாசிக்கிறார் என்றால் இது அன்பினால் செய்யப்படும் அறப்பணி, என்றும் சொல்லியிருக்கிறார்.

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top