சுபாஷை சபாஷ் பெறவைக்கலாமா..
என்ஜீனிரிங் மாணவர்களுக்கான பொதுப்பிரிவு கவுன்சிலிங் துவங்க உள்ளது. நல்ல மதிப்பெண் காரணமாக பிடித்த கல்லுாரியில் இடம் கிடைத்தாலும் அதில் சேர்ந்து படிக்கமுடியாதபடி வறுமை நிலையில் பல மாணவர் இருப்பர். அவர்களை தேடிப்பிடித்து படிக்கவைக்கும் முயற்சியில் சில தொண்டு நிறுவனங்கள் ஆர்வத்தோடு செயல்பட்டு வருகிறது,அப்படிப்பட்ட அமைப்புகளில் ஆனந்தம் இளைஞர் நல அமைப்பும் ஒன்று.
வேலை மற்றும் தொழில் பார்க்கும் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து தங்களது மாத ஊதியத்தில் இருந்து ஒரு பங்கை ஒதுக்கியும் நல்ல உள்ளம் கொண்ட நன்கொடையாளர்களிடம் உதவி பெற்றும் வசதியில்லாத மாணவ மாணவியரை கடந்த சில ஆண்டுகளாக படிக்கவைத்துக் கொண்டு இருக்கின்றனர். இந்த வருடம் அத்தகைய மாணவர்களை அவர்களது இருப்பிடத்திற்கே தேடிச்சென்று உண்மைத்தன்மையை உணர்ந்து தேர்வு செய்துள்ளனர்.
இப்படி வருடத்திற்கு முப்பது மாணவர்களை படிக்க வைத்துக்கொண்டு இருக்கும் இந்த அமைப்பினர் இந்த ஆண்டு அறுபது மாணவர்களை படிக்கவைக்க எண்ணியுள்ளனர். அதற்க்கான காரணத்திற்கு போவதற்கு முன் இந்த உரையாடலை படித்துவிடுங்கள்
மயிலாடுதுறை தாலுாகா மண்ணம்பந்தல் (போஸ்ட்)மூங்கில் தோட்டம்,தரங்கம்பாடி மெயின் ரோட்டில் உள்ள குடிசை வீட்டில் வசிக்கும் மாணவன் சுபாஷ் சந்திரபோஸ் தனது மேல்படிப்பிற்கு உதவிடக் கேட்டு விண்ணப்பித்த மனுவின் அடிப்படையில் அவரது விலாசத்திற்கு போய் விசாரிக்கின்றனர் உம் பேரு என்னப்பா சுபாஷ் சந்திரபோஸ், அப்பா என்னசெய்யுறாரு, சின்ன வயசுலேயே குடும்பத்தை தவிக்கவிட்டு போயிட்டாருங்க இப்ப எங்க இருக்காருன்னு தெரியாது
அம்மா என்ன செய்யுறாங்க, அவுங்க பேரு விஜயலட்சுமி எனக்கு தெய்வமே அவுங்கதான் ஒரு தனியார் கடையில் மாதம் 3 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலை பார்த்து அதில் வரும் வருமானத்தில்தான் குடும்பத்தையும கவனித்துக்கொண்டு என்னையும் குறையில்லாமல் பார்த்துக்கொண்டு இதுவரை படிக்கவும் வைத்தார். உன் மார்க் என்னப்பா
எஸ்எஸ்எல்சி அரசுப்பள்ளியில் படித்து 487/500 மார்க் எடுத்தேன் பிறகு அதே பள்ளியில் படித்து பிளஸ் டூவில் 1019/1200 மார்க் எடுத்துள்ளேன். ஒன்பாதாவது படிக்கும் போதே ஐஏஎஸ் ஆகவேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன் அதற்கேற்ப என்னை தயார் செய்து கொண்டுள்ளேன்.
பிளஸ் ஒன் பிளஸ் டூ படிக்கும் போதே ஐஏஎஸ் படிக்க தேவையான புத்தகங்களை வாங்கி படிக்க ஆரம்பித்தேன் இந்த புத்தகங்கள் வாங்குவதற்காக பகுதி நேர வேலையும் பார்த்தேன், நான்கு பிரதான பிரிவுகள் உண்டு இதில் மூன்று பிரிவுகளை கிட்டத்தட்ட முடித்துவிட்டேன் அடுத்து ஒரே ஒரு பிரிவுதான் அதையும டிகிரி முடிப்பதற்குள் முடித்துவிடுவேன். எங்க குழு தேர்வு செய்யும் வீட்டில் ரெப்ரிஜிரேட்டர் போன்ற வசதியான சாதனங்கள் இருக்கக்கூடாது, ஆனால் உன் வீட்டில் இருக்கேப்பா?
நல்லவேளை கேட்டீர்கள் ஐஏஎஸ் தொடர்பான புத்தகங்களை பாதுகாப்பாக வைக்க இரும்பு பீரோ விலை கேட்டேன் இரண்டாயிரம் ரூபாய்க்கு மேல் சொன்னார்கள் அவ்வளவு பணம் என்னிடம் இல்லை அந்த நேரம் முன்னுாறு ரூபாய்க்கு செயல்படாத இந்த ப்ரிட்ஜ் கிடைத்தது சரி என்று வாங்கி இதில் புத்தகங்களை அடுக்கிவைத்துவிட்டேன் பாருங்கள் என்று சொல்லி ப்ரிட்ஜை திறந்துகாட்டுகிறார் உள்ளே நிறைய புத்தகங்கள், புத்தகங்கள் மட்டுமே. சரி ஒருவேளை நீங்கள் எங்களால் தேர்வு செய்யப்படாமல் போனால்?
கவலைப்படமாட்டேன் பணம் தேவைப்படும் ஐஏஎஸ் ட்யூஷன் போகமாட்டேன் டிகிரி மட்டும் முடித்துவிட்டு பின் வேலை பார்த்து அதில் வரும் வருமானத்தில் ஐஏஎஸ் படிப்பேன் இன்று இல்லை என்றாலும் நாளை நான் ஐஏஎஸ் படிப்பதும் உறுதி ஐஏஎஸ் ஆவதும் உறுதி
இந்த குழு அடுத்து சென்ற இடம் செஞ்சி இலமேடு (போஸ்ட்) வேட்டைக்காரன் தெருவில் வசிக்கும் ஜனனியின் வீட்டிற்கு, ஜனனி உன்னைப்பத்தி சொல்லும்மா, அப்பா எழுமலைக்கு பார்வை தெரியாது அதுனால வேலை கிடையாது அம்மாதான் நுாறு நாள் வேலை திட்டத்தில் கிடைக்கும் கூலியில் குடும்பத்தையும் என்னையும் கவனித்துக் கொள்கிறார்.
உன்னைப்பத்தி சிறப்பு என்னம்மா? எஸ்எஸ்எல்சியில் எங்க ஊர் அரசுப்பள்ளியில் படித்து 487/500 மார்க் எடுத்தேன் இதன் காரணமாக உள்ளூரில் உள்ள மெட்ரிகுலேசன் பள்ளியில் இருந்து நேரில் வந்து ஒரு பைசா செலவு இல்லாமல் நாங்க படிக்கவைக்கிறோம் டிரஸ் தர்ரோம் சாப்பாடு தர்ரோம் என்றெல்லாம் சொன்னார்கள் ஆனால் நான் அதை மறுத்துவிட்டு எஸ்எஸ்எல்சி எங்கே படித்தேனோ அதே பள்ளியில் பிளஸ் டூ படித்து 1149/1200 மார்க்குகள் எடுத்தேன்.என் ஆசிரியர்கள் மீது எனக்கிருந்த நம்பிக்கை, என் மீது என் ஆசிரியர்களுக்கு இருந்த நம்பிக்கைதான் இதற்கு காரணம்.
சுபாஷ் சந்திர போஸ் மற்றும் ஜனனி போல இன்னும் இருபத்தெட்டு மாணவர்களின் கதை தொடர்கிறது. இவர்களுக்கு கல்லுாரியில் இடம் கிடைப்பதில் பிரச்னை இல்லை படிக்கவைப்பதற்கான பணம் கட்டுவதில்தான் பிரச்னை. ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டு வைத்துள்ள முப்பது மாணவர்களுடன் சுபாஷ், ஜனனி போன்ற 30 மாணவர்களையும் விட்டுவிடாமல் அவர்களது கனவுகளையும் நனவாக்க அறுபது மாணவர்களையும் படிக்கவைத்துவிடவேண்டும் என்ற ஆர்வத்துடன் ஆனந்தம் அமைப்பினர் முயன்று வருகின்றனர் நல்ல உள்ளம் கொண்ட நன்கொடையாளர்களை தேடிவருகின்றனர்.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top