6 புரிதல்

6 புரிதல்

தன் அப்பாவும் சாருகேசியும் இணைந்து ஆரம்பித்திருந்த ஸ்டுடியோவை நோக்கி, கட்டுப்படுத்த முடியாத கோபத்துடன் தன் காரை வேகமாய் செலுத்தினான் ஸ்வரன். எவ்வளவு தைரியம் இருந்தால், அவனது அனுமதியின்றி அப்படி ஒரு பேட்டியை அவர் அளித்திருப்பார்! அது மிகப்பெரிய சர்ச்சையை உருவாக்கும் என்று அவருக்கு தெரியாதா? இல்லாத ஒரு விஷயத்தை, அவ்வளவு தைரியமாய் அவன் பெயரை இணைத்து எப்படி அவரால் கூற முடிந்தது? கோபமாய் தன் காரின் ஸ்டியரிங் வீலை குத்தினான்.

கடந்த பத்து வருடங்களாய் தன் தந்தையை நேருக்கு நேர் பார்ப்பதையே தவிர்த்து வந்தான் ஸ்வரன். அவனோ, அம்சவர்தனோ ஒருவரை ஒருவர் பார்க்க விரும்பியதில்லை. அப்படியே எங்காவது தற்செயலாய் சந்தித்துக் கொண்டாலும், ஸ்வரன் அவரை அடியோடு தவிர்த்து வந்தான். யாருடைய உதவியும் இன்றி திரை உலகில் தனக்கென்று ஒரு நிலையான இடத்தை பெற்றான் ஸ்வரன். இசை அவனது வாழ்க்கையாய் மாறியது... இல்லை, இல்லை, இசையை தன் வாழ்க்கையாய் மாற்றிக் கொண்டான் ஸ்வரன், யாருடனும் தொடர்பில் இருக்க அவன் விரும்பாததால்...! இப்பொழுது அவனது தந்தை அம்சவர்தன், அவருடைய திமிர் பிடித்த நண்பனுடன் அவன் வாழ்க்கையில் மீண்டும் அடி எடுத்து வைத்திருக்கிறார்.

அந்த ஸ்டுடியோவின் முன்னாள் காதை கிழிக்கும் சத்தத்துடன் தன் வண்டியை நிறுத்தினான் ஸ்வரன். அந்த ஸ்டுடியோவின் கதவை எட்டி உதைத்து, சுழல் காற்றைப் போல் உள்ளே நுழைந்தான். அது அங்கிருந்த அத்தனை பேரின் கவனத்தையும் கவர்ந்தது. ஸ்வரனை அந்த இடத்தில் பார்த்த அனைவரும் திகைத்து நின்றார்கள். அவனது ஆட்டோகிராஃபை வாங்க அவர்கள் எண்ணிய போது, அவன் கடுமையான கோபத்தை பார்த்து அனைவரும் எச்சரிக்கையோடு தூரம் நின்றனர்.

"சாருகே.....சி..." என்று அந்த ஸ்டுடியோவே அதிரும் வண்ணம் குரல் எழுப்பினான் அவன்.

அது, உள்ளே இருந்த சாருகேசியை வெளியே அழைத்து வந்தது. தனது இடத்தில் ஸ்வரனை பார்த்த சாருகேசி, திகைப்படைந்தார். அவனை அவர் அங்கு எதிர்பார்க்கவில்லை. ஏனென்றால் யாரையும் நேருக்கு நேர் சந்திப்பது என்பது ஸ்வரவனுக்கு பிடிப்பதில்லை. உண்மை தான் அவன் யாரையும் நேருக்கு நேர் சந்திப்பதில்லை தான். ஆனால் யாரையும் நேருக்கு நேர் தைரியத்துடன் எதிர்க்க அவன் தயங்கியதில்லை. அதுவும் அது அவன் சொந்த விஷயமாக இருந்தால்...!

அங்கிருந்த ஒரு நாற்காலியை கோபத்தோடு எட்டி உதைத்தான் ஸ்வரன். அந்த நாற்காலி பறந்து சென்று கீழே விழுந்து உடைந்து போனது. சாருகேசியை பார்த்த அவன், அவரை நோக்கி சென்று அவர் சட்டையின் காலரை பற்றினான்.

"யாருடா நீ? உன்னை எனக்குத் தெரியுமா? எவ்வளவு தைரியம் இருந்தா, கொஞ்சம் கூட வெட்கமே இல்லாம என் பேரைப் பேட்டியில சொல்லி இருப்ப? என்னைப் பத்தி என்ன நினைச்சுகிட்டு இருக்க? என் கல்யாணத்தைப் பத்திப் பேசுற உரிமையை உனக்கு யார் கொடுத்தது?" சாருகேசியின் அடுத்த வார்த்தைகள், அவனை மேலும் கோபம் கொள்ளச் செய்தது,

"உங்க அப்பா..."

"போடாங்க... எனக்கு அப்பன்னு எவனும் கிடையாது. எவனையும் அப்படி கூப்பிட நான் விரும்பல. அதனால தான் அந்த ஆளோட இனிஷியல கூட நான் போட்டுகிறது இல்ல. அப்ப கூட அந்த ஆளுக்கு புரியலையா? என்ன பொறுத்த வரைக்கும் அந்த ஆள் எப்பவோ செத்துட்டாரு. என்னோட விஷயத்துலயும் அவரையும் அப்படியே நினைக்க சொல்லு. நான் செத்துட்டேன்னு சொல்லு. நான் கல்யாணமே பண்ணிக்க கூடாதுன்னு நினைச்சதுக்கு காரணமே அந்த ஆள் தான். அதையும் சொல்லு." ஆத்திரத்தோடு கத்தினான்.

"உங்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை கொடுக்கத்தான் அவர் நினைக்கிறார்"

"அவரு எனக்கு நல்ல வாழ்க்கையை கொடுப்பாரா? என் வாழ்க்கையை கெடுத்ததே அவர் தான். என் வாழ்க்கையை பத்தி பேசுற உரிமை அவருக்கு இல்ல. உங்களை நான் எச்சரிக்கை செய்றேன். என் வாழ்க்கையில தேவையில்லாம மூக்கை நுழைச்சா, நான் என்ன செய்யவும் தயங்க மாட்டேன். உங்க மரியாதையை காப்பாத்திக்கோங்க. அது தான் உங்களுக்கு நல்லது." என்று அவரை பிடித்து தரையில் தள்ளிய  ஸ்வரன், தன் விரலை அவர் முகத்தின் முன்னால் கோபமாய் சொடுக்கி,

"உனக்கு ஒரு மணி நேரம் டைம் தரேன். நீ சொன்னதுக்கு மன்னிப்பு கேட்டு, அது பொய்யின்னு சொல்லலன்னா, விளைவுகள் ரொம்ப விபரீதமா இருக்கும்."

தன் வழியில் இருந்த பொருள்களை எல்லாம் எட்டி உதைத்த படி அங்கிருந்து வெளியேறினான் ஸ்வரன்.

தரையிலிருந்து எழுந்து நின்ற சாருக்கேசி, தன் உடையை தூசு தட்டி தன் தலையை சரிப்படுத்திக் கொண்டார். ஸ்வரனிடமிருந்து அவர் சிறிய எதிர்ப்பை எதிர்பார்த்து இருந்தார் தான். ஆனால், இது அவருக்கு மிக அதிகம். அவனது கோபத்தை பற்றி அவர் ஏற்கனவே திரையுலக பிரபலங்களிடமிருந்து கேட்டிருந்தார். ஆனால் அதை இன்று அவர் கண்ணெதிரில் கண்டார். என்ன ஒரு கோபம்...! அவனை கையாள்வது அவ்வளவு சுலபமல்ல. தன் உடைகளை தட்டியபடி தன் அறைக்குச் சென்றார் சாருகேசி.

ஸ்வர குடில்

பாட்டியின் அறைக்கு பதற்றத்துடன்  ஓடி வந்தாள் ரிதமி.

"என்ன ஆச்சு, ரிதமி? நீ எதுக்காக இப்படி ஓடி வர?"

"நீங்க பெரிய பிரச்சனையில மாட்டிகிட்டு இருக்கீங்க, பாட்டி." என்றாள் கவலையோடு.

"நானா, ஏன்?

"சாருகேசி ஸ்வரன் சாரை பத்தி பேட்டி கொடுத்திருக்காரு."

"பப்லுவை பத்தியா?" என்றார் ஆர்வத்தோடு.

"ஆமாம். ஸ்வரன் சார் அவங்க கூட ஒரு காண்ட்ராக்ட் சைன் பண்ண போறதா சொல்லி இருக்காரு."

"என்னது? பப்லு அவங்க அப்பா கம்பெனி கூட சைன் பண்ண போறானா?"

"அது மட்டும் இல்ல. அவங்க ஸ்வரன் சாரை அவங்க பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி கொடுக்க போறதா சொல்லி இருக்காரு."

"அய்யய்யோ நிஜமாவா சொல்ற?"

"ஆமாம்."

"அவன் கல்யாணத்தைப் பத்தி பேச வேண்டாம்னு நான் தான் அவர்கிட்ட கண்டிப்பா சொல்லி அனுப்பினேனே... அப்படி இருக்கும் போது, அவர் ஏன் இப்படி செஞ்சாரு? இன்னைக்கு இந்த வீட்ல என்ன நடக்கப் போகுதோ தெரியல." பாட்டியின் அதிர்ச்சிக்கு அளவே இல்ல.

"அது மட்டும் இல்ல, பாட்டி. அவர் இன்னொரு விஷயமும் சொல்லி இருக்காரு."

"என்ன சொன்னாரு?"

"இது சம்பந்தமா ஸ்வரன் சாரோட அப்பா உங்ககிட்ட பேசினதா சொல்லி இருக்காரு."

பாட்டியின் முகம் இருளடைந்து போனது. அவரது நிலையை கண்ட ரிதமி,

"இருங்க, பாட்டி, நான் உங்களுக்கு வெந்நீர் கொண்டு வரேன்." என்று சமையலறை நோக்கி சென்றாள் ரிதமி.

அதே நேரம், அதே கோபத்தோடு வீட்டினுள் நுழைந்தான் ஸ்வரன்.

"பாட்...டி..." என்று உயர்ந்த குரலில் கத்தினான்.

சமையலறையில் தண்ணீரை சூடு படுத்திக் கொண்டிருந்த ரிதமி திடுக்கிட்டாள். மெல்ல சமையல் அறையில் இருந்து எட்டிப் பார்த்தாள்.

தன் அறையை விட்டு ஓடோடி வந்தார் பாட்டி.

"என்ன ஆச்சு, பப்லு?" என்றார் விஷயம் தனக்கு தெரிந்து விட்டது என்று காட்டிக் கொள்ளாமல்.

"இன்னும் என்ன நடக்கணும்?" என்று தனது கோட்டை வீசி எறிந்தான். அவனது கோபத்தைக் கண்ட பாட்டி பின்வாங்கினார்.

"அந்த ஆள் இங்க வந்தப்போ அப்படி என்ன பேசினீங்க? என் கல்யாணத்தைப் பத்திப் பேசுற அளவுக்கு அவருக்கு தைரியம் எங்கிருந்து வந்தது?" சீறி விழுந்தான்.

பாட்டி மென்று விழுங்கினார்.

"கல்யாணத்தையும் காதலையும் நான் எவ்வளவு வெறுக்குறேன்னு உங்களுக்குத் தெரியாதா? என்னை ஏன் புரிஞ்சுக்கவே மாட்டேங்கிறீங்க? எந்த உரிமையில் அவர் இதையெல்லாம் செஞ்சுக்கிட்டு இருக்காரு? என் மேல அவருக்கு என்ன ரைட்ஸ் இருக்கு?"

பாட்டி அமைதியாய் நின்றார்.

"நான் இதை உங்ககிட்ட எதிர்பார்க்கல, பாட்டி. நீங்க ஒருத்தர் தான் என்னோட ஃபீலிங்ஸையும் எமோஷன்ஸையும் புரிஞ்சி வச்சிருக்கீங்கன்னு நினைச்சேன். ஆனா இல்ல. நீங்களும் என்னை ஏமாத்திட்டீங்க. நீங்களும் எல்லாரையும் மாதிரி தான். எந்த வித்தியாசமும் இல்ல. உங்களை நம்புனது என்னோடத் தப்பு. நான் எச்சரிக்கையா இருந்திருக்கணும். என்னோட எதிர்பார்ப்பை உங்க மேல நான் வளர்த்திருக்கக் கூடாது. எதிர்பார்ப்பு நமக்கு ஏமாற்றத்தைத் தான் தரும் அப்படிங்கறத நான் மறந்திருக்கக் கூடாது. நீங்க இன்னைக்கு என் எதிர்பார்ப்பை கொன்னுட்டீங்க. என்னை புரிஞ்சுக்க ஒருத்தர் கூட இல்லாம நான் கடைசி வரைக்கும் இப்படியே இருக்கணும்ங்கறது என்னோட தலையெழுத்துப் போல இருக்கு." என்று தன் அறையை நோக்கி சென்றான் ஸ்வரன்

பாட்டி கல்லை போல் நின்றார். ஆனால் அவரது கண்கள் மட்டும் கண்ணீரை வடித்தன. இருந்தாலும் ஒன்றும் கூறாமல் அமைதியாய் நின்றார். அவர் அப்படி நின்றதை பார்த்த ரிதமி, ஆச்சரியமடைந்தாள்.  எதற்காக அவர் ஒன்றுமே கூறாமல் அவர் திட்டியதை எல்லாம் வாங்கி கட்டிக் கொண்டார்? அவனது அப்பாவிடம் என்ன பேசினார் என்று ஏன் கூறவில்லை? அவரை பார்க்க பாவமாய் இருந்தது. அவரை நோக்கி ஓடிச் சென்ற அவள்,

"எதுக்காக, பாட்டி, ஒண்ணுமே பேசாம இப்படி நிக்கிறீங்க? அவங்க அப்பா கிட்ட நீங்க என்ன பேசினீங்கன்னு அவர்கிட்ட சொல்லி இருக்கலாமே? அப்படி செய்யாம இப்ப அழுது என்ன பாட்டி பிரயோஜனம்?"

"அவன் என்னைச் சத்தம் போட்டான் அப்படிங்குறதுக்காக நான் அழல. அவங்க அப்பாகிட்ட நான் என்ன பேசினேன்னு உண்மை தெரியும் போது அவன் வருத்தப்படுவானேன்னு நினைச்சித் தான் அழறேன். உனக்கு பப்லுவைப் பத்தித் தெரியாது. அவனோட மனசு தங்கம். ஏன் தான் எல்லாரும் அவன் உணர்வுகளோட விளையாடுறாங்களோ தெரியல. அவன் கத்தினதுக்காகவோ அவன் கோபத்தை நினைச்சோ நான் அழல. அவன் கோபமா இருக்கும்போது அவனுடைய புத்தி வேலை செய்யாது. அவனுடைய இடத்தில் யார் இருந்தாலும் இப்படித்தான் யோசிப்பாங்க. என் பெயரை அவ்வளவு தைரியமா யாரும் பயன்படுத்த மாட்டாங்க தானே? அப்படி செய்யும் போது, என் மேல தப்பு இருக்கும்னு அவன் நினைக்கிறது சகஜம் தானே?"

திகைத்து நின்றாள் ரிதமி.

"இந்த நேரத்திலேயும் எப்படிப்பாட்டி இவ்வளவு ஸ்டடியா இருக்கீங்க?"

"அவன் சொன்னதை நீ கேட்ட தானே? அவனை நல்லா புரிஞ்சு வச்சிருக்குற ஒரே ஆள் நான் மட்டும் தான். இதுக்கு பேரு தான் புரிதல். சிரிச்சு பேசறதுக்கு பேர் புரிதல் இல்ல. அவங்க கோபமா இருக்கும் போது, அவங்க மனசுல இருக்குற வலியை உணருறது தான் உண்மையான புரிதல்."

ரிதமிக்கு மனம் கனத்துப் போனது. 

"நீங்க ரொம்ப கிரேட் பாட்டி. உங்களை மாதிரி புரிதல் உள்ளவங்களை நான் பார்த்ததே இல்ல. உங்களை மாதிரி ஒருத்தர் கிடைக்க ஸ்வரன் சார் ரொம்ப கொடுத்து வச்சிருக்கணும்."

பாட்டி மென்மையாய் புன்னகைத்தார்.

"ஆனா, நீங்க அவரை இப்படியே இருக்க விடக்கூடாது, பாட்டி. அவரு உரிமையோட உங்களைச் சத்தம் போட்டது மாதிரியே அவரோடத் தப்பையும் நீங்க உரிமையோட எடுத்து சொல்லணும். அவருக்கு நல்லதைச் சொல்ல வேண்டிய கடமை உங்களுக்கு இருக்கு."

"போகட்டும் விடு. இன்னும் ரெண்டு மூணு நாள்ல அவனாவே மனசை கூல் ஆக்கிக்கிட்டு  வந்து பேசுவான்."

பெருமூச்சு விட்டாள் ரிதமி.

"எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு."

"நீங்க உங்க ரூமுக்கு போங்க, பாட்டி. நானும் கிளம்புறேன்."

சரி என்று தலையசைத்து விட்டு தன் அறைக்கு சென்றார் பாட்டி. ஆனால் அதை அப்படியே விட்டுவிட ரிதமி தயாராக இல்லை. ஸ்வரனை சில கேள்விகள் கேட்டே தீர வேண்டும் அவளுக்கு. அவன் எவ்வளவு கோபமாக இருந்தாலும் அதைப் பற்றி அவள் கவலைப்படவில்லை. வருவது வரட்டும் பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணி அவன் அறைக்குச் சென்றாள்.

அவன் சோபாவில் அமர்ந்து கண்களை மூடி இருந்தான். அவன் முகத்தில் இன்னும் கூட ஒரு தவிப்பு தெரிந்தது. ஆனால் முன்பு இருந்தது போல் அல்ல. அவனது அறையின் கதவை தட்டினாள் ரிதமி. அவளை அங்கு எதிர்பார்க்காத ஸ்வரன் திகைத்தான். கண்களை சுருக்கியபடி நேராய் எழுந்தமர்ந்தான்.

அவன் உள்ளே வா என்று கூறாவிட்டாலும், அவன் அறைக்குள் நுழைந்தாள்.

"ரெண்டு நாளைக்கு முன்னாடி உங்க அப்பா வந்தாரு."

கோபத்தோடு சோபாவை விட்டு எழுந்த அவன்,

"அந்த ஆளைப் பத்தி பேச நான் விரும்பல. புரிஞ்சுதா உனக்கு?"

"இதே மாதிரி தான், பாட்டி உங்ககிட்ட அவரைப் பத்திச் சொல்ல வந்தப்போ நீங்க அவங்களைப் பேசவிடாம தடுத்தீங்க. இப்பவும் நீங்க அதையேத் தான் செய்றீங்க. அப்படி இருக்கும் போது, உண்மையிலேயே (என்பதை அழுத்தி) பாட்டி உங்க அப்பாகிட்ட என்னப் பேசினாங்கன்னு உங்ககிட்ட எப்படி சொல்லறது?" என்று அவன் மேலும் கத்துவதற்கு முன்பாக அவள் கத்தத் துவங்கினாள்.

அவள் அப்படி பயமின்றிப் பேசியதைப் பார்த்த அவன், பின் வாங்கினான்.

"உங்க அப்பாகிட்ட பாட்டி உண்மையிலேயே என்ன சொன்னாங்கன்னு உங்களுக்குத் தெரியுமா? அவங்க உங்களுக்கு எப்படி சப்போர்ட் பண்ணாங்கன்னு உங்களுக்கு தெரியுமா? அவங்க உங்க அப்பாவை பேசவே விடாம வாய் அடைக்க வச்சாங்க."

அதைக் கேட்டு பேச்சிழந்தான் ஸ்வரன்.

"உங்க அப்பா இங்க வந்தப்போ நானும் இங்க தான் இருந்தேன். ஆமாம், அவர் உங்க கல்யாணத்தைப் பத்தி பேச தான் வந்திருந்தார். ஆனா பாட்டி உங்களுக்காக அவர்கிட்ட பேசி அவரை லெஃப்ட் ரைட்டு வாங்கிட்டாங்க. உங்களை அவங்க எதுக்காகவும் விட்டுக் கொடுக்கல. அவங்க பேசினதை கேட்டு உங்க அப்பா எவ்வளவு ஃபெட்-அப் ஆனார் தெரியுமா? அவங்க பேசுறதை கேட்க கூட நீங்க தயாரா இல்லனா, என்ன நடந்ததுன்னு அவங்களால எப்படி சொல்ல முடியும்? உங்க பாட்டியை விட, உங்க கோபம் அவ்வளவு பெருசா போச்சா? நீங்க அவங்களை நம்பினதா சொன்னீங்க, இது தான் அவங்க மேல நீங்க வச்சிருக்கிற நம்பிக்கையா? யாரோ என்னமோ சொன்னாங்க அப்படிங்கறதை நம்பி, உங்களையும் உங்க உணர்வுகளையும் பத்தி மட்டுமே யோசிக்கிற பாட்டியை தப்பா நெனச்சு எப்படி நீங்க அவங்களை காயப்படுத்தலாம்? உங்களுக்கு பிடிக்காத ஒரு விஷயத்தை அவங்க செஞ்சிருப்பாங்களா மாட்டாங்களான்னு கூட உங்களால யோசிக்க முடியாதா? உங்களோட விருப்பமில்லாம உங்க கல்யாண விஷயத்துல அவங்க முடிவு எடுத்துடுவாங்களா?"

மிரண்டு நின்றான் ஸ்வரன்.

"அவங்க எவ்வளவு காயப்பட்டு இருக்காங்க தெரியுமா? நீங்க அவங்க மேல கோபப்பட்டீங்க அப்படிங்கறதுக்காக கிடையாது. உங்க மனசுல இருக்குற காயத்தை நினைச்சி அவங்க கவலைப்படுறாங்க. உங்க அப்பா கிட்ட அவங்க என்ன பேசினாங்க அப்படிங்கற உண்மை தெரியும் போது அவங்க மேல கோவப்பட்டதுக்காக நீங்க வருத்தப்படுவீங்களேன்னு உங்களை நினைச்சு கவலைப்படறாங்க..."

எதைப் பற்றியும் யோசிக்காத ஸ்வரன், பாட்டியின் அறையை நோக்கி ஓடினான்.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top