5 டூத் ப்ரஷ் பெண்

 5 டூத் ப்ரஷ் பெண் ( நீண்ட அத்தியாயம்)

தேவயானியின் மனம் நிம்மதியாய் இல்லை. ஷிவானியை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று எவ்வளவு ஆர்வமாய் இருந்தான் சித்தார்த்...! ஆனால் இப்போது அவனிடம் அந்த ஆர்வம் காணப்படவில்லை. மாமியார் வீட்டாரை அவன் தவிர்க்கிறான். ஷிவானியுடன் அவன் பேசி, அவர் பார்க்கவே இல்லை. அவர்களுக்கு இடையில் சீண்டல்களையும், கிண்டல்களையும் அவர் எதிர்பார்த்திருந்தார். ஆனால் அப்படி ஒன்றும் நடக்கவில்லை. சித்தார்த்திற்கு பெண் பார்க்க சென்ற அனேக இடங்களில் எல்லா பெண்களுக்குமே சித்தார்த்தை பிடித்ததிருந்தது. அவனை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று விரும்பினார்கள். சித்தார்த்திற்கு தான் யாரையுமே பிடிக்கவில்லை. சித்தார்த்தை பார்க்கும் பெண்களின் கண்களில், பொறி பறந்ததை தேவயானி கவனித்திருக்கிறார். ஆனால் அப்படி ஒரு பார்வையை அவர் ஷிவானியிடம் பார்க்கவே இல்லை. அவள் அவனை நிமிர்ந்து கூட பார்ப்பதில்லை. பார்க்க ஜம்மென்று ராஜாவைப் போல் இருக்கும் தன் மகனை எப்படி அவளால் தவிர்க்க முடிகிறது? திருமணமான புதிய பெண்ணைப் போன்ற கலகலப்பே அவளிடம் இல்லை. திருமணத்திற்கு முன்பு அவள் எப்படி இருந்தாளோ, அப்படியே தான் இப்போதும் இருக்கிறாள். அப்போது, அவள் வெட்கப்படுவதாய் நினைத்தார் தேவயானி. ஆனால் இப்போது அது வேறுவிதமாய் தோன்றுகிறது.

சித்தார்த் வீட்டில் இல்லாத போது ஷிவானி அறையை விட்டு வெளியே வருவதே இல்லை. ஆனால் அவன் வீட்டுக்கு வந்து விட்டாலோ அவர்களது அறையில் அவள் இருப்பதே இல்லை. தேவயானிக்கு உதவுவது போல் பாசாங்கு செய்து கொண்டு சமையலறையில் இருந்து விடுகிறாள்.

"நான் வேலையை முடிச்சுட்டேன் நீ போமா" என்றார் தேவயானி.

"பரவாயில்லை ஆன்ட்டி"

"நீ என்னை அம்மான்னு கூப்பிடலாம்" என்றார் தனது ஒரே மருமகளை மகளாக்கிக் கொள்ளும் எண்ணத்தில்.

"பரவாயில்லை இருக்கட்டும்... எதுக்கு தேவையில்லாத ஃபார்மாலிட்டீஸ்?" என்று கூறி விட்டு சமையல் அறையை விட்டு சென்றாள் ஷிவானி.

சிறிது நேரம் கழித்து, சித்தார்த்திற்கு காப்பி கொண்டு வந்தார் தேவயானி. அப்பொழுதும் அங்கு ஷிவானி இருக்கவில்லை. அவர்கள் அறையை ஒட்டியது போல் இருந்த பூந்தோட்டத்தில் அமர்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருந்தாள். சித்தார்த் ஏதோ ஒரு கோப்பை சரி பார்த்துக் கொண்டிருந்தான். தங்களுடன் சகஜமாய் பேசி பழக இந்த பெண்  இன்னும் எவ்வளவு நாள் எடுத்துக் கொள்ளப் போகிறாள்? அவருக்கு மிகவும் வருத்தமாய் இருந்தது.

மறுநாள் / தேவா டெக்ஸ்டைல்ஸ் அலுவலகம்

ஒரு முக்கியமான கோப்பில் கையெழுத்திட்டு கொண்டிருந்த சித்தார்த், தனக்கு வந்த தொலைபேசி அழைப்பை ஏற்று பேசினான்.

"சித்தார்த் ஹியர்..."

"வெங்கடேசன் ஹியர்" என்றார் அவனுடைய மாமனார்.

தன் புருவங்களை உயர்த்திய சித்தார்த்,

"எப்படி இருக்கீங்க அங்கிள்?" என்றான்.

"நான் நல்லா இருக்கேன்... எனக்கு தான் நல்ல மாப்பிள்ளை கிடைச்சிருக்காரே..." என்றார்.

தனது நாற்காலியில் சாய்ந்தபடி கண்ணை மூடினான் சித்தார்த்.

"நான் உங்கள மீட் பண்ணலாமா?"

"பண்ணலாம் அங்கிள். இன்னைக்கி ஃப்ரீயா இருந்தா வாங்களேன்... எனக்கு மீட்டிங் சாயங்காலம் தான்"

"இப்போ வரட்டுமா?"

"வாங்க"

இணைப்பை துண்டித்தார் வெங்கடேசன்.

எதற்காக வெங்கடேசன் அவனை பார்க்க வேண்டும் என்று நினைக்கிறார் என்று அவனுக்கு தெரியவில்லை. ஏதாவது முக்கியமான விஷயமாக இருக்குமோ? ஒருவேளை, ஹரிணியை அவன் பாதி வழியில் இறக்கி விட்டதை அவள் அப்பாவிடம் கூறி விட்டாளோ? அவன் சிறிது பதட்டமாகிப் போனான்.

சரியாய் அரை மணி நேரத்தில் அங்கு வந்து சேர்ந்தார் வெங்கடேசன்.

"வாங்க அங்கிள்... உக்காருங்க"

அவனுக்கு எதிரில் இருந்த இருக்கையில் அமர்ந்துகொண்டார் வெங்கடேசன்.

"என்ன சாப்பிடுறீங்க அங்கிள்?"

"டீ "

அலுவலக கைப்பேசியை எடுத்து இரண்டு கப் டீ கொண்டு வருமாறு பணித்து விட்டு அவர் பக்கம் திரும்பினான்.

"சொல்லுங்க அங்கிள்"

"உங்ககிட்ட பேச எனக்கு நேரமே கிடைக்கல"

"ஆமாம்"

"நீங்க எங்க ஃபேமிலியை பத்தி தெரிஞ்சுக்கணும்னு நான் நினைக்கிறேன். உங்ககிட்ட நான் ஷேர் பண்ணிக்கலாமா?"

"ஷ்யூர்..."

அப்படி அவர் தன் குடும்பத்தை பற்றி என்ன கூற போகிறார் என்று கேட்க ஆர்வமானான் சித்தார்த்.

"உங்களையும் உங்க குடும்பத்தையும் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. நான் ஒரு கன்சர்வேட்டிவ் ஃபேமிலியில் பிறந்தவன். என் குடும்பத்தையும் அப்படித் தான் நடத்திக்கிட்டு இருக்கேன். என்னுடைய மகள்கள் இரண்டு பேரையும் ஒழுக்கமா வளத்திருக்கேன். அவங்க நான் சொல்றதை தான் கேப்பாங்க"

அதைக் கேட்டு ஆச்சரியப்பட்டான் சித்தார்த்.

"இதுவரைக்கும், அவங்களுக்கு பிடிச்சதை தேர்ந்தெடுக்கிற வாய்ப்பை நான் அவங்களுக்கு கொடுத்ததே இல்ல. நான் தேர்ந்தெடுத்த எதையும் அவங்களும் வேண்டாம்னு சொன்னதில்ல. ஏன்னா, நான் அவங்களுக்காக எதை தேர்ந்தெடுத்தாலும் அது பெஸ்டா தான் இருக்கும்னு அவங்களுக்கு தெரியும். நான் அவங்களுக்கு, வேண்டிய சுதந்திரத்தைக் கொடுத்திருக்கேன். ஏன்னா, அவங்க அதை மிஸ்யூஸ் பண்ண மாட்டாங்கன்னு எனக்கு தெரியும். ஷிவானி கொஞ்சம் ரிசர்வ்டு டைப். அவ எல்லாத்தையும் ஹரிணிகிட்ட மட்டும் தான் ஷேர் பண்ணிக்குவா. அவங்க ரெண்டு பேரும் ரொம்ப க்ளோஸ். அவங்களுக்குள்ள இருந்த பிணைப்பு எனக்கு பயத்தை ஏற்படுத்துச்சி. அதனால நான் வேணுமின்னே ஷிவானியை மும்பைக்கு படிக்க அனுப்பினேன். அவளுக்கு டெல்லி காலேஜ்ல சீட்டு கிடைச்ச பிறகு, ரெண்டு பேரும் அப்படி அழுதாங்க. அவங்க எதார்த்தத்தை புரிஞ்சுக்கணும்னு நான் நினைச்சேன். வாழ்க்கையை அவங்க ரெண்டு பேரும் தனியா எதிர்கொள்ள தயாரா இருக்கணும். எனக்கு, என்னோட மகள்கள் தான் எல்லாமே. அவங்களை நான் ஒழுக்கத்தோடும், கண்ணியத்தோடும், பொறுப்புடனும் வளர்த்திருக்கேன். ஹரிணி கொஞ்சம் துறுதுறுன்னு இருப்பா. ஆனா, அது அவளுக்கு ரொம்ப நெருக்கமானவங்ககிட்ட மட்டும் தான். தன்னுடைய எல்லை என்னன்னு அவளுக்கு நல்லாவே தெரியும். அவ கூட சின்ன வயசுலயிருந்து படிச்ச பாய்ஸ் இப்பவும் அவளுக்கு ஃபிரண்டா இருக்காங்க. ஆனா ஷிவானிக்கு பாய்ஃபிரண்ட் கிடையாது. நான் கொஞ்சம் ஸ்ட்ரிக்ட்டா இருந்ததால, அவ பாய்ஸ் கிட்ட பேசவே பயப்படுவா." என்று பெருமையுடன் சிரித்தார் வெங்கடேசன்.

அதனால் தான் ஷிவானி சகஜமாய் பழகாமல் இருக்கிறாளோ? அவளுக்கு உண்மையிலேயே இந்த திருமணத்தில் விருப்பம் இருந்து தான் தன்னை மணந்து கொண்டாளா? அல்லது வெங்கடேசன் கூறியதற்காக சரி என்று ஒப்புக் கொண்டாளா? அவள் ரிசர்வ்ட் ஆக இருப்பது போல் தெரியவில்லை. அவள் ஒட்டுமொத்தமாய் அவனை தவிர்க்கவல்லவா செய்கிறாள்? அவன் அவளை மிகத் தீவிரமாய் காதலிப்பதாய் அனைவரும் தவறாக எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்... ஹரிணி உட்பட...! அப்படி இருக்கும் போது, அவள் ஏன் அவனிடம் பேசுவதே இல்லை? அவன் மனம் மீண்டும் வெங்கடேசன் பக்கம் திரும்பியது.

"ஒரு தடவை ஷிவானி, என்கிட்ட எதுவும் சொல்லாம, அவங்க அம்மாகிட்ட பர்மிஷன் வாங்கிகிட்டு ஃபிரண்ட்ஸோட சினிமாவுக்கு போயிட்டா. நான் ஷிவானிகிட்டயும் அலமுகிட்டயும் பேசுறதையே நிறுத்திட்டேன்..."

அதைக் கேட்ட சித்தார்த் வியப்படைந்தான்.

"ஹரிணி தான் என்னை சமாதானப்படுத்தினா. அதுக்கப்புறம் என்கிட்ட பர்மிஷன் வாங்காம யாரும் எதுவுமே செய்ய மாட்டாங்க"

அவ்வளவு கண்டிப்பானவரா வெங்கடேசன்? என்பது போல் பார்த்தான் சித்தார்த்.

"நேத்து ஹரிணி ஷாப்பிங் போனா இல்லையா...? அங்க அவளுடைய ஃபிரண்ட் ரோஹித்தை பார்த்திருக்கா. உடனே எனக்கு ஃபோன் பண்ணி, என்கிட்ட அதை பத்தி சொல்லிட்டா. எனக்கு தெரியாம அவ பிளான் பண்ணி அவனை வரவசத்தா நான் தப்பா நினைச்சுக்க போறேன்னு அவளுக்கு பயம்." என்று சிரித்தார்.

சித்தார்த்துக்கு புரிந்து போனது. எல்லாம் தன் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார் வெங்கடேசன். அதேநேரம் அவர்களுக்கு வேண்டிய சுதந்திரத்தையும் வழங்கி இருக்கிறார். மகள்களை நோக்கி யாரும் கைநீட்டி பேசி விடக்கூடாது என்பதில் அவர் கவனமாக இருக்கிறார்.

"ஷிவானி உங்ககிட்டயும் உங்க அம்மாகிட்டயும் நல்லபடியா பழகுவான்னு நினைக்கிறேன்"

பதில் கூறாமல் லேசாய் புன்னகைத்தான் சித்தார்த்.

"சரி, நான் கிளம்பட்டுமா?"

சரி என்று தலையசைத்தான் சித்தார்த்.

"உங்களை சந்திச்சதில் ரொம்ப சந்தோஷம்" என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினார் வெங்கடேசன்.

வெங்கடேசன் கூறியவற்றை பற்றி அசைபோட்டபடி அமர்ந்திருந்தான் சித்தார்த். ஹரிணியுடைய நண்பன் ரோஹித்தை பற்றியும் தான்...!

ஒரு வாரத்திற்குப் பிறகு

ஷிவானிக்கு பழச்சாறு கொண்டுவந்தார் தேவயானி. அவள் காலையிலிருந்து எதுவுமே சாப்பிடவில்லை. அவளாகவே கீழே இறங்கி வருவாள் என்று எதிர்பார்த்திருந்தார். அவள் வராமல் போகவே, அவரே பழச்சாறை எடுத்துக்கொண்டு அவள் அறைக்கு வந்தார். ஆனால் அங்கு ஷிவானி இல்லை. இரண்டு மூன்று முறை அவள் பெயரை கூறி அழைத்த போதும் பதில் இல்லை. கீழ் தளம் வந்து, தனது கைப்பேசியை எடுத்து அவளுக்கு ஃபோன் செய்யலாம் என்று எண்ணிய போது, வீட்டினுள் நுழைந்தாள் ஷிவானி. தேவயானியை பார்த்தவுடன் அவள் முகத்தில் பதற்றம் தெரிந்தது.

"எங்கம்மா போயிருந்த?"

"தலைய ரொம்ப வலிச்சிதுன்னு தைலம் வாங்க மெடிக்கல் ஷாப் போயிருந்தேன், ஆன்ட்டி..." என்று தடுமாறினாள்.

"தைலமா? என்கிட்ட கேட்டிருந்தா நான் கொடுத்திருப்பேனே..."
 
"இல்ல ஆன்ட்டி. நான் இதைத் தான் யூஸ் பண்ணுவேன்" என்று ஒரு சிறிய பச்சை நிற புட்டியை காட்டினாள்.

அது பார்க்க நாட்டு மருந்தை போல் இருந்தது.

"இந்தத் தைலம் நல்லா இருக்குமா?" என்றார் தேவயானி.

"அம்மா இதைத் தான் யூஸ் பண்ணுவாங்க. ரொம்ப நல்லா இருக்கும்"

"நான் உனக்கு தைலம் தடவி விடட்டுமா?"

"வேண்டாம் ஆன்ட்டி... நான் பார்த்துக்கிறேன்" என்று தன் அறையை நோக்கி நடந்தாள்.

வருத்தமாய் இருந்தது தேவயானிக்கு. அவர் எவ்வளவு தான் நெருங்கிச் செல்ல முயன்றாலும் அதற்கு ஷிவானி இடம் கொடுக்கவே மாட்டேன் என்கிறாளே...! நாள் செல்ல செல்ல எல்லாம் சரியாகிவிடும் என்று நம்பினார் தேவயானி. ஷிவானி தன் துப்பட்டாவில் ஏதோ ஒன்றை மறைத்து எடுத்துச் சென்றதை பாவம் அவர் கவனிக்கவில்லை.

மறுநாள்

அலுவலகம் செல்ல தயாராகி வந்தான் சித்தார்த்.

"ஷிவானி எங்க?" என்றார் தேவயானி.

"தூங்குறாம்மா"

"இன்னுமா?"

"இல்ல... நான் எழுந்துக்குறதுக்கு முன்னாடியே அவ எழுந்துட்டா. ஃபிரெஷ் ஆயிட்டு மறுபடி தூங்கிட்டா"

"அவளுக்கு உடம்புக்கு ஒன்றும் இல்லையே?"

"தெரியலம்மா" என்றான் தயக்கத்துடன்

"நீ எதுவும் கேட்கலையா?"

"ரொம்ப அசந்து தூங்கிக்கிட்டு இருந்தா. அதனால நான் அவளை டிஸ்டர்ப் பண்ணல"

விடுவிடுவென அவர்கள் அறையை நோக்கி நடந்தார் தேவயானி. ஷிவானி உறங்கிக் கொண்டிருந்தாள். அவள் நெற்றியை தொட்டுப் பார்த்தார். ஜுரம் ஏதும் இல்லாமல் இருக்கவே நிம்மதி பெருமூச்சு விட்டார்.

"ஷிவானி..." என்று மெல்ல அழைத்தார்.

மெதுவாய் கண் திறந்தாள் ஷிவானி.

"உடம்புக்கு என்னம்மா செய்யுது?"

"ரொம்ப டயர்டா இருக்கு, ஆன்ட்டி"

"ராத்திரி சரியா தூங்கலையா?"

ஆமாம் என்று தலையசைத்தாள் ஷிவானி. சித்தார்த்தும் சற்று சோர்வாய் தான் இருந்தான். உள்ளுக்குள் புன்னகைத்துக் கொண்டார்.

"சரி நீ தூங்கு"

சரி என்று தலையசைத்தாள் ஷிவானி.

அன்று மாலை

அழைப்பு மணியின் ஓசை கேட்டு கதவைத் திறந்தார் தேவயானி. பளீரென்ற புன்னகையுடன் நின்றிருந்தாள் ஹரிணி.

"ஹலோ ஆன்ட்டி..."

"ஹாய்... உள்ள வா"

"எங்க உங்க மருமகளும், முசுடு மன்னனும்?"

"ஓய்... என் பையனுக்கு நீ இப்படி தான் பேர் வச்சிருக்கியா?"

தன் நாக்கை கடித்தாள் ஹரிணி.

"அவன் கொஞ்சம் முசுடு தான்ல?" என்று சிரித்தார் தேவயானி.

"நீங்க செம சூப்பர், ஆன்ட்டி...! உங்களுக்கு இன்னொரு பையன் இருந்திருக்கலாம்..."

"ஏன்?"

"நான் அவரைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு இருப்பேன். எனக்கு உங்களை மாதிரி ஒரு சூப்பர் கூலான மாமியார் கிடைசிருப்பாங்க"

"இட்ஸ் டூ லேட்" என்று தேவயானி  கூற, வாய்விட்டு சிரித்தாள் ஹரிணி.

"சிவா எங்க?"

"அவளோட ரூம்ல இருக்கா. நல்ல வேலை நீ வந்த. காலையில இருந்து ரொம்ப டல்லா இருக்கா"

"என்ன ஆச்சு, ஆன்ட்டி?"

"கேட்டா எதுவும் சொல்ல மாட்டேங்கிறா. நீ போய் அவகிட்ட பேசு. அவ பெட்டரா ஃபீல் பண்ணுவா"

சரி என்று தலையசைத்துவிட்டு ஷிவானியின் அறையை நோக்கிச் சென்றாள் ஹரிணி.

ஷிவானி கட்டிலில் படுத்திருப்பதை கண்டாள் ஹரிணி. அவளைப் பார்த்தவுடன் தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு எழுந்து அமர்ந்தாள் ஷிவானி. 

"சிவா.... " என்று ஓடிச்சென்று அவளை அணைத்துக் கொண்டாள் ஹரிணி.

அவள் கன்னத்தில் இருந்த ஈரத்தை தொட்டுப்பார்த்து,

"என்ன ஆச்சு, சிவா? ஏதாவது பிரச்சனையா?"

"ஒரு பிரச்சனையும் இல்ல. தலை வலிக்குது. கண்ணெல்லாம் எரியுது"

"சரி வா ஹாஸ்பிடல் போகலாம்"

"வேண்டாம், வேண்டாம்" என்று அவள் பதற, திடுக்கிட்டாள் ஹரிணி.

"உன்னை நான் ஹாஸ்பிடலுக்கு தானே கூப்பிட்டேன்... அதுக்கு ஏன் இவ்வளவு பதறிப் போற?"

"டேப்லட் போட்டேன்... அது போதும்"

"ஆன்ட்டிகிட்ட சொல்லலையா?"

"இல்ல. அவங்க ரொம்ப ஓவரா ரியாக்ட் பண்றாங்க. வெறும் தலைவலி தானே...?"

"ஏதாவது பிரச்சனைனா தயவுசெய்து என்கிட்ட சொல்லு..."

"உன்கிட்ட சொல்ல நான் தயங்குவேனா? ஒன்னும் இல்ல ஹரி..."

"ஆனா, உன் கல்யாணத்துக்கு பிறகு நீ ரொம்ப டல்லா ஆயிட்ட. உன் புருஷனும் அப்படித் தான் இருக்காரு. நீ என்கிட்ட முன்ன மாதிரி பேசுறதே இல்ல." என்றாள் முகத்தை சுளித்துக் கொண்டு.

"ஏதாவது இன்ட்ரஸ்டிங்கா இருந்தா தானே உன்கிட்ட நான் சொல்ல முடியும்?" என்ற ஷிவானியை விசித்திரமாய் பார்த்தாள் ஹரிணி.

இதுவரை கதைகளில் கூட படித்து இருக்காத அளவிற்கு நட்பான ஒரு மாமியார்...! திருமணத்திற்கு முன்பே அவளை தீவிரமாய் காதலிக்க துவங்கிவிட்ட கணவன்...! ஆனால் இவளோ,  பகிர்ந்து கொள்ள எந்த சுவாரஸ்யமும் இல்லை என்கிறாளே...!

"நான் சொல்றதை நம்புடா... ஐ யம் ஆல்ரைட்"

சரி என்று தலையசைத்தாள் ஹரிணி. அப்பொழுது அவர்கள் அறையை ஒட்டியிருந்த பூந்தோட்டத்தின் மீது ஹரிணியின் பார்வை சென்றது. அவள் ஷிவானியின் அறைக்குள் வருவது இது தான் முதல் முறை என்பதால், அந்த தோட்டத்தை அவள் இப்பொழுது தான் பார்க்கிறாள். அவள் முகம் பிரகாசம் அடைந்தது. ஓடிச்சென்று அந்தச் செடிகளை பார்வையிட்டுக் கொண்டே அதற்கு தண்ணீர் ஊற்ற துவங்கிவிட்டாள். தோட்டத்திற்கு செல்லும் கதவின் மீது சாய்ந்து கொண்டு அவளைப் பார்த்துக் கொண்டு எதையோ யோசித்தபடி நின்றாள் ஷிவானி.

அவர்கள் இருவருக்கும் தேனீர் கொண்டு வந்தார் தேவயானி. ஹரிணி செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவதை பார்த்து,

"நீ ஏன் இதெல்லாம் செய்யுற மா? வா, வந்து இந்த டீயைக் குடி"

"எனக்கு செடிங்கன்னா ரொம்ப பிடிக்கும் ஆன்ட்டி. தினமும் செடிக்கு தண்ணீ ஊத்துறது என்னோட வேலை. தினமும் காலையில அதை செஞ்சுட்டு தான் மறுவேலை பார்ப்பேன்"

அதைக் கேட்ட தேவயானிக்கு சுருக்கென்றது. அவர் மூளையில் யாரோ ஓங்கி அடித்தது போல் இருந்தது. வெங்கடேசன் வீட்டில் தண்ணீர் ஊற்றிய பெண்ணை பார்த்து தானே சித்தார்த் திருமணத்திற்கு சரி என்று கூறினான்?

"நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து தினமும் காலையில செடிக்கு தண்ணி ஊத்துவீங்களா?" என்றார் தனக்குள் எழுந்த பதற்றத்தை காட்டிக்கொள்ளாமல்.

"இல்ல ஆன்ட்டி, நான் மட்டும் தான் செய்வேன்"

கண்களை இமைக்காமல் அதிர்ச்சியுடன் அவளைப் பார்த்துக் கொண்டு நின்றார் தேவயானி.

"அவளுக்கு கார்டனிங்ல விருப்பமில்ல. ஆனா, நான் டைம் கிடைக்கும் போதெல்லாம் தோட்டத்தில் தான் இருப்பேன்"

"முக்கியமா, காலைல... ஃபிரஷ் பண்ணும் போது... இல்ல?" என்றார் தவிப்புடன்.

"சரியா சொன்னீங்க" என்று கலகலவென சிரித்தாள் ஹரிணி.

"சில நாள் கூட ஷிவானி தண்ணி ஊத்துனது இல்லையா?"

"சில நாளா? ஒரு நாள் கூட ஊத்தினது இல்ல"

தனது தலையில் இடி இறங்கியது போல் உணர்ந்தார் தேவயானி. அவருடைய மூலாதாரமே ஆடிப்போனது. நிற்கவே தடுமாறினார். அதை கவனித்த ஹரிணி, கையிலிருந்த தண்ணீர் குழாயை தூக்கி எறிந்துவிட்டு, குழாயை மூடி விட்டு அவரை நோக்கி ஓடினாள். அவள் ஓடி வருவதை பார்த்த ஷிவானி, அவளுடைய உதவிக்கு வந்தாள். இருவரும் தேவயானி கீழே விழுமுன் பற்றிக்கொண்டார்கள்.

"உங்களுக்கு திடீர்னு என்ன ஆச்சு ஆன்ட்டி?" என்றாள் ஹரிணி.

கண்களை இமைக்கவும் மறந்த தேவயானி, தன் பார்வையை மெல்ல ஷிவானியின் பக்கம் திருப்பிவிட்டு, மீண்டும் ஹரிணியின் பக்கம் திருப்பினார். அவரால் தன் கண்ணீரை கட்டுப்படுத்தவே முடியவில்லை.

"ஏதாவது சொல்லுங்க ஆன்ட்டி...! உங்கள இப்படி பார்க்க எனக்கு பயமா இருக்கு" என்று பதறினாள் ஹரிணி

"தலை சுத்திடிச்சிம்மா..."

"கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்தா சரியா போயிடும்"

ஆமாம் என்று சோகமாய் தலையசைத்தார் தேவயானி.

"ஆன்ட்டியை பத்திரமா பாத்துக்கோ" என்று தன் அக்காவுக்கு கட்டளையிட்ட ஹரிணி, எழுந்து நின்றாள்.

"நான் உனக்கு பர்த்டே கிஃப்ட் கொடுக்க தான் வந்தேன்" என்றாள்.

தன் பையிலிருந்து ஒரு கைகடிகார டப்பாவை வெளியே எடுத்தாள். *ஹாப்பி பர்த்டே டூ யூ* என்று பாடியபடி அதை அவள் கையில் கட்டினாள்.

"ஆனா இன்னைக்கு ஏன் தர்ற? நாளைக்கு தானே எனக்கு பர்த்டே?"

"நாளைக்கு, நான் காலேஜ் டூர் போறேன். காலையில சீக்கிரமாவே கிளம்பிடுவேன். அதனால தான் இன்னைக்கே வந்துட்டேன்"

அதைக் கேட்டு ஏமாற்றம் அடைந்தாள் ஷிவானி.

"நீ இல்லாம நான் ஒரு பர்த்டேவை கூட கொண்டாடினதே இல்லையே..."

"நான் சீக்கிரம் திரும்பி வந்துட்டா, நிச்சயம் வந்து உன்னை பாக்குறேன்"

"எவ்வளவு லேட் ஆனாலும் வரணும்"

"சரி, நிச்சயம் வரேன்... வீட்டுக்கு கூட போகாம நேரா இங்க வந்து உன்னை பார்க்கிறேன். போதுமா?"

சரி என்று தலை அசைத்தாள் ஷிவானி. அவளை கட்டியணைத்து அவள் கன்னத்தில் முத்தமிட்டாள் ஹரிணி.

அவர்கள் இருவரையும் வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தார் தேவயானி. இந்த சகோதரிகளுக்கு இடையில் இருக்கும் உறவு ஆத்மார்த்தமானது என்று அவருக்கு புரிந்தது.

அப்பொழுது அந்த அறைக்குள் நுழைந்தான் சித்தார்த். ஹரிணியை பார்த்தவுடன் அவனுடைய முகம் ஒரு நொடி பிரகாசம் அடைந்து, மீண்டும் சம நிலைக்கு திரும்பியது. அதை கவனித்தார் தேவயானி.

"முசுடு மாமா வந்துட்டாரு" என்று மெல்லிய குரலில் கூறினாள் ஹரிணி.

அது சித்தார்த்தின் காதில் விழுந்தது. ஓரக்கண்ணால் அவளைப் பார்த்தபடி லேசாய் முறுவலித்தான்

"சரி, நான் கிளம்புறேன். நாளைக்கு தேவையான பிரிபரேஷன்ஸ் செய்யனும். ஆன்ட்டி நீங்க உங்களை கவனிச்சிக்கோங்க, ப்ளீஸ்"

"என்ன ஆச்சு மா?" என்றான் சித்தார்த்.

"ஒன்னும் இல்ல"

"பொய்... அவங்க தலை சுத்தி கீழே விழப் போனாங்க" என்றாள் ஹரிணி.

"அப்படியாம்மா?"

"நான் ஒன்னும் பொய் சொல்லல" என்ற ஹரிணியை பார்த்தபடி, தனது கைப்பேசியை வெளியில் எடுத்து மருத்துவருக்கு ஃபோன் செய்ய விழைந்தான் சித்தார்த்.

"எனக்கு ஒன்னும் இல்ல, சித்து..."

"இல்லைன்னா என்ன ஆன்ட்டி? ஒரு தடவை செக் பண்றதுல என்ன தப்பு இருக்கு? நீங்க டாக்டரை கூப்பிடுங்க," என்றாள் சித்தார்த்திடம் ஹரிணி.

"கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்தா சரியா போயிடும்" - தேவயானி.

"சரி வாங்க. நான் உங்களை உங்க ரூம்க்கு கூட்டிகிட்டு போறேன்" என்று அவர் எழுந்து நிற்க உதவினாள் ஹரிணி.

அவளுடை உதவியை மறுக்கவில்லை தேவயானி. தன் இதயத்தை குத்திக் கிழித்த கூரிய எண்ணங்களுடன், அவளுடன் தன் அறையை நோக்கிச் சென்றார். அமைதியாய் அவர்களை பின் தொடர்ந்தான் சித்தார்த். அவரை கட்டிலில் படுக்க வைத்து விட்டு,

"நான் கிளம்புறேன் ஆன்ட்டி" என்றாள்.

சரி என்று தலையசைத்தார் தேவயானி கனத்த இதயத்துடன்.

"ஆன்ட்டி வேண்டாமுன்னு சொன்னாங்கன்னு சும்மா இருக்காதீங்க. ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போய் செக்கப் பண்ணிடுங்க" என்றாள் சித்தார்த்திடம்.

அவன் சரி என்று தலை அசைத்தான். அப்போது ஹரிணியின் கைப்பேசி ஒலித்தது. அதில் ஒளிர்ந்த எண்ணை பார்த்து புன்னகை புரிந்தாள் ஹரிணி.

"பை ஆன்ட்டி" என்று கூறிவிட்டு அந்த அழைப்பை ஏற்றபடி வெளியே சென்றாள்.

"ஹாய் ரோஹித்" என்று அவள் கூற, தன் கவனத்தை அவள் மீது திருப்பினான் சித்தார்த்.

ரோஹித் அவளுடைய பால்ய நண்பன் என்று வெங்கடேசன் கூறியது அவன் நினைவுக்கு வந்தது.

"இதோ வரேன் மா" என்று வெளியே வந்தான்.

"நான் ஷிவானி வீட்டில் இருக்கேன்" என்ற ஹரிணி, அலைபேசியை காதில் இருந்து பின்னால் இழுத்தாள்.

"கத்துறதை நிறுத்து. எனக்கு காது வலிக்குது...." என்றாள்.

"..."

"சரி அடுத்த தடவை நான் இங்க வரும் போது உன்னையும் கூட்டிட்டு வரேன். ஆனா, அதுக்கு முன்னாடி நான் அப்பாகிட்ட பர்மிஷன் வாங்கணும்...."

"..."

"நிச்சயமா... அவர் வேண்டாம்னு சொன்னா நான் உன்னை கூட்டிகிட்டு வர மாட்டேன்..."

"..."

"நிச்சயமா மாட்டேன்...."

"..."

"நீ எனக்கு முக்கியம் தான். ஆனா உன்னை விட எனக்கு எங்க அப்பா தான் முக்கியம். அது உனக்கும் தெரியும்"

"...."

"எங்க அப்பாவை பத்தி பேசும் போதெல்லாம் எதுக்காக நீ அப்செட் ஆகுற? இது தான் ரியாலிட்டி...! இது தான் ஹரிணி...! எங்க அப்பாவுக்கு பிடிக்காததை நான் செய்ய மாட்டேன். நான் உன்கிட்ட அப்புறம் பேசுறேன்" இணைப்பை துண்டித்தாள் ஹரிணி.

அவள் செல்வதை கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் சித்தார்த். அவளிடம் ரோஹித் என்ன பேசினான் என்பதை ஊகிப்பதில் அவனுக்கு எந்த கஷ்டமும் இல்லை. இது வெறும் நட்பாக தெரியவில்லை. ஹரிணி அவனை நண்பனாக மட்டும் தான் நினைக்கிறாள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் ரோஹித், அதற்கு அப்பாற்பட்டு தான் ஹரிணியை பார்க்கிறான் என்பது அவனுக்கு புரிந்தது.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top