30 மடிக்கப்பட்ட காகிதம்
30 மடிக்கப்பட்ட காகிதம்
மறுநாள் காலை
தன் நெஞ்சில் முகம் புதைத்தபடி உறங்கிக் கொண்டிருந்த ஹரிணியைப் பார்த்து புன்னகை புரிந்தான் சித்தார்த். அவளை அன்பாய் உச்சி முகர்ந்தான். கடிகாரம் மணி 6:45 என்றது.
"ஹரிணி... ஹரிணி" என்று மெல்லிய குரலில்அவளை எழுப்பினான்.
"ம்ம்ம்ம்..."
"எழுந்திரு"
"ஃபைவ் மினிட்ஸ்..."
தான் இருக்கும் நிலை உணர்ந்து சட்டென்று கண் விழித்து, எழுந்து அமர்ந்தாள் ஹரிணி. அவளுக்கு சில நிமிடம் வரை ஒன்றும் புரியவில்லை. திருதிருவென விழித்துக் கொண்டு அமர்ந்திருந்த அவளைப் பார்த்து சிரித்தான் சித்தார்த்.
"நேத்து என்ன நடந்ததுன்னு மறந்துட்டியா?"
ஆமாம் என்று தலையசைத்தாள்.
"இன்னைக்கு காலேஜ்க்கு போறியா?"
"நிச்சயம் போகணும். ரெக்கார்டு சப்மிட் பண்ணனும்"
"சரி, சாயங்காலம் ஃப்ரீயா? இல்ல ஏதாவது ப்ரோக்ராம் வச்சிருக்கியா?"
"இப்போ என்னால எதுவும் சொல்ல முடியாது. காலேஜில் இருந்து வந்த பிறகு தான் சொல்ல முடியும்"
"எது எப்படி இருந்தாலும், இன்னைக்கு ராத்திரி நம்ம டின்னருக்கு வெளியில போகலாம். ரெடியாயிரு"
"வாஆஆஆஆவ்..... நெஜமாவா....? யூ ஆர் சோ ஸ்வீட்"
அவன் கன்னத்தில் *பச்* என்று முத்தமிட்டாள்.
"என்கிட்ட இவ்வளவு சகஜமா இருக்காதே... அப்பறம் நான் ஏதாவது கேட்க கூடாததை, வேணுமுன்னு கேட்டுட போறேன்"
"எதை பத்தியும் யோசிக்க கூடாது... எதை பத்தியும்னா, எதை பத்தியும் தான்..." என்று அவன் கூறியதை, அவனை போலவே பேசினாள்.
"அப்படினா?" என்றான் சிரித்தபடி.
"அப்படின்னா நீங்க என்னை தொடக் கூடாதுன்னு அர்த்தம்"
"அப்படியா?"
"அப்படித் தான்"
குளியலறைக்கு ஓடிப்போனாள் ஹரிணி. சிரித்தபடி அமர்ந்திருந்தான் சித்தார்த். அவனால் நம்பவே முடியவில்லை, ஒரே இரவில் அனைத்தும் மாறிவிட்டது என்று. இது மிகவும் உன்னதமான நிலை. எவ்வளவு நிம்மதியான காலை...! புன்னகையுடன் கட்டிலை விட்டு கீழே இறங்கிய சித்தார்த், தோட்டத்திற்கு சென்று, செடிகளுக்கு தண்ணீர் ஊற்றத் துவங்கினான்.
புதிதாய் பூத்த மலர்களை காலை நேரத்தில் பார்ப்பது அலாதியானது. மனதிற்கு புத்துணர்ச்சி அளிக்க கூடியது. அந்த காலை நேரத்தை மேலும் அழகூட்டும் விதமாய், குளித்து முடித்து புத்துணர்ச்சியுடன் வந்து நின்றாள் அவனது மனைவி. தண்ணீர் குழாயை தூக்கி எறிந்து விட்டு உள்ளே வந்தான் சித்தார்த்.
"இங்க பாருங்க, நான் டிப்பிக்கல் வைஃப் மாதிரி, உங்களை கட்டிப்பிடிப்பேன், முத்தம் கொடுப்பேன்னு எல்லாம் எதிர் பார்க்காதீங்க. போய் ஆஃபிசுக்கு ரெடியாகுங்க" என்றாள் ஹரிணி தலையை துவட்டியபடி தெனாவேட்டாக.
அவள் கூறியதை கேட்டு கண்களை சுருக்கினான் சித்தார்த்.
"என்னை ரசிச்சது போதும். போங்க..."
அவளை நோக்கி அவன் ஒரு அடி எடுத்து வைத்தவுடன், அவள் அங்கிருந்து ஓட முயன்றாள். ஒரே தாவலில் பாய்ந்து, அவளை தன் பிடிக்குள் கொண்டு வந்தான் சித்தார்த்.
"நீ வேணா டிபிக்கல் வைஃபா இல்லாம இருக்கலாம். ஆனா, சந்தேகம் இல்லாம, நான் டிபிக்கல் ஹஸ்பண்ட் தான். நான் என்னோட வைஃபை கட்டிப்பிடிப்பேன்... கிஸ் பண்ணுவேன்..." பின்னாலிருந்து அவள் கன்னத்தில் அழுத்தமாய் முத்தமிட்டான்.
"ஒரு சின்ன பொண்ணோட மனசை கெடுக்காதீங்க"
"அப்படியா, நேத்து ராத்திரி என் மனசை யார் கொடுத்தது? என்னோட ஃபீலிங்சை யாரு தூண்டிவிட்டது?"
"யாரு அது? அவ உண்மையிலேயே ரொம்ப பெரிய திறமைசாலியா தான் இருக்கணும். உங்களை மாதிரி ஒரு முசுடு மனசையே கலைச்சிட்டாளே..."
"அவ இன்னும் என்னோட உண்மையான ஃபீலிங்ஸை பாக்கல... காட்டட்டுமா?"
"அங்க பாருங்க..." என்று அவன் கவனத்தை திசை திருப்பினாள் ஹரிணி.
சித்தார்த் முகத்தை திரும்பியவுடன், அவனை பிடித்து தள்ளிவிட்டு ஓடிப்போனாள்.
"ஆஃபிஸுக்கு லேட் ஆகுது... கிளப்புங்க..."
"நீ எல்லா நேரமும் என்கிட்ட இருந்து தப்பிக்க முடியாது, ஹரிணி" என்று பின்னால் இருந்து கத்தினான் சிரித்தபடி.
கதவருகில் சென்று நின்று, இரண்டு முறை இடுப்பை ஆட்டி விட்டு அங்கிருந்து ஓடி போனாள் ஹரிணி. சிரித்தபடி குளியல் அறைக்கு சென்றான் சித்தார்த். அப்பாடா... இந்த நாள், அவன் வாழ்க்கையில் இவ்வளவு சீக்கிரம் துளிர்க்கும் என்று அவன் நினைத்திருக்க வில்லை. ஹரிணி இன்னும் கூட சந்தோஷமாய் இருக்க வேண்டியவள். அவனுடைய வாழ்க்கையில், அவள் எவ்வளவு முக்கியமானவள் என்று கூறினால், அவள் தான் இந்த உலகிலேயே சந்தோஷமான பெண்ணாக இருப்பாள். அப்படிப்பட்ட ஒரு நிலையில் அவளை காண ஆசைப்பட்டான் சித்தார்த். அதைப் பற்றி எண்ணியபடியே தயாராகி தரைதளம் வந்தான்.
அதே நேரம் அவனை அழைத்து வருமாறு ஹரிணியிடம் கூறினார் தேவயானி. தனது ரெகார்ட் நோட்டை ஹிட்லர் மேடமிடம் சப்மிட் செய்வதை பற்றி எண்ணியபடியே வந்த ஹரிணி, அவன் எதிரில் வந்ததை கவனிக்கவில்லை. ஆனால் சித்தார்த் அவள் வருவதை கவனித்து விட்டான். அவன் அசையாமல் அப்படியே நிற்க அவன் மீது மோதி கொண்டாள் ஹரிணி. அது தான் சாக்கு என்று அவளை மடக்கி பிடித்துக் கொண்டான்.
"பாத்தியா, நீ என்கிட்ட வந்து என் கையில விழுந்துட்ட...!"
"முதல்ல என்னை விடுங்க"
"என்னமோ, உன்னை என்னால பிடிக்கவே முடியாது அப்படிங்கற மாதிரி ஓடி போன? இப்ப என்ன சொல்ற?"
"நான் செஞ்சது தப்பு தான் சாமி. ஒத்துக்குறேன்... என்னை விடுங்க"
"நெஜமாவே விட்டுடவா?" என்று அவன் உள்ளர்த்ததுடன் புன்னகைக்க,
"நான் ஒரு பைத்தியக்காரி. என்னை விடனும் நீங்க நெனச்சா, நான் என்ன செய்வேன்னு ஏற்கனவே உங்ககிட்ட சொல்லிட்டேன். ஜாக்கிரதை" என்று அவனை கடிப்பது போல் சைகை செய்தாள்.
சிரித்தபடி அவள் நெற்றியை பிடித்து லேசாய் தள்ளினான் சித்தார்த்.
"எனக்கு காலேஜுக்கு டைம் ஆகுது"
"நான் உன்னை காலேஜில் ட்ராப் பண்றேன்"
"தேங்க்யூ சோ மச்"
"வா சாப்பிடலாம்"
"ஓகே"
அவர்கள் உணவு மேசையை நோக்கி நடந்தார்கள். அவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை, அவர்கள் நெருக்கத்தைப் பார்த்து, ஒருவருக்கு கண்ணில் கண்ணீர் கட்டிக்கொண்டு வந்தது. அது தேவயானியை தவிர வேறு யாராக இருக்க முடியும்? அவருடைய வார்த்தைகளை, அவருடைய மருமகள் மிகவும் தீவிரமாக எடுத்துக் கொண்டு, அதை செயல்படுத்தியும் விட்டாள் என்பது அவருக்குப் புரிந்தது. தன் மருமகளை மனதார வாழ்த்தினார் அவர்.
தனக்கு மிகவும் பிடித்த மைதா மாவு சப்பாத்தியை பார்த்து, ஆச்சரியமாய் போனது சித்தார்த்துக்கு. அதை அவனுக்கு பரிமாறினாள் ஹரிணி.
"வாவ்... என்ன ஆச்சும்மா? நீங்க எப்பவுமே மைதா மாவு சப்பாத்தி சாப்பிட கூடாதுன்னு சொல்லுவீங்களே...!"
"ஏன்?" என்றாள் ஹரிணி.
"அம்மா எப்பவுமே ஹெல்தியா சாப்பிடணும்னு நினைப்பாங்க. அம்மாவுக்கு மைதாமாவில் எதுவும் செய்யப் பிடிக்காது"
"அப்படியா? ஐ அம் சாரி மா. அது தெரியாம, நான் இதை சமைச்சிட்டேன்" என்றாள் ஹரிணி.
"இத நீயா சமைச்ச?" என்றான் சித்தார்த்.
ஆமாம் என்று தலையசைத்தாள் சோகமாக.
"இது ரொம்ப நல்லா இருக்கு"
"நான் சமைக்கும் போது நீங்க ஏன் மா வேண்டாம்னு சொல்லலை?"
"பரவாயில்லை விடு ஹரி, ஒரு நாள் சாப்பிட்டா ஒன்னும் ஆகாது" என்றார் தேவயானி.
"நீ இதை அடிக்கடி சமைச்சா நல்லா இருக்கும்" என்றான் சித்தார்த்.
"இனிமே நான் செய்ய மாட்டேன்" என்றாள் ஹரிணி.
"ஏன்?" என்றான் அதிர்ச்சியுடன்.
"அம்மா சொன்னதை கேக்கலையா? நீங்க? இது உடம்புக்கு நல்லதில்ல"
தலையில் கை வைத்துக் கொண்டான் சித்தார்த். அப்பொழுது ஹரிணிக்கு அனுவிடம் இருந்து கைப்பேசி அழைப்பு வந்தது.
"ஹாய் அனு"
"நீ காலேஜுக்கு வரியா இல்லையா?"
"வரப் போறேன்"
"சரி, நம்ம காலேஜ்ல பார்க்கலாம்"
"ஓகே..."
அழைப்பைத் துண்டித்து விட்டு,
"நீங்க என்னை டிராப் பண்றீங்க இல்ல?"
"ஷ்யூர்"
"அம்மா நான் கிளம்பட்டுமா?"
"போயிட்டு வா டா"
சித்தார்த்துடன் கிளம்பி சென்றாள் ஹரிணி, தேவயானிக்கு புது தெம்பை அளித்து.
ஹரிணியின் கல்லூரிக்கு முன்பாக காரை கொண்டு வந்து நிறுத்தினான் சித்தார்த். அவள் காரை விட்டு கீழே இறங்க நினைத்த போது, அவளது துப்பட்டாவை பற்றி இழுத்தான். *என்ன?* என்பது போல் ஜாடையில் கேட்டாள் ஹரிணி.
"ரெடியா இரு"
"எதுக்கு?"
பதில் கூறாமல், துப்பட்டாவை அவள் மீது எரிந்து, கண்ணாடிதான் சித்தார்த்.
"நீங்க ஏதாவது செய்ய ட்ரை பண்ணா, நான் உங்களை..."
"கடிச்சிடுவ... அதானே?"என்று தனது கன்னத்தை காட்டினான் *கடித்துக் கொள்* என்பது போல்.
"இப்போ இல்ல. சாயங்காலம் உங்களை கவனிச்சிக்கிறேன்"
காரைவிட்டு இறங்கி கல்லூரிக்குள் ஓடினாள் ஹரிணி. அழகான புன்னகை சிந்தியபடி அங்கிருந்து கிளம்பி சென்றான் சித்தார்த்.
ஹிட்லர் மேடமிடம் ரெகார்ட் நோட்டை சப்மிட் செய்து, தன்னை காப்பாற்றிக் கொண்டாள் ஹரிணி.
"என்னோட பர்த்டேவுக்கு உன்னை இன்வைட் பண்றேன்" என்றாள் அனு.
"அது அடுத்த வாரம் தானே?" என்றாள் ஹரிணி குழப்பத்துடன்.
"என்ன செய்யிறது? நீ அடிக்கடி காணாம போயிடுற. அடுத்த தடவை நான் உன்னை எப்போ பார்ப்பேனோ..."
"உனது அழைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டது" என்று சிரித்தாள் ஹரிணி.
"என்ன விஷயம் ஹரி, நீ ரொம்ப சந்தோஷமா இருக்க...?"
"அப்படியா தெரியுது?"
"ஏன், உனக்கு எந்த வித்தியாசமும் தெரியலையா?"
"தெரியுது தான்..."
"உன் மேல திணிக்கப்பட்ட வாழ்க்கையை நீ ஏத்துக்கிட்டது போல தெரியுது...?"
"திணிக்கப்பட்ட வாழ்க்கையா? யாரும் என் மேல எதையும் திணிக்கல. இது முழுக்க முழுக்க என்னோட விருப்பம். இது நான் தேர்ந்தெடுத்த வாழ்க்கை. புரிஞ்சுதா உனக்கு?"
"ஆனா, அப்போ நீ கல்யாணம் பண்ணிக்க தயாரா இல்லையே...?"
"ஏன்னா, நான் எங்க அம்மா அப்பா கூட இருக்கணும்னு நினைச்சேன். அதனால கல்யாணத்தை பத்தி நான் யோசிக்கல. ஆனா, இப்போ எல்லாமே மாறிடுச்சு"
"நீ சந்தோஷமா இருக்கல்ல?"
"அதுல என்ன சந்தேகம்?"
திடீரென்று எதற்காக அனு தன்னிடம் தனது திருமண வாழ்க்கையை பற்றி பேசினாள் என்று புரியவில்லை ஹரிணிக்கு. அதைப் பற்றி யோசித்தபடி கல்லூரியில் இருந்து புறப்பட்டாள்.
தமிழ் குடில்
இரவு உணவுக்கு வெளியே செல்ல தயாராக இருக்கும்படி சித்தார்த் கூறியது ஹரிணிக்கு நினைவுக்கு வந்தது. அவனுக்கு போன் செய்யலாம் என்று நினைத்தாள். ஆனால், இல்லை, அவனே வரட்டும் என்று காத்திருந்தாள்.
அப்போது அவள் அறையில் இருந்த இன்டர்காம் மணி அடித்தது. அதை எடுத்து பேசினாள் ஹரிணி.
"ஹரி மா" என்றார் தேவயானி.
"சொல்லுங்கம்மா"
"அப்பா ஃபோன் பண்ணி இருந்தாரு. சித்துவோட கப்போர்டில் ஒரு ஃபைல் இருக்காம்..."
"என்ன ஃபைல் மா?"
"மெஹரா ஃபேப்ரிக்ஸ்... அதை வாங்கிக்கிட்டு வர, ஏற்கனவே ஆஃபீஸ்ல இருந்து ஒருத்தரை அனுப்பிட்டாராம். அவர் நம்ம வீட்டுக்கு வந்துகிட்டு இருக்காரு. கொஞ்சம் எடுத்துக்கிட்டு வரியா?"
"சரி மா. நான் அதைக் கீழே கொண்டு வரேன்"
அழைப்பைத் துண்டித்து விட்டு, சித்தார்த்தின் அலமாரியை திறந்து, அதில் இருந்த அனைத்து கோப்புகளையும் வெளியே எடுத்து வைத்துக்கொண்டு, அந்த குறிப்பிட்ட கோப்பை தேடினாள் ஹரிணி. அந்த கோப்பு அவளுக்கு கிடைத்தது. அதை தனியே எடுத்து வைத்து விட்டு, மீதம் இருந்த கோப்புகளை மீண்டும் அலமாரியில் வைத்தாள். அப்பொழுது, அதிலிருந்த ஒரு மடிக்கப்பட்ட காகிதம் தரையில் விழுந்தது. அதை எடுத்து பிரித்து படித்துப் பார்த்தாள் ஹரிணி, ஒருவேளை அது மெஹ்ரா பேப்ரிக்ஸ் கோப்பை சேர்ந்த காகிதமாக இருக்குமோ என்று எண்ணி. ஆனால் அது, ஷிவானியின் பிரேத பரிசோதனை அறிக்கை.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top