24 உணர்வுகள்
24 உணர்வுகள்
மறுநாள் காலை
அன்றைய சூரிய உதயத்தை பார்க்க வெகு சீக்கிரமே எழுந்து விட்டாள் ஹரிணி. ஜன்னலின் அருகே நின்று, கடலிலிருந்து வீசிய சுகந்த காற்றை சுவாசித்தபடி, அந்தக் காட்சிக்காக காத்திருந்தாள். கடலின் மடியிலிருந்து, கதிரவன் தனது மெல்லிய கதிர்களை பரப்பிக்கொண்டு, மெல்ல தலை தூக்க துவங்கினான். சிறிது நேரத்திலேயே, கடலிலிருந்து முழுவதுமாய் வெளிப்பட்ட நிலையில், சிவப்பு நிற பந்தைப் போல் காட்சியளித்தான். இயற்கை காதலர்களுக்கு அது ஒரு கண்கொள்ளா காட்சி. அது மிகவும் பழமையான காட்சி தான் என்றாலும், ஒவ்வொரு சூரிய உதயமும் புதிது தான்...! அந்த காட்சியை காணவே புத்துணர்ச்சியாக இருந்தது ஹரிணிக்கு. அவள் மனம் அதைப் பற்றி எண்ணிப்பார்க்க தொடங்கியது. மறுபடியும் இப்படி ஒரு காட்சியை காணும் வாய்ப்பு அவளுக்கு கிடைக்குமா என்று தெரியாது அல்லவா!
இப்போது இவ்வளவு ரம்மியமாகவும் அழகாகவும் தெரியும் இந்த காட்சியை காணும் யாரும் சூரியனை ரசிக்கவும் விரும்பவும் தான் செய்வார்கள். ஆனால், இன்னும் சற்று நேரத்தில், இதே சூரியன் உச்சிக்கு வந்து, தனது கொதிக்கும் கதிர்களால் சுட்டெரிக்க துவங்கும் போது, அது அனைவருடைய வெறுப்புக்கும் ஆளாகிறது. நேரடியாய் நம்மால் அதை பார்க்கக்கூட முடிவதில்லை.
அதே போலத் தான் சில மனிதர்களும், தங்களது உண்மையான சொரூபத்தை மறைத்து வைத்து விடுகிறார்கள், ஷிவானியை போல. அவளை ஆழமாக நேசித்த குடும்பத்தாரிடமிருந்து அவள் தனது உண்மை சொரூபத்தை மறைத்து வைத்து விட்டாள். அவள் ரசிக்கத்தக்க சிவப்புப் பந்து என்று அவர்கள் நினைத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் அவள் அப்படியல்ல. அவர்கள் நினைத்துக் கொண்டு இருந்ததற்கு, அவள் நேர்மாறானவள். அவளுடைய கடந்த காலம் ஜீரணிக்க கூடியதாக இல்லை. அவளை நேசித்தவர்களுக்கு அவள் கண்ணீரைத் தான் பரிசாய் வழங்கியிருக்கிறாள். நேர்மை என்பது விலைமதிப்பில்லாதது. அதை தரமற்றவர்களிடம் எதிர்பார்ப்பது முட்டாள்தனம். ஆனால் அந்த தரமற்ற பட்டியலில் ஷிவானி இணைவாள் என்பதை ஹரிணி ஒரு போதும் எதிர் பார்த்திருக்கவில்லை. அதை எண்ணிய போது அவளது கண்கள் குளமாயின.
அவள் தன் கண்களை சட்டென்று துடைத்துக் கொண்டாள், பின்னாலிருந்து சிறு சலசலப்பு கேட்ட போது. சித்தார்த்தும் தூக்கத்திலிருந்து விழித்து விட்டான் போல் தெரிகிறது. பின்னால் திரும்பிப் பார்த்தாள் ஹரிணி. ஆம் அவனும் விழித்து விட்டான்.
"இங்க பாருங்களேன், சூரியன் எவ்வளவு அழகா இருக்கு"
சூரியனைப் பார்த்தபடி அவள் அருகில் வந்து நின்ற சித்தார்த், ஆமாம் என்று தலையசைத்தான்.
"நீ எப்போ எழுந்த?"
"ஆறு மணிக்கு"
"சன் ரைஸ் பார்க்கவா?"
"அதுல என்ன சந்தேகம்? நம்ம நினைச்ச நேரத்துக்கு எல்லாம் இது கடைசிடுமா?"
"நீ ஒரு விஷயம் யோசிச்சு பார்த்தியா?"
"என்ன?"
"அரபிக்கடல் இருக்கிறது இந்தியாவோட மேற்கு பக்கத்துல. அப்படி இருக்கும் போது, மேற்கு பக்கத்தில் எப்படி சூரியன் உதிக்கிதுன்னு யோசிச்சியா?"
அட ஆமாம்... சூரியனை கண்டுகளிக்கும் ஆர்வத்தில் அதைப் பற்றி ஹரிணி யோசிக்கவே இல்லை.
"ஆமாம் இல்ல? எப்படி?"
"இந்தியாவோட மேப்ல, இப்ப நம்ம இருக்கிற இந்த இடம் மட்டும் கொஞ்சம் மூக்கை வெளியில நீட்டிக்கிட்டு இருக்கும். இந்தியாவிலேயே மேற்கு பக்கத்தில் சூரிய உதயத்தை, மும்பையில வெகு சில இடத்தில் மட்டும் தான் பார்க்கலாம். கேட்வே ஆப் இந்தியாவும் அதுல ஒன்னு. மெரைன் ட்ரைவில் கூட பார்க்க முடியாது"
"நிஜமாவா?" என்றாள் ஆச்சரியம் தாங்காமல்.
"ஆமாம், வேணுமின்னா கூகுள்ல சர்ச் பண்ணி பாரு"
"அப்படின்னா உண்மையிலேயே நான் காலையில சீக்கிரம் எழுந்ததுக்கு ஒர்த் இருக்கு"
ஆமாம் என்று தலையசைத்தான் சித்தார்த். சற்று நேரத்திற்கு முன்பு தன் மனதில் தோன்றிய விஷயத்தை சித்தார்த்துடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது ஹரிணிக்கு. மெல்ல பேச்சைத் துவங்கினாள்.
"எவ்வளவு விசித்திரமா இருக்கு, இப்போ இந்த சூரியனை ரசிக்கிற நம்ம, இன்னும் கொஞ்ச நேரத்துல அதோட சூடு தாங்காம அதை திட்ட போறோம்... ( சில நொடி நிறுத்திவிட்டு ) அதே மாதிரி தான்ல இல்ல சில பேரும்? தங்களை ரொம்ப கூலானவங்களா காட்டிக்கிறவங்க யாரும், உண்மையில் அப்படி இல்ல. அவங்களுடைய உண்மைத் தன்மையை மறைச்சு, சூட்டால் நம்மளை காயப்படுத்திடுறாங்க இல்லையா?"
அவள் கூறுவதை அமைதியாய் கேட்ட சித்தார்த் புன்னகைத்தான்.
"அது... அந்த விஷயத்தை நம்ம எப்படி பார்க்கிறோம் என்கிறதை பொருத்தது"
"எனக்கு புரியல..."
"அதையே நீ ஏன் வித்தியாசமான கோணத்தில் பார்க்க கூடாது?"
"எப்படி? "
"உண்மையிலேயே அவங்களுடைய இயற்கையான சுபாவம் சூடானதா இருந்தாலும், அவங்க தங்களை கூலானவங்களா காட்ட விரும்பலாம்... அது தங்களை சேர்ந்தவர்களை சந்தோஷப்படுத்தவும் இருக்கலாம்... தங்களாலையும் கூலா இருக்க முடியும்னு காட்ட நினைக்கலாம்... சீக்கிரம் எழுந்து தனக்காக டைம் ஸ்பென்ட் பண்ணணும்னு நினைக்கிறவங்க கண்ணுக்கு அவங்க கூலா தெரியணும்னு நினைக்கலாம்... தன்னோட அழகை மனசார விரும்புறவங்களுக்கு அவங்க உண்மையிலேயே அழகான காட்சியை தரணும்னு நினைக்கலாம்... இல்லையா?"
தாங்காத வியப்போடு அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள் ஹரிணி. இந்த விஷயத்திற்கு இப்படி ஒரு பக்கம் இருக்கும் என்பதை அவள் இதுவரை எண்ணிப் பார்த்தது இல்லை.
"எந்த ஒரு விஷயத்தையும் நம்ம எப்படி பார்க்கிறோம் அப்படிங்கிறதுல தான் அந்த பிரச்சனை சுலபமாகிறதும் கடினமாகுறதும் இருக்கு. சரி தானே?"
ஆமாம் என்று தலையசைத்தாள் ஹரிணி.
"காபி சாப்பிடலாமா?"
"சாப்பிடலாம்"
ரூம் சர்வீசுக்கு ஃபோன் செய்து காபி ஆர்டர் செய்தான் சித்தார்த். சட்டென்று தூற ஆரம்பித்தது. அது அவர்களது கண்முன் விரிந்த காட்சியை மேலும் அழகாக்கியது. காபி வந்து சேர்ந்தது. பொன் காலைப் பொழுதின் சூரிய உதயத்தை, சிறு தூறல் கடலில் விழும் காட்சியோடு கண்டு களித்தபடி காபியை பருகினாள் ஹரிணி. சில நிமிடங்களில் தூறல், மழையாய் மாறியது.
"அடக்கடவுளே..." என்றாள் ஹரிணி.
"என்ன ஆச்சி?"
"இப்படி மழை பெய்ய ஆரம்பிச்சா, நம்ம எப்படி வெளியில போய் சுத்தி பார்க்கிறது?"
"நம்ம வெளியில போறோம்னு யார் சொன்னது?"
"அப்படின்னா, நம்ம போகப் போறது இல்லையா?"
"இல்ல"
"ஏன்?" என்றாள் அதிர்ச்சியுடன்.
"ஏன்னா, நம்ம போற வழியில நிறைய பானிபூரி, பேல்பூரி, பாவ் பாஜி கடையெல்லாம் இருக்கும்"
"அதனால?"
"எந்த கடையை பார்த்து, நீ காணாம போவேன்னு சொல்ல முடியாது இல்ல..."
"ஆங்ங்ங்..." என்று முகம் சுளித்தாள் ஹரிணி.
"நான் உன்னை தொலைச்சிட்டு போனா, வெங்கடேசன் என்னை ஜெயில்ல போட்டுடுவாரு..." என்றான் கிண்டலாக.
"நெஜமா நீங்க என்னை வெளியில கூட்டிக்கிட்டு போக போறது இல்லையா?"
"நெஜமா தான். அதுவும் இந்த மழையில ஒருத்தரை தேடி கண்டுபிடிக்கிறது ரொம்ப கஷ்டம் மா..."
"அப்படின்னா நம்ம என்ன செய்றது?"
"படுத்து தூங்க வேண்டியது தான்" கட்டிலில் விழுந்து, தன்னை போர்வையால் போர்த்திக் கொண்டான் சித்தார்த்.
"எந்த வேலை டென்ஷனும் இல்லாம, நிம்மதியா தூங்க சான்ஸ் கிடைக்கிறது எல்லாம் ஒரு வாரம் தெரியுமா" என்றான்.
"இப்போ மழை பெய்யுது. நம்ம தூங்கலாம். மழை நின்ன பிறகு, சாயங்காலம் என்னை மெரைன் டிரைவ் கூட்டிட்டு போறீங்களா?"
"அதைப் பத்தி நான் அப்புறம் யோசிக்கிறேன். இப்ப தூங்கு"
அவளும் படுத்துக்கொள்ள, போர்வையின் மறுமுனையை அவளிடம் கொடுத்தான் சித்தார்த். அதை மறுக்காமல் ஏற்றுக் கொண்டு தன்னைப் போர்த்திக் கொண்டாள் ஹரிணி.
தூங்கவேண்டும் என்று திட்டமிட்டது என்னவோ சித்தார்த்த தான். ஆனால் முதலில் தூங்கியது ஹரிணி. குளுகுளுவென்ற காலநிலை, இதமான உணர்வை அளிக்க, நிம்மதியாய் உறங்கி போனாள் ஹரிணி.
அதிஷ்டவசமாய் முன் மாலைப் பொழுதில் மழை ஓய்ந்தது. மெரைன் டிரைவ்க்கு செல்ல அவசரமாய் தயாரானாள் ஹரிணி. சிம்ரனை பார்த்ததால், மெரைன் டிரைவை ரசிக்க அவள் தவறி விட்டாள். இன்று அந்தத் தவறை செய்ய அவள் தயாராக இல்லை. அப்படி ஒரு சந்தர்ப்பம் அவளுக்கு மறுபடி கிடைக்குமோ இல்லையோ... அதுவும் இவ்வளவு குளுமையான தட்பவெப்ப நிலையுடன்...
உள்ளூர நகைத்துக் கொண்ட சித்தார்த்,
"எங்க கிளம்புற?" என்றான் கிண்டலாக, ஜன்னலின் அருகே நின்று வெளியே வேடிக்கை பார்த்தபடி.
நான்கு எட்டில் அவனை அடைந்த ஹரிணி,
"நம்ம (என்பதை அழுத்தி) மெரைன் டிரைவ் போறோம்"
"அப்படியா?" என்றான்.
"ஆமாம். நான் தொலைஞ்சு போயிடுவேன்னு நீங்க ஒன்னும் கவலைப் பட வேண்டியதில்ல"
"ஓ... அப்புறம்?"
"எங்கிட்ட ஒரு ஐடியா இருக்கு. நம்ம அதை ஃபாலோ பண்ணா, நான் நிச்சயம் தொலைஞ்சு போகமாட்டேன்"
"என்ன உங்க ஐடியா?"
"நம்ம இங்கயிருந்து கிளம்பி போய், மறுபடி ரூமுக்கு வந்து சேர்ற வரைக்கும், நான் உங்க கையை விடாம பிடிச்சிக்கிறேன்."
அவன் கைவிரல்களுடன் தன் விரல்களை கோர்த்துக் கொண்டு,
"இப்படி... என்ன சொல்றீங்க? நான் உங்க கைய பிடிச்சுக்கிட்டே இருந்தா, நீங்க என்னை தேட வேண்டியதில்ல, இல்லையா?"
அழகாய் புன்னகைத்தான் சித்தார்த்.
"நம்ம போறோம் தானே?"
சந்தேகமில்லாமல் ஆம் என்று தான் தலை அசைத்தான் சித்தார்த். இவ்வளவு நல்ல சந்தர்ப்பத்தை அவன் நழுவ விட்டு விடுவானா என்ன?
"அப்படி வாங்க வழிக்கு... அது தான் உங்களுக்கும் நல்லது" என்றாள் ஹரிணி.
"அப்படியா?"
"ஆமாம்... நீங்க மட்டும் முடியாதுன்னு சொல்லியிருந்தா, உங்களை டார்ச்சர் பண்ணனும்னு பிளான் பண்ணி இருந்தேன்"
"டார்ச்சரா? எப்படி?"
"கிச்சு கிச்சு மூட்டினா எப்படி இருக்கும் தெரியுமா?"
"கிச்சுகிச்சு வா?" என்று முகத்தை சுருக்கினான்.
ஆமாம் என்று தலையசைத்தாள் ஹரிணி.
"அதெல்லாம் ஒரு டார்ச்சரா?" என்று நக்கலாய் கேட்க,
"இல்லையா?"
"இல்ல... அப்படியெல்லாம் கூட யாராவது டார்ச்சர் பண்ண முடியுமா?"
அவன் எதிர்பாராத விதமாய் அவனை கட்டிலில் பிடித்து தள்ளினாள் ஹரிணி.
தொப்பென்று விழுந்த சித்தார்த்,
"என்ன பண்ற நீ?" என்றான்.
"டார்ச்சர்" என்று கூறிவிட்டு அவனுக்கு கிச்சு கிச்சு மூட்ட துவங்கினாள்.
அந்த அறை முழுவதும் எதிரொலிக்கும் அளவிற்கு சிரிக்க துவங்கினான் சித்தார்த்.
"ஹரிணி... நிறுத்து..."
"இப்படித் தான் இருக்கும்... இப்போ ஒத்துகிறீங்களா?"
"போதும் ஹரிணி"
சிரித்தபடி தன் பணியைத் தொடர்ந்தாள் ஹரிணி. தன்னை சமாளித்துக் கொண்ட சித்தார்த், அவளை பிடித்து தள்ளி விட்டு அவள் கரங்களைப் பற்றிக்கொண்டு, மூச்சு வாங்க அவளைப் பார்த்தான்.
"டார்ச்சர் எப்படி இருந்தது?" என்றாள் ஹரிணி.
"இப்படித் தான் இருந்தது" இன்று அவளுக்கு அவன் கிச்சு கிச்சு மூட்டினான்.
"அய்யய்யோ... என்னை விடுங்க... இது சீட்டிங்... நீங்க இப்படி செய்யக் கூடாது" என்று சிரித்தபடி கத்தினாள் ஹரிணி.
"நான் சீட்டராவே இருந்துட்டு போறேன்"
தன் முழு பலத்தையும் திரட்டி, அவனை பிடித்து தள்ளிவிட்டு, அவன் மீது பாய்ந்து அவனை இறுக்கமாய் கட்டிக்கொண்டாள் ஹரிணி, அவனை கிச்சு கிச்சு மூட்ட விடாமல் தடுத்து. அவளது செயலால் அதிர்ந்த சித்தார்த், தன் செயலை நிறுத்தினான். இருவருக்குமே மூச்சிரைத்தது. தான் என்ன நிலையில் இருக்கிறோம் என்பதை புரிந்துகொள்ள ஹரிணிக்கு சில நொடிகள் தேவைப்பட்டன. அவள் படுத்துக் கொண்டிருப்பது சித்தார்த்தின் மீது. அவளது இதயத்துடிப்பு அதிகரித்தது. சித்தார்த்துடையதும் தான். அவர்கள், ஒருவருக்குள் ஒருவர் தொலைந்து போயிருந்ததால், என்ன செய்கிறோம் என்றே அவர்களுக்குப் புரியவில்லை. ஆனால், நிச்சயம் அவர்களுக்கு விலக வேண்டும் என்ற எண்ணம் இல்லை. கட்டுப்பாட்டை இழந்த சித்தார்த்தின் கரங்கள், ஹரிணியை தழுவிக்கொண்டன. அந்த தழுவல் தந்த உணர்வை பொறுக்க மாட்டாமல் அவன் தோளில் முகம் புதைத்தாள் ஹரிணி. சற்று முன்பு, ஒருவருக்கு ஒருவர் ஏற்படுத்திக்கொண்ட கிச்சு கிச்சு உணர்வு, இப்பொழுது வேறுவிதமாய் அவர்களுக்குள் கிளர்ந்தெழுந்தது. அவள் கன்னத்துடன் தன் கன்னத்தை மெல்ல வருடினான் சித்தார்த். ஆதாரமாய் அவன் தோள்களைப் பற்றிக் கொண்ட ஹரிணி, மெல்ல தன் தலையை உயர்த்தி, மயக்கநிலையில் அவனை பார்த்தாள். சித்தார்த் கனவிலும் நினைக்காத வண்ணம் அவனுக்கு அதிர்ச்சியை வழங்கி, தன் இதழ்களை அவன் இதழ்களுடன் உறவாட விட்டு, அவன் உடலில் அதிர்வலைகளை ஏற்படுத்தினாள் ஹரிணி. அந்த செயல் தந்த தைரியத்தால், தன் மீது இருந்த அவளை கட்டிலில் கிடத்தி, அவள் செயலை தானும் முன்னெடுத்தான்.
தாங்கள் ஒருவர் மீது ஒருவர் கொண்ட காதலை வெளிப்படுத்த கிடைத்த அந்த தருணத்தில், இருவருமே சமமாய் பங்கு பெற்றார்கள். அந்த முதல் முத்தம் நீண்டுகொண்டே இருந்தது. அவர்கள் தங்களது சுய நினைவில் இல்லை என்று நம்மால் கூற முடியாது. அப்படியே இல்லாவிட்டாலும், இடையில் அவர்கள் நிச்சயம் சுயநினைவு பெற்று தான் இருக்க வேண்டும். தனது செயலை முதலில் நிறுத்தியது ஹரிணி தான். ஆனால் சித்தார்த் மட்டும் நிறுத்த மனமில்லாமல் தொடர்ந்து கொண்டிருந்தான். தன்னைப் போலவே சித்தார்த்தும் பாதிப்படைந்து இருக்கிறான் என்பதை புரிந்துகொண்டாள் ஹரிணி. அவள் சந்தோஷம் அடைந்தாள் என்று கூற வேண்டிய அவசியம் இல்லை. அவள் அமைதி அடைந்து விட்டதை உணர்ந்த சித்தார்த், அவள் கண்களை மூடி படுத்திருப்பதை பார்த்து, எச்சில் விழுங்கினான். அவளுக்கு முதுகைக் காட்டியபடி எழுந்து அமர்ந்தான். ஹரிணியும் எழுந்து அமர்ந்தாள். சூழ்நிலை இருவருக்குமே சங்கடத்தை அளித்தது என்று கூற வேண்டிய அவசியம் இல்லை. அது உணர்ச்சிக்கு ஆட்பட்டு நிகழ்ந்துவிட்ட நிகழ்வு. ஒருவர் மற்றொருவரின் மீது கொண்டுள்ள காதலை வெளிப்படுத்துவதற்கு முன்பு, தங்களுக்கு இடையில் ஏற்பட்ட அருகாமையில் தங்களை இழந்ததால் நிகழ்ந்த விபத்து. அந்த சூழ்நிலை அவர்களுக்கு சங்கடத்தை தந்தாலும், இந்த உறவு முறையை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லலாம் என்ற தைரியத்தையும் அவர்களுக்கு வழங்கியது என்பது மறுக்க முடியாத உண்மை.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top