23 கோப வெடிப்பு
23 கோப வெடிப்பு
சிம்ரனின் பெயரை கூறி அழைத்தபடி அந்த காருக்கு பின்னால் ஓடினாள் ஹரிணி. அவள் தங்களது காரை துரத்திக் கொண்டு ஓடி வருவதை, காரின் ஓட்டுனர் ரியர்வியூ கண்ணாடியின் வழியாக கவனித்தார்.
"அந்த பொண்ணு உங்களுக்கு வேண்டப்பட்டவங்களா?" என்றார் சிம்ரனிடம் மராத்தியில்.
பின்னால் திரும்பி ஹரிணியை பார்த்த சிம்ரனுக்கு, அவள் யாரென்று அடையாளம் தெரியவில்லை. ஆனால், *சிம்ரன்* என்ற அவளுடைய உதட்டசைவிலிருந்து அவள் தன்னைத் தான் அழைக்கிறாள் என்று அவளுக்கு புரிந்தது.
"காரை நிறுத்துங்க" என்றாள்.
ஓட்டுனர் காரை நிறுத்தவும், ஹரிணி அங்கு வந்து சேரவும் சரியாய் இருந்தது.
"நீங்க யாரு, எதுக்காக என்னை துரத்திக்கிட்டு வரீங்க?" என்றாள் சிம்ரன் ஹிந்தியில்.
"நீங்க சிம்ரன் தானே?" என்றாள் மூச்சுவாங்க ஹரிணி.
"ஆமாம்" என்றாள் யோசனையுடன் சிம்ரன்.
"நான் ஹரிணி, ஷிவானியோட சிஸ்டர்"
"வாவ்... காட் டேம்... நான் எப்படி உன்னை மறந்தேன்? மை குட் நஸ்..." சந்தோஷமாய் அவளை தழுவிக் கொண்டாள் சிம்ரன்.
"உன்னுடைய கிறுக்கு அக்கா எப்படி இருக்கா? அவளுடைய கல்யாண வாழ்க்கை எப்படி போய்க்கிட்டிருக்கு?"
"அவ உயிரோட இல்ல... இறந்துட்டா"
அதை கேட்ட சிம்ரன், நம்ப முடியாத புன்னகையை உதிர்த்தாள்.
"ஏய்... நீ ரொம்ப விளையாட்டுத்தனமா இருப்பேன்னு ஷிவானி சொல்லியிருக்கா. ஆனா, இது விளையாடுற விஷயமில்ல" என்றாள் அவள் கூறியதை நம்பாமல்.
"இந்த விஷயத்துல நான் விளையாடுவேன்னு நீங்க நினைக்கிறீங்களா?" அவள் கண்ணில் கண்ணீர் ததும்பியதால் சிம்ரனின் முகம் மங்கலாய் தெரிந்தது.
"ஆனா எப்படி?" என்றாள் அவளது தோள்களைப் பற்றிக் கொண்டு சிம்ரன்.
"சூசைட் பண்ணிக்கிட்டா"
தன் தலையில் அடித்துக்கொண்டு, மெரைன் டிரைவின் சுவற்றின் மீது அமர்ந்து, தன் முகத்தை மூடி அழத் துவங்கினாள் சிம்ரன்.
"அவ இப்படி பண்ண என்ன காரணம் இருக்க முடியும்னு உங்களுக்கு தெரியும் தானே?"
தெரியும் என்பது போல் தலையசைத்தாள் சிம்ரன்.
"ஷீலாவோட கல்யாணத்தை சாக்கா வச்சுக்கிட்டு, அதை பத்தி தெரிஞ்சுக்கத் தான் நான் டெல்லியில் இருந்து மும்பைக்கு வந்திருக்கேன். ஷீலா என்கிட்ட பாதி கதையை தான் சொன்னாங்க. என்கிட்ட பேச அவங்களுக்கு நேரம் கிடைக்கல. நீங்களாவது எனக்கு சொல்லுங்க. ஷிவானியோட வாழ்க்கையில அப்படி என்ன தான் நடந்தது? விகாஸ்ஸோட கிளினிக்ல, அவருக்கு பதிலா அன்னைக்கு இருந்தது யாரு? தயவு செய்து சொல்லுங்க" சிம்ரனின் கையைப் பிடித்துக்கொண்டு கெஞ்சினாள் ஹரிணி.
"அன்னைக்கு விகாஸ் கிளினிக்ல இருந்தது அவருடைய அம்மா"
"அம்மாவா?"
"ஆமாம். அவங்களுடைய காதல் விஷயத்தை தெரிஞ்சுகிட்டு, ஷிவானியை சந்திக்க, விகாஸை வேற வேலையா எங்கயோ அனுப்பிட்டு, அவருக்கு தெரியாம அவங்க அங்க வந்திருந்தாங்க. விகாஸுடைய வாழ்க்கையிலிருந்து போயிட சொல்லி, ஷிவானிகிட்ட சொன்னாங்க."
"ஆனா ஏன்?"
"ஏன்னா, விகாஸோட அப்பாவுடைய ஃப்ரெண்டு தான், அவர் டாக்டருக்கு படிக்க ரொம்ப ஹெல்ப் பண்ணாராம். அவருடைய மகளைத் தான் விகாஸ் கல்யாணம் பண்ணிக்கணும் அப்படிக்குறது அவங்க அம்மாவுடைய விருப்பம்"
"இதைப் பத்தி ஷிவானி, விகாஸ்கிட்ட பேசலயா?"
"அதைப் பத்தி விகாஸுக்கு தெரியக் கூடாதுன்னு அவங்க அம்மா, ஷிவானிகிட்ட சத்தியம் வாங்கிட்டாங்க"
"அவ எதுக்காக அதுக்கு ஒத்துக்கிட்டா?"
"வேற என்ன செய்வா? விகாஸுக்கு அவங்க அம்மா மேல ரொம்ப பிரியம்னு ஷிவானிக்கு நல்லா தெரியும். அப்பா இல்லாத விகாஸை அவங்க தான் ரொம்ப கஷ்டப்பட்டு படிக்க வச்சாங்க. அந்த சம்பவத்துக்குப் பிறகு ரொம்ப உடைஞ்சு போயிட்டா ஷிவானி. மூணு நாளில் எங்களுக்கு காலேஜ் முடிஞ்சிடுச்சு. விகாஸை சந்திக்காமலேயே அவ டெல்லிக்கு வந்துட்டா. இங்கயிருந்த மூணு நாளும் அவ எப்படி அழுதா தெரியுமா? விகாஸை அவ பைத்தியக்காரத்தனமா காதலிச்சா. அவர் இல்லாத வாழ்க்கையை அவ நினைச்சுக் கூட பார்த்ததில்ல. அதனால தான், கல்யாணத்துக்கு முன்னாடியே, தன்னையே அவருக்கு கொடுத்தா"
அதைக் கேட்ட ஹரிணி அதிர்ந்தாள். பூமியே அவள் காலுக்கு கீழிருந்து நழுவுவது போல் இருந்தது அவளுக்கு. அவளுடைய அதிர்ச்சி நிறைந்த முகத்தை பார்த்து தான், தான் தவறு செய்து விட்டோம் என்பதை உணர்ந்தாள் சிம்ரன்.
"நீங்க என்ன சொன்னீங்க?"
"நான்... வந்து... " தடுமாறினாள் சிம்ரன்.
"அவ அந்த அளவுக்கா போனா? எப்படி அவளால அது முடிஞ்சுது?"
"அவரை அவள் உயிருக்குயிரா காதலிச்சா"
"மண்ணாங்கட்டி... எங்க அப்பா அவளை எவ்வளவு கண்மூடித்தனமா நம்பினார்னு உங்களுக்கு தெரியுமா? கல்யாணத்தை பத்தி எங்க அப்பா பேசும் போது, அவ வாயை கூட திறக்கல. இப்படி ஒரு காரியத்தை பண்ணிட்டு, எப்படி இன்னொருத்தரை கல்யாணம் பண்ணிக்க அவளுக்கு தைரியம் வந்தது?"
"முடியாதுன்னு சொல்ல அவளுக்கு வழி இருந்ததா? அவளுடைய காதல் ஈடேற வாய்ப்பே இல்லன்னு தெரிஞ்ச பிறகு, அவ வேற என்ன தான் செய்ய முடியும்? உங்க அப்பா மேல அவளுக்கு எவ்வளவு பயம் இருந்ததுன்னு உனக்கு தெரியாதா?"
"அப்புறம் எதுக்காக தற்கொலை பண்ணிக்கணும்?" என்றாள் காட்டமாக. சிம்ரன் கூறிய எந்த ஒரு சாக்கையும் அவளால் ஏற்கவே முடியவில்லை. தங்களது குடும்ப கௌரவத்தை ஷிவானி இப்படி குழிதோண்டி புதைப்பாள் என்பதை அவள் கனவிலும் நினைத்திருக்கவில்லை.
"கோவப்படாத ஹரிணி. உங்க அப்பா சொன்னதுக்காக தான் அவ கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டிருப்பா. ஆனா, தன்னோட புருஷனுக்கு துரோகம் செய்ய மனசு வராம தான் அவர் தற்கொலை பண்ணியிருக்கணும்."
"அப்போ, அவ புருஷனோட நிலைமை? இதுல அவருடைய தப்பு என்ன இருக்கு? அவளுடைய சுயநலத்துக்காக எதுக்காக அவருடைய வாழ்க்கையை நாசம் பண்ணனும்? அவருக்கு உணர்வுகள் இல்லையா? ஷிவானி இவ்வளவு சுயநலவாதியா இருப்பான்னு நான் நினைச்சு கூட பாக்கல."
அவளுக்கு பதில் கூற முடியாமல் திணறினாள் சிம்ரன். ஹரிணி கூறுவதில் தவறு ஒன்றும் இல்லையே...!
"உங்ககிட்ட விகாஸ் போட்டோ இருக்கா?"
தயங்கி நின்றாள் சிம்ரன்.
"எங்க அக்காவை , எல்லாத்தையும் மறக்க வச்சி, அவ்வளவு தூரம் உருகி காதலிக்க வச்சவரை பாக்கணும்னு நான் ஆசைப்படுறேன்."
தன்னுடைய கைபேசியை எடுத்து, அதில் ஷிவானியுடன் விகாஸ் இருந்த புகைப்படத்தை காட்டினாள் சிம்ரன். அந்த புகைப்படத்தில் வெகு சந்தோஷமாக சிரித்துக் கொண்டிருந்தாள் ஷிவானி. அதை பார்த்தவுடன் ஹரிணியின் கண்கள் அனிச்சையாய் கலங்கியது. ஷிவானி டெல்லிக்கு திரும்பியபின், இந்த சிரிப்பை, அவளிடம் ஹரிணி பார்க்கவே இல்லை.
"கூல் டவுன் ஹரிணி... இந்த விஷயத்தை அவளுடைய இடத்துல நின்னு பாரு. காதல் யாரை வேணும்னாலும் மாத்தும். ஷிவானியும் அதுக்கு விதிவிலக்கு இல்ல. விகாஸ் ரொம்ப நல்லவரு. அவருடைய அமைதியான, மரியாதையான சுபாவம் தான், அவர்கிட்ட அவளுக்கு அதீதமான காதலை ஏற்படுத்திச்சி. நீயும் ஒருத்தரை உண்மையா காதலிக்கும் போது, உனக்கும் அதனுடைய ஆழம் புரியும்"
தன் தொண்டையை அடைத்த ஏதோ ஒன்றை படாதபாடுபட்டு விழுங்கினாள் ஹரிணி.
"உங்களுடைய இன்ஃபர்மேஷனுக்கு ரொம்ப நன்றி"
"என்னோட வீட்டுக்கு வந்துட்டு போயேன் ஹரிணி"
"பரவாயில்ல இருக்கட்டும். நான் போகணும்... பை..."
தான் சித்தார்த்தை விட்டுவிட்டு வந்த இடத்தை நோக்கி நடக்கத் தொடங்கினாள் ஹரிணி. எதைப் பற்றியும் யோசிக்கும் நிலையில் அவள் இல்லை. ஷிவானி, அவள் மனதில் ஏற்படுத்தியிருந்த ரணத்தை அவளால் தாங்க முடியவில்லை. ஷிவானி எவ்வளவு சுயநலவாதி...! ஒருவரை காதலித்து, அவருக்கு தன்னையும் கொடுத்த பின், வேறு ஒருவரை மணந்து கொண்டு, பிறகு யாரைப் பற்றியும், எதைப் பற்றியும் யோசிக்காமல் தற்கொலை செய்து கொண்டு விட்டாள். அவளுக்கு, அவ்வளவு உறுத்தல் இருந்திருந்தால், எதற்காக சித்தார்த்தை மணந்து கொள்ள வேண்டும்? விகாஸ் மீது எவ்வளவு காதல் இருந்திருந்தால், அவர் இடத்தில் வேறு ஒருவரை வைத்து பார்க்க அவளுக்கு விருப்பமில்லை என்றால், திருமணத்திற்கு முன்பே அவள் ஏன் தற்கொலை செய்து கொள்ளவில்லை? அவர்களுடைய அப்பாவுக்கு இந்த விஷயம் தெரிந்தால், எப்படி அவர் இதை தாங்கிக் கொள்ளப் போகிறார்?
இந்த விஷயத்தில், அனைத்தையும் ஒட்டு மொத்தமாய் இழந்தது சித்தார்த் தான். எந்த தவறும் செய்யாத அவருக்கு ஏன் இவ்வளவு பெரிய தண்டனை? எவ்வளவு சந்தோஷமாய் ஷிவானியுடன் தனது வாழ்க்கையை அவர் தொடங்கி இருப்பார்? நல்ல வேலை, கடவுளின் அருளால், அவர் இரண்டாவது திருமணத்திற்கு ஒப்புக் கொண்டார்.
அதன் பிறகு ஷிவானியை பற்றி சிந்திக்க ஹரிணி தயாராக இல்லை. அவளைப் பற்றி யோசிக்கவே கூடாது என்று முடிவெடுத்தாள். சித்தார்த் ஒருவன் தான் இங்கு ஆலோசிக்க பட வேண்டியவன்.
அப்பொழுது தான், அவனிடம் ஒன்றுமே கூறாமல், அவனை அம்போவென்று விட்டு விட்டு வந்தது அவளுக்கு நினைவுக்கு வந்தது. அவன் கேட்டால், என்ன பதில் கூறுவது? எங்கு சென்றதாக கூறுவது? ஷிவானியை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில், சிம்ரனை பார்த்தவுடன், அவனை மறந்துவிட்டாள் ஹரிணி. தலையில் அடித்துக் கொண்டாள். பக்கத்தில் ஒருவர் கடலை விற்றுக்கொண்டிருந்ததை கவனித்தாள். அதை வாங்கிக் கொண்டு விரைந்தாள்.
இதற்கிடையில்,
அவளைக் காணாமல் பரிதவித்து போனான் சித்தார்த். மெரைன் டிரைவ் முழுவதும், பைத்தியம் பிடித்தவனை போல, இங்கும் அங்கும் ஓடி, அவளைத் தேடிக் கொண்டிருந்தான். அவளைக் காணாமல் அவனுக்கு மூச்சே நின்றுவிடுவது போலிருந்தது. அவள் எங்கு போனாள் என்று அவனுக்கு புரியவில்லை. சிறிது நேரத்திற்கு முன்பு இங்கு தானே இருந்தாள்? இயலாமையில் அவனது கண்கள் கலங்கின. அவளுக்கு என்ன நிகழ்ந்ததோ... அவனது மனம் நினைக்கக் கூடாததையெல்லாம் நினைத்தது.
அப்பொழுது, கடலையை வாங்கிக் கொண்டு அவள் வருவதை கண்டான் சித்தார்த். கோபத்துடன் அக்னி பந்தைப் போல் அவளை நெருங்கி வந்தான்.
"எங்க போன நீ?" என்ற அவனது குரல், அரபிக்கடலின் அலை ஓசையை மீறி எழும்பியது.
அவன் கோபத்தை பார்த்து மிரண்டாள் ஹரிணி.
"கடலை வாங்கப் போனேன்... " என்றாள் பயத்துடன்.
பல்லைக் கடித்தபடி அவள் கையிலிருந்த கடலை பொட்டலத்தை தட்டிவிட்டு,
"பைத்தியமா உனக்கு? நான் எதுக்கு இருக்கேன்? என்கிட்ட சொல்லாம நீ எப்படி போவ? நீ இங்க இல்லைன்னதும் நான் எப்படி தவிச்சி போனேன்னு உனக்கு தெரியுமா? உனக்கு என்ன ஆச்சோ, ஏது ஆச்சோன்னு பைத்தியம் பிடிச்ச மாதிரி இங்க அலைஞ்சிகிட்டு இருக்கேன்... உனக்கு ஏதாவது ஆகியிருந்தா, எப்படி நான் அதை தாங்குவேன்?" அவள் தோளைப் பற்றி கோபமாய் உலுக்கினான் சித்தார்த்.
அவனது கோப வெடிப்பை கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டு நின்றாள் ஹரிணி, தான் காண்பது கனவா என்ற எண்ணத்துடன்.
அவளுக்கு மேலும் அதிர்ச்சியும், ஆச்சரியமும் அளிக்கும் வண்ணம், அவளை இறுக்கமாய் அணைத்துக் கொண்டான் சித்தார்த்.
"இன்னொரு தடவை இப்படி செய்யாதே... என்னை விட்டுட்டு போகணும்னு நினைக்காத..."
என்ன நடக்கிறது என்றே புரியவில்லை ஹரிணிக்கு. என்ன இது? காதலியை காணாமல் துடிக்கும் காதலனை போல் அல்லவா இவர் நடந்து கொள்கிறார்? அவளுக்கு அது இரட்டிப்பு சந்தோஷமாய் தான் இருந்தது என்றாலும், அவளுக்கு எதையும் புரிந்து கொள்ள முடியவில்லை. மெல்ல அவனது தோள்களை சுற்றி வளைத்துக் கொண்டாள்.
"ஐ அம் சாரி... நான் அப்படி செஞ்சிருக்க கூடாது. இனிமே அப்படி செய்ய மாட்டேன்... ப்ராமிஸ்" என்றாள்.
நிம்மதிப் பெருமூச்சு விட்டு அவளிடமிருந்து பின்வாங்கினான் சித்தார்த்.
"நீங்க நார்மல் ஆயிட்டீங்க இல்ல?"
"ஆயிடுவேன்"
*ஆயிடுவேன்* என்று அவன் கூறினான் என்றால், அவன் நார்மல் ஆகவில்லை என்று தானே அர்த்தம்? வருத்தமாக இருந்தது ஹரிணிக்கு.
"போகலாம்" என்றான் சித்தார்த்.
"நீங்க ஏதாவது குடிக்கணும்னு நினைக்கிறேன். உங்களுடைய தொண்டை வரண்டு போயிருக்கு" என்றாள் ஹரிணி தயக்கத்துடன்.
எங்கோ பார்த்துக்கொண்டு, ஆமாம் என்று தலையசைத்தான் சித்தார்த். அருகில் இருந்த பழச்சாறு கடைக்கு அவனை இழுத்துச் சென்ற ஹரிணி, அவனுக்கு பிடித்த ஆரஞ்சு ஜூஸை ஆர்டர் செய்தாள்.
தன் கை விரல்களை ஒன்றாக கோர்த்து கொண்டு, கீழே பார்த்தபடி அமர்ந்திருந்தான் சித்தார்த். அவனுடைய பதற்றம் இன்னும் குறையவில்லை என்று நன்றாகவே தெரிந்தது. பழச்சாறு தம்ளரை அவனை நோக்கி நீட்டினாள் ஹரிணி. அதை வாங்கி ஒரே மடக்கில் குடித்து முடித்து விட்டு எழுந்தான் சித்தார்த்.
அவன் அப்படி இறுக்கமாய் இருந்தது, அவளைத் தடுமாற செய்தது. அவன் கோபமாக இருக்கிறான். அவள் அவனிடம் சொல்லாமல் போனாள் என்பதற்காக அல்ல. அவளுக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்ற பயத்தினால்...! ஹரிணி நினைத்தது போலவே, அவர்கள் ஹோட்டல் அறைக்கு வந்து சேரும் வரை அவன் அவளிடம் பேசவில்லை. இரவு உணவை பற்றி யோசிக்காமல், கட்டிலில் சென்று படுத்துக்கொண்டு கண்களை மூடிக்கொண்டான். அவன் அருகில் தயக்கத்துடன் அமர்ந்தாள் ஹரிணி.
"ப்ளீஸ், சாப்பிடாம தூங்காதீங்க"
தன் கையை நெற்றியின் மீது வைத்துக்கொண்டான் சித்தார்த்.
"என்னங்க" அவனைப் பிடித்து உலுக்கினாள்.
கட்டிலின் மீது எழுந்து அமர்ந்தவன், அவளைப் பார்க்கவே இல்லை. அவன் முகத்தை தன்னை நோக்கி திருப்பினாள் ஹரிணி.
"என்கிட்ட பேச மாட்டீங்களா?"
பதில் கூறாமல் கண்களை மூடிக்கொண்டான் சித்தார்த்.
"ஐ அம் சாரி"
அப்பொழுதும் அமைதியாய் இருந்தான்.
"நீங்க என்கிட்ட பேசாம இருந்தா, நான் அழுவேன். நான் அழுதா உங்களால நிம்மதியா தூங்க முடியாது. என்னோட அழுகையை குறைச்சு எடை போடாதீங்க. நான் அழற சத்தம் ரொம்ப கேவலமா இருக்கும்."
உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான் சித்தார்த்.
"நான் காதுல பஞ்சு வச்சுக்குவேன்" என்றான் சித்தார்த் மேலே பார்த்தபடி.
"ஆங்... அப்படின்னா நான் அழுதா உங்களுக்கு கவலை இல்லையா?" என்றாள் சோகமாக.
"என்னை பத்தி நீ கவலைபட்டியா? எப்படி என்னை விட்டுட்டு நீ போகலாம்? இந்த சொசைட்டி எவ்வளவு மோசமா மாறிக்கிட்டு இருக்குன்னு உனக்கு தெரியாதா? நான் என்ன நினைக்கிறது? நான் எப்படிப்பட்ட நிலையில இருந்தேன்னு உனக்கு தெரியுமா?"
"பக்கத்துல தான் கடலை வாங்க போனேன்"
"அப்போ தானே என்கிட்ட பேல் பூரி வேணும்னு கேட்டே? அதுக்குள்ள உனக்கு கடலை சாப்பிட ஆசை வந்துடுச்சா? ஒரு அஞ்சு நிமிஷம் வெயிட் பண்ணியிருந்தா, நானே வாங்கி கொடுத்து இருப்பேன்ல...?"
ஹரிணியின் முகம் தொங்கிப் போனது அவளுக்கு என்ன சாக்குப்போக்கு சொல்லி சமாளிப்பது என்று புரியவில்லை.
அப்பொழுது கதவு தட்டும் சத்தம் கேட்டது. வந்திருந்தது ரூம் சர்வீஸ். அவர்களுக்கு இரவு உணவு வந்தது. அதை சாப்பிட ஆர்வம் காட்டவில்லை சித்தார்த். அந்த சாப்பாட்டை, கையில் எடுத்து சித்தார்த்தின் வாய் அருகே கொண்டு சென்றாள் ஹரிணி. சித்தார்த்துக்கு ஆச்சரியம் தாங்கவில்லை.
"எனக்கு ரொம்ப பசிக்குது. நீங்க சாப்பிட்டா தான் நானும் சாப்பிடுவேன்" என்றாள் முகத்தை சோகமாய் வைத்துக்கொண்டு.
வெளியே முறைப்புடனும், உள்ளுக்குள் நகைப்புடனும் அதை சாப்பிட்டான் சித்தார்த். ஹரிணி வலிய வந்து ஊட்டி விடும் பொழுது அதை வேண்டாம் என்று கூற அவன் என்ன முட்டாளா? ஏதோ, ஹரிணி கட்டாய படுத்துவதால் தான் சாப்பிடுகிறான் என்பது போல, பாவனை செய்து கொண்டு சாப்பிட்டான். அப்பொழுது தானே அவளே முழுவதுமாய் அவனுக்கு ஊட்டி விடுவாள்? அவன் சகஜமாய் இருப்பது போல் காட்டிக் கொண்டால், அவனையே சாப்பிட சொல்லி விட்டால் என்ன செய்வது? ஆனால் அப்படிப்பட்ட எந்த யோசனையும் ஹரிணிக்கு இருக்கவில்லை. அவனுடைய கோப வெடிப்பை பார்த்து, அவளுக்குள் ஒரு புதிய உத்வேகம் தோன்றியிருந்தது. அவர்களுக்குள் இருக்கும் இடைவெளியை அழிப்பது ஒன்றும் கடினமாக இருக்காது என்ற நம்பிக்கை பிறந்திருந்தது. சித்தார்த்தின் வாழ்வில் ஷிவானி ஏற்படுத்திவிட்டு சென்ற வெற்றிடத்தை நிரப்ப வேண்டும் என்ற ஒரே குறிக்கோள் மட்டும் தான் அவள் எண்ணத்தில் இருந்தது. அதனால் கிடைத்த சந்தர்பத்தை நழுவ விட அவள் தயாராக இல்லை. சந்தோஷமாய் அவனுக்கு ஊட்டி விட்டுக் கொண்டிருந்தாள்.
"பசிக்குதுன்னு சொன்ன இல்ல? நீயும் சாப்பிடு" என்றான்.
சரி என்று தலையசைத்துவிட்டு, அவனுக்கு ஊட்டி விட்டுக் கொண்டே தானும் சாப்பிட துவங்கினாள் ஹரிணி. அவள் மீது கோபப்பட்டதற்காக வருத்தம் அடைந்திருந்தான் சித்தார்த். ஆனால் இப்பொழுது நடப்பதை பார்த்தால், அவனுடைய கோபத்திற்கு நல்ல பலன் இருக்கிறது போல் தெரிகிறது, என்று நினைத்து சிரித்துக் கொண்டான் சித்தார்த்.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top