37 யூகதிற்க்கு அப்பாற்பட்டவன்

37 யூகத்திற்கு அப்பாற்பட்டவன்

துர்காவுக்கு பதட்டம் அதிகரித்துக் கொண்டே சென்றது. சக்தி தனக்கு ஃபோன் செய்து, ருத்ரன் அவளை எங்கு கொண்டு சென்றான் என்று கூறுவாள் என எதிர்பார்த்திருந்தாள். அவளிடமிருந்து எந்த அழைப்பும் வராமல் போகவே, அவளுக்கு பயம் ஏற்பட்டது. சக்தியின் நிலைமை என்ன? அவளை ருத்ரன் எங்கே அழைத்துச் சென்றான்? சக்தி தங்களுக்கு ஃபோன் செய்யும் விஷயம் ருத்ரனுக்கு தெரிந்து விட்டதோ? அவர்களுக்கிடையில் என்ன நடந்ததோ தெரியவில்லையே... ருத்ரன், சக்தியின் மீது கோபப்படாமல் இருக்க வேண்டுமே...! அவனது கோபம், அவனை சுற்றி இருக்கும் பொருட்களை மட்டும் உடைப்பதில்லை... அவனை சேர்ந்தவர்களின் மனதையும் உடைத்துவிடும். அவன் அடுத்து என்ன செய்யப் போகிறான் என்பதை யாராலும் கணிக்க முடியாது. அவனது புத்தி எந்த திசையில் பயணிக்கும் என்பது மற்றவரின் யூகத்திற்கு அப்பாற்பட்டது.

"என்னாச்சு துர்கா?" என்றான் பரமேஸ்வரன்.

"நான் சக்தியை பத்தி யோசிச்சுக்கிட்டு இருக்கேன். புது இடத்துக்கு போனதுக்கு பிறகு, அவங்க எனக்கு கால் பண்ணுவாங்கன்னு நினைச்சேன்..."

"சரியான சந்தர்ப்பம் கிடைக்கும் போது அவங்க உனக்கு நிச்சயம் கால் பண்ணுவாங்க. அவங்க நிலைமை என்னன்னு நமக்கு தெரியாது இல்லையா...? ஒருவேளை அவங்க இருக்கிறது எந்த இடம்னு அவங்களுக்கே தெரியலையோ என்னவோ...!"

"அது தான் எனக்கு ரொம்ப கவலையா இருக்கு. அவங்க எங்க இருக்காங்கன்னு தெரியல. தான் ஒரு புது இடத்தில இருக்கிறதை பார்த்து, சக்தி என்ன செய்யப் போறாங்களோ தெரியல" என்றாள் கவலையாக.

"நீ சொல்றதும் சரி தான். மச்சானுக்கு தான் யாரும் தன்னை கேள்வி கேட்டா பிடிக்காதே..." என்றான்.

"அதுக்காக, சக்தி அவனை கேள்வி கேட்காம இருக்கணும்னு நம்ம எதிர்பார்க்க முடியாது இல்லையா?"

"அவங்க கொஞ்சம் கூட கற்பனை பண்ண முடியாத விஷயமெல்லாம் நடந்தா, அவங்களால கேள்வி கேட்காம எப்படி இருக்க முடியும்?" பெருமூச்சு விட்டான் பரமேஸ்வரன்.

"சிவா என்ன சொன்னான்?"

"அவரு தன் கிட்ட இருக்கிற எல்லா சோர்ஸையும் யூஸ் பண்ணி,  ருத்ரனை ரொம்ப சின்சியரா தேடிக்கிட்டு இருக்காரு"

"நல்ல காலம், நமக்கு ஹெல்ப் பண்ண சிவா இருக்கான். இல்லனா, யாருமே ருத்ரன் கிட்ட நெருங்க முடியாது"

"ஆமாம், ருத்ரனை எப்படி பிடிக்கணும், அவரை எப்படி தன் கண் பார்வையில வச்சுக்கணும்னு சிவாவுக்கு மட்டும் தான் தெரியும்"

"சிவா அவனை சீக்கிரம் கண்டுபிடிச்சிடுவான்னு நம்புறேன்"

"ம்ம்ம்ம்"

.......

ஓசூர்

ஓசூரில் இருந்த வட்டாட்சியர் அலுவலகத்தின் வாசலில் நின்று கொண்டிருந்தான் உமாபதி. அவனை நோக்கி ஒருவன் ஓடி வந்தான்.

"சார், நான் தான் உங்ககிட்ட சொன்னனே, நீங்க கேட்ட விபரத்தை சாயங்காலம் தான் கொடுக்க முடியும்னு... அப்புறம் ஏன் சார் இங்க வந்து நிற்கிறீங்க?" என்றான் இங்கும் அங்கும் பார்த்தபடி.

"எத்தனை மணிக்கு கொடுக்க முடியும்?" என்றான் உமாபதி.

"நிச்சயமா ஆறு மணிக்கு மேல தான் சார் கொடுக்க முடியும். அப்ப தான் ஆஃபீஸ்ல ஆளுங்க குறைச்சலா இருப்பாங்க. அப்ப தான் நீங்க கேட்ட தகவலை என்னால் எடுக்க முடியும்"

"சரி, அப்படின்னா நான் ஆறு மணிக்கு மேல வரேன். நான் சொன்னது ஞாபகம் இருக்கட்டும் எனக்கு ஓசூர் டவுன் டீடைல் தேவையில்ல. அவுட்டர் ஓசூர் விவரம் தான் வேணும்"

"சரிங்க சார். நீங்க சொன்னதை நான் மறக்கல"

"கொஞ்சம் சீக்கிரமா செய்ய முயற்சி பண்ணுங்க"

"நீங்க தங்கி இருக்கிற ஹோட்டலுக்கு நானே நேர்ல வரேன் சார். நீங்க இங்க மறுபடி வர வேண்டாம். இங்க வேலை செய்றவங்க எல்லாம் ரொம்ப ஷார்ப். சுலபமா விஷயத்தை மோப்பம் பிடிச்சுருவாங்க"

"சரி" அங்கிருந்து கிளம்பினான் உமாபதி.

அவன் வட்டாட்சியர் அலுவலகத்தை விட்டு வெளியே வந்த போது, அவனுக்கு சிவாவிடமிருந்து அழைப்பு வந்தது.

"சொல்லு மச்சான்"

"உமா, உனக்கு நான் ஒரு பொண்ணோட போட்டோ அனுப்பி இருக்கேன். இப்போ ருத்ரன் கூட இருக்கிற பொண்ணு அப்படியே அச்சு அசலா அந்த பொண்ணு மாதிரியே இருப்பாங்க. அவங்க பேரு சக்தி"

"சரி பார்க்கிறேன். நான் ஓசூர் வந்துட்டேன். ஓசூருக்கு வெளியில இருக்கிற வீடுகளுடைய டீடைல்ஸ் கிடைக்க காத்துக்கிட்டு இருக்கேன்" 

"அவுட்டர்ல இருக்கிற வீடுகளுடைய டீடைல்ஸ்சா?  ஆனா ஏன்?"

"உங்க அண்ணன் கூட்ட நெரிசல் இருக்குற ஏரியாவுல இருப்பாருன்னு எனக்கு தோணல. அவரு நிச்சயம் ஏதோ ஒரு தனி பங்களாவில் தான் இருக்கணும்"

"எப்படி சொல்ற?"

"அவரு தன் பொண்டாட்டி கூட ஓடிப் போயிருக்காரு. அப்படின்னா, எந்த டிஸ்டர்பன்ஸும் இல்லாம நிம்மதியா இருக்கணும்னு நினைப்பாரு. டவுனுக்குள்ள இருந்தா, நிச்சயம் ஜனங்களுடைய கவனம் அவர் மேல திரும்பும். தங்களுடைய ஏரியாவுக்கு புதுசா வந்திருக்கிறவங்களை பத்தி விசாரிச்சு தெரிஞ்சுக்கணும்னு ஜனங்க விருப்பப்படுவாங்க. அது உங்க அண்ணனுக்கு பிரச்சனையை கொடுக்கும். இதையெல்லாம் அவாய்ட் பண்றதுக்காக அவர் நிச்சயம் தனியா, சிட்டியை விட்டு வெளியே தான் இருப்பாரு"

"எக்ஸலண்ட்..."

"நான் ருத்ரன் சாரை தேடி கண்டுபிடிச்ச பிறகு உனக்கு ஃபோன் பண்றேன்"

"ஓகே "

அழைப்பை துண்டித்தான் உமாபதி. திருப்தி புன்னகை சிந்தினான் சிவா. உமாபதி கூறுவது சரி தான். ருத்ரன் நிச்சயம் மக்கள் நெருக்கம் நிறைந்த இடத்தில் இருக்க விரும்ப மாட்டான். அவனது வசீகரம், மக்களின்  கவனத்தை எளிதில் அவன் பக்கம்  ஈர்த்துவிடும். ஒருவேளை, அவன் அதை செய்யாவிட்டாலும், அவன் வைத்திருக்கும் விலை உயர்ந்த கார், நிச்சயம் மக்களின் கவனத்தை கவரும். அதனால் நிச்சயம் நகரத்தில் வசிப்பதை அவன் விரும்ப மாட்டான் என்று உமாபதி கூறிய கூற்றை அவன் ஏற்றுக் கொண்டான்.

மூன்று நாட்களுக்கு பிறகு

ருத்ரன் மனநிலை பாதிக்கப்பட்டவன் என்பதை நம்பவே முடியவில்லை சக்தியால். அவன் கூறியது போலவே, அந்த மூன்று நாட்களில், அவன் அவளை எந்த தொந்தரவும் செய்யவில்லை... அவளை முத்தமிட கூட முயலவில்லை. உறங்கும் போது அவளை அணைத்துக் கொண்டு தான் உறங்கினான் என்றாலும், அவளிடம் இடைவெளியை பின்பற்றிக் கொண்டு தான் இருந்தான். அந்த மாதவிலக்கு நாட்களுக்கு முன்பு வரை, அவளிடம் மிகுந்த நெருக்கத்தை கொண்டிருந்தான் அவன். அவள், அவனை மூன்று நாட்கள் வரை தொடக்கூடாது என்று கூறிய போது, அவனுக்கு சற்று வருத்தமாக தான் இருந்தது. ஆனால், அவன் அதன் தாப்பரியத்தை புரிந்து கொண்டான். அப்படி நடந்து கொள்ளத் தான் எவ்வளவு சுய கட்டுப்பாடு தேவை...? மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவனால் எப்படி அந்த அளவிற்கு சுய கட்டுப்பாடுடன் இருக்க முடியும்? முன்பு இருந்ததை விட அதிகமாய் அவனை சக்திக்கு பிடித்து விட்டது. குளித்தபடி இவற்றையெல்லாம் யோசித்து கொண்டு இருந்தாள் சக்தி.

குளித்து முடித்து வெளியே வந்தாள் சக்தி. அவளுக்கு முன்பாகவே எழுந்து குளித்துவிட்டு இருந்தான் ருத்ரன். கட்டிலில் அமர்ந்து, அவனது கைபேசியில் எதையோ தேடிக் கொண்டிருந்தான். காலையில் எழுந்தவுடன் அவனுக்கு காபி குடிப்பது வழக்கம் என்று தெரிந்திருந்தும் அவன் அருகில் வந்த சக்தி,

"உங்களுக்கு காபி கொண்டு வரட்டுமா?" என்றாள்.

அவன் சரி என்று தலையசைக்க, அதற்கு முக்கியத்துவம் அளிக்காமல், அவனது இடது தொடையில் அமர்ந்து கொண்டு, அவன் கழுத்தை கட்டிக் கொண்டாள் சக்தி, ருத்ரனுக்கு வியப்பளித்து. அவனது கரங்கள் அணிச்சைய்யாய் அவளை சுற்றிவளைத்துக் கொண்டது. அவனது கன்னத்தில் அழுத்தமாய் முத்தமிட்டாள் சக்தி.

"என்ன ஆச்சு உனக்கு?" என்றான் வியப்பிலிருந்து மீளாதவனாய்.

"நான் ஒரு விஷயத்தை தெரிஞ்சுகிட்டேன். அதை உங்க கூட ஷேர் பண்ணிக்கனும்னு நெனச்சேன்"

"என்ன அது?"

"நீங்க ரொம்ப ஸ்வீட் அண்ட் ஜெண்டில்"

 புன்னகைத்த ருத்ரன்,

"நிஜமாவா?" என்றபடி அவள் ஈர கூந்தலை காதுக்கு பின்னால் ஒதுக்கி விட்டான்.

"நிஜமா தான். நீங்க என்னை தொடாம இருப்பீங்கன்னு நான் எதிர்பார்க்கவே இல்ல... என்னை கிஸ் கூட பண்ணல..."

"நீ தானே சொன்ன, உனக்கு ரொம்ப டயர்டா இருக்கும், கை, கால் எல்லாம் குடைச்சல் எடுக்கும்னு...? அப்படி இருக்கும் போது, எதையும் செய்ய எனக்கு எப்படி துணிச்சல் வரும்?" என்று அவன் கேட்ட கேள்வியே, அவன் எந்த அளவிற்கு அந்த விஷயத்தை பற்றி யோசித்திருக்கிறான் என்பதை புரிய வைத்தது.

"உங்க மேல எனக்கு அஃபெக்ஷன் கூடிக்கிட்டே போகுது தெரியுமா...? "

"அதுக்காக நான் ரொம்ப சந்தோஷபடுறேன்"

"உங்க கூட இருக்கும் போது நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். நீங்க என்னை எங்க கூப்பிட்டாலும் நான் உங்க கூட வர தயாராக இருக்கேன்"

"நிஜமா தான் சொல்றியா?"

ஆமாம் என்று தலையசைத்தாள்.

"நான் கூப்பிட்டா, என் கூட லண்டன் பாரிஸ், எங்க வேணாலும் வருவியா?"

"நான் வரமாட்டேன்னு நினைக்கிறீங்களா?"

"நான் உன்னை சுவிஸ் கூட்டிகிட்டு போகலாம்னு பிளான் பண்ணிக்கிட்டு இருக்கேன்"

"எதுக்கு?"

"உன் கூட இருக்க... என் வாழ்க்கையை உன் கூட வாழ... உன் கூட செட்டில் ஆக..."

"நம்ம இந்தியாவுக்கு திரும்பி வர மாட்டோமா?"

"வரமாட்டோம்னு தான் நினைக்கிறேன்"

"ஏங்க?"

வேறெங்கோ பார்த்தபடி அமைதி காத்தான் ருத்ரன்.

"என்கிட்ட சொல்ல உங்களுக்கு விருப்பமில்லைன்னா, நீங்க சொல்ல வேண்டாம். ஆனா, சத்தியமா நீங்க எங்க கூப்பிட்டாலும் நான் உங்க கூட வருவேன்"

அவள் நெற்றியில் அழுத்தமாய் முத்தமிட்ட ருத்ரன்,

"சக்தி, என்னை புரிஞ்சுக்காதவங்க கூட இருக்க நான் விரும்பல. என்னோட தனிமையை அவங்க புரிஞ்சுக்கல... என்னோட மன அழுத்தத்தை அவங்க புரிஞ்சுக்கல. எனக்கு சப்போர்ட்டிவா இருக்கிறதை விட்டுட்டு, அவங்க என்னை ஹாஸ்பிடலுக்கு அனுப்பி வச்சிடாங்க. எனக்கு பைத்தியம் பிடிச்சிருக்குன்னு அவங்க முடிவுக்கு வந்துட்டாங்க. என்னை யாருமே புரிஞ்சுக்கல... உன் ஒருத்தியை தவிர..."

"நான் உங்களை புரிஞ்சுகிட்டேன்னு நீங்க உண்மையாவே நம்புறீங்களா?" என்று அவன் கன்னம் தொட்டாள்.

ஆம் என்று தலையசைத்து அவள் கையில் முத்தமிட்டான்.

"நீங்க என்னை நம்புறீங்களா?"

மீண்டும் ஆம் என்று தலையசைத்தான்.

"நீங்க எங்க கூப்பிட்டாலும் நான் உங்க கூட வர தயாராக இருக்கேன். அதே மாதிரி, நான் கூப்பிட்டா நீங்க வருவீங்களா?"

திகைத்துப் போனான் ருத்ரன். இந்த கேள்விக்கு அவனால் என்ன பதில் கூற முடியும்? சக்தியை அவன் நம்புகிறான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அதற்காக, அவள் சேலத்திற்கோ, சென்னைக்கோ அழைத்தால் அவன் எப்படி போக முடியும்?

"உங்களை நானும் ஹாஸ்பிடலுக்கு அனுப்பிடுவேன்னோ... இல்ல, அவங்க உங்களை கூட்டிட்டு போக விட்டுடுவேன்னோ நினைக்கிறீங்களா?"

பதில் கூறாமல் கண்ணை மூடினான் ருத்ரன்.

"உங்களுக்கு தான் ஒண்ணுமே இல்லையே...! நீங்க நல்லா தானே இருக்கீங்க? அப்புறம் எப்படி உங்களை அவங்களால் ஹாஸ்பிடலுக்கு கூட்டிக்கிட்டு போக முடியும்? என்ன காரணம் சொல்லி அவங்க உங்களை கூட்டிக்கிட்டு போவாங்க? ஒருவேளை, அப்படி அவங்க செஞ்சா, நான் போலீஸ் ஸ்டேஷனுக்கு போய், என் புருஷனுக்கு விருப்பம் இல்லாத விஷயத்தை செய்றாங்கன்னு அவங்க மேல கம்ப்ளைன்ட் கொடுப்பேன். அப்படி செய்றவங்க உங்க குடும்பமாவே இருந்தாலும் அதை பத்தி எனக்கு கவலை இல்ல. நீங்க என்கிட்ட எவ்வளவு அழகா நடந்துக்கிட்டீங்கன்னு நான் ஜாட்ஜ் கிட்ட சொல்லுவேன். என்னோட பிரியட் நேரத்துல நீங்க என்னை எவ்வளவு நல்லா பாத்துக்கிட்டிங்கன்னு அவங்களுக்கு சொல்லி புரிய வைப்பேன். நீங்க நல்லா இருக்கீங்கன்னு அவங்களுக்கு நிரூபிப்பேன்"

அவள் பேசுவதை குறுக்கீடு செய்யாமல் கேட்டுக் கொண்டிருந்தான் ருத்ரன். அவள் கூறியவை அவனுக்கு புது உத்வேகத்தைக் கொடுத்தது... நிம்மதியை, சந்தோஷத்தை, திருப்தியை தந்தது...

அவளை இறுக்கமாய் அணைத்துக் கொண்டான்.

"நீ அப்படி செய்வியா சக்தி?"

"கண்டிப்பா செய்வேன். ஏன் செய்ய மாட்டேன்?"

"அவங்க உன்னை குழப்ப பாப்பாங்க" என்றான் அவளது அணைப்பிலிருந்து விலகாமல்.

"என்னை யாராலயும் குழப்ப முடியாது. ஏன்னா, நீங்க யாருன்னு எனக்கு நல்லா தெரியும்... உண்மையை சொல்லப் போனா, உங்களைப் பத்தி, மத்த எல்லாரையும் விட, எனக்கு தான் தெரியும். சரி தானே?"

ஆமாம் என்று புன்னகையுடன் தலையசைத்தான் ருத்ரன்.

"எப்படியும் என் தம்பி சிவா நம்மளை சீக்கிரமாகவே கண்டுபிடிச்சிடுவான். அப்புறம் அவன் என்னோட குடும்பத்தை இங்கே கூட்டிட்டு வருவான். அவங்க, உன்னை அவங்க கூட வந்துட சொல்லி கேட்பாங்க"

"உங்களுக்கு அவங்க கூட போக பிடிக்கலைன்னா, நம்ம அவங்க கூட போக வேண்டாம். உங்களை இன்செக்யூர்டா ஃபீல் பண்ண வைக்க நான் விரும்பல"

அவன் கூறிய அடுத்த வார்த்தைகள் சக்தியை  மலைக்க வைத்தன.

"நம்ம போகலாம்" என்றான்.

"என்ன சொன்னீங்க?" என்று அவன் அணைப்பிலிருந்து தன்னை பின்னால் இழுத்தாள் சக்தி.

ஆம் என்று அழகிய புன்னகையுடன் தலையசைத்தான், யூகங்களுக்கு அப்பாற்பட்ட ருத்ரன்.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top