அனாதை
மழைப் பெய்த ஈரம்
தெருவெங்கும் சகதி
மனித சேறுகளை மிதித்துக்கொண்டு - தனது
பிய்ந்த கால்களால் பூமியைத் தாங்கி தாங்கி
நடக்கிறாள் அந்த கிழவி
யாரிடமும் கையேந்தவில்லை
எவர் முகத்தையும் நேரிட்டுப் பார்க்கவில்லை
ஊன்றிய தடியை எடுத்து
மீண்டுமொரு அடியை வைக்கவே
வானத்தையொரு முறை அண்ணாந்துப் பார்க்கிறாள்
மெல்ல மெல்ல நடக்கையில்
ஏதோ செய்யாத பாவத்திற்கு சிலுவையை
சுமந்தவளைப்போல
தன் வளைந்தமுதுகை நிமிர்த்தி நிமிர்த்தி சாய்க்கிறாள்
இடையிடையே
தரையில் தெரியும் ஈரத்தின் மீது
உருவமின்றி நெளிந்தாடும் தன்
மிச்சமுள்ள நாட்களின் வெறுமையை முறைத்தபடி
நிற்காமல் நடக்கிறாள் அவள்..
யாரவள்?
இப்படியே அவள் எங்கே போவாள் ?
எப்படியுமிந்த சமூகத்தில்
யாரோ ஒருவனுக்கு அவள் தாய்
யாருக்கோ மனைவியானவள்
எந்த பாவிக்கோ மகள்;
என்றாலும்
அவளைப் பார்த்தாலே தெரிகிறது
அவளொன்றும் பிச்சைக்காரியில்லை
பாவமவள், பிச்சைக்காரி கூட இல்லை!!
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top