28 ஆவேசம்

28 ஆவேசம்

தனக்கு வந்த தகவலை படித்த பிறகு, அதை அனுப்பிய தன் ஆளுக்கு மறு தகவல் அனுப்பினாள் சஞ்சனா.

*சூழ்நிலை சரியாக இருக்கும் போது எனக்கு ஃபோன் செய்யவும்*

தன் அறையில் இங்கும் அங்கும் நடந்தவாறு அவனது அழைப்புக்காக காத்திருந்தாள். மதுரையில் நடப்பது என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும் அவளுக்கு. அவளே கூட அவனுக்கு ஃபோன் செய்து விசாரிக்க முடியும் தான்... ஆனால் அவனது சூழ்நிலை சரியில்லாமல் இருந்தால் என்ன செய்வது? அவன் சென்றிருப்பது பெரியசாமியின் இடத்திற்கு ஆயிற்றே!

அரை மணி நேரம் கழித்து அவளது ஆளிடம் இருந்து அவளுக்கு அழைப்பு வந்தது. அந்த அழைப்பை ஏற்றாள் சஞ்சனா.

"சொல்லு"

"அந்த பொண்ணு எங்க இருக்காங்கிற விஷயத்தை நான் பெரியசாமி கிட்ட சொல்லிட்டேன் மேடம்"

"இதுக்கு பின்னாடி இருக்கிறது யாருன்னு அவங்களுக்கு தெரியாது இல்ல?"

"தெரியாது மேடம். நான் அவங்களுக்கு ஃபோன்ல தான் விஷயத்தை சொன்னேன்."

"அங்க நிலவரம் என்ன?"

"அவங்க அந்த பொண்ணை விட, தூயவன் சார் மேல தான் பயங்கர கோவத்துல இருக்காங்க"

"ஆனா ஏன்?"

"அந்தப் பொண்ணை அவங்ககிட்ட இருந்து காப்பாத்தும் போது, தூயவன் சார் பெரியசாமியை ரொம்ப அடிச்சிட்டாரு. அவரு இன்னும் கூட ஹாஸ்பிடல் தான் ட்ரீட்மென்ட் எடுத்துக்கொண்டு இருக்கிறார். அவரோட ஹெல்த் கண்டிஷன் ரொம்ப மோசமாகிக்கிட்டே போகுது. அவரோட பையன் சின்னசாமி அவருடைய அப்பாவோட இந்த நிலைமைக்கு தூயவன் சார் தான் காரணம்னு ரொம்ப கோவமா இருக்கான். அவர் தூயவன் சாரை நிச்சயம் சும்மா விட மாட்டான்.  அவர் கிடைச்சா, அவரை கொல்லவும் தயங்க மாட்டான்"

"என்ன்ன்னனனது? அவங்களை எப்படியாவது டைவர்ட் பண்ணு. அவங்க நிச்சயம் தூயவனை மீட் பண்ண கூடாது"

"அதனால தான் நான் தூயவன் சார் வீட்டு அட்ரஸை அவங்களுக்கு கொடுக்காம, அந்த ஏரியாவை மட்டும் அவங்களுக்கு சொல்லி இருக்கேன். சரியான சந்தர்ப்பம் வர வரைக்கும் அவங்களை காத்திருக்க சொல்லி இருக்கேன்"

"உன்கிட்ட அவங்க ஃபோன் நம்பர் இருக்கா?"

"இருக்கு மேடம். அந்த நம்பரை எனக்கு டெக்ஸ்ட் பண்ணு"

"நிச்சயம் பண்றேன்"

"வேற ஏதாவது விஷயம் இருக்கா?"

"பவித்ராவை அவங்க அப்பாவுக்கு கல்யாணம் பண்ணி வச்சா தான் அவங்க அப்பாவுக்கு உடம்பு சரி ஆகும்னு சின்னசாமி நினைக்கிறான். பெரியசாமியோட ஜாதகப்படி, அவரு கன்னி ராசி, சித்திரை நட்சத்திரத்தில், சித்திரை மாச மத்தியில் பிறந்தவளை கல்யாணம் பண்ணிக்கணுமாம். பவித்ராவோட ஜாதகம் அதுக்கு பொருந்தி போகுது. பவித்ராவை கல்யாணம் பண்ணிக்கிட்டா பெரியசாமி ரொம்ப நாளைக்கு உயிரோட இருப்பார்னு அவங்க நம்புறாங்க. அதனால தான் அந்த பொண்ணை தேடிக்கிட்டு இருக்காங்க"

"சரி, நீ சென்னைக்கு திரும்பி வந்துடு"

"சரிங்க மேடம்"

"வரும் போது நீ பெரியசாமிக்கு ஃபோன் பண்ண அந்த ஃபோனை கொண்டு வந்து என்கிட்ட குடு"

"சரிங்க மேடம்" என்று அழைப்பை துண்டித்தான், அவளது ஆள்.

மதுரை

பெரியசாமியின் முன்பு சீறி நின்றான் சின்னசாமி.

"அவ எங்க இருக்கான்னு நான் கண்டுபிடிச்சிட்டேன். சீக்கிரமே அவளை உன் காலடியில கொண்டு வந்து போடுறேன்"

"அவசரப்பட்டு எதுவும் செஞ்சுடாத" என்றார் பெரியசாமி.

"அவன் அவளை உங்ககிட்ட இருந்து இழுத்துகிட்டு போயிருக்கான்..."

"அதைத்தான் நானும் சொல்றேன். நம்ம இடத்துக்கே வந்து, நம்மளையே அடிச்சு போட்டுட்டு, அவன் அவளை நம்மகிட்ட இருந்து இழுத்துகிட்டு போயிருக்கான்னா, நீ அவனோட பவர் என்னன்னு புரிஞ்சுக்கோ. இன்னொரு முக்கியமான விஷயத்தையும் நீ மறந்துடக்கூடாது"

"என்ன விஷயம்?"

"நம்மகிட்ட சண்டை போடறதுக்காக அவன் நம்ம இடத்துக்கு வரல. அந்த பொண்ணை அவங்க அப்பா கிட்ட கொண்டு வந்து விடத்தான் வந்தான். எந்த முன்னெச்சரிக்கையும் இல்லாம சும்மா வந்ததுக்கே அவனால நம்மளை அந்த அளவுக்கு அடிக்க முடியுதுன்னா, சரியான திட்டம் இல்லாம அவனுடைய இடத்துக்கு போனா, அவன் நம்மளை அடிச்சி துவம்சம் பண்ணிடுவான். அதனால சரியான திட்டம் தீட்டிக்கிட்டு, அதுக்கு அப்புறமா அங்க போ"

சரி என்றான் சின்னசாமி. பெரியசாமி கூறுவது தவறு ஒன்றும் இல்லை. அவன் அவசரப்படக்கூடாது. சரியாய் திட்டமிட்டு பிறகு அடிக்க வேண்டும்.

மறுநாள் காலை

தூக்கத்திலிருந்து திடுக்கிட்டு எழுந்தான் தூயவன், தன் அறையின் கதவை யாரோ பலமாய் தட்டும் ஓசை கேட்டு. கண்களை கசக்கியபடி கதவை திறந்தான். அவனது தூக்கம் பறந்து போனது,

"தூ...யா....." என்று கத்தியபடி, கட்டிப்பிடிக்கிறேன் என்ற பெயரில் அவனது சித்தி மகனான ராமு, அவன் மீது இடியை இறக்கிய போது.

"விடுடா, என்னை இடியட்" என்றான் தூயவன்.

"எப்படி இருக்க?" என்று அவன் கன்னத்தை கிள்ளினான் ராமு.

"இதுவரைக்கும் நல்லா தான் இருந்தேன். நீ இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்க?"

"பிசினஸ்ன்னு வரும் போது நீ ஒரு ஹீரோ. ஆனா ஃபேமிலின்னு வரும் போது நீ ஒரு ஜீரோ"

"எதுக்கு தேவையில்லாம உளறிக்கிட்டு இருக்க?"

"நான் இங்க வர போறேன்னு அக்கா உன்கிட்ட சொல்லலையா? நேத்து சாயங்காலம் நான் அக்கா கிட்ட பேசினேனே... என்னோட எதிர்காலத்தைப் பத்தி அவங்க எனக்கு நிறைய ஐடியாஸ் கொடுத்தாங்க. ஒளிமயமான எதிர்காலத்தை அமைக்க, நான் இங்க வந்துட்டேன். உனக்கு ஏன்னு தெரியுமா?"

"ஏன்?" என்றான் விருப்பமில்லாமல்.

"என்னோட வாழ்க்கையை நான் வகுத்துக்க போறேன்" என்றான் தன் சட்டை காலரின் முனையை ஸ்டைலாய் கடித்தவாறு.

"எதையாவது செஞ்சு தொல..." என்று தன் அறைக்குள் செல்ல அவன் முற்பட்டபோது,

"ஹாய் பவித்ரா" என்று ராமு ஓடுவதை பார்த்து வாயை பிளந்து கொண்டு நின்றான் தூயவன். அதற்குள் பவித்ராவை இவனுக்கு எப்படி தெரிந்தது? அவனின் பின்தொடர்ந்து வந்தான். பவித்ராவின் முன் அசடு வழியும் புன்னகையோடு நின்றான் ராமு.

"இந்த எல்லோ கலர் டிரஸ்ல நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க பவித்ரா"

"அவர் தான் வாங்கி கொடுத்தாரு" என்று தூயவனை சுட்டிக்காட்டினாள்.

"உனக்கு பவித்ராவை எப்படி தெரியும்?" என்றான் தூயவன்.

"நாங்க ஏற்கனவே இன்ட்ரடியூஸ் ஆயிட்டோம்" என்ற ராமு,

"வாங்க பவித்ரா நம்ம போகலாம்" என்றான்.

"நீ அவளை எங்க கூட்டிகிட்டு போற?"

"அவங்க ஏ கிளாஸ் பாதாம் அல்வா செஞ்சாங்கன்னு கேள்விப்பட்டேன். உன்னை மாதிரி ஒரு சிடுமூஞ்சியையே கிப்ட் கொடுக்க யோசிக்கிற அளவுக்கு அது இருந்துதாமே என்று தூயவனை வம்புக்கு இழுத்தான் ராமு.

பவித்ரா தூயவனை பார்த்துவிட்டு தலை தாழ்த்திக் கொண்டாள், அவனது உறுதியான பார்வை தன் மீது இருப்பதை பார்த்து.

"அதனால இப்ப என்ன?"

"அதோட செய்முறை விளக்கத்தை நான் நோட்ஸ் எடுத்து அம்மாவுக்கு அனுப்ப போறேன். அவங்க என்னை அனுப்ப சொல்லி கேட்டாங்க"

"இவளுக்கு பாதாம் அல்வா செய்ய தெரியும்னு உனக்கு யார் சொன்னது?"

அதற்கு ராமு பதிலளிக்கும் முன்,

"சந்தேகம் இல்லாம நான் தான் சொன்னேன்" என்றாள் அங்கு வந்த வெண்மதி. அவளுடன் ஹைஃபை கட்டிக்கொண்டான் ராமு.

தன் கண்களை வெறுப்போடு சுழற்றினான் தூயவன்.

"பவித்ரா, நான் சொல்லல? என் தம்பி ராமு வந்தான்னா அந்த இடமே கலகலப்பா மாறிடும்" என்றாள் வெண்மதி.

"அப்படியா அக்கா? நெஜமாவே என்னை பத்தி நீங்க அப்படி சொன்னீங்களா?" என்றான் ராமு பெருமையுடன்.

வெண்மதி ஆம் என்று தலையசைக்க,  அவளுக்கு நன்றி கூறும் விதமாய் அவள் முன் லேசாய் தலை தாழ்த்தினான் ராமு.

"ராமு உன் கூட இருந்தா உனக்கு போரே அடிக்காது. நேரம் எப்படி ஓடுதுன்னு நமக்கு தெரியாது. அவன் பேசுறதை கேட்டு நம்ம சிரிச்சுக்கிட்டே இருப்போம்" என்றாள்  வெண்மதி.

அப்பொழுது அங்கு வந்த குணமதி,

"தூயா, உனக்கு காபி வேணுமா?" என்றார்.

"இல்ல மாம், நான் குளிச்சிட்டு சாப்பிடுறேன்" என்றான்.

"என்ன்னனது..." என்று ராமு கத்த, அனைவரும் திடுக்கிட்டார்கள்.

"ஏன்டா இப்படி கத்துற?" என்றான் தூயவன்.

"நீ பெரியம்மாகிட்ட பேசுற...  இந்த அதிசயம் எப்படி நடந்தது?"

மூன்று பேருடைய பார்வையும், அவர்கள் பேசுவதற்கு காரணமாக இருந்த நபரின் மீது குவிந்தது.

"எங்க வீட்டுக்கு ஒரு தேவதை வந்திருக்காங்க. அவங்களால தான் அந்த அதிசயம் நடந்தது" என்று கூறி சிரித்தாள் வெண்மதி, பவித்ராவுக்கு சங்கடமளித்து.

"நீங்க பவித்ராவையா சொல்றீங்க?" என்றான் ராமு.

"அவங்களே தான்"

"சந்தேகமே இல்ல. நீங்க ஒரு தேவதையா தான் இருக்கணும். பத்து வருஷமா பெரியம்மா இவன்கிட்ட பேச ட்ரை பண்ணிக்கிட்டு இருக்காங்க. ஆனா இவன் சரியான கெடா கொண்டன். கொஞ்சம் கூட அசைஞ்சு கொடுக்கவே இல்ல. ஆமா... இவனோட கல்லு மனசு கரையிற அளவுக்கு அப்படி நீங்க என்ன செஞ்சீங்க?"

"அந்த காரணத்தை கேட்டா நீ அழுவ" என்றாள் வெண்மதி.

பவித்ராவின் முகம் மாறுவதை கவனித்தான் தூயவன். அவளுக்கு அவளது அம்மாவின் ஞாபகம் வந்திருக்க வேண்டும்!

"அக்கா, போதும் நிறுத்துங்க" என்று பவித்ராவின் கையைப் பிடித்துக் கொண்டு விருந்தினர் அறையை நோக்கி நடந்தான், அந்த மூவரையும் பேச்சு இழக்க செய்து.

அவளை விருந்தினர் அறைக்கு அழைத்து வந்து,

"ஆர் யூ ஆல்ரைட்?" என்றான்.

அவள் ஆம் என்று தலையசைத்தாள். தூயவன் அங்கிருந்து செல்ல நினைத்தபோது பவித்ரா,

"ஆர் யு (என்பதை அழுத்தி) ஆல் ரைட்?" என்றாள்.

அவளைப் பொருளோடு பார்த்த தூயவன்,

"இல்லைன்னு சொன்னா நீ என்ன செய்யப் போற?" என்றான்.

"ஏன்...?"

"உனக்கே நல்லா தெரியும்"

"ஆனா..."

"உன்னை எதுக்காகவும் நான் ஃபோர்ஸ் பண்ண விரும்பல பவித்ரா. இது உன்னோட வாழ்க்கை. உன் விருப்பப்படி எப்படி வாழனுமோ நீ அப்படி வாழலாம். உனக்கு எது சந்தோஷத்தை தருதோ அதை நீ செய்யலாம். எனக்காக நீ எதையும் செய்ய வேண்டியது இல்ல. உனக்கு நான் யாரு? யாரோ தானே...?"

தன் மனம் கணப்பதை உணர்ந்தாள் பவித்ரா.

அவன் அங்கிருந்து செல்லலாம் என்று நினைத்த போது, கலங்கிய கண்களுடன்  அங்கு வந்த ராமு, தூயவனை பிடித்து தள்ளிவிட்டு அந்த அறைக்குள் நுழைந்தான்.

"ஐ அம் ரியலி சாரி பவித்ரா" என்றான் உணர்ச்சிவசப்பட்டு.

"ஏன் சாரி சொல்றீங்க?" என்றாள் பவித்ரா.

"இப்ப தான் உங்க அம்மா அப்பாவை பத்தி தெரிஞ்சுக்கிட்டேன். உங்களோட ஸ்டோரி என் மனசை ரொம்பவே பாதிச்சிடுச்சு. நீங்க எதுக்காகவும் கவலைப்படாதீங்க. உங்களுக்கு யாரும் இல்லன்னு நினைக்காதீங்க. உங்களுக்கு ராமு இருக்கான்... எப்பவும் உங்க கூடவே இருப்பான்" என்றான்.

சரி என்று மெல்லிய புன்னகையோடு தலையசைத்தாள் பவித்ரா. ராமுவின் ஓவர் ஆக்டிங்கை பார்த்து தன் விரல்களை மடக்கினான் தூயவன். அவன் கையைப் பிடித்து தரதரவென அவள் அறையில் இருந்து வெளியே இழுத்து வந்தான்

"அவளை குளிக்க விடு"

"பவித்ரா, நான் உங்ககிட்ட நிறைய பேச வேண்டி இருக்கு. நம்ம சாப்பிட்டுட்டு அப்புறமா பேசலாம்" என்றபடி அங்கிருந்து சென்றான் ராமு.

பவித்ரா சரி என்று தலையசைத்தாள்.

"கதவை சாத்தி தாழ்பால் போடு" என்றான் தூயவன்... அது ஒரு கட்டளை போல் ஒலித்தது. சற்று நேரத்திற்கு முன்பு, அவளை எதற்காகவும் கட்டாயப்படுத்த மாட்டேன் என்று கூறிய அவன், அவளுக்கு கட்டளை பிறப்பித்தான்.

தன் அறைக்கு சென்று ஷவரை திறந்து விட்டு, தண்ணீருக்கடியில் நின்றான் தூயவன். அவனது மனம் அமைதியாய் இல்லை. ராமு அவர்கள் வீட்டில் இருக்கிறான். அவன் யாரிடத்திலும் பழக தயங்காதவன். வெண்மதி கூறியது உண்மை தான். அவன் இருக்கும் இடத்தை கலகலப்பை மாற்றி விடுவான். அவன் வீட்டிற்கு வந்த சிறிது நேரத்திலேயே இவ்வளவு சீக்கிரமாய் பவித்ராவிடம் தன் நட்பை துவக்கி விட்டான். இன்று தூயவன் அலுவலகத்திற்கு செல்ல வேண்டும். அவனுக்கு ஒரு முக்கியமான மீட்டிங் இருந்தது. அதை அவனால் தள்ளி வைக்க முடியாது. பெயர் தெரியாத பயம் அவன் மனதை ஆட்கொண்டது.

இதைப் பற்றி எல்லாம் யோசித்தபடி அலுவலகம் கிளம்பிய தூயவன், உணவு மேசைக்கு  வந்து அமர்ந்தான். பவித்ரா இன்னும் அங்கு வரவில்லை. தான் சமைத்த சிற்றுண்டியை அங்கு எடுத்து வந்தார் குணமதி. அவருக்கு உதவினாள் வெண்மதி.

"பவித்ரா எங்க?" என்றார் குணமதி.

"நான் போய் அவங்ககளை கூட்டிக்கிட்டு வரட்டுமா?" என்றான் ராமு.

"நீ வாயை மூடிக்கிட்டு உட்காரு" என்று தூயவன் சொல்ல நினைக்கும் அதே நேரம்,

"இதோ அவங்களே வந்துட்டாங்க" என்றான் ராமு.

அவளைப் பார்த்துவிட்டு சாப்பிடுவதை தொடர்ந்தான் தூயவன்.

"பவித்ரா, நீயும் வந்து சாப்பிடு" என்றார் குணமதி.

"நான் எல்லாருக்கும் பரிமாறிட்டு சாப்பிடுறேன் மா"

ஒரு இட்லியை எடுத்து தூயவனின் தட்டில் வைத்தாள். அவன் தனக்கு வேண்டாம் என்று கூற நினைத்தபோது, திகைத்து நின்றான். அதே திகைப்புடன் தலையை நிமிர்த்தி பவித்ராவை பார்க்க, அவள் மென்மையாய் புன்னகை புரிந்தாள். ஒரு அழகிய புன்னகை அவன் முகத்திலும் பூத்தது... அவன் கொடுத்த வளையல்களை பவித்ரா அணிந்திருந்தாள்.

தொடரும்...





Bạn đang đọc truyện trên: AzTruyen.Top