26 வளையல்

26 வளையல்

மாயவனை முறைத்துப் பார்த்தபடி நின்றார் குணமதி. வெண்மதியோ அவர் மீது ஒரு கோப பார்வையை வீசிவிட்டு தன் அறைக்கு சென்றாள். குணமதியும் அங்கிருந்து செல்ல முயன்ற போது,

"தயவுசெய்து தூயாகிட்ட பேசு குணா" என்றார் மாயவன்.

"நான் ஏற்கனவே அவன் கிட்ட பேசிகிட்டு தானே இருக்கேன்?"

"நான் அந்த பேச்சை பத்தி சொல்லல"

"வேற எந்த பேச்சைப் பத்தி சொல்றீங்க?"

"அவன்கிட்ட சஞ்சனாவை பத்தி பேசு"

"அவனுக்கு ஏற்கனவே அவளைப் பத்தி தெரியுமே"

"அவ நல்ல பொண்ணு, அவ நம்ம வீட்டுக்கு மருமகளா வந்தா நீ ரொம்ப சந்தோஷப்படுவேன்னு சொல்லு..."

"என்னை பொய் சொல்ல சொல்றீங்களா?" என்றார் நக்கலாக.

"குணா, இது விளையாடுற விஷயம் இல்ல"

"அதையே தான் நானும் சொல்றேன். இது என் பையனோட வாழ்க்கை பிரச்சனை. அவன் என்னை மாதிரி இல்ல. அவன் புத்தி கெட்ட முட்டாளை எல்லாம் அனுசரிச்சு போக மாட்டான்..."

"கு...ணா..."

"நான் சஞ்சனாவை சொன்னேன்" என்றார் தெனாவட்டாக.

"என் வார்த்தைக்கு மரியாதை இல்லயா?"

"உங்களுக்கே மரியாதை இல்லாதப்போ, உங்க வார்த்தைக்கு எப்படி மரியாதை வரும்?" என்றார் தன் பல்லை கடித்துக் கொண்டு கோபமாய்.

"அப்படியா? நான் இந்த வீட்டை விட்டு போயிட்டா என்ன செய்வ?"

சில நொடி திகைத்து நின்ற குணமதி,

"போங்க எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல" என்றார்.

"நான் போக மாட்டேன்னு நினைக்கிறியா?"

"எப்போ நீங்க என்னை விட உங்க ஃபிரண்டு தான் உங்களுக்கு முக்கியம்னு சொன்னிங்களோ, அப்பவே நீங்க என்ன செய்வீங்க செய்ய மாட்டீங்கன்னு யோசிக்கிறதை நான் நிறுத்திட்டேன்"

"ஓ... அந்த பழைய காழ்ப்புணர்ச்சியை மனசுல வச்சுக்கிட்டு தான் இதெல்லாம் செய்றியா?"

"பழசா? அது இன்னும் ஃபிரஷா தான் இருக்கு" என்று சமையல் அறையை நோக்கி நடந்தவர், நின்று மாயவனை பார்த்து,

"நீங்க வீட்டை விட்டு போறதா இருந்தா உங்களோட திங்ஸை எடுத்து வைக்க நான் ஹெல்ப் பண்றேன். ஏன்னா, உங்களுக்கு என்னென்ன வேணும்னு கூட உங்களுக்கு தெரியாது" என்று எகத்தாளமாய் கூறிவிட்டு நகர்ந்தார் குணமதி.

அதிர்ச்சியே வடிவாய் நின்றார் மாயவன். அவருடைய கடைசி துறப்புச்சீட்டும் செயலிழந்து போனதே...!

.....

தூயவனை பின்தொடர்ந்து வந்த  வெண்மதி, அவன் தன் கோட்டை கழட்டி கோபமாய் வீசி எறிவதை கண்டாள். வெண்மதியை பார்த்த தூயவன், தன் கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு சோபாவில் அமர்ந்தான்.

"நான் உள்ள வரலாமா?" என்றாள்.

கண்களை மூடிய தூயவன்,

"அக்கா தயவு செய்து நீங்களும் என்னை எரிச்சல் படுத்தாதீங்க" என்றான்.

"நானுமா? வேற யாரு உன்னை எரிச்சல் படுத்தினது?"

"வேற யாரு? அந்த முட்டாள் சஞ்சனா தான். அவளை மாதிரி ஒரு வெட்கங்கெட்ட பொண்ணை நான் பார்த்ததே இல்ல. ஒரு வேல்யூ இல்ல, மாறல் இல்ல, வெட்கம் இல்ல, எதுவும் இல்ல" என்று கோபத்தில் கத்தினான்.

"அவ என்ன சொன்னா?"

"தயவுசெய்து அதை விடுங்க. அவ பேசின ஜூலியட் டயலாக்கை எல்லாம் மறுபடியும் யோசிக்க நான் தயாரா இல்ல"

வெண்மதிக்கு வாய்விட்டு சிரிக்க வேண்டும் போல் தோன்றியது. ஆனால் அதற்கான நேரம் அதுவல்ல என்று அமைதி காத்தாள்.

"அவ உன்னை ரொம்பவே எரிச்சல் படுத்தியிருக்கா போல இருக்கு"

"சந்தோஷால தான் நான் அமைதியா இருந்தேன்" என்றான் அவளது முகத்தை கவனித்தவாறு.

"எதுக்காக நீ அமைதியா இருந்த? யாருக்காகவும் நீ அமைதியா இருக்க வேண்டிய அவசியம் இல்ல. நீ என்ன நினைக்கிறியோ அதை தாராளமா செய்யலாம்"

"இல்லக்கா... சந்தோஷுக்கு எதிரா எதுவும் செய்யக்கூடாது அப்படிங்கறதுக்கு நான் அமைதியா இல்ல. எனக்கு பதிலா அவரே சஞ்சனாவை கண்ட்ரோல் பண்ணிட்டாரு. அதனால தான்"

"ஓ..."

"அவர் ஜெனியூனா தெரியிறார் கா. இன்னிக்கு அவர் பேசின விஷயம் அவர் யாருன்னு எனக்கு புரிய வச்சது"

"வார்த்தைக்கும் நடத்தைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கும் தூயா. என்னைக்கு ஒரு மனுஷன் தன் பேச்சை நடத்திக் காட்டுறானோ அப்ப தான் அவன் ஜெனியூனானவனா இருக்க முடியும்"

அவளைப் பொருளோடு பார்த்தான் தூயவன்.

"நான் எந்த ஒரு ஏமாற்றத்துக்கும் தயாரா இல்ல. சந்தோஷ் தன்னை நிரூபிக்கிற வரைக்கும் நான் எந்த ஒரு எதிர்பார்ப்பையும் வளத்துக்க விரும்பல"

"நான் அவ்வளவு சுலபமா யாரையும் நம்பிடுவேன்னு நினைக்கிறீங்களா? அதுவும் அது நீங்க சம்பந்தப்பட்ட விஷயமாக இருக்கும் போது...?"

"நிச்சயமா இல்ல... நீ என்னை விட ரொம்ப கண்டிப்பானவன்"

"அப்புறம் உங்களுக்கு என்ன பிரச்சனை?"

"இந்த விஷயம் சஞ்சனாவும் மாதேஷ் அங்கிளும் சம்பந்தப்பட்டது. நம்ம அவங்களுக்கு அவ்வளவு சீக்கிரமா வளஞ்சு கொடுக்கிற கூடாது... "

"நீங்க சொல்றதும் சரி தான். அப்பாவும் பொன்னும் கற்பனைக்கு எட்ட முடியாத அளவுக்கு வெட்கம் கெட்டவங்க" என்றான் தன் தலையை அசைத்தவாறு.

ஆம் என்று தலையசைத்த வெண்மதி,

"தூயா, நீ ஒரு வேலை பண்ணு..." 

"என்ன கா?"

"சஞ்சனாவோட லவ் போலின்னு நிரூபிச்சு காட்டு"

தூயவன் புருவம் உயர்த்தினான்.

"நீ மட்டும் அதை நிரூபிச்சிட்டேனா, டாட் வாயை திறக்கவே யோசிப்பாரு"

"ஆனா... ஒரு ஜூலியட்டோட காதல் போலின்னு என்னால எப்படிக்கா நிரூபிக்க முடியும்?" என்றான் கவலை தோய்ந்த முகத்துடன்.

வெண்மதி முகத்தை சுருக்க, வாய் விட்டு சிரித்தான் தூயவன். அவன் முதுகில் ஓங்கி அறைந்து விட்டு அவளும் சிரித்தாள்.

அங்கு வந்து நின்ற குழந்தைசாமியை பார்த்து இருவரும் சிரிப்பதை நிறுத்தினார்கள்.

"பன்வாரிலால் பையன் வந்திருக்கிறாராம். அம்மா உங்களை வர சொன்னாங்க" என்றார்.

தூயவனை ஓரக்கண்ணால் பார்த்தாள் வெண்மதி, தன் சிரிப்பை அடக்கியபடி. ஆனால் அதற்கு அலட்டிக் கொள்ளாமல் அங்கிருந்து சென்றான் தூயவன். அவனை பின்தொடர்ந்து சென்றாள் வெண்மதி, தன் உதட்டை கடித்தவாறு...

தனக்கு வளையலை தேர்வு செய்து கொண்டிருந்தார் குணமதி. அதை தன் கைகளில் அணிந்து அதை இப்படியும் அப்படியும் திருப்பி பார்த்து ரசித்துக் கொண்டார்.

"தூயா, பாரு இந்த வளையல் எனக்கு நல்லா இருக்கு இல்ல?"

அவன் ஆம் என்று தலையசைத்தான். இன்னொரு வளையலை எடுத்து,

"இது எப்படி இருக்கு?" என்றார்.

"குட்" என்றான்.

"உனக்கு பிடிச்சிருக்கா?"

"யா..."

"நான் இதை எடுத்துக்கவா?"

"தாராளமா"

வெண்மதியை நோக்கி திரும்பிய தூயவன்,

"அக்கா, நீங்களும் எடுத்துக்கோங்க" என்றான்.

"நெஜமா தான் சொல்றியா?"

"ஆமாம்"

இன்னொரு ஜோடி வளையலை எடுத்து அதை லாலின் மகனிடம் கொடுத்தான்.

"அது எனக்காகவா?" என்றாள் வெண்மதி ஆர்வத்தோடு.

ஆம் என்று தலையசைத்தான் தூயவன். லாலின் மகனை நோக்கி ஏதோ ஜாடை காட்டினான் தூயவன். சரி என்று தலையசைத்து விட்டு அந்த வளையல்களை பேக் செய்து தூயவனிடம் கொடுத்தான்.

தனது பாக்கெட்டில் இருந்த காசோலை புத்தகத்தை எடுத்து அதில் தொகையை நிரப்பி அதை அவரிடம் கொடுத்தான் தூயவன்.

"தேங்க்யூ சார்" என்று அங்கிருந்து கிளம்பினான் லாலின் மகன்.

அவன் செல்லும் வரை காத்திருந்தாள் வெண்மதி.

"இதை எனக்காக ஏன் வாங்குன தூயா? நான் பாதாம் அல்வா செய்யலையே" என்றாள் வெண்மதி முகத்தை சோகமாய் வைத்தவாறு.

"அதனால என்னக்கா? அம்மா மட்டும் செஞ்சாங்களா என்ன?" என்றான் தன் சிரிப்பை கட்டுப்படுத்திக் கொண்டு.

அதைக் கேட்டு கலகலவென சிரித்தாள் வெண்மதி.

"போடா, எனக்கு ஒன்னும் இது வேண்டாம்" என்றார் குணமதி.

"மாம், ஓவர் ரியாக்ட் பண்ணாதீங்க. நீங்க ஆசைப்பட்டதை எடுத்துக்கோங்க"

"நீ எனக்கு முதல் தடவையா கிஃப்ட் வாங்கி கொடுக்கிறேன்னு நான் எவ்வளவு ஆசையா இருந்தேன் தெரியுமா?" என்றார் முகத்தை சோகமாய் வைத்துக் கொண்டு.

"மாம், இது உங்களுக்கே ரொம்ப ஓவரா தெரியல? நான் எதுக்காக இந்த வளையலை கொடுக்கணும்னு நினைச்சேன்னு உங்களுக்கே நல்லா தெரியும்... நீங்க பாதாம் அல்வாவை சூப்பரா செஞ்சி இருக்கீங்கன்னு நெனச்சு தான் நான் இதை உங்களுக்கு கொடுக்க நினைச்சேன். வேற யாருக்கோ போய் சேர வேண்டியதை நீங்க பறிச்சிக்க நினைக்கிறது அநியாயம் இல்லயா மாம்?"  என்றான் கிண்டலாக

"அப்படின்னா எதுக்காக எனக்கு வாங்கி கொடுத்த?" என்றாள் வெண்மதி.

"நான் பவித்ராவுக்கு வளையலை கிஃப்டா கொடுக்கும் போது நீங்க ஃபீல் பண்ண கூடாது இல்ல? அதுக்கு தான்" என்றான்.

குணமதியும் வெண்மதியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

"அதனால தான் அம்மாவுக்கும் வாங்கி குடுத்தியா?"

"ஆமாம்" என்றான்.

"எனக்கு ஒன்னும் வேண்டாம்" என்றார் குணமதி

"நீங்க எப்படிக்கா? எடுத்துக்க போறீங்களா, இல்லையா?

"ஏன்? நான் எடுத்துக்கலனா நீ என்ன செய்வ?"

"மூணு வளையலையும் பவித்ராவுக்கு கொடுத்துடுவேன்"

"மூணு வளையலா? ஆனா நீ வாங்குனது ரெண்டு செட் தானே?"

லாலின் மகன் கொடுத்த டப்பாவை திறந்து காட்டினான். அதில் மூன்று ஜோடி வளையல்கள் இருந்தது.

"நான் அவர்கிட்ட மூணு செட் வளையலை பேக் பண்ண சொன்னேன். பாதாம் அல்வா செஞ்சவங்களுக்கு வளையல் கொடுக்கணும்னு நெனச்சேன். அது பவித்ராவா இருந்தா தான் என்ன? நான் எடுத்த முடிவுலஏன் பின் வாங்கணும்...? நினைச்சதை செய்ய நெனச்சேன்...!"

"இப்போ நாங்க என்ன செய்யணும்னு நினைக்கிற?" என்றாள் வெண்மதி.

அவள் கையைப் பிடித்து வளையல்களை அவள் கையில் போட்டு விட்டான். குணமதியை நோக்கி நகர்ந்த போது, அவர் அவனுக்கு எதிர்ப்புறம் திரும்பி நின்று கொண்டார் போலியான கோபத்துடன்.

"மாம், சின்ன குழந்தை மாதிரி நடந்துக்காதீங்க" என்று அவர் கையைப் பிடித்து இழுத்து, அவர் கையில் வளையலை மாட்டி விட்டான். அந்த வளையல்களை பார்த்து புன்னகைத்த குணமதி,

"பவித்ராவுக்கு தேங்க்ஸ்" என்று சிரித்தார்.

"கரெக்டு தான் மா. பவித்ராவால தான் இந்த சிடுமூஞ்சி நமக்கு வளையல் வாங்கி கொடுக்கணும்னு யோசிச்சிருக்கு"

"ஆமாம் இதுவரைக்கும் நமக்கு ஏதாவது வாங்கிக் கொடுக்கணும்னு கூட இவனுக்கு தோனினதே இல்ல"

"மாம், முதல்ல நீங்க ரெண்டு பேரும் நல்லா சமைக்க கத்துக்கோங்க. அதுக்கப்புறம் நான் கிஃப்ட் கொடுக்குறேன்"

அதை கேட்ட குணமதி முறைத்தார்.

"அது சரி, எங்களுக்கு வலையளை போட்டு விட்ட மாதிரி, பவித்ராவுக்கும் போட்டு விடப்போறியா என்ன?" என்றாள் வெண்மதியை கிண்டலாய்.

சில நொடி திகைத்த தூயவன்,

"அப்படி செய்யறதுல எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல..." என்று அவள் அறையில் நோக்கி நடந்தான்.

அம்மாவும் மகளும் விழிகளை விரித்து ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

"மாம், உண்மையிலேயே அவன் போட்டுவிட்டுடுவானா?"

"செஞ்சாலும் செய்வான்"

"வாங்க, போய் பார்க்கலாம்"

"சத்தம் போடத..."

"ஓகே"

அவர்கள் விருந்தினர் அறையை அணுகினார்கள்.

ஏற்கனவே திறந்திருந்த கதவை தட்டினான் தூயவன். பவித்ரா அவனைப் பார்த்து புன்னகைக்க, அவள் அறைக்குள் நுழைந்தான்  தூயவன். மடிக்கணினியில் தான் செய்து கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு எழுந்து நின்றாள் பவித்ரா. அவள் கேள்வி எழுப்பும் முன்,

"உன் கண்ணை மூடு" என்றான்.

"ஆங்...?"

"கண்ணை மூடுன்னு சொன்னேன்"

சரி என்று தலையசைத்து விட்டு, கண்களை மூடிக்கொண்டாள் பவித்ரா. அவள் கையை அவன் தொட்ட போது அவள் முகம் சுருக்கினாள்.

"நான் சொல்ற வரைக்கும் கண்ணை திறக்காத"

அவள் சரி என்று தலையசைத்தாள். அவன் கொண்டு வந்த வளையல்களை அவள் கைகளில் அணிவித்தான். அவன் என்ன செய்கிறான் என்பதை உணர்ந்து கொண்ட போதிலும், அவன் பேச்சுக்கு அடிபணிந்து கண்களை திறக்காமல் நின்றாள் பவித்ரா.

"இப்போ நீ உன் கண்ணை திறக்கலாம்" என்றான்.

கண்களைப் திறந்த பவித்ரா, தன் கையில் இருந்த தங்க வளையல்களை பார்த்து விழிகளை விரித்தாள்.

"அம்மாவுக்கும் அக்காவுக்கும் வளையல் வாங்கி கொடுத்தேன். அப்படியே உனக்கும் வாங்கினேன்"

"ஆனா இது..."

அவளை மேலே பேச விடாமல்,

"நீ செஞ்ச பாதாம் ஹல்வா ரொம்ப நல்லா இருந்தது. தேங்க்ஸ் பார் த டெலிஷியஸ் ஸ்வீட்..." என்று கூறிவிட்டு, அவளுக்கு பேச சந்தர்ப்பம் அளிக்காமல்  நடந்தான்.

"இந்த வளையல்..."

"வச்சுக்கோ பவித்ரா..."

அவனை நோக்கி ஓடிச் சென்ற அவள், அந்த வளையல்களை கழட்டி,

"எனக்கு இது வேண்டாம்" என்றாள்.

அவளை ஊன்றி பார்த்த தூயவன்,

"நீ என் மேல ரொம்ப மரியாதை வச்சிருக்கேன்னு நெனச்சேன். சரி பரவாயில்ல. அதை கொடு"

"நான் அதுக்கு சொல்லல" 

"வேற எதுக்கு சொன்ன? நான் போட்டுவிட்டதை கழட்டிட்ட இல்ல? அதுக்கு என்ன அர்த்தம்?"

"எனக்கு இது ரொம்ப அதிகம்"

"ரொம்ப அதிகம்னா என்ன? எந்த அர்த்தத்தில் சொல்ற?"

"நான் உங்க அம்மாவுக்கும் அக்காவுக்கும் சமமானவ இல்ல.
இது ரொம்ப சங்கடமா இருக்கு

"இதுல என்ன சங்கடம் இருக்கு?"

"நான் என்னோட லிமிட்ல இருக்கணும்னு நினைக்கிறேன்" என்றாள் தலை குனிந்தபடி.

கோபத்தில் தன் கை விரல்களை மடக்கிய அவன்,

"நீ எப்போ உன்னோட லிமிட்டை க்ராஸ் பண்ண?" என்றான்.

"எப்பவும் பண்ண கூடாதுன்னு நினைக்கிறேன்"

"ஓகே, அப்படின்னா அந்த வளையலை குப்பைத் தொட்டியில தூக்கி போடு" என்று கூறிவிட்டு அங்கிருந்து நடந்தான்.

திகிலடைந்து நின்றாள் பவித்ரா. அவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்த குணமதியும் வென்மதியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

தொடரும்...

 

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top