13 கோபக்கனல்
13 கோபக்கனல்
தங்கள் அறைக்கு வந்தார் குணமதி. அங்கு மாயவன் தரையை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தார். அவர் தலையை நிமிர்த்தி குணமதியை பார்க்க, அவரை பார்ப்பதை தவிர்த்த குணமதி, கட்டிலுக்கு சென்று அமர்ந்தார். அவர் படுக்க நினைத்த போது, மாயவன் கூறியதை கேட்டு நின்றார்.
"இந்த விஷயத்தை, நீ யாருக்கும் தெரியாம தனியா பேசி தீர்த்து இருக்கணும்"
"எப்படி? நீங்க வேலையை பத்தி பவித்ராகிட்ட யாருக்கும் தெரியாம தனியா பேசினீங்களே, அப்படியா?"
அவரது குரலில் இருந்த கோபத்தை உணர்ந்தார் மாயவன். ஆம், அவர் கோபமாகத்தான் இருந்தார். ஆனால் தன்னை சமாளித்துக் கொண்டார். ஏனென்றால், அது கோபமாக இருக்க வேண்டிய நேரம் அல்ல.
"இந்த பிரச்சனை இவ்வளவு பூதாகரமா மாறி இருக்காது..." அவர் கேள்விக்கு பதில் அளிக்காமல் கூறினார் மாயவன்.
"அது பூதாகரமா மாறக் கூடாதுன்னு நான் ஏன் நினைக்கணும்? நம்ம குடும்பத்துல பிரச்சனை ஏற்படுத்துறதை பத்தி நீங்க எப்பவாவது கவலைப்பட்டு இருக்கீங்களா? நம்மளோட பிரச்சனையை வெளியில தெரியாம நமக்குள்ளேயே வச்சுக்கணும்னு நீங்க எப்பவாவது நினைச்சதுண்டா?"
"நீ இந்த சந்தர்ப்பத்துக்காகவே காத்திருந்தவ மாதிரி பேசுற, குணா"
"நிச்சயமா இதுக்காகத்தான் நான் காத்துகிட்டு இருந்தேன். இப்படி ஒரு நாள் என் வாழ்க்கையில வராதான்னு தான் நான் காத்துகிட்டு இருந்தேன்" என்றார் வேதனையோடு.
அவரை திகைப்போடு பார்த்தார் மாயவன்
"என்னை ஏன் அப்படி பாக்குறீங்க? நான் இன்னும் எதையும் மறக்கல. உங்களோட நாகரிகம் இல்லாத, சுயநலம் பிடிச்ச, திமிர் புடிச்ச, ஃபிரண்டும் நீங்களும் ஒரு நல்ல பாடத்தை நிச்சயம் கத்துக்கணும்" என்றார் தன் கோபத்தை அடக்கியவாறு.
"நீ எங்க மேல இவ்வளவு கோவமாவா இருக்க?"
"உங்களாலயும், உங்க ஃபிரண்டாலயும் தான் நான் தூயாகிட்ட பேசாம இருக்கேன். எல்லாத்துக்கும் நீங்க தான் காரணம்"
"உன்னோட பிரச்சனையை கொண்டு வந்து நீ ஏன் எங்க கூட சேக்குற?"
"ஏன்னா, இங்க பிரச்சனையே நீங்க தான். நீங்க மட்டும் சரியா இருந்திருந்தா, நம்ம குடும்பம் இப்படிப்பட்ட பிரச்சனைகளை எல்லாம் எதிர்கொள்ள வேண்டி வந்திருக்காது"
"மாதேஷ் ஒரு நல்ல ஃப்ரெண்ட். நம்ம கம்பெனியை அவன் பல தடவை காப்பாத்தி இருக்கான். அவனுக்காக நான் நிற்கிறதுல என்ன தப்பு இருக்கு?"
"அவரு நம்ம கம்பெனியோட பார்ட்னர். உங்களுக்கு இருக்கிற அதே பொறுப்பு அவருக்கும் இருக்கு. நம்ம கம்பெனியை காப்பாத்த வேண்டியது அவருடைய கடமை. அவர் என்னமோ உங்களை மட்டுமே காப்பாத்துறதுக்காக அதை எல்லாம் செஞ்ச மாதிரி நீங்க ஏன் ஓவரா சீன் போடுறீங்க? அவர் உங்களுக்கு ஃப்ரீயா வேலை செஞ்சு கொடுக்கிற மாதிரி அவர் கூட சேர்ந்து ஆட்டம் போடுறீங்க? அவர் எப்பெல்லாம் நம்ம கம்பெனியை காப்பாத்தினாரோ, அப்பெல்லாம் நீங்க அவருக்கு 5% ஷேர்சை கொடுத்து இருக்கீங்க. இல்லன்னு சொல்லுவீங்களா?"
"அதை, அவனுக்கு நானா தான் கொடுத்தேன்"
"ஆமா, நீங்க தான் கொடுத்தீங்க. அப்புறம் எதுக்கு அவருக்கு அடிமை மாதிரி நடந்துக்கிறீங்க?"
"எங்களோட நட்பு உனக்கு அடிமைத்தனமா தெரியுதா?"
"இல்ல, உங்க நட்பு இல்ல... நீங்க மட்டும் தான் அடிமை. ஏன்னா, உங்க ஃபிரண்டு ரொம்ப புத்திசாலி. அவர் யாருக்கும், எதுக்காகவும் அடிமைப்பட மாட்டார், முக்கியமா உங்களுக்கு..."
பெருமூச்சு விட்ட மாயவன்,
"இப்போ நான் என்ன செய்யறது, குணா? தூயவன் சஞ்சனாவை வீட்டை விட்டு அனுப்ப சொல்லிட்டான்..."
"அனுப்பிடுங்க... சிம்பிள்..."
"நான் எப்படி அதை செய்ய முடியும்?"
"அவ எப்படி நம்ம குடும்பத்துல நடக்கிற விஷயத்துல தலையிடலாம்? அதுவும் தூயாவோட விஷயத்துல?"
மாயவன் அமைதி காத்தார். சஞ்சனாவை தூயவனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற மாதேஷின் விருப்பத்தை பற்றி அவர் குணமதியிடம் கூறவில்லை. குணமதி கோபமாய் இருக்கிறார். அதைப் பற்றி பேச சரியான நேரம் அதுவல்ல. ஆனால் பாவம் அவருக்கு தெரியாது, அதை குணமதி ஏற்கனவே கணித்து விட்டார் என்று...! அவரும் கூட மாயவனிடம் அதைப் பற்றி பேச விரும்பவில்லை. ஏனென்றால், அவர் குணமதியின் மனதை மாற்ற முயல்வார். அவருடைய மனதை மாற்றுவது நடக்காத காரியம் என்ற போதிலும், அவர் இதைப் பற்றி பேச விரும்பவில்லை. ஏனென்றால், சஞ்சனாவை அவருக்கு அறவே பிடிக்கவில்லை. அதனால் கட்டிலில் அமைதியாய் படுத்துக்கொண்டார்.
"சஞ்சனாவை இங்க இருக்க வைக்க உன்னால எதுவும் செய்ய முடியாதா?"
"ஏன்? தூயா என்னையும் இந்த வீட்டை விட்டு வெளியில அனுப்பணும்னு நினைக்கிறீங்களா? இந்த விஷயத்துல என்னால எதுவும் செய்ய முடியாது. ஏன்னா, நாங்க ரெண்டு பேரும் பேசிக்கிறது இல்ல. அப்படியே பேசிக்கிட்டாலும், என்னோட எனர்ஜியை ஒரு மரியாதை கெட்ட பொண்ணுக்காக நான் செலவு செய்ய விரும்பல"
"தயவு செய்து, இப்படி எல்லாம் பேசாத, குணா. இது ரொம்ப பெரிய பிரச்சனையை கொண்டு வரும்"
"யாருக்கு?"
மென்று விழுங்கினார் மாயவன். இந்த விஷயத்தில் இழப்பு ஏற்பட போவது என்னவோ மாயவனுக்கும் மாதேஷுக்கும் தான்.
"நம்ம குடும்ப பிரச்சனையையும் ஆஃபீஸ் விஷயத்தையும் ஒன்னா சேர்த்து பார்க்கிறதை இப்பவாவது நிறுத்துங்க. உங்க ஃப்ரெண்டோட லிமிட் என்னன்னு அவருக்கு புரியவைங்க"
மாயவன் ஒன்றும் பேசவில்லை.
"அதை நீங்க செய்யலன்னா, வேற ஒருத்தன் நிச்சயம் செய்வான்" என்று புன்னகைத்தார்.
மாயவனுக்கு தெரியும், அந்த வேறு ஒருவன் தூயவன் தான் என்று. அந்த ஒரு காரணத்திற்காக தானே அவர் பயப்படுகிறார்!!! ஆனால் இந்த விஷயத்தில், தூயவனை விட குணமதி அதிக கோபத்தோடு இருப்பதாய் தெரிகிறது.
அன்று தன் தூக்கத்தை மொத்தமாய் இழந்தார் மாயவன். விடிந்த பிறகு என்ன நடக்கப் போகிறதோ தெரியவில்லை. சஞ்சனாவை அவர் வீட்டை விட்டு அனுப்பியாக வேண்டும். இல்லாவிட்டால் தூயவன் அவரிடம் பேசுவதையே நிறுத்தி விடுவான். தூயவனை சாதாரணமாய் எடுத்துக் கொள்ள முடியாது. பத்து வருடத்திற்கு முன்பு வரை, உயிருக்கு உயிராய் ஒட்டி திரிந்த தன் அம்மாவிடமே அவன் பேசுவதை நிறுத்திவிட்டானே...!
மறுநாள் காலை
குளித்து முடித்து, தூயவன் தனக்கு அளித்த புதிய உடையை அணிந்து கொண்டு, குளியலறையில் இருந்து வெளியே வந்த பவித்ராவை பார்த்து புன்னகைத்தாள் வெண்மதி. அப்போது அங்கு வந்த தூயவன், உள்ளே நுழையாமல் அவர்கள் பேசுவதை கேட்டு நின்றான்.
"இந்த டிரஸ்ல ரொம்ப அசத்தலா இருக்கீங்க, பவித்ரா"
"தூயவன் சார் வாங்கி கொடுத்தாரு, அக்கா"
"ஓ... என் தம்பியோட செலக்சன் எப்பவுமே கிரேட்" என்று அவள் கூற, அது தூயவனை புன்னகைக்க செய்தது.
கண்ணாடியில் தன்னை பார்த்தபடி ஆம் என்று தலையசைத்தாள் பவித்ரா. புன்னகையுடன் உள்ளே நுழைந்த தூயவன், உண்மையிலேயே பார்க்க அசத்தலாய் இருந்த பவித்ராவை பார்த்து திகைத்து நின்றான்.
"தூயா, பவித்ரா அழகா இருக்காங்க இல்ல?" என்று கேட்டு, பவித்ராவை சங்கடத்திற்கு ஆளாக்கினாள் வெண்மதி.
"ரொம்ப..." என்றான் மென்மையான புன்னகையோடு.
"நீ இன்னைக்கு ஆஃபீஸ்க்கு போகலயா?" என்றாள் வெண்மதி.
"நான் இன்னைக்கு ஆஃபீஸ் போய் ஆகணும். ஒரு முக்கியமான வேலையை முடிக்க வேண்டி இருக்கு"
"ஓ..."
"சரி வாங்க, ப்ரேக்ஃபாஸ்ட் சாப்பிடலாம்" என்றான் பவித்ராவை பார்த்தவாறு.
அவள் வெண்மதியை பார்க்க,
"வாங்க போகலாம்" என்றாள் வெண்மதி.
மூவரும் தரைதளம் வந்தார்கள். அவர்கள், குணமதி சமையலறைக்கு செல்வதை பார்த்தார்கள்.
"நான் அம்மாவுக்கு ஹெல்ப் பண்றேன்" என்றாள் பவித்ரா.
"பவித்ரா, நீ சும்மா உட்காரு" என்றான் தூயவன்.
"நீங்க தானே சொன்னீங்க, இது என் குடும்பம்னு? அப்புறம் ஏன் என்னை ஒரு விருந்தாளி மாதிரி நடத்துறீங்க?" என்றாள் அவள் தயக்கத்தோடு.
என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் விழித்தான் தூயவன்.
"அவங்க கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு, தம்பி" என்று சிரித்தாள் வெண்மதி கிண்டலாய்.
"நான் சரண்டர் ஆயிட்டேன்" என்று தன் கைகளை அவன் உயர்ந்த, வெண்மதி சிரித்தாள்.
குணமதிக்கு உதவுவதற்காக சமையலறைக்கு சென்றாள் பவித்ரா. அக்காவும் தம்பியும் சாப்பிட அமர்ந்தார்கள்.
அப்போது அழைப்பு மணியின் ஓசை கேட்டது. கதவை திறக்க தூயவன் எழு முயன்றான். ஆனால் மாயவன் கதவை திறக்க விரைவதை பார்த்து, அவன் மீண்டும் நாற்காலியில் அமர்ந்தான்.
கதவை திறந்த மாயவன், மாதேஷ் நிற்பதை கண்டார். தூயவனும் வெண்மதியும் ஒருவரை ஒருவர் பொருளோடு பார்த்துக் கொண்டார்கள். அவர்களுக்கு நன்றாகவே தெரியும், மாதேஷ் அங்கு எதற்காக வந்திருக்கிறார் என்று. எதையும் சமாளிக்க தன்னை தயார் படுத்திக் கொண்டான் தூயவன்.
"ஹாய் மாயா, ஹாய் தூயவன்" என்றார் மாதேஷ் சகஜமாய், அங்கு நடந்தது எதுவும் தனக்கு தெரியாது என்பதைப் போல்.
லேசாய் தலையசைத்தான் தூயவன்.
அப்போது சமையல் அறையில் இருந்து ஒரு கிண்ணத்தோடு வெளியே வந்தாள் பவித்ரா. அவள் யாராக இருக்கக்கூடும் என்பதை புரிந்து கொண்டு விட்டார் மாதேஷ்.
"ஏய் பொண்ணு" என்று தன் விரல்களை சொடுக்கினார்.
அவரை பார்த்த தூயவன், பவித்ராவை ஏறிட்டான்.
"இங்க வா" என்றார் தெனாவெட்டாக.
தான் கொண்டு வந்த கிண்ணத்தை உணவு மேசையின் மீது வைத்துவிட்டு, அவரை நோக்கி செல்ல ஓர் அடி எடுத்து வைத்த பவித்ராவை கையைப் பிடித்து நிறுத்தினான் தூயவன். அது மாதேஷை எரிச்சல் அடையச் செய்தது.
"உங்களுக்கு என்ன வேணும் அங்கிள்?" என்றான் தூயவன் அவள் கையை விடாமல்.
"எனக்கு தண்ணி வேணும். அதுக்காகத்தான் வேலைக்காரியை கூப்பிட்டேன்"
கோபத்தோடு தன் விரலை மடக்கிய அவன், எழுந்து நின்று,
"அவ வேலைக்காரி இல்ல" என்று, ஒரு நாற்காலியை மரியாதையோடு இழுத்து, அவளை அமரச் சொல்லி செய்கை செய்தான். தன்னை பின்தொடர்ந்து வந்த குணமதியை ஏறிட்டாள் பவித்ரா.
"உக்காரு, பவி. அவன் கொடுக்கிற மரியாதை ஏத்துக்கோ" என்றார் குணமதி.
தயக்கத்தோடு அமர்ந்தாள் பவித்ரா.
"குழந்தை அண்ணா..." என்று வேலைக்காரரை அழைத்தான் தூயவன்.
அவர் சமையலறையில் இருந்து ஓடி வந்தார்.
"அங்கிளுக்கு தண்ணி வேணுமாம். குடுங்க. பாவம், அவர் தண்ணி குடிக்கிறதுக்காகவே அவங்க வீட்ல இருந்து நம்ம வீட்டுக்கு வந்திருக்காரு" என்றான்.
"சஞ்சு எங்க?" என்றார் மாதேஷ், அவனுடைய எள்ளலை பொருட்படுத்தாமல்.
"அவ ரூம்ல இருக்கா" என்றார் மாயவன்.
"ஓ... நான் உன்கிட்டயும், தூயவன்கிட்டயும் ஒரு முக்கியமான விஷயம் பேச வந்தேன்" என்றார் மாதேஷ் தூயவனை பார்த்தபடி.
தன் புருவம் உயர்த்தினான் தூயவன்.
"வா, மாது, நீயும் எங்க கூட சேர்ந்து பிரேக்ஃபாஸ்ட் சாப்பிடு" என்றார் மாயவன்.
"பரவாயில்ல இருக்கட்டும்"
"அப்படின்னா, நாங்க சாப்பிட்டு முடிக்கிற வரைக்கும் வெயிட் பண்ணுங்க" என்று சாவகாசமாய் சாப்பிட துவங்கினான் தூயவன்.
மாதேஷ் மாயவனை பார்க்க, அவர் தலை தாழ்த்திக் கொண்டார்.
"என்னை அவமானப்படுத்த கிடைக்கிற எந்த சந்தர்ப்பத்தையும் தூயவன் மிஸ் பண்றது இல்ல" என்றார் மாதேஷ்.
"அவனுக்கு பசிக்குதுன்னு நினைக்கிறேன்" என்றார் மாயவன்.
"யார் அந்த பொண்ணு?" என்றார் மாதேஷ் சற்று சத்தமாய்.
"அவ தூயவனோட கெஸ்ட். அவங்க அப்பா, அவனோட உயிரை காப்பாத்தி இருக்காரு"
"ஓ... அந்த பொண்ணு இவ தானா? நானும் அந்த கதையை கேட்டேன்" என்றார் நக்கலாய்.
அவர்கள் பேசுவதை தூயவன் கேட்டுக் கொண்டிருந்தான் தான். ஆனால் எதற்காகவும் அவன் அவர்களை திரும்பி பார்க்கவே இல்லை.
தன் தந்தையின் குரலைக் கேட்டு, சஞ்சனா அங்கு ஓடி வந்தாள். அவரை பார்த்தவுடன் அவளது முகம் மலர்ந்தது.
மாதேஷ் உணவு மேசையை நோக்கி சென்றார்.
"தூயவன், நீ என்ன செய்றன்னு உனக்கு தெரியுதா?"
அவரைப் பார்த்த தூயவன்,
"ப்ரேக்ஃபாஸ்ட் சாப்பிடுறேன்" என்றபடி ஒரு பூரியை தன் வாயில் வைத்து அழுத்தினான்.
"ஒரு, வயசு பொண்ணை இந்த வீட்ல வச்சிருக்கிறது மாயவனோட மரியாதையை கெடுக்கும்"
விரல்களை மடக்கி கோபத்தை கட்டுப்படுத்த முயன்றான் தூயவன். அவன் கையை பற்றி அழுத்தினாள் வெண்மதி, அவனை அமைதி அடையச் செய்யும் நோக்கத்துடன். தன்னை சமாளித்துக் கொண்ட தூயவன்,
"நீங்க சொல்றது ரொம்ப சரி, அங்கிள். அதனால தான் சஞ்சனாவை இந்த வீட்டை விட்டு போக சொன்னேன். அவளை உங்க கூட கூட்டிக்கிட்டு போங்க" என்றான்.
"நான் இந்த பொண்ணை பத்தி பேசிக்கிட்டு இருக்கேன்" என்றார் அவர் கோபமாய்.
"அதை சொல்ல நீங்க யாரு?" என்று எழுந்த தூயவன், தான் அமர்ந்திருந்த நாற்காலியை எட்டி உதைத்தான்.
அவன் கோபத்தை பார்த்து பின் வாங்கினார் மாயவன்.
"எங்களை விட இந்த பொண்ணு உனக்கு ரொம்ப முக்கியமா?"
"நீங்க யாரு? நீங்க யாரு எனக்கு? எங்க அம்மாவுக்கு நீங்க என்ன வேணும்? இல்ல, என் அக்காவுக்கு தான் நீங்க என்ன வேணும்?" என்று அவரை நோக்கி கோபமாய் நகர்ந்தான்.
"நான் உங்க அப்பாவோட ஃப்ரெண்ட். நான் எது செஞ்சாலும் உன் நல்லதுக்கு தான் செய்வேன்"
"நான் ஒன்னும் குழந்தை இல்ல. எனக்கும், என் குடும்பத்துக்கும் எது நல்லதுன்னு எனக்கு நல்லாவே தெரியும்"
"அது உண்மையா இருந்தா, உனக்கு பொருந்தாதவங்களை உன் குடும்பத்தை விட்டு நீ தூரமா வைக்கணும்" என்றார் பவித்ராவை பார்த்தபடி.
"அதைத்தான் நான் செஞ்சுக்கிட்டு இருக்கேன். எங்க ஃபேமிலிகிட்ட இருந்து விலகி நில்லுங்க"
அவனது நேரடி தாக்குதல் மாயவனையும் மாதேஷையும் ஆட்டம் காண செய்தது.
"நீங்க சொல்றதுக்கு எல்லாம் தலையாட்டிகிட்டு நிக்க நான் ஒன்னும் மாயவன் இல்ல, மிஸ்டர் மாதேஷ். என் குடும்ப விஷயத்துல இருந்தும், என்கிட்ட இருந்தும் விலகி நில்லுங்க" என்றான் பல்லைக் கடித்துக் கொண்டு
"எதுக்காக நீ புரிஞ்சுக்கவே மாட்டேங்குற, தூயவன்?"
"மத்த எல்லாரையும் விட நான் உங்களை ரொம்ப நல்லாவே புரிஞ்சு வச்சிருக்கேன். உங்களால தான் எங்க குடும்பம் நரகத்தை அனுபவிச்சது. அதைக் கூட நான் மன்னிச்சிடுவேன். ஆனா, எங்க அக்காவுக்கு நீங்க செஞ்சதை மட்டும் நான் எப்பவும் மன்னிக்கவே மாட்டேன். உங்களால தான் அவங்க வாழ்க்கையை இழந்து நிக்கிறாங்க. உங்களால தான் அவங்க இன்னைக்கு விதவையா நிக்கிறாங்க..." என்று உணவு மேசையை கோபமாய் ஓங்கி குத்தினான் தூயவன்.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top