கோவில்

அன்று பகல் தாண்டுவதற்குள் அந்த முழு கிராமத்தையும் சுற்றி பார்த்துவிட்டேன். அங்கே எந்த ஒரு சுவாரசியமான விஷயமும் என் கண்ணுக்கு தென்படவில்லை.

எங்கு பார்த்தாலும், காற்றடித்தால் இடிந்து விடும் என்ற நிலையில் நிற்கும் மண் குடிசைகள். மகிழ்ச்சி என்ற வார்த்தையையே அறிந்திராத முகம் கொண்ட மழலைகள். பழமை மாறாத கிராமவாசிகளின் பேச்சு. குழிவிழுந்த முகங்கள். எலும்புகளை விரல்விட்டு எண்ணிவிடும் அளவிலான நோஞ்சான் உடல்வாகு. இவர்களை வைத்து ஆவணப்படம் எடுக்கலாமே ஒழிய கதை எழுதுவது சிரமமே.

இவர்கள் ஊரே நலிவடைந்த நிலையில் இருக்கையில், அவ்வூர் கோவில் மட்டும் புதுமை மாறாமல் காட்சியளித்தது. கோவில் கோபுர சிற்பங்கள் அவற்றை செதுக்கிய சிற்பியின் கலைத்திறமையை மென்மைப்படுத்திக் காட்டிக்கொண்டிருந்தது. அவற்றிற்கு நுணுக்கமாக வர்ணங்கள் தீட்டப்பட்டிருந்தது.

கோவிலின் உள்ளே இருந்த சுவர்களில் வரையப்பட்டிருந்த திருவிளையாடல் ஓவியங்களும், முருகப்பெருமானின் பிறப்பு, வளர்ப்பு, சூரசம்ஹாரம் போன்ற ஓவியங்களும், மேற்புற சுவர்களில் தீட்டப்பட்டிருந்த வேறு சில ஓவியங்களும் உயிரோவியங்களாக கண்களை கவர்ந்து நின்றன.

தூண்களில் செதுக்கப்பட்டிருந்த சிலைகள் அப்பப்பா என்ன ஒரு அருமையான வேலைப்பாடுகள். ஒவ்வொரு சன்னதியும் ஒவ்வொரு விதமான அமைப்பில் கட்டப்பட்டிருந்தது. குறிப்பாக மூலவர் சன்னதி ஒரே பாறையால் குடைந்து கட்டப்பட்டது என்று அவர்கள் கூறக்கேட்டேன்.

அதுமட்டுமல்லாமல், சுவர்களிலும், தூண்களில் பழங்கால தமிழ் எழுத்துக்களும், அந்தப் பகுதியை வெவ்வேறு காலத்தில் ஆண்ட மன்னர்களின் முத்திரைகளை பொறிக்கப்பட்டிருந்தன.

இந்த ஊரிலா இந்தக்கோவில் இருக்கவேண்டும், என்ற எண்ணம் தோன்றும். இந்தக்கோவிலுக்கு கொடுத்துவைத்தது அவ்வளவு தான் என்று எண்ணி மனதை தேற்றிக்கொண்டு ஊருக்கு கிளம்பலாம் என்று நடந்தேன்.

"தம்பி, எங்க ஊருக்கு ஒருநாளைக்கு ஒரு பஸ் தான் வரும். அடுத்த பஸ் நாளைக்கி காலைல தான். நீங்க இங்கயே தங்கிக்கோங்க", என்றார் ஒரு கிழவர். நானும் வேறு வழியின்றி அவரது வீட்டினுள் சென்று சிறிது களைப்பாறினேன்.

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top