கன்னலூர் கிராமம்

பேருந்தை விட்டு இறங்கிய எனக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. இப்படியா என் கனவுகள் மண்ணாய் போகவேண்டும்?????

கிராமம் என்று சொன்னதும், "ஊர் எல்லையில் குதிரையில் அமர்ந்திருக்கும் முருக்கிய மீசையுடன் சிவந்த கண்களுடனும் கையில் கூரான ஆயுதங்கள் தாங்கிய காவல் தெய்வம், அங்கே படையல் வைக்கும் வயதான மூதாட்டிகள், ஆங்காங்கே உயர்ந்து நிற்கும் சுமைதாங்கி கற்கள்.

ஊருக்கு உள்ளே செல்ல ஒரேயொரு ஒற்றையடிப் பாதை. அந்த பாதையின் ஒரு பக்கம் ஓடும் தெளிவான நீரோடை. நீரோடை முடிவில் வயல்வெளி. வயல்வெளிக்கு எல்லையென விண்ணை முட்டும் பனை மற்றும் தென்னை மரங்கள்.

கன்னலூர் என்ற பெயருக்கு ஏற்ப வயலில் ஆடம்பரமாக தொகையை விரித்து நிற்கும் செங்கரும்புகள் இன்னும் என்னென்னவோ", கற்பனையில் மிதந்திருந்தேன்.

ஆனால் இங்கே அனைத்தும் தலைகீழ்.

ஊர் எல்லை என்பதை குறிக்கும் சிதிலடைந்த ஒரு பெயர் பலகை. அது அங்கே இருப்பதற்கு இல்லாமையே மேல் என்று எண்ண வைத்தது. அந்தப் பலகை காட்டும் திசையில் நடந்தால், பேய் பிசாசுகளுக்காகவே கட்டி வைத்தாற்போல ஒரு பாழடைந்த மண்டபம்.

ஆள் அரவமற்ற அந்த இடத்தில் இருந்த அம்மண்டபம், பகலிலேயே பயமுறுத்தியது. 'ஓவென' வீசும் மணற்காற்றும் உடன் சேர்கையில் உள்ளுக்குள்ளே 'பகீர்' என்று இருந்தது எனக்கு. நல்ல வேளை, பகலில் வந்தேன். இரவில் இங்கே இறங்கியிருந்தால் என்னவாயிருக்கும்.

இந்த நினைப்புடன் அங்கே அதிக நேரம் நிற்காமல் விறுவிறுவென நடக்க ஆரம்பித்தேன்.

வழியில் நிழலுக்கு ஒதுங்க ஒரு மரம் கூட இல்லை. இன்னும் சொல்லப்போனால், பச்சை நிறத்தை கண்ணால் கூட கண்டிராத ஊராக இருந்தது கன்னலூர். வயல்களில் வளர்ந்திருந்த கருவேல மரங்களை பார்க்கையிலும், நிலத்தின் வெடிப்புகளை பார்க்கையிலும் மழை கைவிட்ட பூமி இதுவென்று புரிந்தது.

'எல்லாம் என் விதி. நானாக முன்வந்து ஆராய இந்த ஊரையா தேர்ந்தெடுக்க வேண்டும்??', என்று என்னையே நொந்துகொண்டு ஊரினுள் நடந்தேன்.

அந்த ஊரில் மொத்தமாக ஒரு 250-300பேர் தான் இருப்பர். அதில் முக்கால்வாசி தலை நரைத்த கிழடுகள். அந்த ஊரின் பழக்க வழக்கங்களை பற்றியும் இங்கே நடக்கும் சில சுவாரசியமான நிகழ்வுகளை பற்றியும் ஆராயவே நான் இங்கு வந்திருந்தேன். என் பெயர் ஜெகன். ஜெகன்நாத். ஜெகன்நாத் அழகேந்திரன்.

ஆராய்ச்சி என்றதும் என்னை மாணவன் என்றோ, ஆய்வாளன் என்றோ என்ன வேண்டாம். நான் ஒரு எழுத்தாளன். கிராமங்களை பற்றி ஒரு தொடர் எழுதவே இந்த கிராமத்தை பற்றி ஆராய வந்தேன். ஆனால் இங்கே எனக்கு எந்த ஒரு சுவாரசியமான கதையும் கிடைக்காது என்று புரிந்தது. சரி வந்தது தான் வந்தோம் ஊரை முழுமையாகவாவது பார்த்துவிட்டு போகலாமே என்று எண்ணி மேலும் நடந்த எனக்கு இங்கே இப்படிப்பட்ட ஆச்சரியமான அனுபவம் கிடைக்கும் என்று முன்பு தெரிந்திருக்கவில்லை.

என் வாழ்வை மாற்றிய அந்த அனுபவம் தான் என்ன?????

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top