3 பொம்மி
3 பொம்மி
எண்ணச் சூழல்களுக்கு இடையில் சிக்கித் தவித்தவனாய் காரை ஓட்டிச் சென்றான் விக்ரம். பொம்மியை பற்றி கேட்ட போது, எதற்காக அவனுடைய அம்மா அவனிடம் எதுவும் கூறவில்லை? அவர்கள் முன்பு வசித்து வந்த வீட்டில் இப்போது அவர்கள் இல்லை என்ற விஷயத்தை ஏன் அவனிடம் கூறவில்லை? எதற்காக அவர்கள் இங்கிருந்து சென்றார்கள்? அவர்கள் இங்கிருந்து சென்றதைப் பற்றி கூட ஏன் யாருமே அவனுக்கு தெரிவிக்கவில்லை? சொல்லப் போனால், அவனிடம் பொம்மியை பற்றி, கடந்த ஆண்டுகளில் யாரும் ஒன்றும் பேசவில்லை. அவன் சிறு வயது பிள்ளை என்பதால் தான் யாரும் அவனிடம் பேசவில்லை என்றும், தான் திருமண வயதை அடைந்த பிறகு அதை பற்றி அவனிடம் பேசுவார்கள் என்றும் எண்ணியிருந்தான் விக்ரம். ஆனால் இது வித்தியாசமாய் படுகிறது. தன் வீட்டில் நடந்த பார்ட்டிக்கு கூட அவர்களை அழைக்கவில்லை. அவன் கேட்ட கேள்விக்கு கூட பதில் அளிக்காமல் அவனுடைய அம்மா தவிர்த்துவிட்டார். இங்கு என்ன நடக்கிறது?
கடந்த காலத்தில் நிகழ்ந்தவற்றை நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை அவனால்.
பனிரெண்டு ஆண்டுகளுக்கு முன்...
விக்ரமின் தாத்தா வீராதித்தனின் மிக நேர்மையான ஊழியர் சிவராமன். ஒரு பைசா கூட பாக்கியில்லாமல் கணக்கு கொடுக்க கூடியவர். அவ்வளவு நேர்மையான ஒருவரை, தனது குடும்பத்தில் ஒருவராகவே வீராதித்தன் நினைத்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஆனாலும், சிவராமன் எப்போதும் தனது எல்லைக்குள்ளேயே நின்றார். வீரவாதித்தன் தனக்கு அளித்த *சலுகைகளை* அவர் எப்போதும் *உரிமையாய்* எடுத்துக்கொண்டது இல்லை.
அதற்கு பின்னால் வேறு ஒரு முக்கிய காரணமும் இருந்தது... ராணி நந்தினி தேவி... சிவராமன் தன் எல்லையை மீறக் கூடாது என்று அவருக்கு நேரடியாகவே உத்தரவிட்டிருந்தார் நந்தினி தேவி. சிவராமன் தனது தகுதியை நன்றாகவே உணர்ந்தவர் என்பதால், நந்தினி தேவியின் கட்டளை பற்றி அவர் வருத்தம் கொள்ளவில்லை. அவருக்கு நந்தினி தேவியின் சுபாவம் பற்றியும், அவருடைய ராஜ கௌரவம் பற்றியும் நன்றாகவே தெரிந்திருந்தது.
ஒரு முக்கியமான கோப்புடன் பொன்னகரம் வந்தார் சிவராமன். அவர் எதிரில் வேகமாய் ஓடி வந்த விக்ரம், அவர் வந்ததை கவனிக்காமல் அவர் மீது மோதிக் கொண்டான். சிவராமன் கையிலிருந்த கோப்பு கீழே விழுந்தது. உடனே தரையில் மண்டியிட்டு அமர்ந்து, அந்த கோப்பிலிருந்து விழுந்த காகிதங்களை சேகரிக்க துவங்கிய விக்ரம்,
"சாரி அங்கிள்" என்றான் வருத்தத்துடன்.
"நீங்க விடுங்க சின்ன முதலாளி, அதை நான் எடுத்துக்கிறேன்" என்றார் சிவராமன் சுற்றுமுற்றும் பார்த்தபடி.
அந்த காகிதங்களை எடுத்துக் கொண்டிருந்த விக்ரமின் கரங்கள் அப்படியே நின்றது, அதில் இருந்த, பளபளப்பான *பேஜ் மார்க்கரை* பார்த்த போது. ஒரு பெண், பூங்கொத்துடன் நிற்பது போல், அந்த பேஜ் மார்க்கர், பளபளக்கும் வண்ணங்களினால் மிக அழகாக வண்ணம் தீட்டப்பட்டிருந்தது. அதை கையில் எடுத்த விக்ரம்,
"சோ பியூட்டிஃபுல்..." என்றான்.
"என்னோட பொண்ணு பண்ணது" என்றார் சிவராமன்.
"நெஜமாவா? அவளுக்கு இதெல்லாம் கூட செய்ய தெரியுமா?"
"ஆமாம். ஃப்ரீ டைம்ல ஏதாவது செஞ்சுகிட்டு இருப்பா"
"அவ என்ன படிக்கிறா?"
" ஃபோர்த் ஸ்டாண்டர்ட்"
"அவளுக்கு இதெல்லாம் யார் சொல்லிக் கொடுக்கிறா?"
"யாரும் இல்ல. புக்கையும், டிவியையும் பார்த்து அவளே செய்வா"
"இது ரொம்ப அழகா இருக்கு. நான் இதை எடுத்துக்கட்டுமா?"
நந்தினி தேவி என்ன கூறுவார் என்று எண்ணியபடி தயங்கி நின்றார் சிவராமன். தன்னிடம் பணிபுரியும் வேலையாட்களிடம் இருந்து விக்ரம் எதுவும் பெறுவதை அவர் விரும்புவதில்லை. ஆனால், விக்ரமின் எதிர்பார்ப்பு நிறைந்த முகத்தைப் பார்த்த போது, முடியாது என்று கூறவும் அவரால் முடியவில்லை.
"பொம்மிகிட்ட சொல்லி, எனக்கும் ஒரு பேஜ் மார்க்கர் செய்ய சொல்லுங்க" என்ற குரல் கேட்டு இருவரும் திரும்பி பார்க்க, அங்கு வீராதித்தன் நின்றிருந்தார்.
"வணக்கம் முதலாளி" என்றார் சிவராமன்.
அவரை நோக்கி ஓடிய விக்ரம்,
"தாத்து... இங்க பாருங்க, இது எவ்வளவு அழகா இருக்கு..." என்று அவரிடம் காட்டினான்.
சிவராமனை நோக்கி தன் பார்வையை திருப்பினார் வீராதித்தன்.
"சின்ன எஜமானுக்கு இது பிடிச்சிருக்கு" என்றார் சிவராமன் தயக்கத்துடன்.
"அவனை அப்படி கூப்பிடாதீங்கன்னு உங்களுக்கு எத்தனை தடவை சொல்றது, சிவராமன்?"
"அப்படி கூப்பிட்டு எனக்கு பழகிடுச்சு" என்றார் அடக்கமாக.
"விக்ரம்னு கூப்பிடுங்க, இல்லன்னா சின்னான்னு கூப்பிடுங்க"
ஒன்றும் சொல்லாமல் நின்றார் சிவராமன்.
"உனக்கு இது பிடிச்சிருக்கா?" என்றார் வீராதித்தன் விக்ரமிடம்.
"ரொம்ப பிடிச்சிருக்கு தாத்து... நான் ஸ்டோரி புக் படிக்கும் போது இதை யூஸ் பண்ணிக்குவேன்"
"சரி எடுத்துக்கோ" என்றார் சிவராமனை பார்த்தபடி.
"தேங்க்யூ தாத்து... தேங்க்யூ அங்கிள்" இரண்டடி எடுத்து வைத்துவிட்டு நின்று,
"பொம்மிக்கும் நான் தேங்க்ஸ் சொன்னேன்னு சொல்லிடுங்க" என்று தன் அறைக்கு சென்ற விக்ரம், அந்த பேஜ் மார்க்கரை தன் புத்தகத்தின் உள் வைத்துக்கொண்டான்.
மறுநாள்
புத்தகம் வாங்க வேண்டும் என்று விக்ரம் கேட்டதால், அவனை கார் ஓட்டுநருடன் புத்தக கடைக்கு அனுப்பி வைத்தார் சாவித்திரி. அங்கு கதைப் புத்தகங்களும், காமிக்ஸ் புத்தகங்களும் வாங்கிக் கொண்டான் விக்ரம். அங்கு கைவினைப் பொருட்கள் சம்மந்தமான புத்தகத்தைப் பார்த்த போது, அவனுக்கு சிவராமனின் மகளின் நினைவு வந்தது. எதைப் பற்றியும் யோசிக்காமல் அதையும் வாங்கிக் கொண்டான்.
வீட்டுக்கு திரும்பி வரும் வழியில், சிவராமன், ஒரு கோவிலுக்குள் செல்வதை கவனித்தான் விக்ரம்.
"டிரைவர் அங்கிள், காரை நிறுத்துங்க" என்றான்.
ஓட்டுனர் காரை நிறுத்தியது தான் தாமதம், தான் வாங்கிய புத்தகத்தை எடுத்துக் கொண்டு, காரை விட்டு கீழே இறங்கி கோவிலை நோக்கி ஓடினான். கோவிலின் உள்ளே நுழைந்து சிவராமனை தேடினான். அவர் கர்ப்பகிரகத்தின் முன்பு நின்று, சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தார். தனது சின்ன எஜமானை அங்கு பார்த்த சிவராமன் ஆச்சரியமடைந்தார்.
"நீங்க இங்க என்ன செய்றீங்க சின்ன எஜமான்?"
"என்னை அப்படி கூப்பிட கூடாதுன்னு தாத்தா சொன்னார் இல்ல?"
சிவராமனுக்கு ஐயோ என்று இருந்தது. மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் இடி என்பதைப் போல, இரு புறமும் இருந்து, இரு வேறு ஆணைகளை பிறப்பித்தால் அவர் என்ன தான் செய்வார்? விக்ரமை மரியாதையுடன் அழைக்க வேண்டும் என்பது நந்தினி தேவியின் கட்டளை. ஆனால் வீராதித்தனோ, அதற்கு நேர்மாறாக கூறுகிறார்.
"நீங்க யார் கூட கோவிலுக்கு வந்தீங்க?"
"உங்களை இங்க பார்த்துட்டு தான் நான் கோவிலுக்கு வந்தேன்"
"என்னைப் பார்த்து எதுக்காக வந்தீங்க?"
"இந்த புக்கை உங்ககிட்ட கொடுக்க"
"இது என்ன புக்?"
"ஹாண்ட் க்ராஃப்ட் புக்"
"ஓஹோ... இதை பொம்மிக்காக வாங்கினீங்களா?"
"ஆமாம்" அந்தப் புத்தகத்தை அவரிடம் நீட்டினான்.
"இதை நீங்களே அவகிட்ட குடுங்களேன்"
"அவளை நீங்க வீட்டுக்கு கூட்டிக்கிட்டு வரப் போறீங்களா?"
"இல்ல. அவ இங்க தான் இருக்கா. இன்னைக்கு அவளுக்கு பர்த்டே"
"அப்படியா...? எங்க அவ?"
"பொம்மி... இங்க வா..."
ஒன்பது வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருத்தி, பட்டுப்பாவாடை சட்டை அணிந்து, தனது நீண்ட கூந்தலை முன் பக்கமாக போட்டபடி அவர்களை நோக்கி வந்தாள்.
"பொம்மி, நான் உன்கிட்ட சொன்னேன் இல்ல, சின்ன எஜ..." எஜமான் என்பதை கூறி முடிக்காமல் நிறுத்தினார் சிவராமன்.
அவளிடம் அந்த புத்தகத்தை நீட்டிய விக்ரம்,
"ஹாப்பி பர்த்டே" என்றான்.
"தேங்க்யூ, சின்ன எஜமான்" என்றாள் பொம்மி.
"நீயுமா? " என்று அலுத்துக் கொண்டான் விக்ரம்.
ஒன்றும் புரியாமல் சிவராமனை பார்த்தாள் பொம்மி.
"என்னை எஜமான்னு கூப்பிடாத. புரிஞ்சுதா?" என்றான் ஆணையிடும் தொணியில்.
சரி என்று தலையசைத்துவிட்டு அவனை நோக்கி இனிப்பு டப்பாவை நீட்டினாள் பொம்மி. அதிலிருந்து ஒரு லட்டுவை எடுத்துக் கொண்டான் விக்ரம்.
"நீ செஞ்சிருந்த பேஜ் மார்க்கர் ரொம்ப அழகா இருந்தது. எனக்கு அது ரொம்ப பிடிச்சிருந்தது. இந்த புக்ல அந்த மாதிரி நிறைய யூஸ்ஃபுல் திங்க்ஸ் இருக்கு. உனக்கு அதெல்லாம் நிச்சயம் பிடிக்கும்" என்றான்.
அந்த புத்தகத்தின் பக்கங்களை திருப்பிய பொம்மியின் முகம் பிரகாசம் அடைந்தது.
"உனக்கு பிடிச்சிருக்கா?" என்றான்.
ஆமாம் என்று தலையசைத்துவிட்டு, மறுபடியும்,
"தேங்க்யூ" என்றாள் புன்னகையுடன்.
அப்பொழுது அவர்களுடைய கார் ஓட்டுனர், கோவிலினுள் வந்து விக்ரமை தேடுவதை கவனித்தார் சிவராமன்.
"அண்ணாமலை உங்களைத் தேடுறாரு. ராணியம்மா உங்களுக்காக காத்திருப்பாங்க"
"ஓகே அங்கிள்... பை பொம்மி"
"பை" என்று கையசைத்தாள் பொம்மி.
"பொம்மி, இந்த பெயர் உனக்கு நல்லாவே சூட் ஆகுது. நீ பாக்க பொம்மை மாதிரி தான் இருக்க" என்று கூறி விட்டு சிரித்துக் கொண்டு சென்றான் விக்ரம்.
"அப்பா, வைஷாலின்னு பேர் வச்சிட்டு ஏம்பா என்ன பொம்மியின் கூப்பிடுறீங்க?" என்று சிணுங்கினாள் பொம்மி.
"ஏன்னா, நீ பொம்மை மாதிரி இருக்க" என்று சிரித்தார் சிவராமன்
"போங்கப்பா..." என்று சிணுங்கியபடி ஓடினாள் பொம்மி என்னும் வைஷாலி.
(பொம்மி என்பது அவளுடைய செல்லப் பெயர். அவளுடைய பெயர் வைஷாலி என்பது அவளுடன் பள்ளியில் பயிலும் மாணவர்களை தவிர பெரும்பாலானவர்களுக்கு தெரியாது... விக்ரம் உட்பட...)
பொன்னகரம்
தங்கள் இல்லத்தினுள் விக்ரம் நுழைந்த போது, அவனுக்காக காத்திருந்தார் ராணி நந்தினி தேவி. அவரருகில் பதட்டத்துடன் நின்றிருந்தார் சாவித்திரி.
"விக்ரம்... " நந்தினி தேவியின் உறுதியான குரல் அவனை நகரவிடாமல் தடுத்து நிறுத்தியது.
"எங்க போய்ட்டு வர?"
"புக்ஸ் வாங்கப் போனேன்"
"நான் வேற ஏதோ கேள்விப்பட்டேனே..."
அவரருகில் நின்றிருந்த சாவித்ரியை கவனித்தான் விக்ரம். அவர், அவனுக்கு கோவில் கோபுரத்தை போல் கைகளை குவித்துக் காட்டினார்.
"எதுக்காக கோவிலுக்கு போனே?"
"கோவிலுக்கு போறது தப்பா?"
"என்னை பதில் கேள்வி கேக்குறதை நிறுத்து, விக்ரம். நீ உன்னோட பாட்டிகிட்ட பேசிகிட்டு இருக்கேன்னு மறந்துடாத"
"நான் அதை மறக்கல, பாட்டி. நீங்க தான் நான் உங்க பேரன்ங்குறதை மறந்துட்டு, என்னை வேலைக்காரன் மாதிரி நடத்துறீங்க"
"விக்ரம், என்ன பேசுறேன்னு யோசிச்சு பேசு"
"கோவிலுக்கு போனா என்ன தப்பு? வீட்ல சாமி கும்பிட சொல்லி என்னை கட்டாயபடுத்துறீங்க. ஆனா, கோவிலுக்கு போனா, ஏன் போனேன்னு கேக்குறீங்க..."
"நீ கோவிலுக்கு போறது தப்புன்னு நான் சொல்லல. ஆனா, தகுதியில தாழ்ந்தவங்களை நீ சந்திக்கிறதை தான் தப்புன்னு சொல்றேன்"
"நான் நம்ம சிவராமன் அங்கிளை தானே பார்த்தேன்?"
"அவனை நீ அங்கிள்ன்னு கூப்பிடாதே"
விக்ரம் அவருக்கு பதில் கூறும் முன்,
"ஏன்...? ஏன் அவன் சிவராமனை அங்கிள்ன்னு கூப்பிடக் கூடாது?" என்றார் விராதித்தன்.
"அவன் நம்ம வேலைக்காரன்"
"முதலில் அவன் ஒரு மனுஷன்"
"நீங்க எல்லாத்துக்கும் இப்படி என்கிட்ட விவாதம் பண்ணிக்கிட்டு இருந்தா, விக்ரம் என்னை எப்படி மதிப்பான்?"
"உன்னோட ராஜ பரம்பரை திமிரை ஓரமா வச்சிட்டு, அவனுக்கு நல்ல விஷயங்களை சொல்லிக் கொடு. உன்னை தானாவே அவன் மதிப்பான்"
"நீங்க அவனைக் கெடுக்குறீங்க"
"மத்தவங்களை மதிக்கிறதுனால தான் அவன் கெட்டுப் போறான்னா, அவன் தாராளமா கெட்டுப் போகட்டும். என் பேரன் கெட்டவன்னு நான் சந்தோஷமா சொல்லிக்கிவேன்"
எரிச்சலுடன் அங்கிருந்து நகர்ந்தார் நந்தினி. விக்ரமின் தோளை தட்டிக் கொடுத்தார் வீராதித்தன்.
"நான் பொம்மிக்கு ஒரு ஹாண்ட் கிராஃப்ட் புக் கொடுத்தேன். அதுக்கு போய் பாட்டி என்னை திட்டுறாங்க தாத்து..."
"போகட்டும் விடு... பொம்மிக்கு அந்த புக் பிடிச்சிருந்ததா?"
"பிடிச்சிருந்தது... இன்னைக்கு அவளோட பர்த்டே"
"நெஜமாவா?"
"ஆமாம் "
"அவ என்ன சொன்னா?"
"தேங்க்யூ சின்ன எஜமான்" என்று அவள் கூறியது போல் மெல்லிய குரலில் கூறி காட்டி சிரித்தான்.
வாய்விட்டு சிரித்தார் வீராதித்தன்.
"அவ உன்னை சின்ன எஜமான்னா கூப்பிட்டா?"
"ஆமாம் தாத்து... என்னை அப்படி கூப்பிட கூடாதுன்னு நான் ஆடர் போட்டுட்டேன்"
"ஆடர் போட்டியா?" என்றார் வியப்புடன்.
ஆமாம் என்று தலையசைத்தான் விக்ரம்.
"நமக்கு முன்னாடி நிக்கிறவங்க யாரா இருந்தாலும் சரி, நம்ம யாருக்கும் ஆடர் போடக் கூடாது. இந்த உலகத்தில எல்லாருமே சமமானவங்க தான்"
"அப்படின்னா, பாட்டி ஏன் எல்லாருக்கும் ஆடர் போடறாங்க?"
"ஏன்னா, அவங்க எல்லாருக்கும் சம்பளம் கொடுக்கிறாங்கல்ல... அதனால எல்லாரையும் விட அவங்க தன்னை உயர்வா நினைக்கிறாங்க"
"அப்படி நினைக்க கூடாதா?"
"கொஞ்சம் யோசிச்சு பாரு... உங்க பாட்டிக்காக வேலை செய்ய யாருமே தயாரா இல்லன்னா என்ன ஆகும்? அவங்க என்ன செய்வாங்க?"
"எல்லா வேலையையும் அவங்களே செய்யணும் இல்ல?" என்றான் யோசனையுடன்.
ஆமாம் என்று தலையசைத்தார் வீராதித்தன். அப்படி ஒரு நிலை வந்தால், உயிரை விடுவாரே தவிர வேலையை செய்ய மாட்டார் நந்தினி தேவி என்று அவருக்கு தெரியும்.
நந்தினி தேவியை பொருத்தவரை, விக்ரமுக்கு நல்ல குணநலன்களை கற்பித்து, அவனை வீராதித்தன் கெடுப்பதாகவும், அவரால் தான், விக்ரம் அனைவரையும் சரிசமமாய் நடத்த பழகி விட்டான் என்றும் நினைத்தார். தனது பாட்டியை விட, தாத்தாவை அதிகம் விரும்பினான் விக்ரம். நந்தினி தேவியின் சாயல், விக்ரமின் மீது விழுந்து விடக்கூடாது என்பதில் வீராதித்தன் கவனமாக இருந்தார் என்றே சொல்லலாம். தனது மகன் விமலாதித்தனை தான் தன் விருப்பத்திற்கு ஏற்ப அவரால் வளர்க்க முடியாமல் போய்விட்டது. அந்த தவறை விக்ரம் விஷயத்தில் செய்யக் கூடாது என்று நினைத்தார் அவர். விக்ரமுக்கு தனது பாட்டியின் மீது மரியாதை இருந்தது... ஆனால் அன்பு...? அவர் மீது அன்பு செலுத்தும் அளவிற்கு ஒரு சந்தர்ப்பத்தை விக்ரமுக்கு நந்தினி தேவி வழங்கவே இல்லை. அவனுக்கு கட்டளையிடுவது, திட்டுவது, அவன் செய்யும் காரியங்களை செய்ய விடாமல் தடுப்பது, அவனுக்கு ஏமாற்றம் அளிப்பது என்று இருந்தால், அவனுக்கு அவர் மீது எப்படி அன்பு ஏற்படும்?
பொன்னகரத்தின் சூழ்நிலை இப்படித் தான் இருந்தது. அதன் முழு கட்டுப்பாட்டையும் தனது காலடியின் கீழ் வைக்க வேண்டும் என்று நினைத்தார் ராணி நந்தினி தேவி. அதை அவர், விமலாதித்தன் மற்றும் சாவித்திரியின் விஷயத்தில் செயல்படுத்த முடிந்தது. ஆனால் வீராதித்தனும், விக்ரமாதித்தனும் அவர் கைக்குள் எப்பொழுதும் அடங்கவே இல்லை.
மறுநாள்
தனது நிறுவனத்திற்காக வாங்கப்பட்ட புதிய இடத்தை பார்வையிட சிவராமனுடன் சென்றார் வீராதித்தன். அது தனக்காக வைக்கப்பட்ட *குறி* என்பது அவருக்கு தெரியாது. நேர்மையாய் உழைத்து முன்னேறியவர் என்பதால் ஏகப்பட்ட எதிரிகளை அவர் சம்பாதித்து வைத்திருந்தார். அதனால், தங்கள் பாதையிலிருந்து அவரை அகற்ற, அவரது எதிரிகள் திட்டமிட்டிருந்தார்கள். அது தெரியாமல் எதிரிகளின் சூழ்ச்சி வலையில் சிக்கிக் கொண்டார் வீராதித்தன். இரும்பு கம்பியால் ஒருவன் அவரை தாக்க முயல, அதை கவனித்த சிவராமன், அவரை பிடித்து தள்ளினார். வீராதித்தன் மீது விழ வேண்டிய அடி, சிவராமனின் தலையில் பலமாய் விழுந்தது. படக்கூடாத இடத்தில் பட்டதால், அங்கேயே சுருண்டு விழுந்து இறந்தார் சிவராமன்.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top