26 தன் வினை தன்னைச் சுடும்

26 தன் வினை தன்னைச் சுடும்

கோப்பெருந்தேவியும், வைஷாலியும் உயிருடன் இருப்பதை பார்த்த நந்தினிதேவி, ஏதோ திகில் திரைப்படம் பார்ப்பவரை போல் திகிலடைந்து நின்றார். நெருப்பில் இருந்து அவர்கள் எப்படித் தப்பிப் பிழைத்தார்கள் என்பதை அவரால் கணிக்கவே முடியவில்லை. அவரது வாயிலிருந்து வார்த்தைகளே வரவில்லை.

"உள்ள வாங்க கோப்பெருந்தேவி" என்றழைத்தார் விமலாதித்தன்.

நந்தினியை வைத்த கண் வாங்காமல் திடமாய் பார்த்தபடி நின்றார் கோப்பெருந்தேவி.

"அவங்க இங்க தங்குறதை விரும்பல டாட். அவங்க அதுக்கு ஒத்துக்க மாட்டேங்கிறாங்க..."என்றான் விக்ரம்.

"அப்படி சொல்லாதீங்க கோப்பெருந்தேவி. நீங்க வேற எங்க போவீங்க?" என்றார் விமலன்.

"நானும் அதையே தான் கேக்குறேன்"

"என் பொண்ணு வாழ்க்கைப்பட போற வீட்ல, கல்யாணத்துக்கு முன்னாடி தங்குறது நல்லா இருக்காது" என்றார் கோப்பெருந்தேவி.

"நீங்க அப்படி எல்லாம் யோசிக்காதீங்க. உங்களை இங்கிருந்து போக நாங்க விடப் போறதில்ல. நீங்க எங்க கூட தான் இருக்கணும். இங்கேயே இருங்க" என்றார் சாவித்திரி.

"ஆமாம்,, அப்போ தான் என் அப்பாவுடைய ஆத்மா சாந்தியடையும்" என்றார் விமலன்.

"இல்லங்க..." என்று ஏதோ சொல்ல நினைத்தார் கோப்பு.

"அவங்க பாட்டி சொன்னா தான் கேப்பாங்கன்னு நினைக்கிறேன். நீங்களே அவங்கள இங்கேயே தங்க சொல்லுங்க, பாட்டி" என்றான் விக்ரம்.

வேறு வழியில்லாமல் போகவே,

"இங்கேயே தங்குங்க கோப்பெருந்தேவி" என்றார் நந்தினி.

"பாருங்க, எங்க பாட்டியே சொல்லிட்டாங்க. இங்கேயே தங்குங்க, ஆன்ட்டி" என்றான் விக்ரம்.

"அவங்க நம்ம கூட தான் இருப்பாங்க. நான் சொல்றது சரி தானே, கோப்பு?" என்றார் சாவித்திரி.

சரி என்று அரை மனதாய் தலையசைத்த கோப்பெருந்தேவி,

"கல்யாணம் வரைக்கும் தான் நான் இங்க இருப்பேன்" என்றார்.

"இப்போதைக்கு அது போதும்.  ஃப்ரஷ் ஆயிட்டு சாப்பிட வாங்க" என்ற   சாவித்திரி சந்தோஷமாய் அவர்களை விருந்தினர் அறைக்கு அழைத்துச் சென்றார். விக்ரமும் அவர்களை பின் தொடர்ந்தான்.

"அவங்க தங்கியிருந்த வீடு எப்படி தீப்பிடிச்சிதுன்னு ஒன்னும் புரியலையே" என்று தனக்குத் தானே பேசிக் கொண்டார் விமலாதித்தன். அந்த இடத்தில் நிற்காமல் அகன்று சென்றார் நந்தினி.

சாவித்திரியும் விக்ரமும் அவர்களுக்கு வேண்டிய வசதிகளை செய்து கொடுத்தார்கள்.

"நான் சுதாகர்கிட்ட சொல்லி உங்களுடைய லேப்டாப்பை கொண்டு வர சொல்றேன் ஆன்ட்டி. நீங்க இங்கயிருந்தே வேலை செய்யலாம்" என்றான் விக்ரம்.

"சரி பா"

"நீங்க நெருப்பு பிடிச்ச வீட்டிலிருந்து எப்படி தப்பிச்சீங்க?"என்றார் சாவித்திரி.

விக்ரமை பார்த்து பொருள் பொதிந்த புன்னகை பூத்தார் கோப்பெருந்தேவி.

"நேத்து நைட், அவங்க அந்த வீட்டிலேயே இல்ல" என்றான் விக்ரம்.

"அப்படின்னா, உனக்கு இந்த ஃபயர் ஆக்சிடெண்ட் நடக்கப் போகுதுன்னு முன்னாடியே தெரியுமா?"

"இல்ல. எனக்கு தெரியாது. ஆனா, ஏதாவது நடக்க வாய்ப்பு இருக்குன்னு நான் கெஸ் பண்ணேன். அதனால  நான் அவங்களை வேற இடத்துல தங்க வச்சேன்( அவர்கள் சுதாகர் இல்லத்தில் தான் தங்கியிருந்தார்கள் என்ற உண்மையை அவன் சாவித்திரியிடம் கூட சொல்லவில்லை) அவங்க தங்கியிருக்கிற இடம், பாட்டிக்கு தெரிய வேண்டாம்னு நினைச்சேன். அதனால, அவங்க பார்வதி நகரில் தான் தங்கி இருக்காங்கன்னு பாட்டியை நம்ப வைக்கத் தான் அவங்களை அங்க கூட்டிக்கிட்டு வந்தேன்."

ஏதோ யோசித்தார் சாவித்திரி. ஆனாலும் ஒன்றும் கேட்காமல் அமைதி காத்தார். அதைப் பற்றி வைஷாலி மற்றும் கோப்பெருந்தேவியின் முன்னிலையில் பேச அவர் விரும்பவில்லை.

"நான், உங்களுக்கு சாப்பிட ஏதாவது கொண்டு வரேன்" என்று அந்த அறையை விட்டுச் சென்றார் சாவித்திரி.

"உங்களுக்கு ஏதாவது வேணும்னா எனக்கு கால் பண்ணுங்க" என்றான் விக்ரம்.

சரி என்று தலையசைத்தார் கோப்பெருந்தேவி. வைசாலி கதவின் அருகில் நின்றிருப்பதை பார்த்த விக்ரம்,

"பாத்து பொம்மி, எனக்கு ஃபோன் பண்றதுக்கு பதிலா, பழக்க தோஷத்துல நந்தி பாப்பாவுக்கு ஃபோன் பண்ணிட போற" என்றான் கிண்டலாக.

"அவங்களுக்கு நான் நிச்சயமா ஃபோன் பண்ண தான் போறேன். அவங்ககிட்ட பேசாம என்னால இருக்கவே முடியாது தெரியுமா..." என்று பதிலுக்கு கிண்டலடித்தாள் வைஷாலி.

சிரித்தபடி அங்கிருந்து சென்றான் விக்ரம். விக்ரமை நோக்கி விரைந்து வந்த சாவித்திரி, அவனது கையை பிடித்து அவன் அறைக்கு அழைத்து வந்தார்.

"என்ன மாம்?"

"அந்த ஃபையர் ஆக்சிடென்ட்டுக்கு அம்மா தான் காரணமா?" என்றார் கவலையாக.

"இருக்கலாம்"

"நல்ல வேலை..."

"இருக்கலாம்னு சொன்னேன் அப்படின்னா, இருக்க வாய்ப்பு இருக்குன்னு அர்த்தம்"

"உனக்கு அதை பத்தி ஒன்னும் தெரியாதா? அவங்க அதை பத்தி ஃபோன்ல எதுவும் பேசலயா?"

"இல்ல, அவங்க இதைப் பத்தி ஃபோன்ல எதுவும் பேசல"

"அப்புறம் ஏன் அவங்க மேல சந்தேகப்படுற?"

"யாருமே இல்லாத ஒரு வீட்ல, அதுவும் நடுராத்திரியில, ஃபையர் ஆக்சிடென்ட் ஏற்பட வாய்ப்பே இல்லையே மா..."

"அவங்க இந்த அளவுக்கு போவாங்கன்னு நான் நினைக்கல, சின்னா"

"இவ்வளவு அப்பாவியா இருக்காதிங்க மா. ஆரம்பத்திலிருந்து அவங்க என்னெ ன்ன செஞ்சாங்கன்னு கொஞ்சம் யோசிச்சு பாருங்க"

சலிப்புடன் பெருமூச்சுவிட்டார் சாவித்திரி.

.....

அடிபட்ட நாகம்  போல் கோபத்துடன்  தன் அறையில் உலவிக் கொண்டிருந்தார் நந்தினி தேவி, சுமேஷின் கைப்பேசிக்கு தொடர்பு கிடைக்காததால். மீண்டும் மீண்டும் அவனுடைய கை பேசி எண்ணுக்கு முயன்று கொண்டிருந்தார். அப்பொழுது லேண்ட் லைன் அலறியது. பாய்ந்து சென்று எடுத்தவர், அந்தப்பக்கம் ஒலித்த குரல் கடுமையாய் இருந்ததை உணர்ந்தார்.

"ஏய் நந்தினி..."

அந்த குரலுக்கு சொந்தக்காரி யார் என்பது நந்தினிக்கு புரிந்தது.

"நீ இவ்வளவு கீழ்த்தரமான பொம்பளையா இருப்பேன்னு நான் நினைச்சு கூட பாக்கல..."

"நீ என்ன சொல்ற?" என்றார் பதட்டத்துடன்.

"வைஷாலியோட வீட்டை எரிச்சது நீ தான்னு எனக்கு நல்லாவே தெரியும்"

"இல்ல... அது நானில்ல" என்று உரத்த குரலில் கத்தினார் நந்தினி.

"ஆமாம், அது நீ தான். கத்தி பேசுறதால உண்மை பொய்யாயிடாது..."

"நீ தப்பா புரிஞ்சுகிட்டு இருக்க"

"உன்னைப் பத்தி எனக்கு நல்லாவே தெரியும். ரொம்ப சீக்கிரம் நீ எப்படிப்பட்டவன்னு எல்லாருக்கும் நான் நிரூபிக்க போறேன்"

"அது உன்னால முடியாது"

"ஓ அப்படியா...? அதிர்ஷ்டம் இப்போ உனக்கு சாதகமா இல்ல. வைஷாலி வீட்டுக்கு நெருப்பு வச்சி, அவ கதைக்கு நீ முற்றுப்புள்ளி வைக்க நினைச்ச. ஆனா உன்னோட பேரன், அவளை வீட்டுக்கே கூட்டிக்கிட்டு வந்து, அந்த முற்றுப்புள்ளியை கமாவாக்கிட்டார். நீ வச்ச நெருப்பு, உன் தலைக்கு மேல பத்தி எரியுது... உன்னோட செல்ல மருமக, உன்கூட இருக்கப் போறா. செல்வ சீமாட்டியான நீயும், சாதாரண நடுத்தர வர்க்கத்து பெண்ணும், ஒன்னா, ஒரே கூரையின் கீழ் இருக்கப் போறீங்க... முட்டாள்தனமா ஏதாவது செய்ய நெனக்காத, ஏடாகூடமா மாட்டிக்கிட்டு அசிங்கப் படுவ"

எரிச்சலுடன் அழைப்பைத் துண்டித்தார் நந்தினி. தன் கைபேசியை தனது சுடிதார் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு, சமையலறைக்கு வந்தாள் வைஷாலி. சாவித்திரி ஒரு கண்ணாடி தம்ளரில் பாலை ஊற்றிக் கொண்டிருந்தார்.

"வா வைஷூ..."

"இந்தப் பால் யாருக்காக ஆன்ட்டி?"

"அம்மாவுக்கு கொண்டு போறேன்"

"அவங்களுக்கு நான் கொண்டு போய் கொடுக்கட்டுமா?"

"இல்ல டா மா..." தயங்கினார் சாவித்திரி. இப்போதைக்கு வைஷாலி அவரது அறைக்கு செல்வது நல்லதல்ல என்று நினைத்தார் அவர்.

"என்கிட்ட குடுங்க நான் கொடுத்துட்டு வர்றேன்" என்று அவர் கையில் இருந்த டம்ளரை வாங்கிக் கொண்டாள் வைஷாலி.

"அவங்க ரூம் எங்க இருக்கு?" என்றாள்.

 எதையோ யோசித்த சாவித்திரி,

"மாடியில முதல் ரூம்" என்றார்.

பால் டம்ளருடன் அந்த அறைக்கு வந்தாள் வைஷாலி. ஆனால் அங்கு நந்தினி இருக்கவில்லை. பால் தம்ளரை அங்கு இருந்த மேஜையின் மீது வைத்தாள்.

"பாரு, கிழவியோட ரூம் எப்படி இருக்குன்னு... இந்த வயசுல எப்படிப்பட்ட வாழ்க்கை வாழுது பாரு..." என்றாள் ஏளன சிரிப்புடன்.

அந்த அறையை சுற்றி பார்த்தவளின் கண்கள், சுவற்றில் மாட்டப்பட்டிருந்த விக்ரமின் புகைப்படத்தில் குத்திட்டு அசையாமல் நின்றது. வெகு ஸ்டைலான போஸில், புன்னகைத்துக் கொண்டிருந்தான் விக்ரம். சில நொடி, அந்த புன்னகையில் தன்னை மறந்து நின்றாள் வைஷாலி.

"மூஞ்சிய பாரு... பார்வையிலேயே எவ்வளவு திமிர் தெரியுதுன்னு... ரொம்ப அழகா இருக்கிறதா நினைப்பு..." என்றாள் முகத்தை கோணலாகி கொண்டு.

அங்கிருந்து செல்ல திரும்பிய போது, அவளை பார்த்து புன்னகைத்தபடி அங்கு நின்று கொண்டிருந்தான் விக்ரம். தன்னுடைய தடுமாற்றத்தை தவிர்க்க சில நொடிகள் தேவைப்பட்டது வைஷாலிக்கு.

"என்ன சொன்ன?" என்றான்.

"உன்மையை தான் சொன்னேன்" என்றாள் தெனாவெட்டாக.

"எது உண்மைன்னு கல்யாணத்துக்கு பிறகு நீயே தெரிஞ்சுக்குவ" என்றான் அவளை உச்சி முதல் பாதம் வரை அலசிய படி.

"நம்ம வேற எதையோ பேசினா, நீங்க ஏன் வேற எங்கேயோ போறீங்க?"

"நான் எங்கே போனேன்?" என்றான் அவளை நோக்கி நகர்ந்தபடி.

"நீங்க என்ன அர்த்தத்துல பேசினீங்கன்னு எனக்கு தெரியும்" என்றாள் அவனை பார்க்காமல்.

"என்ன அர்த்தத்தில் பேசினேன்?"

"அதை நானும் புரிஞ்சுகிட்டேன், உங்களுக்கும் அது தெரியும்"

"அப்படியா? நீ புரிஞ்சுகிட்டது நல்லதா போச்சி... நான் உனக்கு எதையும் சொல்லிக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்ல" என்றான் இரட்டை அர்த்தத்தில்.

"இது யாரோட ரூம்?" என்றாள் பேச்சை மாற்றி.

"சந்தேகமில்லாம என்னோட ரூம்..."

"இது பாட்டியோட ரூம்னு ஆன்ட்டி சொன்னாங்க" என்றாள் உதட்டை சுழித்து.

"நீ எதுக்காக அவங்க ரூமுக்கு போற?"

"இந்த பாலைக் கொடுக்க"

"தேவையில்ல... நீ அங்க போக வேண்டாம்"

" ஏன்? "

"வைஷு, இங்க பாரு... இது விளையாட்டு இல்ல"

"தெரியும். அவங்களால என்னை ஒன்னும் பண்ண முடியாது"

"நிச்சயமாக முடியாது தான். ஆனா நீ அவங்க பக்கத்துல நெருங்க, நெருங்க, அது அவங்களுக்கு எரிச்சலைத் தரும். உன்னை என் வாழ்க்கையில இருந்து தூக்கி எறிய அவங்க ஏதாவது செய்வாங்க"

"அவங்க அதை கல்யாணத்துக்கு பிறகு மட்டும் செய்ய மாட்டாங்களா?"

"ரெண்டுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. முதல்ல கல்யாணம் நடக்கட்டும். அதுக்கு பிறகு அவங்களை நம்ம கவனிச்சிக்கலாம்"

" எப்படி இருந்தாலும் அவங்க இந்த கல்யாணத்தை நிறுத்த எல்லா முயற்சியும் செய்வாங்க. நான் அவங்க ரூமுக்கு போனாலும் போகலனாலும்..."

அவளது மேல் கையை பற்றி, தன்னை நோக்கி திருப்பினான்.

"தயவுசெய்து புரிஞ்சுக்க ட்ரை பண்ணு  வைஷு, கல்யாணத்துக்கு முன்னாடி எந்த பிரச்சனையும் வரக்கூடாதுன்னு நான் நினைக்கிறேன்"

"ஏன் இப்படி பயப்படுறீங்க?"

"ஏன்னா, நான் உன்னை இழக்க தயாரா இல்ல. அந்த ஃபயர் ஆக்சிடெண்ட் நம்ம எதிர்பார்க்காதது. அதிஷ்டவசமா உனக்கு ஒன்னும் ஆகல. அவங்களை குறச்சி எடை போடாதே வைஷு. அவங்க ரொம்ப ஆபத்தானவங்க"

அவனுக்கு தன்னிடமிருந்த அக்கறை, அவளை நெகிழச் செய்தது. தன்னை மீறிய சில வார்த்தைகளை உதிர்த்தாள் வைஷாலி.

"என்னை காப்பாத்த தான் நீங்க இருக்கீங்களே... அப்புறம் நான் ஏன் பயப்படனும்?"

அவளைப் பிடித்திருந்த விக்ரமின் பிடி தளர்ந்தது. அவனது இதழ்கள் புன்னகையால் வளைந்தன. ஆமாம் என்று தலையசைத்தான் விக்ரம்.

பால் தம்ளரை கையில் எடுத்துக் கொண்டு, மீண்டும் மீண்டும் புன்னகையுடன் நின்றிருந்த விக்ரமை திரும்பிப் பார்த்தபடி அங்கிருந்த சென்றாள் வைஷாலி.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top